WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
David North speaks in Berlin: “In Defence of Leon Trotsky and Historical Truth”
பேர்லினில் டேவிட் நோர்த் உரை: ட்ரொட்ஸ்கியையும், வரலாற்று உண்மையையும் பாதுகார்"
By our reporter
3 February 2012
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இளைஞர் அமைப்பான
ISSE,
ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் மெஹ்ரிங் பதிப்பகத்துடன் இணைந்து பேர்லின்
தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொண்ட கூட்டம்
ஒன்றிற்கு ஜனவரி 30, திங்களன்று ஏற்பாடு செய்திருந்தது.
“லியோன்
ட்ரொட்ஸ்கியையும், வரலாற்று உண்மையையும் பாதுகார்”
என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது.
உலக சோசலிச வலைத் தளத்தின்
சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத்
தலைவருமான டேவிட் நோர்த் முக்கிய அறிக்கையை வழங்கினார். பிரித்தானிய பேராசிரியர்கள்
ஜெப்ரி ஸ்வைன், இயன் தாட்சர் மற்றும் ரொபேர்ட் சேர்விஸ் ஆகியோர் ட்ரொட்ஸ்கி
வாழ்க்கை குறித்து எழுதியுள்ள நூல்களை டேவிட் நோர்த் லியோன் ட்ரொட்ஸ்கியை
பாதுகார்-In
Defence of Leon Trotsky-
என்னும் நூல் மூலம் விரிவான, கவனத்துடன் ஆய்வு செய்யப்பட்ட,
தாக்கம்மிக்க விமர்சனத்தை
முன்வைத்துள்ளார்.
நோர்த்தின் புத்தகத்துடைய ஜேர்மனிய பதிப்பை வெளியிடுள்ள மெஹ்ரிங்
பதிப்பாளர்களின் ஒரு பதிப்பாசிரியரான வொல்ப்காங் வேபெர் கூட்டத்திற்குத் தலைமை
வகித்தார். அவருடன் ஒரு
ISSE
பிரதிநிதியும் இணைத் தலைவராக இருந்தார். ட்ரொட்ஸ்கி குறித்த வாழ்க்கை வரலாற்று
நூல்கள் அடிப்படை உயர்கல்வித்தரங்களைக்கூடக் கொண்டிருக்கவில்லை என்று நோர்த்
நிரூபணம் செய்துள்ளார் என்று வேபர் கூறினார்.
“20ம்
நூற்றாண்டின் மாபெரும் அரசியல் பெருமக்களில் ஒருவருடைய வாழ்வையும் பணியையும்
தீவிரமான முறையில் முன்வைப்பபதில் அந்நூல்கள் தோற்றுவிட்டன.”
“பொய்கள்,
வரலாற்றுத் திரித்தல்கள் ஆகியவற்றைத் தளமாகக் கொண்ட ஒருதலைப்பட்ச நூல்கள் அவை,
போலித்தனக் குறிப்புக்களைப் பயன்படுத்தியுள்ளன, சேர்விஸின் நூலைப் பொறுத்தவரை
யூதஎதிர்ப்பு போலிச்சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன”
என்றார் வேபர்.
ஜேர்மனியின் சுஹ்ர்காம்ப் பதிப்பகத்திற்கு சேர்விஸ் எழுதியுள்ள
வாழ்க்கைச் சரிதம் வெளியிடப்பட இருக்கும் திட்டம் குறித்து எதிர்ப்புத்
தெரிவித்துள்ள 14 முக்கிய ஜேர்மனிய, ஆஸ்திரிய வரலாற்றாசிரியர்கள் கையெழுத்திட்ட
பகிரங்கக் கடிதத்தின் முக்கியத்துவத்தை வேபர் வலியுறுத்தினார். கடிதத்தை
எழுதியவர்கள் மற்றும் கையெழுத்திட்டவர்கள் பல்வேறு அரசியல் மரபுகள் மற்றும்
வரலாற்று ஆய்வுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்,
“அவர்கள்
தங்களுக்கு வரலாற்று உண்மை குறித்த ஒரு பொறுப்பு உடையது என்று உணர்கின்றனர், வரலாறு
எழுதப்படும்போது உயர்கல்விக்கூடத் தரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று
உணர்ந்துள்ளனர்”
என்று வேபர் குறிப்பிட்டார்.
தன்னுடைய ஆரம்ப அறிக்கையில், இக்கூட்டம் மூன்று மாஸ்கோ விசாரணைகளில்
இரண்டாவது முடிந்த 75வது ஆண்டில் சரியாக நடைபெறுகிறது என்பதைப் பார்வையாளர்களின்
கவனத்திற்கு நோர்த் கொண்டு வந்தார். அந்த விசாரணை ஜோர்ஜி பயடாகோவ், கிரிகோரி
சோகோல்நிகோவ், நிகோலாய் முரலோவ், லியோனிட் செரிப்ரியகோவ், மிகைல் போகுஸ்லாவ்ஸ்கி
ஆகியோர் உட்பட்ட முக்கிய போல்ஷிவிக் தலைவர்களுக்கு எதிரான மரண தண்டனை விதிப்புடன்
முடிவடைந்தது. இதே விசாரணையில் வேறு ஒரு குற்றம்சாட்டப்பட்டவராக இருந்த கார்ல்
ராடெக் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார், ஆனால் விசாரணை நடந்து
இரண்டு ஆண்டுகளுக்குள் கொலை செய்யப்பட்டுவிட்டார்.
ஆகஸ்ட் 1936, ஜனவரி 1937, மார்ச் 1938 ஆகியவற்றில் நடைபெற்ற மூன்று
மாஸ்கோ விசாரணைகள் அரசியல் பயங்கர நடவடிக்கைகளின் உச்சக்கட்டம் ஆகும் என்று நோர்த்
விளக்கினார்.
“ஸ்ராலினால்
ஒழுங்கமைக்கப்பட்ட இந்நடவடிக்கைகள், 1917 அக்டோபர் புரட்சியின் தலைவர்களுக்கு
எதிராக மட்டும் என்று இல்லாமல், சோவியத் தொழிலாள வர்க்கம் மற்றும் அறிவுஜீவிகளின்
மத்தியிலிருந்த மார்க்சிச அரசியலுக்கும் மற்றும் சோசலிச கலாச்சாரத்தின்
பிரதிநிதிகள் அனைவருக்கும் எதிராகவும் இயக்கப்பட்டன.”
இந்த விசாரணைகள் முற்றிலும் வரலாற்றுத் திரித்தல்கள் மற்றும்
பொய்களைத்தான் தளமாகக் கொண்டிருந்தன.
ஸ்ராலினிச அவதூறுகள், குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றின் முக்கிய
இலக்காக லியோன் ட்ரொட்ஸ்கி இருந்தார். நாடுகடத்தப்பட்ட நிலையில் மெக்சிகோவில்
இருந்த அவர் ஸ்ராலின் ஆட்சியின் குற்றச்சாட்டுக்களை மறுத்துக் கண்டனம் தெரிவித்து
“குற்றம்
சாட்டுபவர்கள் என்ற போர்வையில் மறைந்திருக்கும் உண்மையான குற்றவாளிகளைக்
கண்டுபிடிப்பதற்கு ஒரு சர்வதேச எதிர் விசாரணை தேவை”
என்று அழைப்புவிடுத்தார். ஸ்ராலினுடைய வழக்குகளை நிராகரிக்கும் ட்ரொட்ஸ்கியின்
பிரச்சாரம் டுவே ஆணைக்குழு -Dewey
Commission-
என்னும் அமைப்பிற்கு வழிவகுத்தது. ஓர் ஒன்பது ஆண்டுக் கால விசாரணைக்குப் பின்
அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அது ட்ரொட்ஸ்கியை விடுவித்து, மாஸ்கோ
விசாரணைகள்
“தயாரிக்கப்பட்டவை”
என்றும் கண்டித்தது.
வரலாற்றுப் பொய்கள் எப்பொழுதும் ஒரு சமூக, அரசியல் செயற்பாட்டிற்கு
உதவுகின்றன என்று நோர்த் விளக்கினார்.
“தன்னுடைய
அரசியல் நலன்கள், சமூக நிலை ஆகியவற்றிற்கு உண்மையான வரலாற்று நிகழ்வுகள்
எவ்வளவிற்கு அச்சுறுத்தல் என்று ஆளும் உயரடுக்கு நினைக்கின்றதோ அப்போது அது
திரித்தல்களிலும், பொய்கூறல்களிலும் ஈடுபடுகிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் அக்டோபர்
புரட்சியின் கொள்கைகளை அது காட்டிக் கொடுத்ததை மூடிமறைக்கும் வகையிலும்,
சோசலிசத்தின் உண்மை நோக்கங்களுக்கும் ஓர் அதிகாரத்துவ சாதி என்னும் முறையில்
ஸ்ராலினிச அதிகாரத்துவம் கொண்டுள்ள இலக்குகளுக்கும் இடையே பெருகி வரும் முரண்பாட்டை
மறைப்பதற்காகவும் பெரும் அப்பட்டமான பொய்களைப் பயன்படுத்தியது.”
வரலாறு குறித்த விவாதங்கள் கடந்த காலத்தைப் பற்றி என்பது
மட்டுமின்றி, நிகழ்காலம், வருங்காலம் ஆகியவை பற்றியதும் கூடத்தான் என்று நோர்த்
தொடர்ந்தார். இப்பின்னணியில் ஜேர்மனி அதன் வரலாற்று உண்மை சிதைவுகள் குறித்த வேதனை
தரும் அனுபவங்களைக் கொண்டது. முதல் உலகப் போருக்குப் பின் வலதுசாரியினர் கூறிய
“முதுகில்
குத்தியது”
என்னும் கட்டுக்கதை பற்றி அவர் குறிப்பிட்டார். இதன்படி ஜேர்மனி போரில்
தோற்றதற்குக் காரணம் யூதர்களும் புரட்சியாளர்களும் போர் முயற்சிகளை தேசத்துரோக
முறையில் எதிர்த்ததுதான் எனப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஜேர்மனியின்
நோக்கங்கள் என்னும் பிரிட்ஸ் பிஷ்ஷரின் சிறப்புமிக்க ஆய்வு வெளிவந்ததை
தொடர்ந்து
“வரலாற்றளார்களுக்கு
இடையே எழுந்த விவாதம்”
குறித்தும் அவர் பேசினார்.
1961ல் புத்தகம் வெளியிடப்பட்ட நேரத்தில், ஜேர்மனியில் வரலாற்று
ஆராய்ச்சி பெரும் பழமைவாத வரலாற்றாளர்களின் மேலாதிக்கத்தில் இருந்தது; அவர்கள்
முதல் உலகப் போர் பெரும்பாலும் சீற்றமடைந்த எதிர்த்தரப்புச் சக்திகளின் ஒரு தொடர்
பிழைகளின் முடிவுதான் என்று வாதிட்டனர். ஜேர்மனிய அரசாங்கம் 1914 பேரழிவு பற்றிய
குறிப்பான பொறுப்பைக் கொண்டிருக்கவில்லை என்று அவர்கள் வாதிட்டனர்.
ஆனால், புதிய ஆவணக்காப்பகத்தில் கிடைத்த தகவல்களைக் கவனமாக ஆய்ந்த
வகையில் பிஷ்ஷர் பழைமைவாதிகளின் ஒருமித்த உணர்வை மறுத்துள்ளார். ஜேர்மனிய
அரசாங்கத்தின் ஆக்கிரோஷமான கொள்கைகளும் ஒரு போர் ஆபத்தை 1914ல் எதிர்கொள்ளத் தயாராக
இருந்த நிலையில் ஆளும் உயரடுக்கின் பூகோள- அரசியல், பொருளாதார மற்றும் சமூக
நலன்களில் இருந்து விளைந்தது என்று அவர் எடுத்துக்காட்டினார்.
பிஷ்ஷரின் கண்டுப்பிடிப்புக்கள் ஜேர்மனிய உயர்கல்விக்கூடத்தினர்
மத்தியிலும்,
அரசாங்கத்திற்கும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அவை முதல் உலகப் போர் மற்றும்
இரண்டாம் உலகப் போருக்கும் இடையே ஒரு தொடர்ச்சியை எடுத்துக்காட்டின. ஹிட்லருடைய
கொள்கைகள் ஒன்றும்
“ஏதோ
ஒருவகையான எதிர்பாராத வரலாற்று விபத்து அல்ல.”
மாறாக அவருடைய முடிவுகள் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் நீண்டகால,
ஆழ்ந்த வேர்களை உடைய நலன்களில் இருந்து விளைந்தவை. பிஷ்ஷரைத் தாக்கியவர்கள் அவருடைய
ஆராய்ச்சி ஜேர்மனிய முதலாளித்துவம் தன்னை மூன்றாம் குடியரசு செய்த குற்றங்களில்
இருந்து விடுவித்துக் கொள்ளும் முயற்சியைத் தடைக்கு உட்படுத்தின என்று நோர்த்
சுட்டிக் காட்டினார்.
இதன் பின் நோர்த் ஒரு வினாவை முன்வைத்தார்:
“ட்ரொட்ஸ்கியின்
வாழ்வு, அவருடைய செயல்கள், சிந்தனை, ஆளுமை ஆகியவற்றைத் தவறாகக் கூறும் தற்போதைய
முயற்சிகளின் அடித்தளத்தில் இருக்கும் அரசியல் தேவைகள் மற்றும் சமூக நலன்களை யாவை?’
இதற்கான விடை ஸ்ராலினிச ஆட்சிகள் கிழக்கு ஐரோப்பாவில் சரிந்தது,
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது ஆகியவற்றிற்கு ஆளும் வர்க்கம் முகங்கொடுத்த
விதத்தில் காணப்படலாம்.
“வரலாறு
முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி தவிர்க்க
முடியாதது, சோசலிசம் தோற்றுவிட்டது, முதலாளித்துவம்தான் உலகத்தில் ஒரே சாத்தியமான,
மிகச் சிறந்தது என்று கூறப்பட்டது. வேறுவிதமாகக் கூறினால், முதலாளித்தவத்திற்கு
மாற்றீடு இருந்ததும் கிடையாது, இப்பொழுதும் இல்லை.”
இத்தகைய வரலாற்றுச் சிதைவை முதலாளித்துவ நெருக்கடி
ஆழ்ந்திருக்கையில் தக்க வைத்துக் கொள்வதற்கு, ஆளும்வர்க்கத்திற்கு லியோன்
ட்ரொட்ஸ்கியை மதிப்பிழக்கசெய்யவைப்பது
தேவையாகிறது என்று நோர்த் விளக்கினார்.
“ட்ரொட்ஸ்கி
போராடிய அரசியல் வேலைத்திட்டம் புறக்கணிக்கப்பட்டு, அவரை தனிப்பட்டமுறையில்
இழிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.”
எனவே ட்ரொட்ஸ்கியின் மீது அவர் ஒரு மோசமான மனிதர், விசுவாசமற்ற
கணவர், பாசமற்ற தந்தை, திமிர்பிடித்த, கொடூர அரசியல்வாதி என்ற அவதூறு அள்ளி
வீசப்பட்டன.
தாட்சர், ஸ்வைன் மற்றும் சேர்வீஸ் போன்ற வலதுசாரி வரலாற்றாளர்களின்
நோக்கம்
“ட்ரொட்ஸ்கி
ஸ்ராலினைவிட, ஒரு தீய ஏன் அதையும் விடமோசமானவர்”
என்பதை நிருப்பிப்பதாக இருந்தது.
இத்தகைய ட்ரொட்ஸ்கி மீதான தனிப்பட்டரீதியான தாக்குதல்கள்
வரலாற்றாளர்களுக்கு முக்கிய ஆர்வத்தைக் கொடுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளான
சோவியத் அதிகாரத்துவத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் அடித்தளத்தில்
இருந்து வேலைத்திட்டங்கள், கொள்கைகள் குறித்த பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத்
திசை திருப்பப் பயன்படுத்தப்படுகின்றன.
“ஸ்ராலினிசத்தைப்
பற்றிய ட்ரொட்ஸ்கியின் விமர்சனம், ஸ்ராலினின் தனியொரு நாட்டில் சோசலிசம் என்னும்
கோட்பாடு, கட்டாயக் கூட்டுப்பண்ணை முறை, கம்யூனிச அகிலத்தின் கொள்கை மற்றும்
ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி பற்றி கொள்கை என்று ஹிட்லருடைய வெற்றிக்கு வழிவகுத்த
கொள்கை ஆகியவை பற்றி என்ன கூறுவது”என்று
நோர்த் வினவினார். 1933 இல் ஜேர்மனி பற்றிய ஸ்ராலின், ட்ரொட்ஸ்கியின் கொள்கைகளின்
மாறுபட்ட தன்மையையும் நோர்த் குறிப்பிட்டார்.
“சமூக
பாசிசம்”
என்னும் தன் கொள்கையின் அடிப்படையில் ஸ்ராலின் பாசிசத்தின் ஆபத்தை
குறைமதிப்பிற்கு உட்படுத்தி, சமூக ஜனநாயகக் கட்சிதான் கம்யூனிஸ்ட் கட்சியின்
முக்கிய விரோதி என அறிவித்தார். ஆனால் மறுபக்கத்தில் ட்ரொட்ஸ்கியோ ஏராளமான
கட்டுரைகள், அறிக்கைகளில் தொழிலாள வர்க்கத்தின் இரு வெகுஜனக்கட்சிகளும் நாஜிக்கள்
அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுவதை தடுக்கும் வகையில் ஓர் ஐக்கிய முன்னணியின்
தேவைக்காக வாதிட்டார் என்று நோர்த் விளக்கினார்.
ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி
(KPD)
ட்ரொட்ஸ்கியின் கொள்கைகளை ஏற்றிருந்தால் 20ம் நூற்றாண்டின் போக்கு
முற்றிலும் வேறுபட்டதாக இருந்திருக்கும் என்று நோர்த் அறிவித்தார்.
ட்ரொட்ஸ்கிக்கும் ஸ்ராலினுக்கும் இடையே வேறு வேறுபாடுகள் இல்லாமல்
இருந்திருந்தாலும்கூட, கம்யூனிச அகிலம் மற்றும் ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி குறித்த
வேறுபாடுகள், ஹிட்லருக்கு எதிரான போராட்டத்தில் இருந்தவற்றின் அடிப்படைத்தன்மைகள்,
ட்ரொட்ஸ்கி ஓர் அரசியல் மாற்றீட்டைப் பிரதிபலிக்கவில்லை என்ற கூற்றை
நகைப்பிற்கிடமாக்கின்றது.
தன் உரையின் முடிவில், வரலாற்று உண்மைகள், தற்போதைய அரசியல்
அபிவிருத்தி ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பை விவரித்தார். உலகம் முழுவதும்
பெருகிவரும் சமூகப் போராட்டங்கள் ஒரு சோசலிச வேலைத்திட்டம் மூலம்தான்
முன்னெடுக்கப்படமுடியும், அதுதான் 20ம் நூற்றாண்டின் படிப்பினைகளில் இருந்து
உருவாக்கப்பட்டது என்று நோர்த் விளக்கினார்.
“கடந்த
காலம் பற்றி ஒரு விஞ்ஞானரீதியான புரிந்து கொள்ளல் ஒன்றுதான் வருங்காலத்
தயாரிப்பிற்கு மிக முக்கியமாகும், ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள் இவ்வகையில் மிக
முக்கியமானவை”
என்றார் அவர்.
இந்த உரை கணிசமான ஒப்புதல் மற்றும் கரவொலியுடன் வரவேற்கப்பட்டது.
சுஹ்ர்காம்ப் பதிப்பகம் தன் ட்ரொட்ஸ்கி வாழ்க்கை நூலை வெளியிடும் திட்டத்தை
திரும்பப்பெற வேண்டும் என்னும் கருத்தைப் பார்வையாளர்களில் எவர் ஆதரிக்கின்றனர்
என்று கேட்கப்பட்டபோது, பார்வையாளர்களில் கிட்டத்தட்ட 80% சாதகமாக இருந்தனர்.
நிகழ்விற்கு முன்னும் பின்னும் நடந்த விவாதம் பெருகிய முறையில் மாணவர்கள்,
உயர்கல்வியினர் மற்றும் தொழிலாளர்கள் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீட்டை
நாடுகின்றனர் என்றும் லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக்
குழு பிரதிநிதித்துவப்படுத்தும் சோசலிச முன்னோக்கினை நோக்கி திரும்புகின்றனர்
என்பதையும் சுட்டிக்காட்டியது.
ஜேர்மனிய செய்தி ஊடகத்தின் கவனத்தையும் இக்கூட்டம் ஈர்த்தது.
ஜேர்மனிய நாளேடான
Berliner
Zeitung
மற்றும்
Frankfurter Rundschau
ஆகியவை வரலாற்று வினாக்கள் மற்றும் ட்ரொட்ஸ்கி எடுத்துக் கொண்ட கொள்கைப்பிடிப்புடைய
போராட்டத்தை ஏளனப்படுத்த இழிந்த முறையில் முயன்ற கிறிஸ்ரியான் ஸூல்ட்டர் உடைய
அறிக்கையை வெளியிட்டன. நோர்த்தின் திறனாய்வு சுஹ்ர்காம்ப்பிற்கு பிரச்சினைகளைத்
தோற்றுவிக்கிறது என்னும் உண்மை குறித்து எரிச்சலுற்ற அவரது அறிக்கை,
“ஒருவர்
டேவிட் நோர்த்தை எளிதில் புறக்கணித்துவிடமுடியாது”
என்று முடிவுரையாகக் கூறியது. |