World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Social protests spread in Eastern Europe

கிழக்கு ஐரோப்பாவில் சமூக போராட்டங்கள் பரவுகின்றன

Peter Schwarz
27 January 2012
Back to screen version

மத்தியகிழக்கு, அமெரிக்கா, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் ஏனைய நாடுகளை அதிரவைத்த கடந்த ஆண்டின் சமூக போராட்ட அலை, இப்போது கிழக்கு ஐரோப்பாவை எட்டியுள்ளது. ஹங்கேரியில் ஓர்பென் ஆட்சிக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்கள், பல்கேரியாவில் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் சுரங்க தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், மற்றும் ருமேனியாவில் இரண்டு வாரகால ஆத்திரம்மிக்க போராட்டங்கள் ஆகியவை இதற்கு சான்று கூறுகின்றன.

இந்த இயக்கம் இப்போதைய நிலையில் ஒரு கலவையான மற்றும் குழப்பமான குணாம்சத்தைக் கொண்டுள்ளது. தொழிலாளர்கள் தங்களின் வேலைகள், கூலிகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க போராடிவரும் போராட்டங்களுக்கும், ஜனநாயகத்திற்கான அவர்களின் பேரணிகளுக்கும் அப்பால், தங்களுடைய முன்னேற்றத்திற்கான நம்பிக்கைகள் முடங்கி போனதால் தம் முன்னேற்றத்தில் நாட்டமுள்ள  மத்தியதட்டு வர்க்கத்தினரின் மத்தியில் எதிர்ப்புக்களும் உள்ளன.

போராட்டங்கள் அரசியல்ரீதியாக, வானவில்லின் அனைத்து நிறங்களையும் போல வர்ணமிட்டுள்ளன. சில தன்னியல்பாக தோன்றினாலும், ஏனையவை ஆளும் வர்க்கத்தின் போட்டி பிரிவுகளால் ஒழுங்கமைக்கப்படுகின்றன. அதிதீவிர-வலது போக்குகளும் தலையீடு செய்ய முனைகின்றன.

முதலாளித்துவ மீள்புனருத்தானம் செய்யப்பட்டு இருபது ஆண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் திறந்துவிடப்பட்டுள்ள ஆழ்ந்த சமூக பிளவே, போராட்டங்களின் உந்துசக்தியாக உள்ளது. 1989இல் முதலாளித்துவம் மீளமைக்கப்பட்டதை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட ஜனநாயகம் மற்றும் செழுமை குறித்த வாக்குறுதிகள், ஒரு சமூக தீயகனவுக்கு பாதையைத் திறந்துவிட்டுள்ளன.   

கொள்ளையிட்ட பொருட்களை பங்கு போடுவதில் சண்டையிட்டு கொண்ட பழைய ஸ்ராலினிச குழுக்களுக்கும், புதிய செல்வந்தர்களுக்கும் இடையிலிருந்த அரசியல் முரண்பாடுகளால் கடந்த இருபது ஆண்டுகள் அடையாளம் காணபட்டன. பெரும்பாலும் இந்த மோதல் மூர்க்கமான வடிவங்களில் இருந்தன. தங்களைத்தாங்களே "சோசலிஸ்டுகள்" என்று காட்டிக்கொண்டு, தங்களின் சொந்த பைகளை நிரப்ப அரசு உடைமைகளை "தனியார்மயமாக்கிய" பழைய ஸ்ராலினி கட்சி விசுவாசிகள் (apparatchik), தங்களைத்தாங்களே "ஜனநாயகவாதிகள்", “தாராளவாதிகள்" அல்லது "பழமைவாதிகள்" என்று அழைத்துக்கொண்ட புதுப்பணக்காரர்களைக் கொண்டு அரசாங்கத்தின் தலைமையை மாற்றினர்.

பரந்துபட்ட மக்கள் அவர்களின் வேலைகள், பரவலான கல்வி மற்றும் சுகாதாரத்துறையின் அழிப்பு, வீட்டுத்துறை மற்றும் உள்கட்டமைப்பின் பொறிவு ஆகியவற்றின் மூலம் விலையாக செலுத்தினர்.

2004 மற்றும் 2007இல் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைந்தமை, நிலைமையை மேம்படுத்திவிடவில்லை, மாறாக அது இன்னும் நிலைமையை மோசமாக்கியது. கூலிகள் தேக்கமடைந்தும், வாங்கும்சக்தி சரிந்தும் போயிருந்த நிலையில் விலைகள் உயர்ந்தன. குறைந்த கூலிகளுக்காக கிழக்கு ஐரோப்பாவிற்கு மாற்றப்பட்ட ஆலைகளும் (ருமேனியாவில் உள்ள குளூஜ் இன் நோக்கியா ஆலை போன்றவை) கூட, தற்போது மூடப்பட்டு வருகின்றன. இன்னும் குறைந்த கூலிகள் உள்ள ஆசியா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கும் உற்பத்திகள் நகர்த்தப்பட்டன

2008 சர்வதேச நிதியியல் நெருக்கடி மற்றும் அதற்கு பிந்தைய நிலைமைகள் எல்லாவற்றையும் கட்டுமீறிப்போக செய்தது. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எஞ்சியிருக்கும் அனைத்து சமூக செலவுகளையும் தகர்த்துவிட்டு, அவற்றின் வரவு-செலவு திட்டங்களை மறுகட்டுமானம் செய்யும்படி ஐரோப்பிய ஒன்றியமும், சர்வதேச நாணய நிதியமும் வலியுறுத்துகின்றன. யூரோவால் அந்த நாடுகள் ஆதாயமடையவில்லை என்றபோதினும் கூட, அந்த நெருக்கடிக்கு தற்போது அவை விலை கொடுக்க வேண்டியுள்ளது

இதன் விளைவு புரட்சிகரமான வடிவத்திலான ஒரு சமூக நெருக்கடியாகும். உலகில் மிகவும் சமநிலையற்ற நாடுகளில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் உள்ளன. சொத்துக்களைக் குவித்து வைத்திருக்கும் ஒரு சிறிய வர்க்கம், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளோடு ஆடம்பரமாக இருக்கின்ற நிலையில், பெரும்பான்மை மக்கள் வாழ்வதற்கே போராடி வருகின்றனர்.

பல்கேரியாவின் ஓர் ஆலையிலுள்ள ஒரு தொழிலாளி மாதத்திற்கு 200 யூரோவிற்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார். போலந்து மற்றும் ஹங்கேரியில், வெவ்வேறு வாங்கும்சக்தியைக் கணக்கில் எடுத்தாலும் கூட, ஒரு ஆரம்பநிலை பள்ளி ஆசிரியர் வாங்கும் சம்பளம், ஒரு சக-ஜேர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே பெறுகிறார். ருமேனியாவில், தொழில்திறன் பெற்ற ஒரு தொழிலாளி மாதத்திற்கு 300இல் இருந்து 500 யூரோ வரை சம்பாதிக்கிறார்; படித்த தொழில்வல்லுனர்கள் அதையும்விட குறைவாக சம்பாதிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர், ஆறு ஆயிரம் மருத்துவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.   

சமூக நெருக்கடியின் வீச்சும், எந்தவித முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இல்லாமையும் போராட்டங்கள் தொடரும், விரிவடையும், தீவிரமடையும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. வேறுபட்ட சமூக நலன்கள் இதனால் தெளிவாக வெளிப்படையாவதால், உண்மையான வர்க்கப் பிரச்சினைகள் மேலெழும்பும். ஆனால் அரசியல் முன்னோக்கு, வேலைத்திட்டம் மற்றும் தலைமை மீதான வரலாற்று பிரச்சினைகள் தானாகவே தீர்க்கப்பட்டுவிடாது.

நான்கு தசாப்தகால ஸ்ராலினிச ஆட்சி அவற்றின் அடையாளங்களை விட்டு சென்றுள்ளது. ஹிட்லர் இராணுவங்களின் தோல்விக்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் நிறுவப்பட்ட முதலாளித்துவ தனிச்சொத்துக்களை பறித்தெடுத்தமை மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு நிபந்தனைகளை உருவாக்கின. அவை உணர்வுபூர்வமாக தொழிலாளர் வர்க்கத்திற்கும் மற்றும் ஒரு உண்மையான சோசலிச முன்னோக்கிற்கும் விரோதமாக இருந்தன.

அவற்றின் சொந்த தனிச்சலுகைகளைப் பாதுகாக்க அரசாங்கம் மற்றும் தொழில்துறை மீது அவற்றிற்கு இருந்த கட்டுப்பாட்டை பயன்படுத்திய ஸ்ராலினிச ஆட்சிகள், தொழிலாளர்களின் எந்தவொரு சுயாதீனமான முனைவையும் சமரசமின்றி எதிர்த்தன. மாஸ்கோவிலிருந்த ஆட்சியாளர்களைப் போலவே இரக்கமின்றி அவர்களும், ஸ்ராலினிசத்திற்கு எதிராக சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தைக் பாதுகாத்து வந்த ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தின் கருத்துக்களை ஒடுக்கியதோடு, கொலைக்கும் உள்ளாக்கின. “தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற அவர்களின் தேசியவாத முன்னோக்கு, தொழிலாளர்களை அவர்களின் சர்வதேச வர்க்க சகோதரர்களிடமிருந்து பிரித்து, பொருளாதார பிரச்சினைகளைத் தீவிரப்படுத்தியது.  

திருப்புமுனையாக இருந்த 1989ஆம் ஆண்டில் ஸ்ராலினிஸ்டுகளின் பாத்திரம், அரசியல் குழப்பத்தை மட்டுமே அதிகரித்தது. அதிகரித்துவந்த போராட்டங்களின் அழுத்தங்களின் கீழ், முதலாளித்துவத்திற்கு மாறுவதை சுலபமாக்க "வட்ட மேசைகளை" ஏற்பாடு செய்து, “ஜனநாயக" எதிர்க்கட்சியின் குட்டி-முதலாளித்துவ தலைவர்களோடு ஸ்ராலினிஸ்டுகள் அவசர அவசரமாக ஓர் உடன்பாட்டிற்கு வந்தனர். பொருளாதாரம் மற்றும் ஆட்சியில் அவர்களுக்கிருந்த கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, தங்களைத்தாங்களே செழிப்பாக்கி கொண்டவர்களில் அவர்களே முதலிடத்தில் இருந்தனர்.     

இது ஹங்கேரியில் அழுத்தந்திருத்தமாக வெளிப்பட்டது. அங்கே ஏற்கனவே 1956இல் ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாளர்களின் ஓர் எழுச்சியைக் காட்டுமிராண்டித்தனமாக நசுக்கி இருந்தனர். 1989இல், கிழக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களில் ஹங்கேரிய ஸ்ராலினிஸ்டுகள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தனர்.

ஏப்ரலில் பிரதம மந்திரி கியூலா ஹார்னால் ஆஸ்திரியாவிற்கு எல்லை திறந்துவிட்டமை, ஏனைய அனைத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் நிலைகுலைக்க குறிப்பிடத்தக்க அளவிற்கு பங்களிப்பு அளித்தது. 1956இல் புடாபெஸ்ட்டில் கிளர்ச்சியில் இறங்கிய தொழிலாளர்களின் படுகொலையில் ஹார்ன் உத்வேகத்தோடு பங்கெடுத்திருந்தார்

2004இல், ஒரு முன்னாள் ஸ்ராலினிச இளைஞரணி செயலாளரும் அந்நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான பெரென்க் கியூர்க்சனி பிரதம மந்திரியானார். “சோசலிஸ்ட்" மீதிருந்த வெறுப்பு மனப்பான்மையோடு கியூர்க்சானி நடைமுறைப்படுத்திய சமூக வெட்டுக்கள், நேரடியாக வலதுசாரியின் கரங்களுக்குள் இருந்தது. இந்த பின்புலத்தினோடு தான், வலதுசாரி பிடெஸ்ஜ் -Fidesz- மற்றும் பாசிச ஜோபிக் -Jobbik- கட்சிகளின் தேர்தல் வெற்றிகளை ஒருவரால் விளக்க முடியும்.

நீண்ட போர்குண பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் ஹங்கேரிய தொழிலாள வர்க்கம், அதன்  இறுதி வார்த்தையை இன்னும் பேசவில்லை. விக்டெர் ஓர்பெனின் பிடெஸ்ஜ் அரசாங்கத்திற்கான ஆதரவு வேகமாக தேய்ந்து வருகிறது. அதன் தேசியவாத சொல்லாடல்களுக்கு இடையில், அது ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. அத்தோடு அது முற்றிலும் சர்வதேச நாணய நிதியத்தைச் சார்ந்துள்ளது.  

ஹங்கேரியிலும்—கிழக்கு ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலும்—வரக்கூடிய எதிர்கால அபிவிருத்திகள், தொழிலாள வர்க்கம் ஒரு உண்மையான சோசலிசத்தின் பாரம்பரியத்தை அணுகுவதிலேயை தங்கியிருக்கும். அது அதன் ஸ்ராலினிசத்தினுடனான அதன் வரலாற்று அனுபவத்திலிருந்து முக்கிய படிப்பினைகளை எடுத்துக் கொண்டு, அது தன்னைத்தானே ட்ரொட்ஸ்கியின் மற்றும் நான்காம் அகிலத்தின் முன்னோக்கோடு பரிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.  

ஒரு தேசியவாத முட்டுச்சந்திற்குள் இட்டுச்செல்ல அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிய செய்ய விரும்பும் அனைத்து அரசியல் அமைப்புகளிடமிருந்தும் அது உடைத்துக் கொள்ள வேண்டும். ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை ஸ்தாபிப்பதே அதன் நோக்கமாக இருக்க வேண்டும். கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவிலும் மற்றும் ஒட்டுமொத்த உலகிலும் உள்ள தொழிலாளர்களே அதன் நட்புச்சக்திகளாவர்.