World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The unions and the lockouts at Cooper Tire and Caterpillar

தொழிற்சங்கங்களும், கூப்பர் டயர் மற்றும் கட்டர்பில்லர் கதவடைப்புகளும்

Joseph Kishor
24 January 2012
Back to screen version

ஃபின்ட்லேவில் (Findlay) உள்ள கூப்பர் டயர் ஆலையிலும், ஒகாயோ மற்றும்  ஒன்டாரியோவின் இலண்டனில் அமைந்துள்ள கட்டர்பில்லரின் எலெக்ட்ரோ மோட்டிவ் டீசல் ஆலையிலும் செய்யப்பட்ட தொழிலாளர்களின் கதவடைப்பானது, முறையே அவற்றின் ஒன்பதாவது மற்றும் நான்காவது வாரங்களை எட்டியிருக்கின்ற நிலையில், அவற்றில் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் போராட்டங்களை தனிமைப்படுத்தவும், தோல்வியை உறுதிப்படுத்தவும் திட்டமிட்டு வேலை செய்து வருகின்றன.

அமெரிக்காவில், ஐக்கிய உருக்கு தொழிலாளர்கள் சங்கம் (USW), அர்கான்சாஸிலுள்ள டெக்சார்கானாவின் கூப்பர் டயர் ஆலையில் 1,500 தொழிலாளர்கள் சம்பந்தமாக, வாரயிறுதிவாக்கில், ஒரு தற்காலிகமான  நான்காண்டுகால உடன்படிக்கை ஒன்றை எட்டியது. அந்நிறுவனத்தால் வரவேற்கப்பட்ட அந்த நகர்வு, கூப்பரின் இரண்டு பிரதான அமெரிக்க ஆலைகளில் தொழிலாளர்கள் எந்தவொரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் ஈடுபடுவதையும் தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.   

USWஇன் உதவியோடு ஃபின்ட்லே தொழிலாளர்களை நசுக்குவதில், அதன் திறமையின் மீது நம்பிக்கை வைத்து, ஓகாயோ ஆலையிலிருந்து உபகரணங்களை வெளியேற்ற தொடங்கி இருப்பதாக கூப்பர் அறிவித்தது. இது ஒட்டுமொத்தமாக அந்த ஆலை மூடுவதை நோக்கிய ஓர் ஆரம்ப படியாகும்.

பெரும் விட்டுக்கொடுப்புகளை நிராகரித்த பின்னர் 1,050 ஃபின்ட்லே தொழிலாளர்களுக்கு நவம்பர் 28இல் கதவடைப்பு அறிவிக்கப்பட்டது. வேலைநிறுத்த சம்பளமும் இல்லாமல், தற்போதைய பிழைப்பிற்கு சொற்பமான உணவுப்பொருள் பங்கீடுகளோடு தொழிற்சங்கத்தால் அவர்கள் ஊசலாடவிடப்பட்டுள்ளனர்.

பேரப்பேச்சுக்கள் "மிகவும் சிறந்தமுறையில் நடந்ததாகவும்”, அந்த உடன்படிக்கை “சமூகம் பெருமை கொள்ளத்தக்க" ஒன்றென்றும் அறிவித்து, அர்கன்சாஸின் உள்ளூர் USW சங்க தலைவர் டேவிட் பூன், கூப்பரை பாராட்டி குவித்தார். உடன்படிக்கையின் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை; தொழிற்சங்கம் அதை வியாழனன்று ஒரு வாக்கெடுப்பு மூலம் கொண்டுவர நம்பி உள்ளது. ஆனால் ஃபின்ட்லே தொழிலாளர்களை இன்னும் கூடுதலாக தனிமைப்படுத்தும் எந்தவொரு உடன்படிக்கையும் டெக்சார்கானா ஆலையிலுள்ள தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் நிலைமைகளை அழிப்பதற்கு மட்டுமே வழிவகுக்கும்.  

ஒன்டாரியோவின் இலண்டனில், கனேடிய வாகன தொழிலாளர்கள் சங்கம் (CAW)  வாரயிறுதிவாக்கில் ஓர் பேரணியை ஏற்பாடு செய்தது. அது கட்டர்பில்லரின் ஒரு சேய் நிறுவனமான எலெக்ட்ரோ-மோட்டிவ் கோரியிருந்த 50 சதவீதத்திற்கும் அதிகமான கூலி வெட்டுக்களுக்கு எதிராக எழும் எந்தவொரு முக்கிய போராட்டத்திற்கும் CAW விரோதமாக இருப்பதைக் காட்டுவதற்கு மட்டுமே சேவை செய்தது.  

கதவடைப்பு செய்யப்பட்ட கனேடிய தொழிலாளர்களுக்கு இருந்த பரந்துபட்ட சமூக ஆதரவும், மற்றும் போராடுவதற்கான தொழிலாளர்களின் விருப்பமும், கன்சர்வேடிவ் பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்பர் உட்பட தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை மேற்பார்வை செய்துவரும் அரசாங்க நிர்வாகிகளிடம் முறையிட்ட CAWஇன் திவாலாகிப்போன அழைப்புகளுடன் கூர்மையாக முரண்பட்டு நின்றது. விட்டுகொடுப்புகளைப் பேரம்பேச அவர்கள் "மீண்டும் பேரம்பேசும் மேசைக்கு வர" விருப்பமுடன் இருப்பதாக CAW நிர்வாகிகள் தெளிவுபடுத்தினர்.  

USW மற்றும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தால் ஊக்குவிக்கப்படும் அமெரிக்க தேசியவாதத்திற்கு இணையாக, CAW நிர்வாகிகளும் தங்களைத்தாங்களே கனேடிய கொடிகளால் போர்த்திக் கொண்டு, “கனேடிய வேலைத்தலங்கள் முதலில்" என்று எழுதப்பட்ட பதாகைகளை வினியோகித்தனர். கனடாவிலுள்ள அரசாங்கத்திடமும், பெருநிறுவன மேற்தட்டிடமும் தொழிலாளர்களை அடிபணிய செய்வதும் மற்றும் எல்லைகளின் இருபக்கமும் உள்ள தொழிலாளர்களின் எந்தவொரு ஐக்கியப்பட்ட போராட்டத்தையும் தடுப்பதுமே நோக்கமாகும்.  

USW மற்றும் CAWஇன் நடவடிக்கைகள் ஓர் உலகளாவிய நிகழ்முறையின் வெளிப்பாடுகளாக உள்ளன. அமெரிக்கா, கனடா மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கும் அமைப்புகளாக இயங்குவதை நீண்டகாலத்திற்கு முன்னரே நிறுத்திவிட்டன.

ஓர் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு பாரிய பெருநிறுவன தாக்குதலின் கீழ், கூலி-வெட்டுக்களுக்கு எதிராக ஓர் ஆரம்பகட்ட படியாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்புவிடுக்கவும் கூட மறுத்து, திட்டமிட்டு அவை முனைவுகளை முதலாளிமார்களுக்கு விட்டுகொடுத்துள்ளன. அதன்விளைவாக, தொழிலாளர்களின் எதிர்ப்பிற்கு நிறுவனங்கள் கதவடைப்புகளை நடத்துவதன் மூலமாக மேலும் மேலும் அதிகமாக அடிக்கடி விடையிறுப்பு காட்டி வருகின்றன

ஃபின்ட்லே மற்றும் இலண்டனிற்கு கூடுதலாக, வட அமெரிக்காவில் கியூபெக்கிலுள்ள ரியோ ரின்டோ தொழிலாளர்களுக்கு எதிராகவும் மற்றும் வடக்கு டகோடாவின் மின்னெசோட்டா மற்றும் லோவாவில் அமெரிக்க கிறிஸ்டல் சுகர் தொழிலாளர்களுக்கு எதிராகவும் கதவடைப்புகளுக்கு தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த இயல்நிகழ்வை குறிப்பிட்டு, நியூ யோர்க் டைம்ஸ் திங்களன்று ஒரு கட்டுரையில் எழுதுகையில், “இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் ஆண்டுக்கு எத்தனை வேலைநிறுத்தங்கள் இருந்தனவோ அதில் வெறுமனே ஆறில் ஒரு பங்கு என்ற அளவிற்கு வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது,” என்று குறிப்பிட்டது.

இந்த அசாதாரண உண்மை தொழிற்சங்க தலைமையின் நம்பிக்கைத்துரோகத்தால் அல்லாது, மாறாக தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை சரிந்ததால் ஏற்பட்டதாக (இதற்கு அது எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை) டைம்ஸ் குறிப்பிடுகிறது. “அவர்கள் வேலைநிறுத்தம் செய்தால், அவர்களுக்கு சம்பள இழப்பு ஏற்படும் என்றும், நிரந்தரமாக வேறு தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டு அவர்களின் வேலைகளை இழக்க வேண்டியதிருக்கும் என்று பல தொழிலாளர்கள் கவலைப்படுவதாக" அது தொடர்ந்து குற்றஞ்சாட்டுகிறது. முக்கியமாக கிட்டத்தட்ட வேலைநிறுத்தங்கள் இல்லாமற்போவதற்கு தொழிலாளர்கள் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு அவர்களையே அது குற்றஞ்சாட்டுகிறது.

தொழிலாளர்கள் மத்தியில் போராடுவதற்கு விருப்பம் இல்லாமல் இல்லை. தொழிற்சங்கங்கள் பெருநிறுவன நிர்வாகத்தோடு ஒருங்கிணைந்ததே வேலைநிறுத்தங்கள் குறைந்ததில் உள்ள முதன்மை காரணியாகும். நிறுவனங்களின் இலாபத்தை அதிகரிப்பதில் நேரடியாக பிணைந்துள்ளதும், மற்றும் தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் நிலைமைகளை கீழே இழுத்துக் கொண்டுவருவதுமான பொருளாதார நலன்கள் மற்றும் அமைப்புகளின் நலன்களை தொழிற்சங்கங்கள் அபிவிருத்தி செய்துள்ளன. குறைந்த கூலிகள் மற்றும் சலுகைகளை ஏற்றுக் கொள்ளவும் மற்றும் நிறுவனங்களை அதிக "சவால்நிலைமையை" சமாளிக்கும் விதத்தில் தொழிலிட நிலைமைகளை கடுமையாக்கவும் தங்களின் சொந்த உறுப்பினர்களையே நிர்பந்திக்க வேண்டியிருப்பதை USW மற்றும் CAW இரண்டுமே ஒப்புக் கொள்கின்றன

தொழிற்சங்கங்களின் பாத்திரம், முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கான அவர்களின் முழுமையான ஆதரவோடு பின்னிப்பிணைந்துள்ளது. இந்த உண்மை, Huffington Postஇல் பிரசுரிக்கப்பட்ட சமீபத்திய தலையங்கத்தில் USW தலைவர் லியோ ஜெரார்டால் வலியுறுத்தப்பட்டது. கூப்பர் டயர் உட்பட பெருநிறுவன தலைமை செயல் நிர்வாகிகளின் பேராசை குறித்த சில வெற்று பிதற்றல் பத்திகளுக்குப் பின்னர், ஜெரார்ட், “இது கட்டுப்பாடற்ற நிறுவனமுறை அல்லது முதலாளித்துவத்தின் மீதான ஒரு விமர்சனமல்ல,” என்று விரைவாக வலியுறுத்த வேண்டியவராக இருந்தார்.

2012இல் ஆழமடைந்துவரும் முதலாளித்துவ நெருக்கடி, உலகெங்கிலும் வர்க்க மோதல்கள் குறைவில்லாமல் இருக்கும். ஆனால் தொழிலாள வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளின் போராட்டமானது—வெவ்வேறு பெருநிறுவனங்கள் மற்றும் வெவ்வேறு நாடுகளின் எல்லைகளைக் கடந்த ஒரு பொதுவான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்பட்டால் மட்டுமே வெற்றிபெற முடியும்.

அதேவேளையில், அதன் வேலைகள், கூலிகள் மற்றும் அதன் அனைத்து அடிப்படை சமூக உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்காக செய்யும் அதன் முயற்சிகள், முதலாளித்துவ சொத்துடமையாளர்கள் மற்றும் ஊக வணிகர்களின் ஒரு சிறிய மேற்தட்டை செழிப்பாக்குவதற்கு அனைத்து சமூக தேவைகளையும் அடிபணிய வைப்பதை அடித்தளமாக கொண்டிருக்கும் இலாப அமைப்புமுறையோடு அதனை நேருக்குநேர் மோதலுக்குள் கொண்டு வருகிறது

பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டின் பிடியை உடைப்பதற்கான அதன் பாரிய தொழில்துறைரீதியிலான மற்றும் சமூகரீதியிலான சக்தியை ஒன்றுதிரட்டுவதே தொழிலாள வர்க்கத்திற்கு ஒரே மாற்றீடாக உள்ளது. வங்கிகளும், பெருநிறுவனங்களும் தனியார் கைகளிலிருந்து எடுக்கப்பட்டு தேசியமயமாக்கப்பட்டு, ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்பட்ட பொது நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும். இந்த போராட்டத்திற்கு, இப்போதிருக்கும் தொழிற்சங்கங்கள் இலாயக்கற்றவை என்பது மட்டுமல்ல, அவை அபாயகரமானவையும் கூட.

தொழிலாளர்கள் இத்தகைய தொழிலாளர் ஆட்சிக்குழுக்களிடமிருந்து உடைத்துக் கொண்டு, வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆலை முற்றுகைகள் மற்றும் ஒட்டுமொத்த எதிர்ப்பிற்கான ஏனைய வடிவங்களை ஒழுங்கமைக்க, தொழிலாளர்களின் அதிகாரத்திற்காக போராடும் ஒரு பாரிய சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதோடு தொடர்புபட்ட, புதிய நேர்மையான ஜனநாயகரீதியிலான சாமானிய போராட்ட அமைப்புகளைக் கட்டியெழுப்ப வேண்டும்.