World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Northern fishermen condemned the Chilaw attack

வட  இலங்கை மீனவர்கள் சிலாபம் தாக்குதலை கண்டனம் செய்கின்றனர்

By T. Akilan and Subash Somachandran
Back to screen version

இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்கள், வடமேல் கரையோர நகரமான சிலாபத்தில் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை கண்டனம் செய்கின்றனர். எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து பெப்பிரவரி 16 அன்று சிலாபாம் வெல்ல பகுதி மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், அன்டனி பெர்ணான்டோ கொல்லப்பட்டதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு கொடுக்கவிருந்த இறுதி கடன் பகுதியை கொடுப்பதற்காக, அது கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதன் பாகமாக, இலங்கை அரசாங்கம் எரிபொருள்களின் விலைகளை கிட்டத்தட்ட 50 வீதம் வரை உயர்த்தியது. இது மீனவர்கள் மட்டுமன்றி சகல பகுதியினருக்கும் ஒரு பெரும் அடியாகும். மேலும் இந்த சிக்கன நடவடிக்கைகளுக்குள் ரூபாயின் பெறுமதியை குறைப்பதும், மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதும் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரிப்பதும் அடங்கும்.


இயந்திரம் இன்றி காற்றின் வேகத்தைப் பயன்படுத்தி நகர முயலும் மீனவர்கள்.

இந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நீர்கொழும்பு முதல் கற்பிட்டி வரை வடமேல் கரையோரத்தில் வாழும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்ததோடு, பெருந்தோட்டத் தொழிலாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் உட்பட பல துறைகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே தசாப்த கால இனவாத யுத்தத்தால் தமது ஜீவனோபாயம் சீரழிந்து போயுள்ள வட பகுதி மீனவர்கள், இராணுவ அச்சுறுத்தலின் காரணமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாமல் உள்ளனர். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு முடிவுகட்டி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகின்ற போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பிலேயே உள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களையும் காணாமல் போனவர்களையும் விடுவிக்கக் கோரி நடத்தப்படவிருந்த மறியல் போராட்டங்களை தடுக்க பல முறை பாதுகாப்பு படைகள் தலையிட்டுள்ளதோடு, பாதுகாப்பு அமைச்சு அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறி, பொதுக் கூட்டங்களை தடை செய்வதற்கும் நேரடியாகத் தலையிட்டுள்ளது.

சகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) முன்னெடுத்துள்ள பிரச்சாரத்தின் பாகமாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஜனவரி 29 அன்று சோ... பகிரங்க கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தை தடை செய்வதற்காக நேரடியாகத் தலையிட்ட பாதுகாப்பு அமைச்சு, மண்டபத்தில் கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டாம் என யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தின் நிர்வாகத்தையும் நெருக்கியது. அதற்கு இரு தினங்களுக்கு முன்னதாக கூட்டத்திற்காக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இரு சோ... உறுப்பினர்களை சட்ட விரோதமாக தடுத்து வைத்து விசாரித்த படையினர், பின்னர் அவர்கள் மீது சரீரத் தாக்குதலையும் மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம் குருநகர் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசும் போது, நாங்கள் இந்த தாக்குதல்களைக் கண்டிக்கின்றோம், ஆனால் அதை வெளிப்படையாக தெரிவிக்க முடியாத அச்ச நிலையில் இருக்கின்றோம் என்றார். “தென் பகுதியில் மீனவர் கொல்லப்படும் போது நாங்கள் மௌனமாக இருந்தால், எங்களைத் தாக்கும் போது பாதுகாக்க எவர் முன்வருவார்? இந்த விலையேற்றம் சிங்கள மீனவர்களை மட்டுமல்ல எங்களுக்கும் பெரும் அடியாகும். ஆனால், எங்களது போரட்டத்துக்கு தலைமை தாங்கப் போவது யார் என்பதே பிரச்சினை. அவர்களது (சிலாபம் மீனவர்களது) போராட்டத்துக்கே துப்பாக்கியில் பதில் சொல்லப்பட்டுள்ளது, என அவர் மேலும் கூறினார்.

அதே கருத்தை மீனவர் சங்கத் தலைவர் ஒருவரும் பகிர்ந்துகொண்டார். எங்களை இராணுவம் கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று ஆரம்பித்தால் துப்பாக்கிதான் பதில் சொல்லும் என படையினர் தொழிலாளர்களை மிரட்டியுள்ளனர், என்றார். அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் பயங்கரவாதத்துக்கு ஆதரவானது என அரசாங்கம் முத்திரை குத்திவருவதை நினைவூட்டிய அவர், நாங்கள் போராட்டத்தினை ஆரம்பித்தால் அதற்கு உடனடியாகவே புலி முத்திரை குத்துவார்கள். தென் பகுதியில் உள்ள சிங்கள மீனவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்றால், எங்களது நிலை மிகவும் ஆபத்தானது எனக் கூறினார்.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக வடக்கிலும் போராட்டங்கள் வெடிக்கலாம் என்பதையிட்டு பாதுகாப்பு படையினர் விழிப்புடன் உள்ளனர். மறியல் போராட்டங்கள் நடத்தும் இடமான யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் பொலிசாரும் மற்றும் இராணுவப் புலனாய்வுத் துறையினரும் சிவில் உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற மீனவ அமைப்புக்களின் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகள் அல்லது அரசியல் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றனவா என்பதைப் பற்றியும் புலனாய்வாளர்கள் கண்காணித்தனர்.

விலையேற்றத்தால் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை விளக்கிய ஒரு மீனவர், விலையேற்றத்துக்கு முன்னரும் எமது தொழிலில் நட்டம் ஏற்படும். தற்போது எங்களால் தாங்க முடியாத இழப்பு ஏற்படும். நான் நாளொன்றுக்கு 1,000 ரூபாவுக்கு மண்ணெண்ணை வாங்கிக் கொண்டு தொழிலில் ஈடுபடுவேன். இப்போது எனக்கு 1,500 ரூபா தேவை. இன்று எனது வருமானம் 800 ரூபா, நட்டம் 700 ரூபா. சந்தையில் எமது மீனுக்கு விலையேற்றம் இல்லை. யுத்த காலத்தில் கூட பொருட்கள் இந்தளவு விலையேறவில்லை. அரசாங்கத்தின் மானியம் என்பது வெறும் கண்துடைப்பு. மானியம் வழங்கப்பட முடியுமெனில் ஏன் விலையை ஏற்றவேண்டும்?, எனக் கேட்டார்.

நான்கு பிள்ளைகளின் தாயான ஒரு மீனவப் பெண் கூறியதாவது: எனது கணவர் இறால் பிடிக்கின்றார். சராசரி 1,000 ரூபா கிடைக்கும். ஆனால் சிரமத்தின் காரணமாக வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே தொழில் செய்ய முடியும். தொழில் உபகரணங்களை வாடகைக்கே பெற வேண்டும். வள்ளத்துக்கு 150 ரூபா வாடகை. வலைக்கு 150 ரூபா. கூடைக்கு வாடகை 50 ரூபா.

நான் 8ம் வகுப்பு வரைக்கும் மட்டுமே படித்தேன். பிள்ளைகளுக்கு கற்பிக்க பெரும் சிரமப்படுகிறோம். பாடசாலைக்கு பணம் கட்ட வேண்டும். பிள்ளைகளை ரியூசனுக்கு அனுப்ப வேண்டும். எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களதும் விலையேற்றத்தால் நாங்கள் மேலும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். பிள்ளைகளின் கல்வியும் கேள்விக்குறியாகலாம், என்றார்.

அவரது கணவர் பேசும் போது, இந்த அற்ப வருமானத்தில் எண்ணெய் விலை அதிகரித்தால் நாங்கள் எவ்வாறு வாழ்க்கையை ஓட்ட முடியும்? தொழிலை கைவிடும் நிலை ஏற்படலாம், என்றார். நாங்கள் பலகையிலான சிறிய (150 சதுர அடி) வீட்டிலேயே வாழ்கிறோம். ஒரு மலசலகூடத்தை 4 குடும்பங்கள் பாவிக்க வேண்டியுள்ளது. பக்கத்து வீட்டுக் கிணற்றில் தான் தண்ணீர் எடுக்க வேண்டும், குளிக்க வேண்டும். பிரச்சினைகளை பொறுத்துக்கொள்ளவும் வேண்டும் என்றார்.

அரசாங்கம் யுத்தம் முடிந்தவுடன் சமாதானமும் சுபீட்சமும் வரும் என கூறிக்கொண்டது. ஆனால் மீனவர்கள் மீதான கடற்படையினரின் கெடுபிடிகள் தொடர்கின்றன. யுத்த காலத்தில் மீனவர்கள் கடல் வலயத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் கடலில் இறங்க முடியாமல் இருந்தனர். இயந்திரப் படகு பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சில மீனவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட தூரத்துக்கு கடலில் நடந்து சென்று மீன்பிடிக்கத் தள்ளப்பட்டனர்.

யுத்தம் முடிந்து சில காலம் பாஸ் நடைமுறை தளர்த்தப்பட்டிருந்த போதிலும், தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மீனவர்கள் நடுக்கடலில் கடற்படையின் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். கரை திரும்பும் மீனவர்களிடம் இருந்து கடற்படையினரின் சொந்தப் பயன்பாட்டுக்காக பல இடங்களில் மீன்கள் அபகரிக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்துக்கு தொலைவில் இருக்கும் தீவுகளில் புதிதாக கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், மீனவர்களால் அங்கு தங்கி நின்று மீன் பிடிக்கவோ ஓய்வெடுக்கவோ முடியாத நிலை தோன்றியுள்ளது.

பூநகரி, கல்முனை என்ற இடத்தில் கடற்படை முகாம் நவீன முறையில் விஸ்தரிக்கப்படுவதன் காரணமாக, அங்கு ஒவ்வொன்றும் ஒரு இலட்சம் பெறுமதியான 20 மீனவர்களுக்குச் சொந்தமான 20 களங்கட்டி என்ற வலைகள் கடற்படையினரால் வெட்டி எறியப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 150 ரூபா பெறுமதியான 2500க்கும் மேற்பட்ட தடிகளும் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளதோடு, இதற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.

அரசாங்கம் யுத்த காலத்தில் அபிவிருத்தி செய்த பொலிஸ்-அரச வழிமுறைகளை இப்போது தென்பகுதியில் பயன்படுத்துவதையே சிலாபம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சுட்டிக் காட்டுகின்றது. வடக்கிலும் மற்றும் தெற்கிலும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களும் ஐக்கியப்பட்டு சோசலிச முன்நோக்கை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே ஒடுக்குமுறைகளை சவால் செய்யவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் முடியும். இந்த முன்நோக்கை அபிவிருத்தி செய்வது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும்.