தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan security forces kill dozens of prison inmates இலங்கை பாதுகாப்பு படைகள் டஜன் கணக்கான சிறை க் கைதிகளை படுகொலை செய்தனர்By Sampath Perera use this version to print | Send feedbackஇலங்கை சிறப்புப் பாதுகாப்பு படைகள் வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு வெலிக்கடை சிறையில் தேடலை மேற்கொண்ட போது உருவாக்கிவிட்ட மோதலின் பின்னர் குறைந்தது 27 கைதிகள் கொல்லப்பட்டனர். ஊடகங்களின் படி, 43 கைதிகள் உட்பட 59 பேர் காயமுற்றனர்.ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் இந்தச் மரணங்களுக்கு பொறுப்பாகும். நாட்டின் மிகப் பெரிய சிறையில் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதல், அரசாங்கம் பொலிஸ் அரச நடவடிக்கைகளை நம்புவது அதிகரித்து வருவதையே கோடிட்டு காட்டுகிறது. இந்த தாக்குதல், 1983 கருப்பு ஜூலையில் தமிழர்-விரோத படுகொலைகளின் போது, சிறை அதிகாரிகளின் உதவியுடன் இதே சிறையில் சிங்கள இனவாத கைதிகளினால் 53 தமிழ் அரசியல் கைதிகள் இரத்தக்களரியில் கொலைசெய்யப்பட்ட பின்னர் நடந்துள்ள கொலைத் தாக்குதலாகும்.போலீஸ் கமாண்டோ பிரிவான அதிரடிப் படையினர், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதை பொருட்கள் போன்ற சட்டவிரோத பொருட்களை கண்டுபிடிப்பதன் பேரில் ஒரு சோதனையை செய்வதற்காக , வெள்ளிக்கிழமை பிற்பகல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.பி.பி.சீ.யின் சிங்கள சேவையான சந்தேஷய பேட்டிகண்ட ஒரு கைதி, கமாண்டோக்கள் கைதிகளுடன் மோதலை எப்படி தூண்டிவிட்டனர் என்பதை விவரித்தார்: "அவர்கள் கையில் விலங்கிட்டு கைதிகளை வெளியே எடுக்கத் தொடங்கினர். கைதிகள் தமக்கு விலங்கிடப்படுவதை எதிர்த்த போது அவர்களை அடித்தனர். அவர்களை திரும்பவும் செல்களுக்குள் பூட்டிய படையினர், அங்கு கண்ணீர் புகை வீசினர். அப்போதே வெளியில் இருந்த மற்றவர்கள் கூச்சலிட்டு கல்லெறியத் தொடங்கினர்."கைதிகளை கொன்றும் காயமடையவும் செய்த கமாண்டோக்கள் , பின்னர் வெளியேறி முழு சிறைக்கும் கண்ணீர்புகை வீசினர். பல பொலீஸ் அதிகாரிகளும் கூட காயமுற்றனர்.மற்றொரு கைதி இந்திய தினசரியான இந்து பத்திரிகைக்கு கூறியதாவது: "விளக்கமறியலில் இருந்த கைதிகளை நிர்வாணமாக்கி அடித்ததனால் அவர்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டது."பொலிசாரின் படி , ஒரு கட்டத்தில் கைதிகள் சிறை ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து ஆயுதங்களைக் கைப்பற்றினர். பல மணி நேரம் அவர்கள் சிறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஒருவர் அல்லது இருவர் ஆயுதங்களுடன் கூரை மீது காணப்பட்டனர். முழு சிறைச்சாலையும் பெருந்தொகையான பொலிஸ், அதே போல் இராணுவத் துருப்புக்களால் தொடர்ந்து சூழப்பட்டிருந்தது. முன் வாயிலில், மூச்சக்கர வண்டிகளில் தப்பிக்க முயற்சித்தனர் என்று கூறப்பட்ட ஐந்து அல்லது ஆறு கைதிகளை பாதுகாப்பு படையினர் கொன்றனர்.சனிக்கிழமை அதிகாலையில் , சிறப்பு இராணுவ கமாண்டோ பிரிவினர் மூன்று கவச வாகனங்கள், இருளை ஊடுருவும் உபகரணங்கள் மற்றும் துப்பாக்கி வல்லுனர்களுடன் வந்து கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்றனர்.காலையில் 11 கைதிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் கூறினர். சடலங்கள் தேசிய மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படாமல், பொலிஸ் சவச்சாலைக்கு நேரடியாக அனுப்பப்பட்டமை நீதி விசாரணையை தவிர்க்கும் முயற்சியாக இருக்கலாம் என ஊடகச் செய்திகள் சமிக்ஞை செய்தன.சனியன்று , இலங்கை ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, பாராளுமன்றத்தில் இந்தக் குற்றத்தை நியாயப்படுத்தி மூடிமறைத்தார். அவர், தேடல் நடவடிக்கையை வன்முறையுடன் எதிர்த்ததோடு பாதுகாப்பு படைகளையும் மற்றும் பொதுமக்களையும் தாக்கினர் எனக் கூறி, கைதிகளை குற்றம் சாட்டினார்.சனிக்கிழமை சிறைக்கு வெளியே ஊடகங்களுடன் பேசிய மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அனுர சேனநாயக்க , கடும்போக்கு குற்றவாளிகள் இந்தக் கலகத்தை ஏற்பாடு செய்துள்ளதோடு கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன என்று கூறினார். எனினும், போலீசாருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக 10 கைதிகள் ஆயுதங்களை கையளித்தனர் என அவர் ஒப்புக்கொண்டார்.அமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரியின் இத்தகைய கருத்துக்கள், கைதிகள் படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் முயற்சியாகும். நூற்றுக்கணக்கான கைதிகள் அவர்களது செல்களில் அடைக்கப்பட்டிருக்கும் போது, நிராயுதபாணிகளான கைதிகளுக்கும் கனரக ஆயுதங்களைக் கொண்டிருந்த பொலீஸ் கமாண்டோக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது எப்படி என்பதை விளக்குவார் எவரும் இல்லை.ஊடகங்களுடன் பேசிய வெலிக்கடை கைதிகள் பலரதும் வழக்கறிஞரான சுரங்க பண்டார , அதிரடிப் படையினர் தேடுதல் நடத்தியமைக்கான சட்டப்பூர்வ நிலையை சவால் செய்தார். "நீதிமன்ற உத்தரவு இல்லாமல், பொலீசோ அல்லது இராணுவமோ ஒரு தேடல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக சிறை வளாகத்துள் நுழைவதற்கு உரிமை இல்லை. இது ஒரு சட்டவிரோத செயல் ஆகும்," என்று அவர் கூறினார். அதிரடிப் படையினர் சில கைதிகளுக்கு மரணதண்டனை கொடுத்துள்ளனர் என கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் பண்டாரவிடம் தெரிவித்திருந்தனர்.பொலீஸ் குற்றப் புலனாய்வுத் துறை, அதிரடிப் படையினரால் "தேவையில்லாத கொலைகள்" செய்யப்பட்டுள்ளனவா என்பதை கண்டுபிடிக்க ஒரு விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது. மேலும் , நீதவான் விசாரணையொன்றும் சனிக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டதுடன் சிறைச்சாலைகள் திணைக்களமும் சம்பவம் பற்றி விசாரிக்க மூன்று உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.இத்தகைய சம்பவங்கள் தொடர்பான முந்தைய உத்தியோகபூர்வ விசாரணைகளின் அனுபவத்தில் இருந்து பார்க்கும் போது , இந்த விசாரணைகள் என்ன நடந்தது என்பது, மற்றும் அரசாங்கம் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்புடைமை போன்றவற்றை மூடி மறைப்பதற்கு மட்டுமே இடம்பெறுகின்றன.கைதிகளுக்கு எதிரான வன்முறை இலங்கையில் புதியவை அல்ல. உண்மையில் , இது நீடித்த உள்நாட்டு யுத்தம் 2009ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து தீவிரமாக அதிகரித்ததுள்ளது. மேலும், இத்தகைய நடவடிக்கைகள் உயர் மட்டங்களில் உத்தியோகபூர்வ ஒப்புதல் இல்லாமல் சாத்தியம் இல்லை.இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் , உறவினர்கள் அல்லது நண்பர்கள் வெளியில் இருந்து உணவு கொண்டுவருவதை தடை செய்தமையை எதிர்த்த கைதிகள் மீது சிறைக் காவலர்கள் சுட்டனர். குறைந்தது 19 கைதிகள் காயமடைந்தனர். ஜூன் மாதம், வட இலங்கையில் வவுனியா சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் மீது ஒரு அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் கைதி ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டதை எதிர்த்து உண்ணாவிரம் இருந்துவந்தனர்.இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடி நிலைமைகள், அதிகரித்துவரும் அமைதியின்மையை உருவாக்குகின்றன. வெலிக்கடை சிறைச்சாலையில் 1,500 பேருக்கே இடம் இருந்த போதிலும் அங்கு 3.621 கைதிகள் உள்ளனர் என சிறைச்சாலைகள் அமைச்சர் கஜதீர தெரிவித்தார். ஏனைய தகவல்களின்படி, உண்மையான எண்ணிக்கை 4,000 முதல் 5,000 வரையாகும்.கடந்த ஆண்டு நடுப் பகுதியில் மொத்த சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 30.933 ஆக இருந்த போதிலும், சிறைகளில் 11,000 பேருக்கு மட்டுமே இடவசிதி உண்டு என ஐ.நா. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 500க்கும் மேற்பட்ட மரண தண்டனை கைதிகள், மூவருக்கு அமைக்கப்பட்ட சிறைக்கூடுகளில் ஆறு பேராக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என சண்டே லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.சிறைச்சாலைகளின் உள்ளே நிலவும் நிலைமைகள் , சிறை பராமரிப்புக்கான அரசாங்க செலவுகளில் வெட்டுக்கள், மற்றும் அத்துடன் உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளின் சமூக நிலைமைகள் பொதுவில் சரிவடைவதன் காரணமாக சிறு குற்றங்கள் அதிகரிப்பதனதும் விளைவாகும்.எல்லாவற்றிற்கும் மேலாக , கைதிகள் மீது வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதல், அரசாங்கம் தனது ஆட்சியை செயல்படுத்தவும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன திட்டத்தை அமுல்படுத்தும் போது எழும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்கவும் மேலும் மேலும் ஒடுக்குமுறை வழிமுறைகளை பயன்படுத்தும் என்ற எச்சரிக்கையையே தொழிலாள வர்க்கத்திற்கு விடுக்கின்றது.
|
|
|