WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
சோ.ச.க.
மீது கை வைக்காதே!
யாழ்ப்பாணத்தில் சோ.ச.க.
உறுப்பினர்களை பாதுகாத்திடுங்கள்!
By
the Socialist Equality Party (Sri Lanka)
31 January 2012
use
this version to print | Send
feedback
அரசியல்
கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரும் சோசலிச சமத்துவக்
கட்சியின் (சோ.ச.க.) பிரச்சாரத்தின் பாகமாக, கடந்த ஞாயிற்றுக் கிழமை
யாழ்ப்பாணத்தில் அது ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தை நடத்தவிடாமல் இலங்கை
பாதுகாப்பு அமைச்சு தடுத்தது. சோ.ச.க.க்கு மண்டபத்தை கொடுக்க வேண்டாம் என
வீரசிங்கம் மண்டபத்தின் நிர்வாகத்திற்கு பாதுகாப்பு அமைச்சு கட்டளையிட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்சிக்கு உள்ள ஜனநாயக உரிமை மீதான
இந்த கடும் தாக்குதலை சோ.ச.க. கண்டனம் செய்வதோடு, சகல உழைக்கும் மக்களதும் ஜனநாயக
உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அரசாங்கத்தின் வெளிப்படையான அரசியல் தணிக்கை
மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எதிர்க்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும்
புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றது.
திட்டமிடப்பட்டிருந்த கூட்டத்துக்காக இராசேந்திரன் சுதர்சன், முத்துலிங்கம்
முருகானந்தன் ஆகிய இரு கட்சி உறுப்பினர்கள் கடந்த வியாழக் கிழமை சுவரொட்டிகளை
ஒட்டிக்கொண்டிருந்த போது, அவர்களை படையினர் எதிர்த்தனர். இதன் பின்னரே பாதுகாப்பு
அமைச்சினால் இந்த தடங்கள் திணிக்கப்பட்டது. இராணுவப் புலனாய்வாளர்களால் தடுத்து
வைக்கப்பட்டு சட்ட விரோதமாக விசாரிக்கப்பட்டதன் பின்னர், படையினருடன் ஒத்துழைக்கும்
ஒரு நபரால் அவர்கள் இருவர் மீதும் சரீரத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. (பார்க்க:
இலங்கை
இராணுவம்
யாழ்ப்பாணத்தில்
சோ.ச.க.
உறுப்பினர்களுக்கு
எதிரான
வன்முறையைத்
தூண்டிவிடுகின்றது
)
ஜனவரி 5
அன்று, சோ.ச.க. எந்தவொரு எதிர்ப்பும் இன்றி வீரசிங்கம் மண்டபத்தை கட்டணம் செலுத்தி
ஒதுக்கிக்கொண்டது. சட்டத்தின் படி, மண்டபத்துக்குள் கூட்டம் நடத்த பொலிசிடமோ அல்லது
வேறு எந்த அதிகாரியிடமோ அனுமதி பெறத் தேவையில்லை.
சனிக்கிழமை, மண்டபத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாவட்ட கூட்டுறவு சபையின்
தலைவர் ஆர். ராஜாராம், கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டாம் என சபைக்கு பாதுகாப்பு
அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக சோ.ச.க. உறுப்பினர்களிடம் கூறினார். எதிர்க் கட்சிகள்
மற்றும் “பிரிவினைவாதத்துக்கு”
ஆதரவளிக்கும் குழுக்களுக்கு மண்டபத்தை வாடகைக்கு விட வேண்டாம் என பாதுகாப்பு
அமைச்சும் வட மாகாணத்துக்கான ஜனாதிபதி படையணியும் சபைக்கு கட்டளையிட்டுள்ளதாக அவர்
மேலும் கூறினார்.
சோ.ச.க.க்கு எதிரான வேட்டையாடலுக்கு திட்டமிடப்படுகின்றதற்கான அறிகுறியாக, படையினர்
யாழ்ப்பாணத்தில் உள்ள சோ.ச.க. உறுப்பினர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து
வருவதற்கான ஆதாரங்களை கட்சி பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான
அரசாங்கத்தின் நீண்டகால யுத்தத்தின் போது நூற்றுக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டதோடு
காணாமல் போனதற்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீதும் அவர்களோடு சேர்ந்து
செயற்படும் துணைப்படைக் குழுக்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அண்மைய
மாதங்களாக இந்தப் பிரச்சாரம் வடக்கில் மீண்டும் தலை தூக்கியுள்ளது.
சோ.ச.க.
கூட்டத்தை தடுப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தின் உயர் மட்டத்திலேயே
எடுக்கப்பட்டுள்ளது என்பதையே இந்த அபிவிருத்திகள் காட்டுகின்றன. வட மாகாணம்
ஏற்த்தாழ இராணுவ ஆட்சியின் கீழேயே உள்ளது. வடக்கில் படைகளுக்கு முன்னாள் தளபதியாக
இருந்த ஒருவரே வடமாகாணத்தின் ஆளுனராக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவினால்
நியமிக்கப்பட்டுள்ளார். மாகாணத்தின்
“சிவில்
நிர்வாகத்தின்”
பிரதான கூட்டங்களில் இந்த ஆளுனரும் தற்போதைய வடக்கு கட்டளைத் தளபதியும்
பங்கெடுக்கின்றனர்.
கட்சி
“பிரிவினைவாதத்துக்கு
ஆதரவளிக்கின்றது”
என்று மறைமுகமாக சாட்டுவதை சோ.ச.க. நிராகரிக்கின்றது. தீவின் வடக்கு மற்றும்
கிழக்கில் ஈழம் என்ற முதலாளித்துவ அரசைக் கோரிய தோற்கடிக்கப்பட்ட புலிகள் மற்றும்
ஏனைய குழுக்களின் முன்நோக்குக்கு எதிராக, கட்சி இடைவிடாமல் பிரச்சாரம் செய்து
வந்துள்ளது. தமிழ் பிரிவினைவாதத்தின் தோற்றுவாய் ஆட்சியிலிருந்த கொழும்பு
அரசாங்கங்களால் பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட தமிழர்-விரோத பாரபட்சங்களேயாகும்
என்பதை புரிந்துகொண்டுள்ள அதே வேளை, சோசலிசத்துக்காக தொழிலாள வர்க்கம்
முன்னெடுக்கும் போராட்டத்தின் பாகமாக மட்டுமே தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக
உரிமைகளைக் காக்க முடியும் என சோ.ச.க. வலியுறுத்தி வந்துள்ளது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக்
கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.), தமிழ்
சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத பாரபட்சங்களையும், அதே போல் 1983ல் இருந்து
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தையும் எதிர்ப்பதில் நீண்ட வரலாற்றைக்
கொண்டுள்ளன. சிங்கள மற்றும் தமிழ் பேசும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான
இந்தப் போராட்டத்தின் பாகமாக, சோ.ச.க. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை
பாதுகாப்புப் படையை நிபந்தனையின்றி திருப்பியழைக்கக் கோருகின்றது.
ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதற்காக சோ.ச.க. சிங்கள மற்றும் தமிழ்
தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த உறுதியாகப் போராடுகின்றது. இந்தப் போராட்டம் உலக
சோசலிச புரட்சி வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அநேகமாக தமிழ்
இளைஞர்களாக உள்ள சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரும்
சோ.ச.க.யின் பிரச்சாரமானது ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தினதும் ஜனநாயக உரிமைகளை
காப்பதற்கான போராட்டத்தின் பாகமாகும்.
சோசலிச
அனைத்துலக
வாதத்துக்காக சோ.ச.க. முன்னெடுக்கும் போராட்டத்தைப் பற்றி இராஜபக்ஷ அரசாங்கம்
விழிப்புடன் உள்ளது. 2005 மற்றும் 2010ல் நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் கட்சியின்
பொதுச் செயலாளர் விஜே டயஸை களமிறக்கிய சோ.ச.க., இராஜபக்ஷவினதும் ஏனைய முதலாளித்துவ
வேட்பாளர்களதும் வலதுசாரி கொள்கைகளை அம்பலப்படுத்தியது.
இந்த
கொள்கை ரீதியான போராட்டத்தின் காரணமாக, 26 ஆண்டுகால யுத்தத்தின் போது ஆட்சியில்
இருந்த அரசாங்கங்களால் சோ.ச.க. மற்றும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும்
வேட்டையாடப்பட்டதோடு, பிரிவினைவாதத்தை எதிர்த்ததன் காரணமாக புலிகளின் தாக்குதலையும்
எதிர்கொள்ள நேர்ந்தது. 1998ல், கடந்த வியாழக் கிழமை படையினரால் இலக்குவைக்கப்பட்ட
சுதர்சன் உட்பட நான்கு சோ.ச.க. உறுப்பினர்களை புலிகள் தடுத்து வைத்திருந்தனர்.
உலக சோசலிச வலைத் தளம் முன்னெடுத்த உறுதியான அனைத்துலகப் பிரச்சாரத்தின்
பின்னரே புலிகள் அவர்களை விடுவித்தனர்.
யுத்தம்
முடிவடைந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்து விட்டன. இராஜபக்ஷ அரசாங்கத்தால்
வாக்குறுதியளிக்கப்பட்டது போல், வடக்கு மற்றும் கிழக்கிலோ அல்லது தெற்கிலோ
“விடுதலையோ”
அல்லது “அமைதியோ”
வரவில்லை. அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
முதலீட்டாளர்களுக்கான மலிவு உழைப்புக் களமாக மாற்றுவதற்குத் தயாராகின்ற நிலையில்,
அந்தப் பிராந்தியங்களில் உள்ள மக்கள் இறுக்கமான இராணுவ ஆக்கிரமைப்பை
எதிர்கொள்கின்றனர்.
ஒடுக்குமுறை நிலைமைகளுக்கு எதிராக வெகுஜன அமைதியின்மை வளர்ச்சியடைகின்ற நிலைமையின்
கீழ், அரசாங்கம் மேலும் மேலும் விழிப்படைந்து வருகின்றது. வடக்கு மற்றும் கிழக்கில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் மக்கள் மத்தியில்
அதிருப்திக்கு உள்ளாகிவருவதையிட்டு அது கவனம் செலுத்துகிறது. தெற்கில், சர்வதேச
நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் அமுல்படுத்துவதை
தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களும் எதிர்த்து வருகின்றனர்.
இந்த
மாத முற்பகுதியில் கூட்டமொன்றில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலர் கோடாபய இராஜபக்ஷ,
புலிகள் புத்துயிர்பெறக்கூடிய அதே வேளை,
“துனிஷியா,
எகிப்து மற்றும் லிபியா போன்ற நாடுகளில் எழுச்சிகள் மூலம் அரசியல் மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளதைக் கண்டு... சில குழுக்கள் அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்க
முயற்சிக்கும் சாத்தியங்கள் இருப்பதே, எமது தேசிய பாதுகாப்புக்கு உள்ள சாத்தியமான
யதார்த்தமான அச்சுறுத்தலாகும்”
எனத் தெரிவித்தார்.
கட்டவிழ்ந்துவரும் சர்வதேச போராட்டங்கள் இலங்கையில் எதிரொலிக்கக் கூடும் என்று
அரசாங்கம் அஞ்சுகின்றது. அது ஆழமடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியின்
தாக்கத்தினால் ஒரு பொருளாதார புதைச்சேற்றை எதிர்கொள்கின்றது. மேலும் மேலும்
எந்தவொரு ஜனநாயக பாசாங்குகளையும் பராமரிக்க முடியாத நிலையில், வடக்கில் ஏறத்தாழ
நிலவும் இராணுவ ஆட்சியை ஒரு பரிசோதனை களமாகக் கொண்டு, யுத்தத்தின் போது அபிவிருத்தி
செய்யப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளின் பக்கம் அது திரும்பிக்கொண்டிருக்கின்றது.
சிங்கள
மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டங்களை தடுக்கும்
அவநம்பிக்கையான முயற்சியில் ஜனாதிபதி இராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலர் மற்றும் ஏனைய
அரசாங்கத் தலைவர்களும் தமிழர்-விரோத இனவாதத்தை கிளறிவிடுகின்றனர்.
“புலி
பயங்கரவாதம்”
புத்துயிர் பெறுகின்றது, “தேசிய
பாதுகாப்பு”
அச்சுறுத்தப்படுகின்றது என்பதே அவர்களது மந்திரமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக,
அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரியும் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய
விசாரணையைக் கோரியும் பிரச்சாரம் செய்யும் எந்தவொரு எதிர்க் குழுவையும்
அச்சுறுத்தும் நடவடிக்கையை படையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
கட்சியின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை சோ.ச.க. சாதாரணமாக
எடுத்துக்கொள்ளவில்லை. அது தனது அனைத்தலுக சக-சிந்தனையாளர்களின் உதவியுடன் தனது
உரிமைகளைக் காப்பதற்கான போராட்டத்தை உழைக்கும் மக்கள் மத்தியில் முன்னெடுக்கும்.
தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்டவர்களதும் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் பரந்த
போராட்டத்தின் பாகமாக, எமது அடிப்படை அரசியல் உரிமைகளைக் காக்கும் நமது
பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். |