World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The looting of the Greek working class

கிரேக்க தொழிலாள வர்க்கம் கொள்ளையடிக்கப்படுகிறது

Peter Schwarz
10 February 2012
Back to screen version

கிரேக்க மக்கள் மீதான தாக்குதல்கள் பாரிய வடிவத்தை எடுத்துள்ளன. ஐரோப்பிய ஆணைக்குழு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி என்ற "முக்கூட்டு" (Troika) கிரேக்க தொழிலாள வர்க்கத்தை கிட்டத்தட்ட முற்றிலும் அழிவிற்கு இட்டுச்செல்வதற்கு கோரிக்கைளை விட்டுவருகின்றன.

ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட செலவினக்குறைப்பு முறைமைகள், ஓர் ஈடிணையற்ற சமூக வீழ்ச்சிக்கு இட்டு சென்றுள்ளன. கிரீஸின் பெரியவர்களில் ஐந்தில் ஒருவர் மற்றும் இளைஞர்களில் இருவரில் ஒருவர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். நெருக்கடிக்கு முன்னர் ஏதென்ஸில் பெரும்பாலும் அறியப்பட்டிராத வீடில்லாத நிலைமை இப்போது பரந்துபட்டதாக ஆகியுள்ளது. ஆயிரக்கணக்கான சிறு வியாபாரங்கள் கடுமையான வரி உயர்வுகளால் திவாலாகிவிட்டிருக்கின்றன.      

இருந்தபோதினும், செலவினக்குறைப்பு முறைமைகளால் செல்வந்த மேற்தட்டு பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. Handelsblatt இதழ் செய்தியின்படி, அவர்கள் வெளிநாட்டு கணக்குகளில் 560 பில்லியன் யூரோ வைத்துள்ளனர். இந்த தொகை கிரீஸின் மொத்த தேசிய கடனைவிட அண்ணளவாக இரண்டு மடங்கு அதிகமாகும்.

அதற்கு பின்னாலிருக்கும் முக்கூட்டு மற்றும் வங்கிகளைப் பொறுத்த வரையில், இந்த அனைத்து செலவினக்குறைப்பு முறைமைகளும் போதுமானதாக இல்லை. கடந்த கோடையில் ஒப்புக்கொள்ளப்பட்ட இரண்டாவது மீட்புப்பொதியை அளிப்பதற்கான முன்நிபந்தனையாக, அவை இந்த ஆண்டில் மட்டும் வரவு-செலவு கணக்கில் 3.3 பில்லியன் யூரோ வெட்டுக்களைக் கோரி வருகின்றன. இந்த வெட்டுக்கள் அனைத்திற்கும் தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டும்.  

சுகாதார செலவுகள் 1.1 பில்லியன் யூரோ அளவிற்கு வெட்டப்பட இருக்கின்றன. 15,000 அரசு பணியாளர்கள் வரவிருக்கும் ஆண்டில் நீக்கப்படுவார்கள்; அடுத்த நான்காண்டுகளில் 150,000 பணியாளர்கள் தேவையற்றவர்களாக ஆக்கப்படவிருக்கிறார்கள். 300,000 மக்கள் சார்ந்துள்ள மத்திய அரசின் குறைந்தபட்ச கூலி 750 யூரோவிலிருந்து 600 யூரோவாகவும், வேலைவாய்ப்பின்மை உதவிகள் மாதத்திற்கு 460 யூரோவிலிருந்து 360 யூரோவாகவும் குறைக்கப்படவிருக்கின்றன. தங்கள் வாழ்க்கைக்காக கிரேக்கர்கள் பலர் சார்ந்துள்ள குறைநிரப்பு-ஓய்வூதியங்கள் 15 சதவீதத்தால் வெட்டப்படும்.

தற்போதிருக்கும் ஒப்பந்தங்களைப் புதுப்பிக்காமலும், நிறுவன அளவில் புதிய உடன்படிக்கைகளுக்காக பேச்சுவார்த்தை நடத்தாமலும் தனியார்துறை கூலிகள் 20 சதவீதத்திற்கு குறைக்கப்படவிருக்கின்றன. “குறைந்தபட்ச கூலி குறைவாக இருப்பது எதிர்கால கூலி பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படை போக்கை அளிக்குமென்பதால், கூலி வெட்டுக்கள் பெரியளவில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது,” என்று Société Générale வங்கியின் ஜேம்ஸ் நிக்சன் தெரிவித்தார்.   

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் லூக்காஸ் பாப்படெமோஸ் அரசாங்கத்தை ஆதரிக்கும் சமூக ஜனநாயக PASOK கட்சி, பழமைவாத புதிய ஜனநாயக கட்சி மற்றும் அதிவலது LAOS ஆகிய மூன்று கட்சிகளும் முக்கூட்டின் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு உடன்பட்டுள்ளன. மொத்த செலவு-வெட்டு முறைமைகளில் சுமார் பத்தில் ஒரு பங்காக இருக்கும் உதவி-ஓய்வூதியத்தில் திட்டமிட்ட வெட்டுகள் செய்வதில் கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன. செலவினக்குறைப்பு முறைமைகள் கிரீஸை இன்னும் ஆழமான பின்னடைவுக்கு தள்ளும் என்பது வெளிப்படையாக இருந்தாலும் கூட, அவை அவற்றிற்கு உடன்பட்டுள்ளன.

இந்த வெட்டுக்களின் நோக்கமே முற்றிலும் வங்கிகளை திருப்திபடுத்துவதாகும். அவை நீண்டகாலத்திற்கு முன்னர் ஏற்கனவே தள்ளுபடி செய்திருக்கும் அவற்றின் கிரீஸிற்கான 50 சதவீத கடன் மதிப்பு வெட்டுகளை, மீதமிருக்கும் 50 சதவீதத்தை உயர்வட்டியோடு திரும்ப பெறுவதன் மூலம் ஈடுகட்டும். இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உத்திரவாதம் அளித்துள்ளது. பாரீஸில் நடந்த அவற்றின் கடந்த கூட்டத்தில், ஜேர்மன் சான்சலர் அங்கெலா மேர்கேலும் ஜனாதிபதி நிகோலாஸ் சார்க்கோசியும், வங்கிகள் அவற்றின் பங்கை எடுப்பதற்கு முன்னர் ஏதென்ஸால் அதை அணுக முடியாதபடிக்கு, சில கிரேக்க அரசாங்கங்களின் வருவாய்கள் நேரடியாக ஒரு பிரத்யேக கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்தி இருந்தனர்

இதற்கிடையில், அதிகரித்துவரும் குரல்கள் கிரீஸ் அரசு திவாலாகிவிட்டதை அறிவிக்குமாறும், அதை யூரோ மண்டலத்திலிருந்து வெளியேற்றுமாறும் அறிவுறுத்தி வருகின்றன. ஐரோப்பிய ஆணையத்தின் துணை தலைவர் நீலி கிரோஸ் கூறுகையில், கிரீஸ் செலாவணி ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும், அதன் விளைவை "சமாளிக்க முடியுமென" உறுதியாக கூறினார். மேலும் கிரேக்கத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் மரியா தமானகி, யூரோ மண்டலத்திலிருந்து கிரீஸ் வெளியேறுவது ஒரு "நிஜமான மாற்றீடாக" ஆகியுள்ளது, அது "பகிரங்கமாக பரிசீலிக்கப்பட்டு" வருகிறது என்று தெரிவித்தார்.

அரசு திவால்தன்மை மற்றும் எகிறிபோய் கொண்டிருக்கும் பணவீக்கம் ஆகியவற்றின் மூலமாக மிஞ்சியிருக்கும் வருமானங்களையும், சேமிப்புகள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு என அனைத்தையும் துடைத்தழிப்பதே இதுபோன்ற ஒரு நகர்வின் நோக்கமாக இருக்கக்கூடும்.

நிதியியல் பிரபுத்துவம் ஐரோப்பா முழுவதும் என்ன செய்ய விரும்புகிறதோ அதை தான் அது கிரீஸில் செய்து கொண்டிருக்கிறது. ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் வெறுமனே கருதிப்பார்க்கக்கூடியதாக இருந்த ஒரு சமூக எதிர்-புரட்சி தற்போது நடந்து வருகிறது. சர்வதேச நிதியியல் பிரபுத்துவத்தின் இலாபத்திற்கான கோரிக்கைகளை பாதுகாக்க, மக்களின் பரந்த அடுக்குகள் ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, நோய் மற்றும் மரணத்திற்குள்ளும் கூட தள்ளப்பட்டு வருகின்றன.

யூரோ நெருக்கடியின் சுழலில் மாட்டிக்கொண்ட ஏனைய நாடுகள் (போர்ச்சுக்கல், ஸ்பெயின், அயர்லாந்து) அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைச் சார்ந்திருக்கும் நாடுகள் (ஹங்கேரி, ருமேனியா) ஆகியவையும் தொழிலாள வர்க்கத்தின் மீது இதேபோன்ற கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கிழக்கு ஐரோப்பாவில் சமீபத்திய பனிப்பொழிவில் இறந்த நூற்றுக்கணக்கானவர்கள் காலநிலையால் பலியானவர்கள் அல்லர், மாறாக மின்சாரம், வெப்பமூட்டி மற்றும் இருப்பிடங்களை பெற்றுக்கொள்ள முடியாதபடிக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட சிக்கன வெட்டு முறைமைகளால் இறந்தவர்களாவர். ஜேர்மனி போன்ற "பணக்கார" நாடுகளிலும் கூட, “உழைக்கும் ஏழைகளின்" மற்றும் மலிவுக்கூலி பெறுபவர்களின்  எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகிறது.

ஐரோப்பாவிலுள்ள சமூக ஜனநாயக கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிடமிருந்து கிரேக்க தொழிலாளர்களுடனான ஐக்கியத்திற்கான ஒரேயொரு வார்த்தை கூட கேட்கவில்லை என்ற உண்மையையே இது இன்னும் முக்கியத்துவப்படுத்துகிறது. முக்கூட்டின் கட்டளைகளை முழுமையாக ஆதரிக்கும் அவை, அவற்றை நடைமுறைப்படுத்தவும் உதவி வருகின்றன.

ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவரும், ஐரோப்பிய சமூக ஜனநாயகத்தில் ஒரு பிரதான பிரமுகருமான மார்டீன் சூல்ஸ், முக்கூட்டின் வெட்டு இலக்குகளைப் பூர்த்தி செய்ய கிரேக்க அரசியல் கட்சிகளுக்கு அவசரமாக  அழைப்புவிடுத்துள்ளார்.  

கிரேக்க தொழிலாளர்களின் கோபத்தை சிதறடிக்கும் விதத்தில் உபயோகமற்ற, மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்த போராட்டங்களைக் கோரியுள்ள கிரேக்க தொழிற்சங்கங்களுடன் ஐக்கியம் குறித்து ஐரோப்பிய தொழிற்சங்க கூட்டமைப்பு (ETUC) ஒருசில பொறுப்பற்ற வார்த்தைகளைப் பிரசுரித்துள்ளது. எவ்வாறிருந்த போதினும், சக கிரேக்க தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு ஏனைய நாடுகளின் தொழிலாளர்களை ஒன்றுதிரட்ட ETUC ஒரு சுட்டுவிரலைக் கூட உயர்த்தவில்லை. மாறாக முழுமையாக முக்கூட்டிற்கு பின்னால் நிற்கும் அது, அதன் அமைப்புகளோடு நெருக்கமாக வேலை செய்து வருகின்றது.  

சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் முழுமையாக ஆளும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் முகாமில் நிற்கின்றன என்பதற்கு அங்கே தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை ஆதரித்ததன் மூலமாக, அவையும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற தொழிலாள வர்க்க தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்து வருகின்றன.

திவாலாகிப்போன தொழிற்சங்க அதிகாரத்துவங்களோடு தொழிலாளர்களை கட்டிவைக்கும், சமூக ஜனநாயகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சீர்திருத்த முடியுமென்ற நப்பாசைகளை தூண்டிவிடும், அல்லது கிரேக்க தேசியவாதத்தின் முட்டுச்சந்திற்குள் முக்கூட்டின் கட்டளைகளுக்கு இணங்க மறுக்கும் சீற்றங்களைப் பொசுக்க கோருவது ஆகியவற்றை உள்நோக்கமாக கொண்ட போலி-இடது அமைப்புகளின் ஒரு கூட்டத்தால் அவை ஆதரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

கிரீஸில் நடக்கும் நிகழ்வுகள், தொழிலாள வர்க்கத்திற்கு புதிய அமைப்புகளும், ஒரு புதிய அரசியல் முன்னோக்கு தேவைப்படுகிறது என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. அவர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இரக்கமற்ற தாக்குதல்கள் தவிர்க்கவியலாமல் பலமான எதிர்ப்பைத் தூண்டிவிடும். இது கிரீஸ், ஸ்பெயின், ருமேனியா மற்றும் ஏனைய நாடுகளில் நடந்த பரந்த போராட்டங்களால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த எதிர்ப்பிற்கு ஒரு அரசியல் நிலைநோக்கு தேவைப்படுகிறது.

அது, ஐரோப்பிய ஒன்றியத்தையும் மற்றும் அனைத்து ஐரோப்பிய முதலாளித்துவ அரசாங்கங்களையும் தூக்கியெறிந்துவிட்டு அவ்விடத்தில் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளால் பிரதியீடு செய்யும்  தொழிலாளர்களின் அரசாங்கங்களை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்ட ஒரு பரந்துபட்ட சர்வதேச, சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. அதற்கு ஐரோப்பா முழுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவது அவசியமாகிறது.