World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

PSA auto workers protest threat to close Aulnay, France plant

பிரான்ஸில் ஒல்நே ஆலை மூடப்படும் அச்சுறுத்தலுக்கு PSA தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்

By our reporters
21 February 2012
Back to screen version

சனிக்கிழமையன்று பாரிஸின் கிழக்குப் புறநகரான Aulnay-sous-Bois  ல் 2014ல் திட்டமிடப்பட்டுள்ள PSA ஆலைமூடலுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்து இருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் அணிவகுத்துச் சென்றனர். நிர்வாகத்தின் மூலோபாயமான compactage எனப்படும் உற்பத்தித் திறன் அதிகரிப்பு, ஊழியர்களைக் குறைத்தல், மற்றும் மாட்ரிட்டிலும் பிரான்ஸின் வடபகுதியிலுள்ள செவலநோர்டிலுமுள்ள ஆலைகள் மூடப்படுதல் என்னும் திட்டத்தை சுமத்துவதின் ஒரு பகுதியாகும் இது.

“PSA இன் கணக்கில் நிதி உள்ளது!, பணிநீக்கங்களைத் தடைசெய்க! உட்பட பல கோஷங்களை முழங்கியபடி அணிவகுத்தவர்கள் சென்றனர்.

கிட்டத்தட்ட 2,000 பேர் அணிவகுப்பில் பங்கு பெற்றனர். PSA தொழிலாளர்கள், உள்ளூர்வாசிகளைத் தவிர, தொழிலாளர் பொதுக்கூட்டமைப்பு தொழிற்சங்கத்தின் (CGT) அதிகாரிகள், முதலாளித்துவ இடதுசோசலிஸ்ட் கட்சியின் (PS) மேயர்கள், உறுப்பினர்கள் மற்றும் இடதுகட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி (PCF),  புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் (NPA) உறுப்பினர்கள் ஆகியவற்றில் இருந்தும் பிரதிநிதிக் குழுக்கள் பங்கு பெற்றனர்.

தொழிலாள வர்க்கத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் இடையே வர்க்க அழுத்தங்கள் தீவிரமாகியுள்ள நிலையில், அணிவகுப்பின் மிக முக்கியமான அம்சம் தொழிற்சங்கங்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ இடது பற்றிய தொழிலாளர்களின் பெருகிய அவநம்பிக்கைத்தனம் ஆகும்.

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்கள் CGT யினால் காட்டிக்கொடுக்கப்பட்டது போன்ற கசப்பான அனுபவங்களின் விளைவுதான் இதுஅப்பொழுது பொலிசார் எண்ணெய்ச் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், முற்றுகை ஆகியவற்றை முறிப்பதற்குப் அனுப்பப்பட்டபோது CGT ஒதுங்கியிருந்தது.

WSWS  இடம் பேசிய தொழிலாளர்கள் நியாயமான முறையில் தங்கள் கோரிக்கைகளுக்காக CGT அல்லது குட்டி முதலாளித்துவ இடதுகளின் தலைமையின்கீழ் போராடுவதற்கான நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை என்றனர். CGT ஆனது தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை PSA  இடம் உற்பத்தியை பல ஆலைகளில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கோருவதின் மூலம்தான்  பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற திவாலான கருத்தை முன்வைத்துள்ளது. இத்தகைய கோரிக்கைகள், முதலாளிகளுக்கு முற்றிலும் நிபந்தனையற்ற சரண் என்று இருப்பவை, CGT க்குத்தான் டஜன்கணக்கான கார்த் தயாரிப்புத் தொழிற்சாலைகள் பிரான்ஸ் முழுவதும் 2008 உலக நிதிய நெருக்கடி தோன்றியதில் இருந்து மூடுவதை மேற்பார்வையிட அரசியல் மறைப்பை கொடுத்துள்ளனர்.

ஒல்நே PSA  யில் 15 ஆண்டுகளாக உற்பத்திப் பிரிவில் வேலைபார்க்கும் Zitouni  இடம் WSWS பேசினர்:

திரும்பிப் போராட வேண்டிய தேவையைப் பற்றிப் பேசிய Zitouni கூறினார்: இதற்கு இன்னும் பரந்த இயக்கம் தேவை; இது ஆலை அளவில் வெற்றி கொள்ளப்பட முடியாதது. தொழிற்சங்கங்கள் அவற்றை ஏற்பாடு செய்யவில்லை... PSA பின்வாங்காது. இது பணம், இலாபங்களைப் பொறுத்தது. மொரோக்கோவில் தொழிலாளர்கள் மாதம் 250 ஈரோக்களைப் பெறுகின்றனர். குறைவூதியத் தொகுப்புடைய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் எங்கள் விரோதிகள் அல்ல, ஆனால் அவர்கள் விழித்துக் கொண்டு எழுச்சி செய்ய வேண்டும்.

என் அறிவிக்கு எட்டியபடி, பிரான்ஸில் எந்தக் கட்சியும் தொழிலாள வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. [கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் PS மந்திரியுமான Jean-Luc] Mélenchon தான் இந்த அமைப்புமுறையை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்கிறார், ஆனால் PS ன் இன்னும் ஒரு  மனோபாவத்தைத்தான் கொண்டிருக்கிறார். வலுவானவர்களுக்குப் பின் ஆதரவாக அவர் நிற்பார். இன்னும் அதிக அளவில் மக்கள் வேலையின்மையில் வாடினால், ஓர் உள்நாட்டுப் போர் ஏற்படும். சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டங்களுக்கு உருக் கொடுப்பதற்கு ஒரு சர்வதேசக் கட்சி நமக்குத் தேவை என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன்.

CGT உறுப்பினரும், மூன்று ஆண்டுகள் PSA-Aulnay யில் வேலைசெய்பவருமான சம்பா கூறுகிறார்: தொழிற்சங்கங்கள் ஒன்றோடொன்று உடன்பட்டிருக்கவில்லை என்பது பிரச்சினை ஆகும். கூட்டுத் தொழிற்சங்கக் குழுவில் (Intersyndicale) அவை ஒன்றாக இருந்தன என்பதை ஒப்புக் கொள்கிறேன்; ஆனால் 2010ல் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராகத் தொழிலாளர்களை போராட்டத்தில் அவைகள் ஒன்றுபடுத்தவில்லை. Grandpuits  ல் நடைபெற்றது குறித்து எனக்கு உடன்பாடு இல்லை.  -- அங்குள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றில் 2010 ஓய்வூதியங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது CGT தொழிலாளர்களின் வேலைநிறுத்த வரிசையை பொலிசார் முறித்தபோது ஏதும் செய்யவில்லை.

கிரேக்கத்தில் நடப்பது நமக்கு ஓர் எச்சரிக்கை ஆகும். ஆனால் பிரான்ஸில் எந்தக் கட்சியும் தொழிலாள வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. நாம் கிரேக்கர்களுக்கு உதவ வேண்டும்; ஆனால் எப்படி? ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்க அரசாங்கத்திற்குக் கொடுக்கும் நிதிகள் வங்கிகளுக்குக் கடனைத் திருப்புவதற்குத்தான் என்பதில் நான் உடன்பாடு காண்கிறேன். தொழிலாளர்கள் கிரேக்கத் தொழிலாளர்களுடன் ஒற்றுமை உணர்வு காட்ட வேண்டும். சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும். அவர்களுடைய போராட்டம் எங்களுடைய போராட்டம் ஆகும் என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

ராஜாராம் PSA  யில்15 ஆண்டுகளாக உழைத்துள்ளார்: எங்களுக்கு இங்கே வேலையில்லை என்றால் வேறு இடத்தில் வேலை கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இப்பகுதியை விட்டு நான் நீங்க முடியாது. இங்கு எனக்கு ஒரு வீடு உள்ளது, என் குடும்பம், இரு குழந்தைகள் இங்கே உள்ளனர். சென்னையில் ஓர் ஆலையில் நான் வேலைபார்த்தேன்; பணிநீக்கம் செய்யப்பட்டேன். இதேதான் இங்கேயும் எங்கும் நடைபெறுகிறது.

எனக்கு 45 வயதாகிறது. என்னால் வேறிடத்தில் வேலை பெறமுடியாது; PSA  யில் 15 ஆண்டுகள் உழைத்தபின் கிடைத்துள்ள உரிமைகளை நான் இழந்தேன் என்றால், தொழிற்சங்கங்கள் பயனற்றவை. சோசலிஸ்ட் கட்சி, NPA, CGT அனைத்தும், எதையும் மாற்றப்போவதில்லை.

WSWS ஆதரவாளர்கள் தொழிலாளர்களைப் பேட்டி கண்டு சர்வதேச அளவில் கார்த்தயாரிப்பு மற்றும் தொழிற்துறைத் தொழிலாளர்களின் போராட்டங்கள் பற்றிக் கட்டுரைகளை வினியோகித்தனர் : ஒன்டாரியோ கட்டர்பில்லர் ஆலைமூடலை எதிர்த்து போராடுவோம்! கூலி வெட்டுகளுக்கு எதிராக வட அமெரிக்க தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவோம்! மற்றும் GM, Nokia, Pepsico தொழிலாளர்கள் உலகப் பணி நீக்கங்களால் பணிநீக்கத்திற்கு உட்படுகின்றனர்.