சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Oppose the government’s price hikes!

இலங்கை: அரசாங்கத்தின் விலை அதிகரிப்புகளை எதிர்த்திடு!

By the Socialist Equality Party (Sri Lanka)
22 February 2012

use this version to print | Send feedback

சர்வதேச ரீதியில் அரசாங்கங்களால் திணிக்கப்படும் சிக்கனத் திட்டங்களுக்கு எதிராக உலகம் பூராவும் உள்ள தமது சமதரப்பினரைப் போலவே இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களும் ஒரு பொதுப் போராட்டத்துக்கு முகங்கொடுக்கின்றனர். சர்வதேச நிதி மூலதனத்தின் இலாபத்தை உறுதிப்படுத்துவதற்காக, உலக முதலாளித்துவத்தின் மோசமடைந்து வரும் நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் சுமக்க நெருக்கப்படுகின்றனர்.

இராஜபக்ஷவின் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக பெப்பிரவரி 11 அன்று ஒரு தொகை விலையதிகரிப்புகளை அறிவித்தது. மண்ணெண்ணை 49.3 வீதம், பெற்றோல் 8.7 வீதம் மற்றும் டீசல் 36.9 வீதமுமாக விலை அதிகரிக்கப்பட்டன. இது தீவு பூராவும் உள்ள உழைக்கும் மக்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புகள், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ நடைமுறைப்படுத்தி வரும் கிரேக்க-வடிவிலான சிக்கனத் திட்டத்தின் பாகமாகும். இதில் நாணய மதிப்பிறக்கம், பொதுச் செலவு வெட்டுக்கள் மற்றும் 20 முதல் 40 வீதம் வரையான மின்சாரக் கட்டண அதிகரிப்பு போன்ற ஏனைய விலை அதிகரிப்புகளும் அடங்கும். தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களைப் பொறுத்தவரை, தசாப்தகால யுத்தம் மற்றும் இழப்புக்களுக்குப் பின்னர், வாழ்க்கைத் தரத்தின் மீதான இந்த அடி தாங்க முடியாததாகும்.

மீனவர்கள், பஸ் உரிமையாளர்கள், மாணவர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வேலை நிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் ஏற்கனவே வெடித்துள்ளதோடு அவை அரச ஒடுக்குமுறையையும் சந்தித்துள்ளன. சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) மீண்டும் மீண்டும் எச்சரித்தது போல், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான தசாப்தகால இனவாத யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச இயந்திரம், இப்போது தமது அடிப்படை உரிமைகளை காக்க முயற்சிக்கும் சிங்கள மற்றும் தமிழ் உழைக்கும் மக்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டுள்ளது.

பெப்பிரவரி 15 அன்று சிலாபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீதான பொலிஸ் தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பாகும். இந்த தாக்குதலில் அன்டனி வர்ணகுலசூரிய பலியானார். எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பீ.) தனித்தனியாக ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஊர்வலங்களை தகர்ப்பதற்காக பொல்லுகள், கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீச்சு இயந்திரத்துடன் ஆயுதபாணிகளாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொலிசாருடன் பாதுகாப்புப் படைகள் தமது நடவடிக்கைகளை உக்கிரமாக்கின.

கடந்த ஆண்டில் மத்திய கிழக்கில் இடம்பெற்ற நிகழ்வுகளையிட்டு விழிப்புடன் இருக்கும் ஜனாதிபதி இராஜபக்ஷ, எந்தவொரு எதிர்ப்புப் போராட்டமும் தனது அரசாங்கத்துக்கும் அது பாதுகாக்கும் வங்குரோத்து இலாப முறைமைக்கும் எதிரான வெகுஜன இயக்கத்தின் ஆரம்பப் புள்ளியாக இருக்கும் என்ற பீதியில் உள்ளார். அவரது அரசாங்கம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது போலவே, எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்காமல் நிற்கப் போவதில்லை.

எரிபொருள் செலவு அதிகரித்ததன் காரணமாக ஜீவனோபாயம் சீரழிக்கப்பட்டுள்ள மீனவர்களின் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. பெப்பிரவரி 13 அன்று தனியார் பஸ் உரிமையாளர்கள், குறிப்பாக சிறு உரிமையாளர்கள் எரிபொருள் மானியம் கோரி சேவை நிறுத்தம் செய்த போது, அரசாங்கம் அவர்களது கோரிக்கையை நிராகரித்த போதிலும், 20-28 வீத போக்குவரத்து கட்டண அதிகரிப்பை அனுமதித்தது. ஆயினும், மீனவர்கள் தமது விலைகளை அதிகரிக்கும் நிலையில் இல்லை. அது விற்பனையும் வருமானமும் குறைவதற்கே வழிவகுக்கும்.

தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் சகல பகுதியினரதும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சோ... சந்தேகத்திற்கிடமின்றி ஆதரவளிக்கின்றது. எவ்வாறெனினும், அதே சமயம், ஆளும் வர்க்கம் மற்றும் அவர்களின் அரசாங்கங்களால் திட்டமிடப்படும் சமூக எதிர்ப்-புரட்சியைத் தோற்கடிக்க ஆர்ப்பாட்டங்களும் போராளிக் குணமும் சுய-அர்ப்பணிப்பும் மட்டும் போதாது என நாம் வலியுறுத்துகின்றோம். இந்த தாக்குதல்களின் தோற்றுவாயான முதலாளித்துவ முறைமையையே எதிர்கொள்ளக்கூடிய வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொள்வதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கம் தனது நலன்களை காக்க முடியும்.

சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான போராட்டமானது எதிர்க் கட்சிகள், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் போலி இடதுகள் போன்ற, தற்போதைய சமுதாயப் படிநிலையைப் பாதுகாப்பவர்களுக்கு எதிரான அரசியல் போராட்டத்தை அவசியமாக்குகிறது. இந்த பகுதியினர், மக்களின் கோரிக்கைகளை அனுதாபத்துடன் அணுகுமாறு அரசாங்கத்துக்கு அற்ப வேண்டுகோள் விடுக்கும் மட்டத்துக்கு எந்தவொரு எதிர்ப்பையும் மட்டுப்படுத்த முனைகின்றன. ஆனால் ஐரோப்பாவில் உள்ள அரசாங்கங்களைப் போலவே, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்தினதும் நிதி மூலதனத்தினதும் கோரிக்கைகளை அமுல்படுத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது.

யூ.என்.பீ. மற்றும் ஜே.வி.பீ.யும் சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித் திட்டத்தை எதிர்க்கவில்லை. 1970களின் பிற்பகுதியில் சந்தை சார்பு மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கத்தை நோக்கிய நகர்வை ஆரம்பித்தமைக்கும், அதே போல் 1983ல் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தொடக்கி வைத்தமைக்கும் யூ.என்.பீ.யே பொறுப்பாளியாகும். யுத்தத்தை முழுமையாக ஆதரித்த ஜே.வி.பீ., 2004ல் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) கூட்டணி அரசாங்கத்தில் இணைந்துகொண்டதோடு அதன் முதலாளித்துவ வேலைத் திட்டத்தை அமுல்படுத்த உதவியது. ஜே.வி.பீ. அதன் கூட்டங்களில், உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு மோசடி மற்றும் வீணடிப்புகளுக்காக அரசாங்கத்தை குற்றஞ்சாட்டுகின்றதே அன்றி, முதலாளித்துவத்தை குற்றஞ்சாட்டவில்லை.

முன்னாள் இடதுசாரி அமைப்பான நவசமசமாஜக் கட்சி, இப்போது தொழிலாளர்களதும் வறியவர்களதும் பாதுகாவலனாக யூ.என்.பீ.யை முன்னிலைப்படுத்தி அரசியல் ரீதியில் குற்றவியல் பாத்திரத்தை ஆற்றுகின்றது. பெப்பிரவரி 17 அன்று கொழும்பில் நடந்த ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் யூ.என்.பீ. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொண்ட நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, இந்த பொது மேடையைச் சூழ அணிதிரளுமாறும் இந்த குற்றவியல் அரசாங்கத்தின் மக்கள் விரோத தாக்குதல்களை எதிர்க்குமாறும் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சோ.ச.க. இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு மாற்றீடாக தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை மற்றும் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதன் பேரில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற வெகுஜனங்களை அணிதிரட்டுவதற்காக, ஆளும் வர்க்கத்தின் சகல தட்டிலிருந்தும் சுயாதீனமாக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தப் போராடுகின்றது. சீரழிந்த முதலாளித்துவ முறைமைக்கு பதிலீடாக, சோசலிச மாற்றீட்டுக்காக போராடாமல், உழைக்கும் மக்களால் தமது வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியாது.

சோசலிசத்துக்கான போராட்டமானது, முன்னெப்போதையும் விட இப்போது ஒரு சர்வதேச விடயமாகும். உலகம் பூராவும் உள்ள உழைக்கும் மக்களும் இளைஞர்களும் முதலாளித்துவம் என்ற பொது எதிரியை எதிர்கொள்கின்றனர். எகிப்து, கிரேக்கம் மற்றும் உலகம் பூராவும் உள்ள தமது வர்க்க சகோதரர்களைப் போலவே இலங்கையில் உள்ள தொழிலாளர்களும் அதே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இலங்கையில் சிக்கன வேலைத்திட்டத்துக்கு எதிரான எந்தவொரு போராட்டமும், அபிவிருத்தியடைந்து வரும் சர்வதேச புரட்சிகர போராட்ட அலைகளின் பாகமாகும்.

இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு, வேலைத் தளங்களிலும் அயல் பிரதேசங்களிலும் சுயாதீன நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புமாறு தொழிலாளர்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறியவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுக்கும் சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. இந்த நடவடிக்கைகள் பாதுகாப்பு செயற்பாடுகளையும் உள்ளடக்கி இருக்க வேண்டும். இவற்றில் அரசாங்கத்தின் நேரடித் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள ஒன்று கூடுவதற்கான ஜனநாயக உரிமை மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்தையும் பாதுகாக்க பாதுகாப்பு குழுக்களை அமைப்பதும் அடங்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தை முன்னெடுக்க இத்தகைய நடவடிக்கை குழுக்களுக்கு அரசியல் ரீதியில் உதவுவதற்கு சோ.ச.க. வாக்குறுதியளிக்கின்றது. அதே சமயம், தெற்காசியாவிலும் உலகம் பூராவும் மார்க்சியத்துக்காக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட முழுப் போராட்ட வரலாற்றில் இருந்து ஊற்றெடுக்கும் விஞ்ஞானப் பூர்வமான வேலைத்திட்டத்தை இத்தகைய போராட்டங்கள் அத்திவாரமாகக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக நாம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கல்வியூட்ட முயற்சிக்கின்றோம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோ.ச.க., எமது வேலைத் திட்டத்தை கற்குமாறும், கட்சியை சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியாக கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறும் சிந்தனையாற்றல் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.