World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Protests against Egyptian junta spread after football massacre

கால்பந்து மைதான படுகொலைகளுக்குப் பின் எகிப்திய இராணுவ ஆட்சிக்குழுவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பரவுகின்றன

By Johannes Stern
4 February 2012
Back to screen version

எகிப்திய இராணுவ ஆட்சிக்குழுவிற்கு எதிரான எதிர்ப்புக்கள் வெள்ளியன்று நாடு முழுவதும் பரவின. ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து போர்ட் சையத்தில் புதனன்று எகிப்தில் மிகப் புகழ் பெற்ற கால்பந்துக்குழு எல் அஹ்லியின் ஆதரவாளர்கள் 74 பேர் கொலை செய்யப்பட்டு, பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்ற வகையில் நடத்தப்பட்ட கலகங்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த எதிர்ப்புக்கள் உள்ளன.

நவம்பர் மாதம் நடைபெற்ற முந்தைய மோதல்களின்போது கெய்ரோ நகரின் நடுவே மகம்மத் மஹ்முத் தெருவில் இராணுவத்தால் நிறுவப்பட்ட சுவர் ஒன்றை ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் தகர்த்தனர். ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுத்து, SCAF எனப்படும் ஆயுதப் படைகளின் தலைமைக்குழுவின் தலைவரான பீல்ட் மார்ஷல் மஹம்மது ஹுசைன் தந்தவி தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் முழங்கினர்.

மிக அதிக ஆயுதமேந்திய மத்திய பாதுகாப்பு படைகளுக்கும் (CSF) எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் வியாழன் இரவு முழுவதும் நடைபெற்று வெள்ளியன்றும் தொடர்ந்தது. CSF, எதிர்ப்பாளர்களை கண்ணீர்ப்புகைக் குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள் ஆகியவற்றின் மூலம் தாக்கி அமைச்சரகத்தை அவர்கள் தாக்குவதைத் தடுக்க முற்பட்டது. ஒருவர் கொல்லப்பட்டார், 1,400 பேருக்கும் மேலானவர்கள் காயமுற்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

துறைமுக நகரமான சூயஸில் பாதுகாப்புப் படைகள் பொலிஸ் நிலையத்தை தாக்கிய எதிர்ப்பாளர்கள் கூட்டத்தின்மீது உண்மையான தோட்டாக்களை சுட்டனர். குறைந்தப்பட்சம் 2 பேர் இறந்து போயினர், பலர் காயமுற்றனர் என்று தெரியவந்துள்ளது. எதிர்ப்பாளர்கள் கடைகளையும் தாக்கி, சூயஸ் கால்வாய் வங்கியின் முகப்பையும் அழித்தனர். சூயஸ் அரசாங்கப் பாதுகாப்புத் தலைமையகம் மற்றும் நீதித்துறை அமைச்சரகத்தை சுற்றிலும் யாரும் வரக்கூடாது என்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் முள்வேலி ஒன்றை அமைத்தனர்.

அலெக்சாந்திரியாவில், அந்நகரின் எல்-அஹ்லி அல்ட்ராஸ் ரசிகர்கள் குழுவின் நிறுவனரான 23 வயது மஹ்மூத் எல் கான்டௌரின் இறுதிச் சடங்குகள் இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறியது. எதிர்ப்பாளர்கள் இராணுவத்தின் வட மாவட்டக் கட்டுப்பாட்டை நோக்கி அணிவகுத்துச் சென்று SCAF ற்கு எதிராக கோஷங்களை இட்டனர்.

கொடூரமான படுகொலை நிகழ்ந்த இடமான போர்ட் சையத்தில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ஆளுனரின் தலைமையகத்திற்கு முன் கூடி போர்ட் சையத் குற்றமற்றது, இதுதான் உண்மை என்று கோஷமிட்டனர். இதன் பொருள் அல் மஸ்ரியின் வாடிக்கையான ரசிகர்கள் வன்முறைக்குப் பொறுப்பு அல்ல, ஆனால் பாதுகாப்புப் படைகளுக்காக பணிபுரியும் ஊடுருபவர்களின் வேலை இது என்பதாகும்.

Egyptian Independent  இடம் ஒரு எதிர்ப்பாளர் கூறினார்: அஹ்லி ஆதரவாளர்கள் பெரும்பாலும் போர்ட் சையத்தில் இருந்துதான் வருவர். என்னுடைய சகோதரரும் அவர்களுள் ஒருவர். இன்று போர்ட் சையத் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது; நகரத்தில் வாழ்பவர்கள் அனைவரும் தங்கள் உறவினர்கள் இறந்துவிட்டது போல் உணர்கின்றனர், வருத்தமுற்றுள்ளனர்.

 

கொடூரமான கலவரம், இயக்கப்பட்ட வன்முறைச் செயல் என்பதற்கு வலுவான சான்று உள்ளது. எல் மஸ்ரி குழு எல் அஹ்லியை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்தபோது அரங்கில் நேரில் பார்த்தவர்கள் ஒரு பொலிஸ் அதிகாரி எல் மஸ்ரியின் ஆதரவாளர்களிடம்”—தந்தவி மற்றும் இராணுவ ஆட்சிக்கு ஆதரவாக விளையாட்டின்போது கோஷங்களை முழங்கியவர்களிடம்ஆட்டம் முடிந்தவுடன் ஆடுகளத்திற்கு வருமாறு  கூறியதை நினைவுகூர்ந்தனர். பார்வையாளர்கள் அமரும் இடங்களுக்கும் களத்திற்கும் இடையே இருந்த கதவு திறக்கப்பட்டிருந்தது, அதே நேரத்தில் அஹ்லி ரசிகர்கள் பகுதிக் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. குண்டர்கள் அஹ்லி ஆதரவாளர்களை கத்திகள், பாட்டில்கள், தடிகள், எரிவெடிகள் ஆகியவற்றுடன் தாக்கியபோது, பாதுகாப்புப் படையினர் ஏதும் செய்யாமல் பேசாமல் இருந்தனர்.

குற்ற விசாரணை நடத்துபவர்கள் அரங்கிற்கு வெள்ளியன்று வந்தபோது, அங்கு ஏற்கனவே ஓர் ஊழியர் வருகை தந்த குழுவின் லாக்கர் அறையின் தரைகள், சுவர்களை நன்கு கழுவி விட்டிருப்பதையும், ரத்தம் பற்றிய எந்த ஆதாரங்கள் இருக்கும் திறனையும் அழித்துவிட்டார் என்பதைக் கண்டனர். அஹ்லி விளையாட்டு வீரர்கள் கூற்றுப்படி பல காயமுற்ற அஹ்லி ஆதரவாளர்கள் உடைமாற்றும் அறையில் காயங்களை ஒட்டி இறந்துவிட்டனர். அரங்கிற்குள்ளேயே கொலைத் தடய ஆய்வுக்குழு ஒன்று அஹ்லி ரசிகர்கள் உட்கார்ந்திருந்த இடங்களில் வெற்றுத் தோட்டாக்களைக் கண்டனர்.

சரியாக ஓராண்டிற்கு முன் நடந்த நிகழ்வுகளைத்தான் இப்படுகொலை நினைவுபடுத்தியது; அப்பொழுது கூலிக்கு அமர்த்தப்பட்ட அரசாங்க சார்பு குண்டர்கள் புரட்சியை நசுக்கும் முயற்சியில் குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் மீது ஏறிவந்து எதிர்ப்பாளர்களைத் தாக்கினர். அந்த இழிந்த தாக்குதல் இராணுவத்தின் ஆதரவைப் பெற்றது; இராணுவம் குண்டர்களை சதுக்கத்திற்குச் செல்வதற்குத் தங்கள் வழியே அனுமதித்தனர். ஆனால், எதிர்ப்புக் காட்டும் தொழிலாளர்களும் இளைஞர்களும் குண்டர்களை தோற்கடித்தனர்; ஒன்பதே நாட்களுக்குப் பின் நீண்டக்கால சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக் பதவியில் இருந்து இறங்கும் கட்டாயத்திற்கு அலையென வெகுஜன வேலைநிறுத்தங்கள் ஏற்பட்டத்தில் உட்பட்டார். கெய்ரோவின் மற்றொரு பெரிய கால்பந்துக் குழுவின் பெரும் ஆதரவாளர்களான ஜாமலேக் ஓயிட் நைட்டுக்களுடன் அஹ்லி அல்ட்ராஸும், புரட்சியின் ஆரம்பத்தில இருந்தே முக்கியமான பங்கைக் கொண்டிருந்தனர்.அவர்கள் முபாரக் ஆட்சி, அதற்குப்பின் SCAF  ல் அவருக்குப் பின் இருப்பவர்கள் ஆகியோருக்கு எதிரான தெரு மோதல்களில் பங்கு கொண்டனர்.

புதனன்று கால்பந்து விளையாட்டுப் போட்டியின்போது பழிவாங்குவதற்கும் எதிர்ப் புரட்சியைக் கிளறுவதற்கும், படுகொலைக்கு இராணுவ ஆட்சிக்குழு வேண்டும் என்றே ஏற்பாடு செய்தது என்று பல நோக்கர்கள் கருதுகின்றனர். Al Masry Al Youm த்தில் செய்தியாளராக இருக்கும் சாத் ஹக்ரஸ் SCAF மற்றும் பழைய ஆட்சியின் எஞ்சிய பகுதிகள் மீது குற்றஞ்சாட்டி, இந்நிகழ்வு முன்கூட்டிய சதித்திட்டத்தின் விளைவுதான் என்றார்.

 

மனித உரிமைகள் தகவலுக்காக அரபு இணையம் என்னும் அமைப்பின் இயக்குனரான கமால் ஈத் Al Masry Al Youm இடம் இப்பொழுது SCAF எகிப்தில் பிளவுகளை விதைக்க முற்படும் நோக்கத்தைக் கொண்டுள்ளது, அதையொட்டி இராணுவக்குழு நிகழ்வுகளில் இருந்து முக்கிய ஆதாயங்களைப் பெறும் என்று கூறினார்.

ஜனவரி 25ம் திகதி, எகிப்திய புரட்சியின் ஆண்டு நிறைவன்று, மில்லியன் கணக்கானவர்கள் எகிப்து முழுவதும் அணிவகுத்து இராணுவ ஆட்சிக்குழு மற்றும் முழு ஆட்சியும் வீழ்த்தப்பட வேண்டும் என்று கோரினர். அமெரிக்க ஆதரவுடைய ஜனநாயக மாற்றத்தை தாங்கள் எதிர்ப்பதை மக்கள் தெளிவாக்கியுள்ளனர்; அதற்கோ முழு எகிப்திய அரசியல் ஸ்தாபனத்தின் ஆதரவும் உள்ளது. பொது மக்களின் புதுப்பிக்கப்படும் வெடிப்பினால் அஞ்சும் ஆட்சிக்குழு இன்னும் பாதுகாப்பிற்கான வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதற்குப் போலிக் காரணம் கொடுப்பதற்காக குண்டர்களையும் வன்முறையையும் தூண்டிவிடுகிறது.

இத்திட்டம் முழு எகிப்திய ஆளும் உயரடுக்கினுடைய ஆதரவைப் பெற்றுள்ளது. வலதுசாரி முஸ்லிம் பிரதர்ஹுட் சட்டம் அனைவர் மீதும் செயல்படுத்தப்படுவதில் உறுதி வேண்டும்என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டது; அதையொட்டித்தான் பாதுகாப்பில் நிலவும் குழப்பம், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நிலவும் ஒழுங்கற்ற தன்மை ஆகியவை முடிவிற்கு வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இளைஞர்கள் குழுக்கள், தாராளவாத மற்றும் குட்டி முதலாளித்துவ இடதுகட்சிகள் ஆகியவற்றின் கூட்டணி ஒன்றுஏப்ரல் 6 இயக்கம், புரட்சிகர இளைஞர் ஒன்றியம், சோசலிஸ்ட் கூட்டுக் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் என்றுவெள்ளி எதிர்ப்பில் பங்கு பெற்றன. அவர்களுடைய நோக்கம் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்புக்களைக் கட்டுப்படுத்துதலும் இன்னும் தீவிரமாக அது பரவுவதைத் தடுப்பதும் ஆகும்

வரிவிதிப்பு அலுவலகக் கட்டிடத்தில் பாதுகாப்புப் படையினரை கற்களாலும் மொலோடாவ் கலவையுடனும் தாக்குவதற்குச் சீற்றம் மிகுந்த எதிர்ப்பாளர்கள் ஏறியபோது, குட்டி முதலாளித்துவ இடது சக்திகள் அவர்களை நிறுத்துவதற்குக் குறுக்கிட்டன. புரட்சிகர இளைஞர் ஒன்றியத்தின் செய்தித் தொடர்பாளாரான அம்ர் ஹமித் அவருடைய குழு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டிட ஆக்கிரமிப்பு கூடாது என நம்பவைத்ததாகக்கூறினார். கட்டிடம் தாக்கப்படவில்லை. கட்டிடத்திற்குள்ளும் எந்த சேதமும் ஏற்படவில்லை. எதிர்ப்பாளர்களைக் கீழே இறங்குமாறும் அவர்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும்  நாங்கள் வேண்டினோம். நம் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் பொதுச் சொத்துக்களைச் சேதம் செய்கின்றன என்று யாரும் எங்கள் மீது குற்றம் சாட்டுவதை நாஙக்கள் விரும்பவில்லை.

ஹமித் மற்றும் அவருடைய தாராளவாத போலி இடது கூட்டுக்களின் நிலைப்பாடு புரட்சிகரத் தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கும் குட்டி முதலாளித்துவ ஒழுங்கைக் காக்க விரும்புவர்களுக்கும் இடையே உள்ள பெரும் இடைவெளியை இதைவிடத் தெளிவாகக் காட்ட முடியாது. முதல் குழு தான் பாதுகாக்க விரும்பும் ஆட்சிக் குழுவும் முறையும் தொடர்ந்த புரட்சிகரப் போராட்டத்தின்மூலம் வீழ்த்தப்பட வேண்டும் என்று கருதுகையில், இரண்டாம் பிரிவினர் அமைதியான ஜனநாயக மாற்றம் என்றும் போலித் தோற்றங்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றனர்.

வியாழனன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், குட்டி முதலாளித்துவக் கூட்டுக்கள் புதிய பாராளுமன்றத்தைவலதுசாரி இஸ்லாமியவாதிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது, இராணுவ ஆட்சியின் கீழ் குறைந்த வாக்காளர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டதுஅரசியல் பொறுப்பை ஏற்குமாறும் சமீபத்திய வேண்டுமென்றே முறையாக நடத்தப்படும் கொலைகள், தூண்டிவிடப்படும் குழப்பங்களை எதிர்கொள்ளுமாறும், அவைகள் புரட்சியை நாசப்படுத்தி, கைவிடும் நோக்கத்தைக் கொண்டவை  என்றும் இராணுவ ஆட்சிக்குழு அதிகாரத்தை சிவிலிய அதிகாரத்திடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளன.

அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவ ஆட்சிக்குழுவை அகற்ற வேண்டும் என்னும் கோரிக்கையை பொதுமக்கள் தெளிவாக்கிய பின்னரும், இத்தகைய அறிக்கைகள் பாராளுமன்ற முகப்பை மாற்றுவதைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை என்பதைத்தான் காட்டுகிறது; இராணுவமோ பாராளுமன்றத்தின் மூலம் ஆட்சியை நடத்துகிறது.