World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

As popular anger erupts Euro zone ministers to demand still more Greek cuts

மக்கள் சீற்றம் வெடிக்கையில் யூரோப்பகுதி மந்திரிகள் இன்னும் அதிக வெட்டுக்களை கிரேக்கத்திடம் கோருகின்றனர்

By Nick Beams 
14 February 2012
Back to screen version

கிரேக்கப் பாராளுமன்றம் பாரிய சிக்கனத் திட்டத்திற்கு வாக்களித்துள்ளபோதிலும்கூட, நாளை நடைபெறவுள்ள யூரோப் பகுதியின் நிதி மந்திரிகள் கூட்டம் இன்னும் கூடுதலான வெட்டுக்களைக் கோரவுள்ளது. மேலும் ஒரு 130 பில்லியன் யூரோக்கள் ($170 பில்லியன்) பிணை எடுப்பு நடவடிக்கையில் கையெழுத்திடுவதற்கு முன் கிரேக்க அரசியல் தலைவர்களிடம் இருந்து அவைகள் செயல்படுத்தப்படும் என்னும் உத்தரவாதங்களையும் அவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.

ஞாயிறன்று  புதிய சுற்று வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் குறைப்புக்களை எதிர்த்து கிட்டத்தட்ட 100,000 என்று மதிக்கப்பட்ட  கூட்டத்தை, முன்னதாகப் பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டினால் தாக்கியபின், இந்த நடவடிக்கைகள் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டன. இரவு முழுவதும் இளைஞர் குழுக்கள் கட்டிடங்கள் நெருப்பு வைக்கப்பட்டு பொலிசாருடன் மோதினர். கிட்டத்தட்ட 10 வங்கிகளும் 30 பிற கட்டிடங்களும் பாதிப்பிற்கு உட்பட்டன என்று கூறப்படுகிறது.

நாளைய கூட்டத்திற்கு முன்னதாக, யூரோப் பகுதி நிதிய அதிகாரிகள் இன்னும் 325 மில்லியன் யூரோக்கள் செலவுக் குறைப்புக்கள் அடங்கிய பட்டியல் ஒன்று சுமத்தப்படும் என்றும், தொழிலாளர் செலவினங்களில் 15 சதவிகிதம் எப்படி அடையப்படலாம் என்றும் குறிப்புக் காட்டியுள்ளனர்; இவற்றைத் தவிர எல்லா கிரேக்க அரசியல் தலைவர்களும் ஏப்ரலில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு பின் சிக்கனத் திட்டத்தை செயல்படுத்துவதாக உறுதிமொழிகளும் அளிக்க வேண்டும்.

பைனான்சியல் டைம்ஸிடம் ஒரு யூரோப்பகுதி அதிகாரி, பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பு முக்கியம்தான், ஆனால் அத்துடன் அனைத்தும் முடிந்துவிடாது என்றார்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில் ஜேர்மனியில் பொருளாதார மந்திரி பிலிப் ரோஸ்லர், நாங்கள் சரியான திசையில் ஒரு முடிவை எடுத்துள்ளோம்; ஆனால் இலக்கில் இருந்து இன்னும் தொலைவில்தான் உள்ளோம். கட்டுமானச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படுவது மிகவும் முக்கியமாகும் என்றார்.

ஞாயிறு இரவு வாக்கெடுப்பை ஒரு முக்கிய கட்டம் என்று விவரித்த ஐரோப்பிய பொருளாதார விவகாரங்கள் ஆணையர் ஒல்லி ரெஹ்ன் இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டும் என்பதைத் தெளிவாக்கினார். 325 மில்லியன் யூரோக்கள் சரியான நடவடிக்கைகள் அடையாளம் காணப்படுவது உட்பட, மற்ற நிபந்தனைகளும் அடுத்த யூரோக்குழுக் கூட்டத்திற்கு முன் முடிக்கப்பட்டுவிடும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்; அக்கூட்டம் அதன்பின் திட்டத்தை ஏற்பது பற்றி முடிவெடுக்கும் என்றார்.

கிரேக்கம் உண்மையில் பிணை எடுப்புப் பணத்தை பெறுமா என்பது பற்றிக் கணிசமான சந்தேகம் உள்ளது. கிரேக்கத்திற்கு கடன் கொடுத்த வங்கிகள் மற்றவர்களுக்கு உறுதியாளிக்கப்பட்டுள்ள தொகைகள் ஒரு காப்புநிதிக் கணக்கில்போடப்படவேண்டும், பின் எஞ்சியவை மட்டுமே கிரேக்க அரசாங்கத்திற்கு நிதிய, கட்டுமான சீர்திருத்தங்கள் என்று அழைக்கப்படுபவற்றிற்காக கொடுக்கப்பட வேண்டும், அவைகள் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் விவாதங்கள் உள்ளன.

இத்தகைய நடவடிக்கைகள் சுமத்தப்பட்டால், அவைகள் ஏதென்ஸிலும் பிற கிரேக்க நகரங்களிலும் நடைபெற்ற ஞாயிறு ஆர்ப்பாட்டங்களுக்கு உந்துதல் கொடுத்த சீற்றத்தைத்தான் எரியூட்டும்.

ஐந்து ஆண்டுகள் மந்த நிலை மற்றும் மூன்று ஆண்டுகள் சிக்கனத் திட்டங்கள் என்பவை கிரேக்கப் பொருளாதாரத்தை சிதைத்துள்ளது மட்டும் ல்லாமல் மக்களுடைய வாழ்க்கைத் தரங்களையும் தகர்த்துள்ளன. மக்களுடைய எதிர்ப்பின் வளர்ச்சி இப்பொழுது இருக்கும் அரசியல் கட்டமைப்புக்கள், கட்சிகள் ஆகியவற்றின் முறிவிற்கு இட்டுச் செல்கிறது.

1974ம் ஆண்டு கர்னல்களின் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின் மீண்டும் நிறுவப்பட்ட பாராளுமன்ற ஜனநாயகமுறை ஒரு கட்டுக்கதை ஆகும். பிரதம மந்திரி லூக்காஸ் பாப்படெமோஸ் எவராலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை, பாராளுமன்றத்தில் கட்சிகளால் ஏற்கப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் அவற்றிற்கு மக்களுடைய ஆதரவை உறுதியாகச் சிதைத்துவிட்டன; அந்நடவடிக்கைகளோ முக்கூட்டு எனப்படும் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆணைகளை ஒட்டிச் செயல்படுத்தப்பட்டன.

மேலும் பாராளுமன்ற சட்டவரைவில் பல நிதியக் குறிப்புக்கள் காலியாக விடப்பட்டுள்ளன என்றும் இவைகள் பாப்படெமோஸ் மற்றும் நிதி மந்திரி எவஞ்சலோஸ் வெனிசெலோஸிற்கும் நாட்டிற்குக் கடன் கொடுத்தவர்களுடைய ஒத்துழைப்புடன் முடிவெடுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

பாராளுமன்ற ஜனநாயகம் வெளிப்படையாக சிதைந்துவரும் நிலையில், பாராளுமன்றக் கட்சிகளே சிதைவில் உள்ளன. புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரான அன்டோனிஸ் சமரஸ், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர் குழுவிலுள்ள 21 பேரைக் கட்சியை விட்டு வெளியேற்றிவிட்டார். இதில் கட்சியின் பாராளுமன்ற கொரடாவும், நிழல் பாதுகாப்பு, உள்துறை மந்திரிகளும் அடங்குவர்.

PASOK தலைவர் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ சட்டவரைவிற்கு எதிராக வாக்களித்த அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத 23 பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டார்; இதில் முன்னாள் அரசாங்க மந்திரிகளும் அடங்குவர்.

முக்கிய பாராளுமன்றக் கட்சிகளின் சரிவு என்பது இடதுஎன்று அழைக்கப்படும் கட்சிகள் பெருகிய முறையில் அவற்றின் மக்கள் ஆதரவு அதிகரிக்கையில் முக்கிய பங்கைக் கொள்ளுவர் என்ற பொருளைத்தரும். அவர்களிடையே வேறுபாடுகள் என்ன இருந்தாலும்கூட, அவற்றினிடையே ஒரு பொதுக்கூறுபாடு உள்ளதுஒரு தொழிலாளர் அரசாங்கத்தை, சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாகக் கொண்டு நிறுவுவதற்குப் போராட வேண்டும் என்ற கருத்தை அவற்றில் எதுவும் முன்வைக்கவில்லை. இதேபோல் மூன்று முக்கிய அமைப்புக்களான கம்யூனிஸ்ட் கட்சி (KKE), தீவிர இடதுக் கூட்டணி (SYRIZA) மற்றும் ஜனநாயக இடது ஆகியவை நிதிய தன்னலக்குழுவிற்கு எதிராக, ஐரோப்பா முழுவதும் உள்ள  தொழிலாளர்களை ஒருங்கிணைத்த தளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு சர்வதேச முன்னோக்கிற்கா போராடவேண்டும் என்பதை எதிர்க்கின்றன.

பாராளுமன்றக் கருவி சிதைகையில், இரண்டு அரசியல் விருப்பத் தேர்வுகள், புரட்சி நிலை வெளிப்படுவதற்கு அடையாளமாக இருப்பவை, ஆளும் உயரடுக்கின் முக்கிய நபர்களின் உள்ளங்களில் நிறைந்து நிற்கும். இவற்றுள் ஒன்று ஏப்ரல் மாதத் தேர்தல்களை நடத்தாமல், பாராளுமன்றத்திற்கு புறம்பான ஆட்சி முறையை, இராணுவத்துடைய ஆதரவுடன் சுமத்துவது என்பது.

மற்றொன்று ஒரு மக்கள் முன்னணி ஆட்சியை நிறுவுதல்: இதில் இடது கட்சிகளுக்கும் நடைமுறையில் உள்ள முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து பிளவுற்றுள்ள பிரிவுகளும் அடங்கிய கூட்டணி ஒன்று அமைக்கப்படுவது பரிசீலக்கப்படும்; இதையொட்டி ஒரு சர்வாதிகாரம் சுமத்துப்படுவதற்கான நிலைமைகள் தோற்றுவிக்கப்படும்.

ஸ்ராலினிச KKE  ஏற்கனவே இத்தகைய ஆட்சியில் தன் பங்கைப் பெறக் காத்திருக்கிறது. சிக்கன நடவடிக்கைகள் பற்றிய அதன் அறிக்கைகளில் கடன்கள் ஒருதலைப்பட்சமாக இரத்து செய்யப்பட வேண்டும், மக்களின் அதிகாரம் நாட்டின் செல்வம் மக்களுடைய செழிப்பான வாழ்க்கைக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இத்தகைய சொற்றொடர்கள் பயன்படுத்தப்படுவது தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்கான போராட்டம் என்பதற்கு மாறாக ஒரு முதலாளித்துவக் கூட்டணி அரசாங்கத்திற்கான அரசியல் தயாரிப்பாகும்

பாராளுமன்றத்திற்குள் நடந்த நிகழ்வுகளைப் பற்றிய தன் அறிக்கையில் முதலாளித்துவக் கட்சிகளுக்குள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அழுத்தங்களைக் கொடுத்தனர், முரண்பாடுகளைத் தீவிரமாக்கினர் என்று KKE குறிப்பிட்டுள்ளது. எப்பொழுதெல்லாம் ஸ்ராலினிசக் கட்சிகள் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளைப் பற்றிப் பேசுகிறதோ அப்பொழுதெல்லாம் அவைகள் ஒரு மக்கள் முன்னணி ஆட்சியில் சேரத் தயார் நிலையில் உள்ளன என்பதைத்தான் நீண்ட அரசியல் அனுபவம் உறுதியாகத் தெரிவிக்கிறது. மற்ற இடது அமைப்புக்கள் அத்தகைய கூட்டணியில் சேரும் அல்லது அதற்கு முக்கிய ஆதரவை அளிக்கும்.

ஞாயிறன்று நடந்த வாக்கெடுப்பும் அதற்குப் பின் நடந்தவையும் ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும். சிக்கன திட்டத்திற்கு முடிவே இல்லை என்பதைத்தான் அவை தெளிவாக்கியுள்ளன. முக்கூட்டு கோரும் ஒரு தொகுப்புக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டவுடன், இன்னும் அதிக கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய வழிவகை எத்தகைய பாராளுமன்ற ஆட்சிமுறையுடனும் இயைந்து இருக்கமுடியாதது.

அரசியல் நிலைமையைச் சுருக்கிக்கூறுகையில், ஆங்கில மொழிச் செய்தி ஏடான Ekathimerini வங்கிகளுக்கும் மக்களுடைய கோரிக்கைகளுக்கும் இடையே ஒரு நேரடி மோதல் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. யூரோப் பகுதியில் அடிப்படையில் எத்தகைய அரசாங்கத்தை உடனடித் தேர்தலுக்கு பின் தான் விரும்புகிறது என்பதைத் தெளிவாகக் கூறியிருக்கிறது. ஐரோப்பிய ஜனநாயகம் நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளுக்கான மரியாதை அதன் கடுமையான சோதனையை முகங்கொடுக்கக்கூடும். மற்றொரு பெரிய கட்டிடமும் மிகப் பெரியதும் மிகச் சிறந்ததும் ஆனது சரிந்து விழக்கூடும்.

சர்வாதிகாரம் வரக்கூடும் என்ற பேச்சுத்தான் சூழலில் அதிகமாகத் தென்படுகிறது. முன்னே வரவிருக்கும் போராட்டத்திற்குத் தயாராகும் வகையில் தொழிலாள வர்க்கம் தன் சுயாதீன நலன்களை முன்வைத்து ஒரு சோசலிச, சர்வதேசிய வேலைத்திட்டத்தை அடித்தளமாக கொண்ட தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுவதற்குப் போராட வேண்டும்.