WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஒன்டாரியோ கட்டர்பில்லர்
ஆலைமூடலை எதிர்த்து போராடுவோம்!
கூலி வெட்டுகளுக்கு
எதிராக வட அமெரிக்க தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவோம்!
Keith Jones
9 February 2012
use
this version to print | Send
feedback
ஒன்டாரியோவின் இலண்டனில் உள்ள அதன் இழுவை இயந்திர
(locomotive) ஆலையை
மூடுவதற்கான கட்டர்பில்லரின் முடிவு,
பெருவணிகங்களின் இரக்கமற்றதனத்தை
எடுத்துக்காட்டுவதோடு, வட
அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் வேலைகள்,
கூலிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மீது
பெருநிறுவனங்கள் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக அவர்களின் போராட்டங்களை
ஐக்கியப்படுத்துவதற்கான உடனடி தேவையையும் எடுத்துக்காட்டுகிறது.
கட்டர்பில்லரின் சேய்நிறுவனமான இலண்டனில் உள்ள எலெக்ட்ரோ-மோட்டிவ்
டீசல் (EMD) ஆலையிலுள்ள
465 உற்பத்தி தொழிலாளர்கள்
55 சதவீத கூலி வெட்டு
(இது கூலிகளை மிக குறைவாக மணிக்கு
16 டாலர் என்றளவிற்கு
குறைக்கிறது) உட்பட பாரிய
ஒப்பந்த விட்டுகொடுப்புகளை நிராகரித்ததைத் தொடர்ந்து,
புத்தாண்டு தினத்தன்று,
அது அத்தொழிலாளர்களுக்குக் கதவடைப்பை அறிவித்தது.
அந்நிறுவனம் ஓய்வூதிய திட்டத்தைக் கைவிடவும் கோரியது.
ஒரு வாரத்திற்கு பின்னர்,
கடந்த வெள்ளியன்று, 2011இல்
ஒரு சாதனையளவாக 4.9 பில்லியன்
டாலர் இலாபமீட்டியதாக கட்டர்பில்லர் அறிவித்தது.
அது கதவடைப்பை ஆலைமூடலாக மாற்றி வருவதாகவும் அறிவித்தது.
தென்மேற்கு ஒன்டாரியோவின் ஒரு உற்பத்தி மையமாக விளங்கும்
இலண்டன் ஏற்கனவே கிட்டத்தட்ட 10
சதவீத உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதத்தைக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த
ஆலைமூடல் அந்நகரை பேரழிவுக்கு உள்ளாக்கும்.
கட்டர்பில்லர் இலண்டனில் நடந்துவரும் இழுவை இயந்திர ஒருங்கிணைக்கும்
ஆலையின் இறுதி செயல்பாடுகளை இண்டியானாவின் முன்சீயில் உள்ள ஒரு புதிய ஆலைக்கு
மாற்றுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கே மிகக் குறைவாக மணிக்கு
12.5 டாலர் என்றளவில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
சனியன்று,
முன்சீயில் நடந்த கட்டர்பில்லரின் ஒரு "வேலைவாய்ப்பு
முகாமில்" ஆயிரக்கணக்கான
வேலையற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். EMDஇன்
முன்னோடி ஆலையான இலினோஸின் லீ கிரான்ஜில் உள்ள ஆலை மற்றொரு சாத்தியக்கூறாக உள்ளது.
அங்கே,
கட்டர்பில்லர் அதன் இலண்டன் ஆலையில் திணிக்க விரும்பிய அதே அளவிற்கு குறைந்த
கூலிகளுக்கு, ஒரு தொடர்ச்சியான
விட்டுகொடுப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கமான
UAW உதவியுள்ளது.
இலண்டன் EMD
தொழிலாளர்களின் பேரம்பேசும் பிரதிநிதியாக விளங்கும் கனேடிய
வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (CAW),
அந்த ஆலை மூடப்படுவதை பணிவோடு ஏற்றுக் கொண்டுள்ளது.
செவ்வாயன்று,
அது ஆலைமூடல் உடன்படிக்கையின் மீது நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை
தொடங்கியது.
இலண்டன் தொழிலாளர்கள் அவர்களுக்கு கட்டர்பில்லரால் முன்வைக்கப்பட்டு
CAWஆல்
ஏற்றுக்கொள்ளப்பட்ட போலியான விருப்பத்தேர்வை,
அதாவது கூலி வெட்டுக்கள் மூலமாக ஏழ்மை அல்லது வேலைவாய்ப்பின்மை
மூலமாக ஏழ்மை என்ற இரண்டையும் நிராகரிக்க வேண்டும்.
அவர்கள் ஆலையை ஆக்கிரமித்து,
அனைத்து
விட்டுகொடுப்புகளுக்கு எதிரான மற்றும் அனைத்து வேலைகளின் பாதுகாப்பிற்கான
அவர்களின் ஒரு போராட்டத்தில் இணைய வேண்டி,
வட அமெரிக்கா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கு
அழைப்புவிடவேண்டும்.
இதுபோன்றவொரு நடவடிக்கை பாரிய ஆதரவை வெல்லும் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை.
கட்டர்பில்லரின் நடவடிக்கைகள்,
எல்லையின் இரண்டு தரப்பிலும் உள்ள தொழிலாளர்களை
ஆத்திரமடையச்செய்திருப்பதோடு,
எச்சரிக்கையும் செய்துள்ளது.
கட்டர்பில்லர் எதிர்க்கப்பட்டு தோற்கடிக்கப்படவில்லையென்றால்,
அதன் நடவடிக்கை ஏனைய பெருநிறுவனங்களும் இதேபோன்ற மிரட்டல்
உத்திகளைப் பயன்படுத்த மட்டுமே தைரியமூட்டும் என்பதை தொழிலாளர்கள் உடனடியாக
உணர்ந்து கொள்ளலாம்.
ஆனால் இதுபோன்றவொரு தாக்குதலுக்கு எதிரான தொழிலாளர் நடவடிக்கை ஒன்று
வெற்றி பெறவேண்டுமானால்,
அது வட அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம்
முகங்கொடுக்கும் நிலைமைகள் பற்றிய ஒரு நேரிய மதிப்பீட்டின் அடிப்படையில் இருக்க
வேண்டும்.
கூலி மற்றும் சலுகைகளின் புதிய வெட்டுக்களுக்காக மற்றும் அவற்றை
வேகப்படுத்துவதற்காக முதலாளித்துவம் வேலைவாய்ப்பின்மையின் அச்சுறுத்தல் மற்றும்
உலகளாவிய பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி,
அனைத்திடத்திலுமுள்ள தொழிலாளர்கள் பலமான தாக்குதலின்கீழ்
உள்ளனர். வேலைநிறுத்த ஆயுதத்தைத்
தொழிற்சங்கங்கள் உண்மையில் கைவிட்டிருப்பதால்,
தொழில் வழங்குனர்கள் கதவடைப்பு தாக்குதலை கையிலெடுக்கும்
துணிச்சலைப் பெற்றுள்ளனர்.
இலண்டன் இழுவை இயந்திர தொழிலாளர்களுக்கு கட்டர்பில்லர் கதவடைப்பை அறிவித்த அதேநாள்,
ரியோ டிண்டோ அல்கான் (Rio Tinto
Alcan) அதன் கியூபெக்கின் அல்மாவில் உள்ள இரும்பு உருக்கும்
ஆலையில் வழக்கமான கூலியில் பாதியளவே சம்பளமாக பெறும் ஒப்பந்த தொழிலாளர்களின்
பயன்பாட்டை அதிகரிக்கும் நிறுவனத்தின் திட்டத்தை நிராகரித்த
750 தொழிலாளர்களுக்கு அந்நிறுவனம்
கதவடைப்பை அறிவித்தது. மற்றொரு
பன்னாட்டு நிறுவனமான கூப்பர்டயர் ஓஹியோவின் அதன் ஃபின்ட்லே ஆலையில்,
கூலி வெட்டுக்கான துண்டு வேலைமுறையை
(piecework system) நடைமுறைப்படுத்துவதை
எதிர்த்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த நவம்பரிலிருந்து
கதவடைப்பை அறிவித்தது.
இந்த வர்க்க யுத்த தாக்குதலின் முன்னால் தொழிற்சங்கங்கள் வெறுமனே
செயலற்று உள்ளன.
தேசியரீதியான,
முதலாளித்துவ சார்பான இந்த அமைப்புகள் அதற்கு உடந்தையாக உள்ளன.
கடந்த மூன்று தசாப்தங்களாக,
“வேலை பாதுகாப்பிற்காக"
என்ற பெயரில் தொழிற்சங்கங்கள்,
வெற்றிகரமாக பெருநிறுவன மாற்றுவடிவங்களை திணிக்க உதவிக்கொண்டே,
விட்டுகொடுப்புகளைத் திணித்ததோடு அவற்றை வேகப்படுத்தியும்
உள்ளன. இது வட
அமெரிக்காவெங்கிலும் மில்லியன் கணக்கான உற்பத்தி வேலைகளை அழிப்பதில் போய்
முடிந்துள்ளது. அவர்கள் கனேடிய
மற்றும் அமெரிக்க தொழிலாளர்களின் எந்தவொரு இணைந்த போராட்டத்தையும் திட்டமிட்டு
நாசப்படுத்தி உள்ளனர்.
அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களையும் கீழிறக்கும்
விதத்தில்,
தற்போது கனடாவிலுள்ள தொழிலாளர்களுக்கு எதிராக கட்டர்பில்லரினால்
இலிநோய்ஸ் மற்றும் இண்டியானாவின் தொழிலாளர்களை
நிலைநிறுத்த முடிகிறதென்றால்,
அது தொழிற்சங்கங்கள் வர்க்க போராட்டங்களை ஒடுக்குவதன் மற்றும் தீவிர தேசியவாதத்தை
ஊக்குவிப்பதன் மோசமான வெளிப்பாடு என்பதே ஆகும்.
1985-86இல் தேசிய
அடித்தளத்தில் அவர்கள் UAWஐ
உடைத்துக் கொண்டதிலிருந்து,
போட்டிக் கனேடிய மற்றும் அமெரிக்க தொழிற்சங்க அமைப்புகள் வாகனத்துறை
உற்பத்தியாளர்களுக்கு கூடிய "போட்டிமிக்கதாக"
அதாவது தொழிலாளிகளை சுரண்டுவதற்கு,
இடமளிக்க ஒன்றோடொன்று போட்டயிட்டுள்ளன.
அவர்கள் கனேடிய மற்றும் அமெரிக்க தொழிலாளர்களுக்கு இடையில்
பகைமையைத் தூண்டிவிட்டு கொண்டே,
முறையே "கனேடிய"
அல்லது "அமெரிக்க
வேலைகளைப்" பாதுகாப்பது குறித்த
அவர்களின் வீராவேச முழக்கங்களோடு விட்டுக்கொடுப்புகளை திணிக்கவும் அவற்றை
வேகப்படுத்தவும் வாகனத்துறை உற்பத்தியாளர்களுடன் இணைந்த அவர்களின் நயவஞ்சக கூட்டை
நியாயப்படுத்தி உள்ளனர்.
இவ்விதத்தில் அவர்கள் வாகனத்துறை உற்பத்தியாளர்களின் பிரித்தாளும் தாக்குதல்களுக்கு
உதவியுள்ளனர்.
கட்டர்பில்லரின் முன்சீ
"வேலைவாய்ப்பு முகாமைப்"
பாராட்டுபவர்கள் மத்தியில் இப்போது மூடப்பட்டுள்ள முன்சீ
செவ்ரோலெட் ஆலையின் முன்னாள் UAW Local 499இன்
மூத்த நிர்வாகியும், தற்போது
டெலாவார் கவுன்ட்டியில் ஜனநாயக கட்சியின் கவுன்சில் உறுப்பினருமான மைக் ஜோன்ஸூம்
இருப்பது தற்செயலானதல்ல.
UAW பகிரங்கமாகவே
ஒபாமா நிர்வாகத்தின் தொழில்துறை கொள்கையை ஆதரிக்கிறது.
அத்தொழில்துறை கொள்கை தொழிற்சங்கங்களின் ஒப்புதலுடனான கூலி
வெட்டுகள் மற்றும் டாலர் மதிப்பு குறைத்தல் ஆகியவற்றின் மூலமாக அமெரிக்க
தொழிலாளர்களின் வறுமையின் அடித்தளத்தில் வேலைகளை "அமெரிக்காவிற்குள்ளேயே"
கொண்டுவரவேண்டும் எனக் கோருகிறது.
CAWஇன் கொள்கையிலும்
எந்த வேறுபாடும் இல்லை. UAW
போலவே, வாகனத்துறை தொழில்துறையை
மீண்டுமொருமுறை முதலீட்டாளர்களுக்கு பெரும் இலாபத்தை ஈட்டி அளிக்கும் ஒரு ஆதாரமாக
செய்ய அதை மறுவடிவாக்கம் செய்வதில் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
மொத்தமாக நாளொன்றுக்கு 19
டாலருக்கு கூலி மற்றும் சலுகை வெட்டுக்களை திணிக்கும் விதத்தில்
GM மற்றும்
Chrysler நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை
மீண்டும் செய்துகொள்ள அது 2009இல்
ஒபாமா நிர்வாகத்துடனும் கனடாவின் பழமைவாத அரசாங்கத்துடனும் கைகோர்த்தது.
UAWஉம் விஞ்சி,
போர்ட் கனடா தொழிலாளர்கள் மீது CAW
அதேபோன்ற வெட்டுக்களைத் திணித்தது.
CAWஐ பொறுத்தவரையில்,
ஒரு இணைந்த போராட்டத்திற்கு அமெரிக்க கட்டர்பில்லர்
தொழிலாளர்களை ஒன்றுதிரட்ட கோருவதன் மூலம் கட்டர்பில்லரின் மிரட்டலை எதிர்ப்பது
குறித்து எவ்வித கேள்வியும் இல்லை.
இலண்டன் ஆலைமூடலுக்கு அது உடனடியாக உடன்பட்டமையானது,
சமூகபொருளாதார வாழ்வின் மீது முதலாளித்துவ சர்வாதிகாரத்தை
அது தூக்கிப்பிடிப்பதையும்,
ஒருசிலரின் இலாபத்திற்காக உழைக்கும் மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை அது
அடிபணிய வைப்பதையும் அடிக்கோடிடுகிறது.
தங்களின் வேலைகள் மற்றும் கூலிகளைப் பாதுகாக்கவும் மற்றும் சர்வதேச
தொழிலாள வர்க்கத்தின் பலத்தினால் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்க்கும் விதமாகவும்,
தொழிலாளர்கள் அமைப்புரீதியாகவும் அரசியல்ரீதியாகவும்
தொழிற்சங்கங்களிலிருந்து உடைத்துக்கொள்ள வேண்டும்.
சர்வதேசரீதியில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் விதமாக,
CAW, UAW மற்றும் ஏனைய தொழிற்சங்க அமைப்புகளிலிருந்து
சுயாதீனமாக, அவற்றிற்கு எதிரான
சாமானிய தொழிலாளர் குழுக்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்;
அனைத்து விட்டுகொடுப்புகள் மற்றும் வேலை வெட்டுகளுக்கு
எதிராகவும் முற்றுகை மற்றும் வேலைநிறுத்தம் உட்பட போர்குணமிக்க தொழில்துறை
நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்;
சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க
அரசியல் இயக்கம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
முதலாளித்துவ நெருக்கடிக்கு கூலி வெட்டுகள்,
சமூக நலன்கள் மற்றும் சேவைகளின் சீரழிவுகள் ஆகியவற்றின்
மூலம் உழைக்கும் மக்கள் விலைகொடுக்க வேண்டுமென்ற பெருவர்த்தக மற்றும் அவற்றின்
அரசாங்கங்களின் முறையீடுகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில்,
பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை பொதுவுடைமையின்
மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து நிறுத்த
தொழிலாளர்களின் அரசாங்கங்களை ஸ்தாபிப்பதன் மூலமாக பொருளாதார வாழ்வை முழுமையாக மறு-ஒழுங்கமைப்பு
செய்ய தொழிலாளர்கள் ஒரு வேலைதிட்டத்தை முன்னெடுக்க வேண்டும். |