சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Fisherman killed as Sri Lankan police fire on protest

ஆர்ப்பாட்டத்தின் மீது இலங்கை பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் கொல்லப்பட்டார்

By our correspondent
16 February 2012

use this version to print | Send feedback

இலங்கையின் வடமேல் மாகாணத்தில், சிலாபம் வெல்ல பிரதேசத்தில் நேற்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, அங்கு அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்பட்ட பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் மூவர் காயமடைந்தனர்.

சர்வேதச நாணய நிதியம் திணிக்கும் சிக்கன நடவடிக்கைகளின் பாகமாக, சனிக்கிழமை அரசாங்கம் 50 வீத எரிபொருள் விலை அதிகரிப்பை அறிவித்தமைக்கு எதிராக மூன்றாவது நாளாகவும் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கலாம் என்ற பீதியில், புதன் கிழமை மாலை முதல் இன்று காலை வரை அந்தப் பிரதேசத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டால் ஸ்தலத்திலேயே உயிரிழந்த அன்டனி வர்னகுலசூரிய, 35, இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். ஒரு துப்பாக்கிக் குண்டு அவரது முகத்தில், மூக்குக்கு கீழே துளைத்து சென்றிருந்தது. மார்பில் காயமடைந்த செலஸ்டியன், கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இன்னொரு ஆர்ப்பாட்டக்காரர் முழங்காலில் காயமடைந்துள்ளார். மற்றையவர் கண்ணீர் புகைக் குண்டொன்றில் இருந்து தப்ப முயன்ற போது மூன்று விரல்களை இழந்துள்ளார்.


Warnakulasuriya's body in Chilaw hospital
வர்னகுலசூரியவின்
சடலம்

செவ்வாய் கிழமை பொலிசும் இராணுவமும் மீனவர்கள் நகரத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதை தடை செய்த பின்னர், நேற்று காலை சிலாபம் வெல்ல பகுதி தேவாலயத்தில் 4,000க்கும் மேற்பட்டவர்கள் அணிதிரண்டனர். செவ்வாய் கிழமை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அற்ப விலை மானியத்தை நிராகரித்த அவர்கள், விலை அதிகரிப்பை இரத்துச் செய்யுமாறு கோரினர்.

மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தை தடுக்க முயன்ற கத்தோலிக்க ஆயர், 80 வீத மானியத்தைப் பெறுவதற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறினார். கடந்த காலத்தில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் போலியானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என மீனவர்கள் சத்தமிட்டனர்.

மீனவர்கள் ஊர்வலமொன்றை தொடங்கி, சிலாபம் நகரை நோக்கி சுமார் 500 மீட்டர்கள் நடந்த போது, பொலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதோடு விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் எந்தவொரு முன்னெச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல விடாத பொலிசார், அவர்களை அருகில் உள்ள கடல் ஏரியின் ஊடாக அப்புறப்படுத்துமாறு மக்களை நெருக்கினர்.

சிலாபம், வெல்ல பகுதியில் பதட்ட நிலைமைகள் அதிகரித்தன. வர்னகுலசூரியவின் மரணத்தைக் கேள்விப்பட்டு நேற்று இரவு சுமார் 15,000 மீனவர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் அங்கு கூடினர். ஆயினும், நடவடிக்கையில் இறங்கிய ஆயர்கள், நகருக்குச் செல்ல வேண்டாம் என அவர்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டனர். அரசாங்கம் மேலும் பொலிசாரையும், பொலிஸ் அதிரடிப்படையையும் இராணுவப் பிரிவையும் சிலாபத்துக்கு அனுப்பியது. நேற்றிரவு நகரமும் அதன் சுற்றுப் புறமும் யுத்த வலயமாகக் காட்சியளித்தது.

முதலில் பொலிசார் வர்னகுலசூரியவின் சடலத்தை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்த போதிலும், மக்கள் அதை அனுமதிக்க மறுத்தனர். எதிர்ப்பை சந்தித்த நிலையில், மாகாண சபை மீன்பிடித் துறை அமைச்சர் சனத் நிஷாந்த ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறத் தள்ளப்பட்டார்.

திட்டமிடப்பட்ட தாக்குதலான இந்த பொலிஸ் துப்பாக்கிச் சூடு, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்டதாகும். சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கு விரோதமான எந்தவொரு எதிர்ப்பையும் அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்ற செய்தியை அது அனுப்ப முயற்சித்துள்ளது.

டீசல் 37 வீதத்தாலும் மண்ணெண்ணெய் 50 வீதத்தாலும் விலை அதிகரிக்கப்பட்டமை, மீன் பிடிக்காக தரங்குறைந்த இயந்திரப் படகுகளை பயன்படுத்தும் மீனவர்கள் உட்பட, வெகுஜனங்களின் வறிய பகுதியினருக்கு அழிவை ஏற்படுத்தும்.

ரூபாயை மதிப்பிறக்கம் செய்வது, மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது, வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைப்பது மற்றும் கடன் வரையறையை திணிப்பது போன்றவை சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள ஏனைய நிபந்தனைகளாகும். இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றும், தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் வாழ்க்கைத் தரத்தை கடுமையாகப் பாதிக்கும்.

முன்னரே உடன்பட்ட சர்வதேச நாணய நிதிய கடனின் கடைசிப் பகுதியான, மொத்தம் 800 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய உடன்படிக்கைகளை செய்துகொள்வதற்கான தயாரிப்பில், அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்டகால இனவாத யுத்தத்தைத் தொடர்ந்து, அந்நிய செலாவனி நெருக்கடியொன்று ஏற்பட்டதை அடுத்தே 2009ல் அரசாங்கம் முதலில் இந்தக் கடனை பெற்றது. இப்போது உக்கிரமடைந்துவரும் ஐரோப்பிய மற்றும் உலக பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அரசாங்கம், தனது கொள்கைகளுக்கு விரோதமான தொழிலாளர்களின், வறியவர்களின் மற்றும் இளைஞர்களின் எந்தவொரு எதிர்ப்புப் போராட்டத்தையும் பற்றி மிக விழிப்புடன் உள்ளது.


Warnakulasuriya's mother
வர்னகுலசூரியவின்
தாய்

வர்னகுலசூரியவின் உறவினர் ஒருவர் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசும் போது, பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு கட்டளையிட்டது அரசாங்கமே. நாங்கள் எதிர்ப்பு ஊர்வலத்தை அமைதியாகவே நடத்தினோம். பொலிசார் யுத்தத்தில் செய்வது போன்று கீழே படுத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். என்றார். அரசாங்கத்தை கண்டனம் செய்த அவர், அவர்கள் எரிபொருள் விலைகளை அதிகரித்து விட்டு எங்களுக்கு எதிராக இத்தகைய குற்றங்களை செய்கின்றனர். எங்களுக்கு போராட்டம் நடத்த உரிமை உண்டு. இத்தகைய குற்றவியல் நடவடிக்கைகளை நாம் அனுமதிக்கக் கூடாது, என்றார்.

மீன்பிடியை நம்பி வாழ்க்கையை ஓட்ட முடியாததால், கடந்த மாதம் தான் வர்னகுலசூரியவின் மனைவி வேலை தேடி சவுதி அரேபியாவுக்கு சென்றதாக அவரது உறவினர் கூறினார். அவர்களது பிள்ளைகள் பாடசாலை செல்கின்றனர். அவர்களை யார் பராமரிப்பது? என அவர் வினவினார்.

விலை அதிகரிப்புக்களை இரத்துச் செய்யுமாறு கோரி, குறிப்பாக நாட்டின் வட-மேல் கரையோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீனவர்களும் அவர்களது குடும்பங்களும் கடந்த நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இத்தகைய போராட்டங்கள் தெற்கின் சில பகுதிகளுக்கும் பரவிய நிலையில், அரசாங்கம் டீசலுக்கு 12 ரூபாவும் (10 அமெரிக்க சதங்கள்) மண்ணெண்ணெய்க்கு 25 ரூபாவும் மானியம் வழங்குவதாக கூறி சீற்றத்தை தணிக்க முயற்சித்தது. ஆனால் டீசல் 31 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 35 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது. எவ்வாறெனினும், அத்தகைய வாக்குறுதிகளை கைவிடுவதில் அரசாங்கம் இழிபுகழ்பெற்றதாகும்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவக் குடும்பங்களுடன் பேசுவதற்காக வடமேல் மாகாணத்தின் பல பிரதேசங்களுக்கு எமது வலைத் தள நிருபர்கள் சென்றிருந்தனர். மஹாவெவையில் ஒரு மீனவரின் மனைவி கூறியதாவது: அரசாங்கம் மானியங்கள் கொடுப்பதாக கூறியமை பொய். அவர்கள் எதையாவது கொஞ்சம் எங்களுக்கு கொடுத்துவிட்டு பின்னர் சகலதையும் வெட்டிக்கொள்வர். எரிபொருள்களதும் ஏனைய பொருட்களதும் விலைகளை குறைக்க வேண்டும் என்பதே எங்களது தேவை. எரிபொருள் விலை அதிகரிக்கும் எனில் ஏனைய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும்.


Mahawewa protesters
மஹாவெவையில்
ஆர்ப்பாட்டக்காரர்கள்

குளிர்சாதன வசதிகள் இல்லாத காரணத்தால், அநேக மீனவர்கள் தாம் பிடித்தவற்றை அற்ப விலைக்கு விற்கத் தள்ளப்பட்டுள்ளனர் என அவர் விளக்கினார். எரிபொருள் விலை தாங்க முடியாததன் காரணமாக, சில மீனவர்கள் ஏற்கனவே இயந்திரமற்ற படகுகளுக்கு மாறி விட்டனர்.

நவீன வசதிகள் இன்றி இந்த தொழிலை செய்ய முடியாது. ஆயினும், எங்களுக்கு அத்தகைய வசதிகளைக் கொடுக்க அரசாங்கத்திடம் திட்டங்கள் எதுவும் இல்லை. நாங்கள் மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் எஸ்.இ.டி.இ.சீ.யின் (தேவாலயத்தின் கட்டுப்பாட்டிலான நலன்புரி அமைப்பு) உதவியுடன் சீவிக்கின்றோம். நான் எஸ்.இ.டி.இ.சீ.யிடம் 250,000 ரூபா (2,090 அமெரிக்க டொலர்) கடன் பெற்றுள்ளேன், என அவர் கூறினார்.

யுத்தம் நடந்த போது, அது முடிந்தவுடன் எங்களுக்கு நிவாரணம் தருவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்தது. அந்த நிவாரணம் எங்கே?. யுத்தம் முடிந்த பின்னர் எங்களால் எங்கு வேண்டுமானாலும் மீன் பிடிக்க முடியும் என்றனர். இப்போது எங்களால் [அருகில் உள்ள] கல்பிட்டிய பகுதிக்குக் கூட போக முடியாதுள்ளது. அந்தப் பிரதேசம் இப்போது சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது, என ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

தான் அரசாங்கத்துக்கு வாக்களித்ததாக ஒருவர் கூறினார். முன்னர் அவர் எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பீ.) வாக்களித்திருந்தார். எங்களது முன்னேற்றத்துக்காக எவரும் எதுவும் செய்யவில்லை. எங்களுக்கு ஒரு புது வகையிலான அரசாங்கம் தேவை, என அவர் குறிப்பிட்டார்.

வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜே.வி.பீ.யில் இருந்து பிரிந்து சென்ற மக்கள் போராட்ட இயக்கத்தின் (பீ.எஸ்.எம்.) தலைவர்களும், மஹாவெவையில் சீற்றத்தை சுரண்டிக்கொள்ளவும் திசை திருப்பவும் முயன்றனர். பீ.எஸ்.எம். உறுப்பினரும் உள்ளூர் மீனவர் சங்கத் தலைவருமான ஒருவர், நாங்கள் அரசாங்கத்தை வெளியேற்றத் தேவையில்லை. எங்களால் அதை செய்ய முடியாது. நாங்கள் சும்மா ஆர்ப்பாட்டம் செய்கின்றோம், என்றார்.

எவ்வாறெனினும், நீண்டகாலமாக குவிந்து வந்த மீனவர்களின் பிரச்சினை, அடுத்து அடுத்து வந்த முதலாளித்துவ அரசாங்கங்களின் கீழ் மேலும் மோசமடைந்தே வந்துள்ளன. தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களுக்கு தீர்வு கொடுக்க முடியாத இந்த பொருளாதார முறைமை, தாக்குதல்களையும் ஒடுக்குமுறைகளையும் மட்டுமே உக்கிரமாக்கியுள்ளது. இலாப முறைமையை ஒழித்து, உழைக்கும் மக்களின் முன்னேற்றத்துக்காக பொருளாதார்த்தை மறு ஒழுங்கு செய்து, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்தும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றிற்குப் போராடுவதன் மூலம் மட்டுமே மீனவர்கள் தமது நிலைமைகளை தக்க வைத்துக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.

இராஜபக்ஷ அரசாங்கத்தால் இப்போது குறிவைக்கப்பட்டுள்ள மீனவர்களின் பாதுகாப்புக்காக தொழிலாள வர்க்கத்தின் சகல பகுதியினரும் முன் வரவேண்டும் என இந்தப் போராட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அழைப்பு விடுக்கின்றது.

The author also recommends:

Protests erupt as Sri Lankan government enforces new IMF austerity measures