World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Support Welioya and Bogawantalawa plantation workers struggle against high workload targets

வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிரான வெலிஓயா மற்றும் பொகவந்தலாவை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரி

Statement of the Socialist Equality Party
13 January 2012
Back to screen version

பெருந்தோட்டக் கம்பனிகள் உற்பத்தி இலக்கை அதிகரிப்பதை எதிர்த்து தாம் நடத்தும் போராட்டத்தை காட்டிக்கொடுக்க தொழிற்சங்கங்கள் செய்யும் சூழ்ச்சிகளை வெலிஓயா மற்றும் பொகவந்தலாவை தோட்டத் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். நியாயமான வேலை நிலைமைகளைப் பெறுவதற்காக இந்த தோட்டங்களில் தமது சக தொழிலாளர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் ஆதரிக்க வேண்டும்.

தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தமது சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, உற்பத்தி இலக்குகளை அதிகரிப்பதற்கு எதிராகவும் நியாயமான மாத சம்பளத்துக்காகவும் போராட தமது தொழிற்துறை சக்தியை அணிதிரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) அழைப்பு விடுக்கின்றது.

டிசம்பரில் இருந்தே, வெளிஓயா தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் இலக்கை நாளொன்றுக்கு 17 கிலோவில் இருந்து 20 கிலோவாக அதிகரிப்பதை எதிர்த்து வருகின்றனர். பொகவந்தலாவை தொழிலாளர்கள் தமது இலக்கு 2 கிலோவால் அதிகரிக்கப்படுவதை எதிர்த்து வருகின்றனர். எவ்வாறெனினும், ஒரு ஆத்திரமூட்டலை மேற்கொண்டுள்ள கம்பனிகள், ஜனவரி மாதத்துக்கான தொழிலாளர்களின் சம்பளத்தை புதிய இலக்குகளுக்கு ஏற்ப தயார் செய்ததன் மூலம் சம்பளத்தை வெட்டியுள்ளன.

செவ்வாய் கிழமை, வட்டவளை பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான வெளிஓயா தோட்டத்தின் சுமார் 1,200 தொழிலாளர்களும், பொகவந்தலாவை தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான ஐந்து தோட்டங்களின் சுமார் 4,000 தொழிலாளர்களும், அதிக கொழுந்து பறிக்கும் புதிய வேலை இலக்குகளின் படி கணக்கிடப்பட்ட சம்பளத்தை ஏற்க மறுத்தனர். பொகவந்தலாவை பெருந்தோட்டத்துக்குரிய கொட்டியாகலை, பொகவான, பிரேட்வெல், பொகவந்தலாவை, டின்ட்சின் ஆகிய ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த சம்பள வெட்டை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.

ஏனைய தோட்டங்களுக்கும் போராட்டங்கள் பரவக்கூடும் என பீதியடைந்துள்ள தொழிற்சங்கங்கள், கம்பனிகள் கோரும் இலக்குகளை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளச் செய்ய வழி தேடுகின்றன.

தோட்டங்களில் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.), கம்பனிகளுக்கு ஆதரவாக வெளிஓயா மற்றும் பொகவந்தலாவை தொழிலாளர்களின் கோரிக்கைகளை எதிர்த்துள்ளது. அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், ஒரு அமைச்சரவை அமைச்சர் மட்டுமன்றி ஒரு தோட்ட உரிமையாளரும் ஆவார்.

வெள்ளிக் கிழமை, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத் (LJEWU) தலைவர் ஆர். யோகராஜன், இலங்கை தொழிலாளர் முன்னணி (CWA) தலைவர் எஸ். சதாசிவம் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.) நிதிச் செயலாளர் முரளி ரகுநாதனும் பொகவந்தலாவை பெருந்தோட்ட நிர்வாகத்துடனும் தொழில் அமைச்சர் காமினி லொகுகே உடனும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். தொழிலாளர்கள் மீது போலியாக அனுதாபம் காட்டிய தொழிற்சங்கங்கள், ஞாயிற்றுக் கிழமை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக சம்பளத்தைப் பெறும் நோக்கிலேயே இந்தக் கலந்துரையாடலுக்கு விரைந்தன.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியில் வந்த தொழிற்சங்கங்கள், அமைச்சர் மிக விரைவில் இந்த வேலைச் சுமை பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதியளித்ததோடு வெட்டிக் குறைக்கப்பட்டுள்ள சம்பளத்தை முற்பணமாக பெற்றுக்கொண்டு வேலைக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டதாக கூறின. மலையக மக்கள் முன்னணியும் (..மு) தொழிலாளர் தேசிய சங்கமும் (NUW) இந்த நடவடிக்கையை ஆதரித்தன.

இதே போல், கம்பனி தயாரித்த குறைந்த சம்பளத்தை ஏற்றுக்கொண்டு வேலைக்குத் திரும்புமாறு வெலிஓயா தொழிலாளர்களையும் இதே தொழிற்சங்கங்கள் நெருக்கின. வெட்டப்பட்டுள்ள சம்பளத்தை பின்னர் பெற்றுத் தருவதாக ஹட்டனில் உள்ள உதவி தொழில் ஆணையாளர் (.சி.எல்.) வாக்குறுதியளித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறின. வட்டவலை பெருந்தோட்டக் கம்பனிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் ஜனவரி 23 அன்று பேச்சுவார்த்தை ஒன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் பயன்றது என்பதும் அது தொழிலாளர்களை வேலைக்குச் செல்ல வைப்பதற்காக தொழிற்சங்க தலைவர்கள் செய்த தந்திரமே என்பதும் நிரூபிக்கப்படும். உண்மையில், வேலைச் சுமையை அதிகரிக்கும் கம்பனிகளின் குறிக்கோளுக்கு இந்தத் தொழிற்சங்கங்கள் ஒத்துழைத்துள்ளன.

இந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போராட்டங்களை கவிழ்ப்பதற்கு ஆரம்பத்தில் இருந்தே செயற்பட்டுள்ளன. வெலிஓயா தொழிலாளர்கள் புதிய வேலைச் சுமைகளை நிராகரித்து டிசம்பர் 14 முதல் ஒரு வாரம் வேலை நிறுத்தம் செய்தனர். .தொ.கா. உறுப்பினர்களாக இருந்த தொழிலாளர்களும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் இணைந்துகொண்டனர்.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்திருந்த போது ..மு. தலைவர் வி.இராதாகிருஷ்ணனும் அமைச்சரவை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயும் தோட்டத்துக்கு வந்து, கம்பனி வேலைச் சுமையை அதிகரிக்காமல் இருக்க ஒத்துக்கொண்டது என்று பொய் கூறினர். தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பிய போதிலும் புதிய இலக்குகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

வெலிஓயா தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை பயமுறுத்த முயற்சித்தது. தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதை தடுத்தார்கள் என்று நான்கு தொழிற்சங்க தோட்டத் தலைவர்களுக்கு எதிராக நிர்வாகம் கொடுத்த முறைப்பாட்டின் பேரில் வட்டவளை பொலிசார் அவர்களை விசாரணைக்கு அழைத்தனர்.

வட்டவளை கம்பனியுடன் டிசம்பர் 23 நடந்த கலந்துரையாடலில், LJEWU, NUW மற்றும் ..மு.யும் கம்பனி கோரிய 3 கிலோவுக்கு பதிலாக 2 கிலோ அதிகரிப்பை ஏற்றுக்கொள்ளும் சமரசம் ஒன்றை பிரேரித்துள்ள போதிலும், அந்த யோசனையை தொழிலாளர்கள் நிராகரித்தனர்.

கம்பனிகள் உற்பத்தி சுமையை திணிப்பது சம்பந்தமான பிரச்சினையில் இருந்து தொழிலாளர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, தொழிற்சங்கங்கள் தோட்ட முகாமையாளர்களை குற்றவாளிகளாக காட்டி, அவர்களை அகற்றினால் பிரச்சினை தீரும் என சொல்லித் திரிகின்றன. இது முழுப் பொய்யாகும். தோட்ட முகாமையாளர்கள் கம்பனிகளின் கருவிகள் மட்டுமே.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆதரவுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் .தொ.கா. மற்றும் LJEWU கைச்சாத்திட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு அற்ப சம்பள உயர்வு கொடுக்கப்பட்ட அதே வேளை, தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களை சுரண்டுவதை அதிகரிக்க இந்த கூட்டு ஒப்பந்தத்தை பயன்படுத்திக்கொள்கின்றன. தோட்டத் துரைக்கும் தொழிற்சங்க நடவடிக்கை குழுவுக்கும் இடையிலான கலந்துரையாடலின் மூலம் தோட்ட மட்டத்தில் உற்பத்தியை முன்னேற்றுவதற்கு ஆதரவளிக்க தொழிற்சங்கம் உடன்படுகின்றது... என அந்த ஒப்பந்தத்தின் ஒரு பிரிவு கூறுகின்றது.

ஏனைய தொழிற்சங்கங்கள் அனைத்தும் இந்த கூட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதுடன் ஒப்பந்தத்துக்கு விரோதமாக எந்தவொரு போராட்டத்தையும் திட்டமிடுவதை எதிர்த்தன.

வேலைச் சுமையை அதிகரிப்பது என்பது இந்த தோட்டங்களுக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல. வறிய மட்ட சம்பள அதிகரிப்பால் கூட உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக கம்பனிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்தியா, கென்யா மற்றும் சீனா உட்பட தேயிலை உற்பத்தி செய்யும் ஏனைய நாடுகளுடன் போட்டியிடுவதற்காகவும் மேலும் இலாபங்களைக் கறப்பதற்காகவும் கம்பனிகள் உற்பத்தி முயற்சிகளை உக்கிரமாக்கியுள்ளன.

எவ்வாறெனினும், கடந்த பல ஆண்டுகளாக பெருந்தோட்டங்கள் பிரமாண்டமான இலாபங்களைப் பெற்றுள்ளன. உதாரணமாக, 2008-2009ல் 75 மில்லியன் ரூபாவாக இருந்த வட்டவளை பெருந்தோட்டத்தின் தூய இலாபம், 2010-2011ல் 642 மில்லியன் வரை எகிரிக் குதித்துள்ளது. பிரதானமாக பலமான உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தர மேம்படுத்தலாலுமே இந்த இலாபம் பெறப்பட்டது என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி. டன் சீவரத்னம் தெளிவுபடுத்தினார்.

இதே போல், 2010-2011 நிதியாண்டின் முதல் பாதியில், பொவந்தலாவை பெருந்தோட்ட கம்பனி 118 மில்லியன் ரூபா தூய இலாபம் பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பெற்றதை விட 4 வீத அதிகரிப்பாகும்.

கம்பனிகள் பிரமாண்டமான இலாபத்தை பெறும் அதே வேளை, தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் மற்றும் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் கிடையாது. அவர்கள் தமது ஊதியம் போதாததால், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க மேலதிக கொடுப்பனவைப் பெறுவதன் பேரில் அதிக கொழுந்துகளைப் பறிப்பதற்காக மேலதிக வேலை செய்கின்றனர். உற்பத்தி இலக்கை அதிகரிக்கச் செய்வதற்காக, கம்பனிகள் தொழிலாளர்களின் இத்தகைய சம்பாத்தியத்தை அபகரித்து தமது கஜானாவுக்குள் போட்டுக்கொள்ள முயற்சிக்கின்றன.

தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் தொழிலாள வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினராவர். அநேகமான தொழிலாளர்கள் தென்னிந்திய வம்சாவளியில் இருந்து வந்த, இன ரீதியில் தமிழர்கள் என்ற காரணத்தால், காலனித்துவ நாட்களில் போல் அவர்களை ஒடுக்கி வைத்திருக்கும் ஆயுதமாக இனப்பாகுபாடு பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்காக வடக்கு மற்றும் கிழக்கில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ முன்னெடுத்த யுத்தத்தை இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஆதரவளித்தன. மறு பக்கம் அது தெற்கில் தோட்டத் தொழிலாளர்களதும் ஏனைய தொழிலாளர் தட்டினரதும் போராட்டங்களை நசுக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது.

தொழிலாளர்கள் இத்தகைய தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து தமது நலன்களுக்காகப் போராடுவதற்காக தமது சொந்த நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும். இந்தக் குழுக்களின் பிரிநிதிகள் ஒன்று கூடி தமது கோரிக்கைகளை தீர்மானிக்க வேண்டும். தற்போது அவர்களது வேலை நிலைமைகளும் சம்பள முறைமையும் மற்றும் தோட்டங்களில் அவர்களது குடியிறுப்புக்களும் அரை அடிமை நிலைமையிலேயே காணப்படுகின்றன. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

*வேலைச் சுமையை அதிகரிக்காதே: நியாயமான தொழில் நிலைமைகள், சம்பளத்துடனான விடுமுறை, மருத்துவ பராமரிப்பு மற்றும் ஓய்வூதியம் வேண்டும்.

*நாள் சம்பளத்தை இல்லாமல் செய்து மாத சம்பள முறையை ஸ்தாபிக்க வேண்டும்.

*போதுமான தண்ணீர், சுகாதார வசதிகள் மற்றும் மின்சாரத்துடன் கூடிய தரமான வீடு வேண்டும்.

பொருளாதாரத்தை இலாபத்துக்காக அன்றி மனிதத் தேவைகளை இட்டு நிரப்புவதற்காக சோசலிச அடிப்படையில் மீள் ஒழுங்கமைப்பு செய்வதன் மூலம் மட்டுமே இந்த உரிமைகளை வெற்றிகொள்ள முடியும். இந்த உரிமைகளுக்கான போராட்டமானது இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான மற்றும் சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் போராட்டத்துடன் இணைந்ததாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை அமுல்படுத்துகின்ற இராஜபக்ஷ அரசாங்கத்தின் இடைவிடாத தாக்குதல்களை எதிர்கொள்கின்ற ஏனைய தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் பங்காளிகளாவர். மறு பக்கம், தொழிலாளர்கள் அரசாங்கத்தாலும் முதலாளித்துவ முறைமையாலும் ஒடுக்கப்படுகின்ற கிராமப்புற வறியவர்களின் பக்கம் திரும்பி இந்தப் போராட்டத்தில் அவர்களது ஆதரவையும் பெறவேண்டும்

இந்தப் போராட்டம் சோசலிசத்துக்கான சர்வதேச போராட்டத்தின் பாகமாகும். இந்த முன்நோக்கை அபிவிருத்தி செய்யும் ஒரே அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) மட்டுமே. இந்த முன்நோக்குக்காகப் போராடுவதற்காக சோ...யை ஒரு வெகுஜன புரட்சிக் கட்சியாக கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுங்கள்.