World Socialist Web Site www.wsws.org |
Greece heads toward a revolutionary explosionகிரீஸ் ஒரு புரட்சிகர வெடிப்பை நோக்கி செல்கிறது
Peter Schwarz Back to screen versionமுக்கூட்டால் (ஐரோப்பிய ஆணைக்குழு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி) கோரபட்ட சமூகசெலவின வெட்டு நடவடிக்கைகள் கிரேக்கத்தை புரட்சியை நோக்கி உந்துகின்றன. ஞாயிறு மாலை கிரேக்க நாடாளுமன்றத்தின் முன் 100,000 மக்களால் நடத்தப்பட்ட போராட்டமும், ஆர்பாட்டத்தைப் பொலிஸ் பலவந்தமாக தாக்கியதும் வெடித்த கலகங்களும் கிரேக்க மக்களின் மனோபாவத்தில் ஒரு கூர்மையான திருப்பத்தைக் குறித்தது. சமூகசெலவின வெட்டு நடவடிக்கைகள் கிரீஸை நெருக்கடியிலிருந்து வெளியில் எடுக்கக்கூடும் என்று பெரும்பாலும் ஒருவரும் நம்பவில்லை. கண்மூடித்தனமான வெட்டுகளுக்கு இருக்கும் ஒரே மாற்றீடு அரசின் திவால்நிலைமையும் மற்றும் ஏற்கனவே தற்போதைய சமூகசெலவின வெட்டு முறைமைகள் ஒரு பேரழிவை உருவாக்கி வருவதால் எந்தவித தாக்கத்தையும் கொண்டிருக்காத பொருளாதார பேரழிவுமே என்று அரசாங்கத்தினால் திரும்பதிரும்ப கூறப்படுகின்றது. . “வெவ்வேறு வடிவத்திலான மரணத்திற்கு இடையில் ஏதாவதொன்றை தேர்ந்தெடுக்க மட்டுமே நாங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம்,” இது 50 வயதான ஒரு போராட்டக்காரர் செய்தியாளரிடம் கூறியது. பதினெட்டு மாத சமூகசெலவின வெட்டுகள், அமைதியான காலகட்டத்தில் நினைத்தும் பார்த்திராத ஒரு சமூக வீழ்ச்சியை உருவாக்கியுள்ளது. தனியார்துறையில் 20 சதவீத அளவிற்கும், பொதுதுறையில் 50 சதவீத அளவிற்கும் கூலிகளும், சம்பளங்களும் சரிந்துள்ளன. ஒரு மில்லியனுக்கும் மேலான கிரேக்கர்களில், ஐந்தில் ஒரு வயதானவர்களும், இரண்டில் ஒரு இளைஞரும் வேலையின்றி உள்ளனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே வேலைவாய்ப்பின்மைக்கான சலுகைகளைப் பெறுகின்றனர். அதுவும் தற்போது மாதத்திற்கு 460 யூரோவிலிருந்து ($600) 360 யூரோவாக ($470) குறைக்கப்பட உள்ளது. ஞாயிறன்று மாலை கொண்டு வரப்பட்ட புதிய சமூகச்செலவின வெட்டு பொதி தொழிலாள வர்க்கத்தின் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் பரந்த அடுக்குகளை உயிர்வாழ்வதற்கான ஒரு அப்பட்டமான போராட்டத்தினுள் தள்ளிவிடும். 2015வாக்கில், இன்னும் கூடுதலாக 150,000 அரசுதுறையிலுள்ள தொழிலாளர்கள் நீக்கப்பட உள்ளார்கள். மேலும் இன்னும் கூடுதலான பொதுத்துறை கூலி வெட்டுக்களோடு, வரவு-செலவு கணக்கு திட்டத்திலிருந்து கூடுதலாக 11.4 பில்லியன் யூரோ வெட்டப்பட உள்ளது. மேற்கு ஐரோப்பிய அளவிற்கு அத்தியாவசிய பண்டங்களின் விலைகளோடு, பலருக்கு அதுவும் குறிப்பாக ஆதரவற்ற குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்க வேண்டியுள்ள பலருக்கு உயிர்வாழ்வதே சாத்தியமில்லாமல் ஆகிவிடும். இந்த நடவடிக்கைகள் கடன் நெருக்கடியைத் தீர்க்க போவதல்ல, மாறாக இன்னும் மோசமாக மட்டுமே ஆக்கும் என்பதைக் காண ஒருவர் ஒரு கணித மேதையாக இருக்க வேண்டுமென்பதில்லை. அனைத்து பொருளாதார குறியீடுகளும் கீழ்நோக்கி சுட்டிக்காட்டுகின்றன. கடந்த ஆண்டு பொருளாதாரம் 7 சதவீத அளவிற்கும், தொழில்துறை வெளியீடு 16 சதவீத அளவிற்கும் சுருங்கியது. மதிப்புகூட்டு வரி -VAT- விகிதத்தில் ஓர் உயர்வு கொண்டு வரப்பட்டதற்கு இடையில், 60,000 சிறு மற்றும் குடும்ப வியாபாரங்கள் திவாலாகியதால், வரியிலிருந்து கிடைக்கும் வருவாய்களும் 19 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தன. இன்னும் 50,000 திவால்கள் இந்த வருடம் எதிர்பார்க்கப்படுகின்றன. வட்டிகள் மற்றும் திருப்பி செலுத்த வேண்டிய கடன் செலவுகளை ஒருவர் கழித்துவிட்டு பார்த்தால், அரசு வரவு-செலவு கணக்கு தற்போது நட்டத்திலுள்ளது. கடந்த ஆண்டில் மொத்த கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 140 சதவீதத்திலிருந்து 160 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளதால் கடன்வழங்கு-சேவையின் அளவு (level of debt servicing) மிகமிக உயர்வாக உள்ளது. கிரீஸிற்கு முக்கூட்டால் வகுத்தளிக்கப்பட்ட அதிர்ச்சி வைத்தியமும், கிரேக்க அரசாங்கத்தால் அது நடைமுறைப்படுத்தப்பட்டதும் நாட்டை "மீட்டெடுப்பதையோ" அல்லது அதன் வரவு-செலவு திட்டத்தைச் சமப்படுத்துவதையோ நோக்கமாக கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படையாக உள்ளது. அதற்கு மாறாக, ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கி நிஜமான அதிகாரம் அனைத்தும் எங்கே தங்கியுள்ளன என்பதை மீண்டுமொருமுறை தெளிவுபடுத்தி, ஏனைய ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதுமே அதன் நோக்கமாகும். வெட்டுக்களின் வர்க்க குணாம்சம் இதைவிட பகிரங்கமாக இருக்க முடியாது. வேலைவாய்ப்பற்றோரும் மற்றும் பொதுத்துறை மற்றும் தனியார்துறை தொழிலாளர்களும் இரத்தம் சிந்தவைக்கப்படும் நிலையில், நாட்டின் செல்வசெழிப்பான மேற்தட்டு பாதிப்பேதுமின்றி தப்பித்து கொள்கிறது. அது அதன் சொத்துக்களை வெளிநாடுகளில் உள்ள நிதி மற்றும் சொத்து சந்தைகளுக்கு நீண்டகாலத்திற்கு முன்னர் இருந்தே மாற்றிவிட்டனர். நிதியியல் மேற்தட்டால் முன்பின் ஆராயமால் திணிக்கப்பட்ட 2008 நிதியியல் நெருக்கடியின் மொத்த பாதிப்பையும் தொழிலாள வர்க்கத்தின்மீது இறக்குவதை நோக்கமாக கொண்ட அதே நிதியியல் பிரபுத்துவத்தால் கொண்டு வரப்படும் ஒரு சர்வதேச தாக்குதலின் தாக்குமுகப்பான கிரேக்க சமூகசெலவின வெட்டு முறைமைகள் உள்ளன. தொழிலாளர்களின் வருமானங்கள், கடந்தகால சமூக வெற்றிகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் ஒவ்வொரு இடத்திலும் தாக்குதலுக்குள்ளாகின்றன. கிரீஸிற்கு எதிராக ஒரு குறிப்பிடத்தக்க அரக்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்துள்ள ஜேர்மன் அரசாங்கம், வேலைவாய்ப்பற்ற ஜேர்மன் தொழிலாளர்களுக்கு எதிராக அதே அரக்கத்தனத்தைப் பின்பற்றுகிறது. கிரீஸில் அது வெற்றி பெற்றால், அதையும்விட கூடுதலாக கொடூரமான விதத்தில் அவர்களை நோக்கி செயல்படும். நாஜி ஆக்கிரமிப்பு, உள்நாட்டு யுத்தம் மற்றும் இராணுவ சர்வாதிகாரத்தை அனுபவித்துள்ள கிரேக்க தொழிலாள வர்க்கம், ஒரு போராட்டமில்லாமல் நிதியியல் மூலதனத்தின் ஒரு புதிய சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாது. ஞாயிறன்று மாலை அவநம்பிக்கை மற்றும் கோபம் கலந்து வெளிப்பட்ட வெளிப்பாடு தவிர்க்கவியலாமல் தீவிரமடைந்து ஒரு புரட்சிகர திசையில் திரும்பும். ஏப்ரலில் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல்கள் நடந்தாலும் கூட, அவை எவ்வித தீர்வையும் அளிக்காது. தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்கும் இரண்டு கட்சிகளும் வேகவேகமாக உடைந்துவருகின்றன. அவற்றால் ஒருபோதும் ஒரு பெரும்பான்மையுள்ள அரசாங்கத்திற்கு உத்தரவாதமளிக்க முடியாது. சமீபத்திய கருத்துகணிப்புகளின்படி, 2009 தேர்தல்களில் 44 சதவீதத்தோடு வெற்றிபெற்ற சமூக ஜனநாயக PASOK கட்சி, 8 சதவீதத்திற்கும் மற்றும் பழமைவாத புதிய ஜனநாயகம் சுமார் 30 சதவீதத்திற்கும் குறைந்துள்ளது. ஜனநாயக இடது (DIMAR), தீவிர இடதின் கூட்டணி (SYRIZA) மற்றும் ஸ்ராலினிய கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) ஆகிய மிகப்பெரிய மூன்று "இடது" அமைப்புகள் ஒன்றுசேர்ந்து 40 சதவீதத்திற்கு மேல் தற்போது வாக்குகளைப் பெற்றுள்ளன. ஆனால் முதலாளித்துவ அரசிற்கு அடிபணியவைப்பதன் ஒரு நீண்ட வரலாற்றை இந்த மூன்று அமைப்புகளுமே கொண்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் ஜனநாயக இடது, சில குறிப்பிட்ட வெட்டுக்கள் தவிர்க்கவியலாதது என்றும், கிரேக்க கடனில் 60 சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாற்ற வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது. நீண்டகாலமாக PASOKஐ ஆதரித்துவரும் SYRIA இப்போது தேர்தல்களில் அனைத்து "இடது" கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கு அழைப்புவிடுக்கிறது. சமூகசெலவின வெட்டு முறைமைகளுக்கு எதிரான கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரங்கள், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து வருவதற்கும், நாட்டின் கடனை ஒருதலைபட்சமாக இரத்து செய்வதற்கும், மற்றும் "தொழிலாளர்கள்" மற்றும் மக்களின் அதிகாரத்திற்கும் கூட அழைப்புவிடுக்கிறது. ஆனால் அதன் ஸ்ராலினிச பாரம்பரியத்திலிருந்து ஒருபோதும் உடைத்து கொள்ளாத அந்த கட்சி நெருக்கடி காலகட்டங்களில் ஆளும் வர்க்கத்தோடு கூட்டுசேர்ந்து கொண்டு, தொடர்ந்து தேசியவாதத்தை ஊக்குவித்துவிட்டு, தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக்கொடுத்துள்ளது. 1989இல், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி பழமைவாத புதிய ஜனநாயக கட்சி உடனும் கூட ஒரு கூட்டணி அரசாங்கத்தை ஸ்தாபித்தது. ஏப்ரலில் இந்த கட்சிகளில் ஏதாவதொன்று அரசில் நுழைந்தாலும், அவை தொழிலாள வர்க்கத்தை பின்னுக்கு இழுத்து வைக்கவும், போராடுவதிலிருந்து அதை தடுக்கவும் வேலை செய்யும். தொழிலாள வர்க்கத்தை ஸ்தம்பிக்க செய்து, நெருக்கடியைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதிதீவிர வலதை அவை பலப்படுத்தும். அது இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்ற பாதை அமைத்தளிக்கும். இதுபோன்ற ஒரு "இடது" அரசாங்கத்தை, 1936இல் தொழிலாளர்களின் போர்குணமிக்க ஓர் அலையின் போதும், அதைதொடர்ந்து ஏற்பட்ட பொதுவேலைநிறுத்த போக்குகளில் தொழிலாள வர்க்கத்தை முதுகில் குத்துவதற்காக மட்டுமே, பிரான்சில் அதிகாரத்திற்கு வந்த லியோன் புளூமின் (Léon Blum) மக்கள் முன்னனி அரசாங்கத்தோடு ஒப்பிடலாம். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், இந்த வலதுசாரி சக்திகள் " புளூமை விட ஹிட்லர் மேல்" என்ற அவற்றின் தேர்தல் முழக்கத்தோடு செயல்பட்டு, பிரான்சின் நாஜி ஆக்கிரமிப்போடு கூட்டுசேர்ந்திருந்த சர்வாதிபத்திய விச்சி ஆட்சியை ஸ்தாபித்தன. முக்கூட்டின் சமூகசெலவின வெட்டு திட்டங்களை எதிர்த்து போராட கிரேக்க தொழிலாள வர்க்கத்திற்கு, வர்க்க கூட்டுழைப்பிற்கு அப்பாற்பட்டு போராட அர்பணிக்கப்பட்ட ஒரு சுயாதீனமான புரட்சிகர வேலைத்திட்டமும், புதிய அமைப்புகளும் தேவைப்படுகின்றன. அரசாங்கமும் அதை ஆதரிக்கும் கட்சிகளும் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவும், சுகாதார நலன் மற்றும் கல்விமுறையைக் குழிதோண்டி புதைக்கவும் வேலை செய்துவருகின்ற வேளையில், தொழிலாள வர்க்கம் அதுவே நாட்டை நடத்திச் செல்வதற்குரிய பொறுப்பை எடுக்க வேண்டும். சமூகச்செலவின வெட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டத்தை ஒழுங்கமைக்கவும், பாசிஸ்டுகள் மற்றும் இராணுவத்தால் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்கவும் தயாரிப்பு செய்யவும் வேலையிடங்கள் மற்றும் குடியிருப்புகளிலும் நடவடிக்கை குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை குழுக்கள், நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்கச் செய்ய முதலாளித்துவ அரசு மற்றும் கட்சிகளுடன் இணைந்து வேலை செய்துவரும் தொழிற்சங்க இயந்திரங்களிலிருந்து சுயாதீனப்பட்டு இருக்க வேண்டும். இதுபோன்ற குழுக்கள் ஒரு தேசியமட்டத்தில் அவற்றின் போராட்டத்தை ஒருங்கிணைத்து கொண்டு, ஸ்பெயின், போர்ச்சுக்கல், ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களோடு தொடர்புகளை ஸ்தாபிக்க வேண்டும். இத்தகைய குழுக்கள் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை தமது கைகளில் எடுத்து மற்றும் ஒரு நிதியியல் மேற்தட்டின் எதிர்காலத்தை விஸ்தரிப்பதற்கு அல்லாமல் மாறாக சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உந்தப்பட்ட ஒரு சோசலிச அடித்தளத்தில் பொருளாதாரத்தை மீள்-ஒழுங்கமைப்பு செய்யவும் அர்பணிக்கப்பட்ட ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்திற்கான அடித்தளத்தை அமைக்க முடியும். இதுபோன்றதொரு போராட்டம் மட்டுமே ஒரு சர்வதேச மட்டத்தில் வெற்றியடைய முடியும். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஐரோப்பிய ஒன்றியம் முடிவுகட்டப்பட்டு, அவ்விடத்தில் ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகள் இடம் பிடிக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதே இதன் முன்நிபந்தனையாகும். இந்த வேலைதிட்டத்திற்காகவே நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் அதன் பிரிவுகளும் போராடி வருகின்றன. |
|