World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan defence ministry blocks SEP meeting

இலங்கை பாதுகாப்பு அமைச்சு சோ.ச.க. கூட்டத்தை தடுத்தது

By K. Ratnayake
23 February 2012
Back to screen version
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மீது இன்னமொரு தெளிவான தாக்குதலை மேற்கொண்ட இலங்கை பாதுகாப்பு அமைச்சு, சிலாபம் நகரில் ஷேர்லி கொரயா மண்டபத்தில் சோ.ச.க. ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தை தடை செய்யுமாறு சிலாபம் நகர சபைக்கு கட்டளையிட்டது. தீவின் வட-மேல் கரையோரத்தில் அமைந்துள்ள சிலாபம், அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்தமைக்கு எதிராக மீனவர்களும் அவர்களது குடும்பங்களும் எதிர்ப்புப் போராட்டம் நடத்திவரும் பிரதேசமாகும். மீனவர்களின் போராட்டத்துக்கு சோசலிச முன்னோக்கு என்ற தலைப்பில் சோ.ச.க. ஏற்பாடு செய்திருந்த கூட்டம் பெப்பிரவரி 22 அன்று நடக்கவிருந்தது.
மீனவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்காக அணிதிரட்டப்பட்டுள்ள பொலிஸ் படைக்கு மண்டபத்தைக் கொடுத்துள்ளதன் காரணமாக, சோ.ச.க. அந்த மண்டபத்தை பயன்படுத்த முடியாது என சிலாபம் நகர சபை தெரிவித்தது. அண்மைய வாரங்களில் சோ.ச.க. கூட்டங்களை தடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சு திரைக்குப் பின்னால் இரண்டாவது தடவையாக தலையிட்டுள்ளது.

கடந்த மாதம் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரும் கட்சியின் பிரச்சாரத்தின் பாகமாக, சோ.ச.க. ஜனவரி 29 அன்று நடத்தவிருந்த கூட்டத்துக்காக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தை கொடுக்க வேண்டாம் என மண்டப நிர்வாகத்தை பாதுகாப்பு அமைச்சு நெருக்கியிருந்தது. இராணுவம் யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. உறுப்பினர்களுக்கு எதிராகவும் வன்முறைகளை தூண்டி விட்டிருந்தது. (பார்க்க:சோ... மீது கை வைக்காதே! யாழ்ப்பாணத்தில் சோ... உறுப்பினர்களை பாதுகாத்திடுங்கள்! மற்றும் இலங்கை: பாதுகாப்பு அமைச்சுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்க கடிதம்(

ஒரு வாரத்துக்கு முன்னரே சோ.ச.க. உறுப்பினர்கள் கூட்டத்துக்காக சிலாபம் மண்டபத்தை ஒதுக்கிக்கொண்டிருந்த போதிலும், கடந்த சில நாட்களாக அந்த மண்டபமும் அதன் சுற்றுப் புறமும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மண்டபத்தை பயன்படுத்த முடியுமா என்பதை தெரிந்துகொள்வதற்காக சோ.ச.க. உறுப்பினர்கள் நகர சபை அலுவலர்களை தொடர்புகொண்டனர். சபைத் தலைவரை தொடர்பு கொண்ட பின்னர், செவ்வாய் கிழமை மாலை பொலிசார் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என மண்டப ஒதுக்கீட்டுக்குப் பொறுப்பான அலுவலர்கள் சோ.ச.க. உறுப்பினர்களுக்கு உறுதிப்படுத்தினர்.
எவ்வாறெனினும், மண்டபத்துக்கு அருகில் கூட்டத்துக்கான சுவரொட்டிகளை ஒட்டிய பின்னர், நேற்று சோ.ச.க. உறுப்பினர்களை தொலை பேசியில் அழைத்த அதே அலுவலர், பொலிசாரின் பயன்பாட்டுக்காக மண்டபம் தேவைப்படுகிறது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள காரணத்தால் மண்டபத்தை தர முடியாது எனத் தெரிவித்தார். கூட்டத்துக்காக வேறு ஒரு நாளுக்கு மண்டபத்தை ஒதுக்கித் தருவது பற்றி நகரசபை அக்கறையெடுக்கும் என அந்த அலுவலர் கூறினார். இந்த நகர சபை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நகரசபை சொன்னது பொய். உண்மையில் செவ்வாய் கிழமையே பொலிசார் மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டனர். உண்மையான காரணம், பிரதேசத்தில் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் சோ.ச.க.யின் அரசியல் தலையீட்டை தடுப்பதன் பேரில், அந்த மண்டபத்தை சோ.ச.க. பயன்படுத்த விடாமல் தடுத்துள்ளனர். கடந்த பல நாட்களாக கட்சி தனது கொள்கைகளின் பால் அதிகளவிலான அவதானத்தையும் ஆதரவையும் வென்றுள்ளது.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளின் பேரில், பெப்பிரவரி 11 அன்று எரிபொருள் விலையை கிட்டத்தட்ட 50 வீதம் அதிகரித்ததால், மீன்பிடி கைத்தொழிலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, உடனடியாகவே குறிப்பாக வட-மேல் கரையோரப் பகுதியில் மீனவர்களின் ஆர்ப்பாட்டம் வெடித்தது. அப்போதிருந்தே மறியலில் ஈடுபட்ட மீனவர்கள், கடலுக்குப் போக மறுத்ததோடு முன்னைய மட்டத்துக்கே விலைகள் குறைக்கப்பட வேண்டும் என கோரினர்.
பெப்பிரவரி 15, சிலாபம் வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த பொலிஸ் விசேட அதிரடிப் படை, அன்டனி வர்ணகுலசூரியவை அதே இடத்தில் கொன்றது. மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். சமூகத்தவர்களை அச்சுறுத்துவதற்காக அரசாங்கம் ஆயிரக்கணக்கான பொலிசையும் இராணுவத்தினரையும் பிரதேசம் பூராவும் நிறுத்தியது. மீனவர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் தமது கோரிக்கைகளுக்காக போராடுவதைத் தடுப்பதற்காக உள்ளூர் கத்தோலிக்க பாதிரிமார் செயலில் இறங்கியிருந்தனர்.
வர்ணகுலசூரியவின் மரணச் சடங்கிற்கு வந்திருந்த மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களுமாக பத்தாயிரக்கணக்கானவர்கள், தமது சக தொழிலாளி கொல்லப்பட்டதற்கும் அரசாங்கத்தின் புதிய சுற்று சிக்கன நடவடிக்கைகளுக்கும் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
வறிய மீனவர்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலின் பின்னால் இருப்பது என்ன என்பதை தெளிவுபடுத்தும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே. தாமதித்து வழங்கப்படும் 800 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பகுதிக்காக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள கோரிக்கைகளே இந்த சிக்கன நடவடிக்கைகளாகும். சகல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை வானளவு உயர்த்திய இலங்கை ரூபாயின் மதிப்பிறக்கம், எரிபொருள் விலை அதிகரிப்பு, போக்குவரத்து மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் அரசாங்க செலவு வெட்டு போன்றவையும் இதில் அடங்கும்.
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகளை அமுல்படுத்த உடன்பட்டுள்ள அதே வேளை, அது தனது கொள்கைகள் மீது வெகுஜனங்களின் எதிர்ப்பு வளர்ச்சியடைவதையிட்டும் விழிப்புடன் உள்ளது. பெப்பிரவரி 18 அன்று, கொழும்பு புறநகர் பகுதியான கடவத்தையில் கூட்டமொன்றில் உரையாற்றிய இராஜபக்ஷ, எவரும் அரசாங்கத்தைக் கவிழ்க்க அனுமதிக்கப் போவதில்லை எனக் கூறினார்.
மீனவர்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வீதி மறியல் பற்றி குறிப்பாகத் தெரிவித்த அவர், சில பகுதியினர், [மக்கள்] வீதிக்கு வந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்ற வேண்டும் என இப்போது கூறுகின்றனர், ஜனாதிபதியை வெளியேற்றுவது இலகுவானதல்ல, என பிரகடனம் செய்தார். பிற்போக்கு தேசாபிமானத்தை தூண்டிவிட முயற்சித்த இராஜபக்ஷ, தனது அரசாங்கத்தை கவிழ்க்க வெளிநாட்டில் சதி நடக்கின்றது எனக் கூறிக்கொண்டார்.
ஜனாதிபதியின் செயலாளரான பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷவும், பேரினவாதத்தை கிளறிவிட முயற்சித்தார். அண்மைய ஆர்ப்பாட்டங்களைப் பற்றி பேசிய அவர், அத்தகைய சம்பவங்களுடன் நாம் பின்வாங்குவோமெனில் அது அற்பத்தனமானதாகும். புலிகளைத் தோற்கடித்து அத்தகைய அர்ப்பணிப்புடன் நாடு பின் செல்லுமெனில் அது அர்த்தமற்றதாகும். நாம் அதை அனுமதிக்க முடியாது, எனக் கூறினார்.
எவ்வாறெனினும், மீனவர்களின் ஆர்ப்பாட்டமானது எரிமலையொன்றின் அறிகுறி மட்டுமே. இலங்கை பூராவும் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி பரவிவருகின்றது. பல்வேறு பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் பெப்பிரவரி 17 அன்று அடையாள வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விட்டிருந்தன. இந்த நடவடிக்கையின் மட்டப்படுத்தப்பட்ட பண்பை விட, பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர். கொழும்பில் அரசாங்க ஊழியர்களும் தாதிமாரும், அதே போல் மாத்தளை மாவட்டத்தின் சிறு விவசாயிகளும் போராட்டங்களில் ஈடுபட்டதோடு இந்த வாரம் சம்பள உயர்வு கோரி சுமார் 15,000 கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். இவை வரவிருக்கும் வர்க்க மோதல்களின் முன்னறிகுறிகளே.
இத்தகைய நிலைமைகளின் கீழ், சோ.ச.க. இராஜபக்ஷ அரசாங்கத்தினதும் அரச இயந்திரங்களதும் இலக்காகியிருப்பது புதுமையானதல்ல. சோ.ச.க., நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாகும். அனைத்துலகவாத சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட அது, அரசாங்கத்தின் தாக்குதல்களை சவால் செய்ய மற்றும் தோற்கடிக்கக் கூடிய பொருத்தமான முன்னோக்கை கிராமப்புற வறியவர்களுடன் சேர்த்து தொழிலாள வர்க்கத்துக்கு வழங்கும் ஒரே கட்சியாகும்