World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Egyptian constitutional referendum marked by low turnout, allegations of fraud

எகிப்திய அரசியலமைப்பு மீதான வாக்கெடுப்பு குறைந்த வாக்காளர்கள் வருகை, மோசடிக் குற்றச்சாட்டுக்களால் குறிப்பிடப்படுகிறது.

By Johannes Stern
17 December 2012

Back to screen version

கிப்தின் இரண்டு பெரிய நகரங்களான தலைநகர் கெய்ரோ மற்றும் கடலோர நகரான அலெக்சாந்த்திரியா உட்பட நாட்டின் 27 ஆளும் உட்பகுதிகளில் 10ல் எகிப்தின் வரைவு அரசியலமைப்பு மீதான முதல் சுற்று வாக்கெடுப்பு சனிக்கிழமையன்று நடைபெற்றது. எகிப்தின் எஞ்சிய 17 ஆளும் உட்பகுதிகள் டிசம்பர் 22 அன்று வாக்களிக்கும்.

எகிப்தின் புதிய இஸ்லாமியவாத ஜனாதிபதி மகம்மது முர்சி மற்றும் ஆளும் முஸ்லிம் சகோதரத்தவம் (MB) இவற்றிற்கு எதிரான மூன்று வார வெகுஜன எதிர்ப்புக்களைத் தொடர்ந்து வந்துள்ள இந்த வாக்கெடுப்பில் குறைந்த வாக்காளர்கள் வருகை, வன்முறை மற்றும் மோசடி குறித்த குற்றச்சாட்டுக்கள்தான் குறிப்பிடும்படி இருந்தன.

வாக்கெடுப்பு நடத்தப்பட்ட சூழ்நிலை ஜனநாயகத்தை ஒரு கேலிக்கூத்தாகச் செய்துள்ளது. கிட்டத்தட்ட 300,000 இராணுவம் மற்றும் பொலிஸ் படையினர் வாக்குச் சாவடிக்களுக்கு பாதுகாப்பாக நிலைநிறுத்தப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

ஒரு வாரம் முன்பு, எகிப்திய இராணுவம் “முக்கிய அரச நிறுவனங்களைப் பாதுகாக்கவும், “பொது ஒழுங்கைப் பராமரித்து தேர்தல் வசதிகளைத் தக்க வைக்கவும் பொலிசுக்கு உதவ வேண்டும் என்ற ஜனாதிபதி ஆணையை முர்சி வெளியிட்டார். அச்சட்டம் அடிப்படையில் அவசரக்காலச் சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது; இது எகிப்தில் இராணுவ சர்வாதிகாரம் முறையாக அறிவிக்கப்படு முன் முதல் கட்டத்தைத்தான் குறிக்கிறது. இராணுத்திற்கு “அனைத்து நீதித்துறை அதிகாரிகளின் அதிகாரங்களை இது அளிக்கிறது; வாக்கெடுப்பின்போது குடிமக்களைக் கைதுசெய்து விசாரணை செய்யும் அதிகாரமும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

வாக்குப் போடாத தன்மை என்பதுதான் எகிப்தி முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தனத் திட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் தீர்ப்பாகும். 25 மில்லியன் தகுதி பெற்ற வாக்காளர்களில் 33 % மட்டுமே வாக்களித்தனர்;  இது, எகிப்திய அரசியல் நடைமுறையையும் தொழிலாள வர்க்கத்தையும் பிரிக்கும் பெரிய பிளவைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

நகர மையங்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே அரசியலமைப்பை நிராகரித்தல் என்பது குறிப்பிட்டத்தக்க வகையில் உயர்ந்து காணப்பட்டது. எகிப்திய அரசாங்கத் தொலைக்காட்சியின் கருத்துப்படி 68 முதல் 72% வரையிலான வாக்காளர்கள் கெய்ரோ மற்றும் அலெக்சாந்திரியாவில் முறையே “வேண்டாம் வாக்களித்துள்ளனர்.

கெய்ரோ நகர நடுப்பகுதி அப்தீனில் ஒரு வாக்குச் சாவடியில் 63 வயதான ரிடா முஸ்தாபா கூறினார்: “அரசியலமைப்பு நாட்டின் நலன்களுக்காக இல்லை; என்னுடைய குழந்தைகள் அல்லது பேரக்குழந்தைகளுடைய நலன்களுக்காகவும் இல்லை. புரட்சியில் இருந்து உணவுப் பொருட்கள் விலை ஏறிவிட்டது. சகோதரத்துவத்தின் திட்டம் தோற்றுவிட்டது. முபாரக்கை விட முர்சி மோசமாக உள்ளார்.

முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பை வாக்காளர்கள் நிராகரித்துள்ள மற்ற மாநிலங்களில் ஆளும் உட்பகுதிகளான நைல் டெல்டாவில கர்பியா மற்றும் டகாலியா ஆகியவை அடங்கும்; இவற்றில்தான் எகிப்தின் பெரும்பாலான ஜவுளித் தொழில்துறை உள்ளது.

இந்த வாக்கெடுப்புடன், எகிப்திய ஆளும் வர்க்கம் பெப்ருவரி 2011ல் வெகுஜனப் புரட்சிகரப் போராட்டங்களால் முன்னாள் சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக் அகற்றப்பட்டபின், மீண்டும் சர்வாதிகார ஆட்சியை அமைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இன்னும் அதிக வலதுசாரித்தன, வெளிப்படையான இஸ்லாமிய அரசியல் தளத்தை எகிப்திய இராணுவத்தின் தொடர்ந்த சர்வாதிகாரத்திற்கு சட்டபூர்வ வெடிமருந்துகளை அரசியலமைப்பு அளிக்கிறது; இது தொழிலாள வர்க்கத்தின் மீது தீவிரமான அடக்குமுறையைக் கையாளும்.

பழைய அரசியலமைப்பின் 2ம் விதியை, “இஸ்லாமியச் சட்டத்தின் கொள்கைகள்தான் [ஷரியா] சட்டமியற்றவதற்கு முக்கிய ஆதரவு என்று அறிவிப்பதைத் தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில், முர்சியும் இஸ்லாமிய சகோதரத்துவமும் நாட்டை இன்னும் இஸ்லாமியமயம் ஆக்கும் கதவைத் திறந்து வைத்துள்ளன.

எகிப்திய இராணுவத்தின் சலுகைகள் மற்றும் அதிகாரம் பொறித்து வைக்கப்பட்டுள்ளதுதான் அரசியலமைப்பின் மிக முக்கியமான கூறுபாடாகும். இராணுவம் பெரும்பாலும வாஷிங்டனில் இருந்து கிடைக்கும $1.3 பில்லியன் நிதி மூலம் இயங்குகிறது.

அரசியலமைப்பின் 197வது விதி, NDC எனப்படும் ஒரு தேசிய பாதுகாப்புக் குழுவிற்கு ஒப்புதல் கொடுக்கிறது; இதற்கு ஜனாதிபதி தலைமை தாங்குவர்; முக்கிய மந்திரிகள், உளவுத்துறைத் தலைவர், இராணுவப் படைகளின் தலைமை மற்றும் முக்கிய இராணுவத் தளபதிகளும் இதில் இருப்பர். “நாட்டின் பாதுகப்பை உறுதிப்படுத்தும் வழிவகைகளுக்கு இது பொறுப்பு கொண்டிருப்பதுடன், ஆயுதப் படைகளின் வரவு-செலவுத் திட்டத்திற்கும் பொறுப்பாகும்.

NDC  இவ்வகையில பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் இல்லை; அரசிற்குள் ஒரு அரசாக, அடிப்படையில் வரம்பற்ற அதிகாரங்களுடன் செயல்படுகிறது.

விதி 197ன் படி, இராணுவம் பற்றிய வருங்காலச் சட்டங்கள் அனைத்தும் NDC ஆலோசனைக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது; NDC  க்கு வரம்பற்ற அதிகாரங்கள் அளிக்கப்படலாம். பாதுகாப்பு மந்திரி ஒரு இராணுவ அதிகாரியாக இருக்க வேண்டும் என்றும் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாகச் செயல்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பு கூறுகிறது. “ஆயுதப் படைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் குற்றங்களுக்காக சாதாரண குடிமக்கள் மீது இராணுவம் விசாரணையை மேற்கொள்ளவும் விதி 198 அனுமதிக்கிறது.

எகிப்திய முதலாளித்துவமும் அதன் வாஷிங்டனில் இருக்கும் ஆதரவாளர்களும் அவர்களின் தொழிலாளர்-விரோத, ஏகாதிபத்திய சார்பு கொள்கைகளை மிருகத்தன சர்வாதிகார ஆட்சி மூலம்தான் செயல்படுத்தப்பட முடியும் என்பதை நன்கு அறிவர். சமீபத்திய வாரங்களில் முர்சி ஆட்சி சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் இருந்து கடன்களை வாங்கியுள்ளது. ஆட்சி எகிப்திய பொருளாதாரத்தை இன்னும் தனியார்மயமாக்க தயாரிப்புக்களைக் கொண்டுள்ளது; மேலும் எரிபொருள், ரொட்டி ஆகியவற்றிற்கு கொடுக்கப்படும் உதவிநிதிகளையும் குறைக்க உள்ளது; இவற்றைத்தான் வறிய எகிப்தியர்கள் நம்பியுள்ளனர். முர்சி சிரியா மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் உந்த்தலுக்கும் ஆதரவைக் கொடுக்கிறார்.

கடந்த வாரங்களில் முஸ்லிம் சகோதரத்தவத்தின் இஸ்லாமியவாத உறுப்பினர்கள், இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகியவை, காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் முர்சியின் உடந்தை, மற்றும் நவம்பர் 22 முர்சி ஆணை, சர்வாதிகார அதிகாரங்களை எடுத்துக் கொள்வது, ஆகியவற்றிற்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட வெகுஜன எதிர்ப்பை அடக்குவதற்கு ஒத்துழைத்தன. தஹ்ரிர் சதுக்கத்தைச் சுற்றி மற்றும் கெய்ரோவில் ஜனாதிபதி அரண்மனையைச் சுற்றி, இன்னும் பல நகரங்களில் நடந்த பெரும் மோதல்களில், குறைந்தப்பட்சம் 10 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.

எகிப்தின் அரசியல் கட்சிகள் அரசிலமைப்பு மீதான வாக்கடுப்பின் முதல் சுற்று முடிவு குறித்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன. நேற்று முர்சியின் சுதந்திரம் மற்றும் நீதிக்கட்சி (FJP), முஸ்லிம் சகோதரத்தவத்தின் அரசியல் பிரிவு, வாக்குகளில் 56.5% அரசியலமைப்பு வரைவிற்கு ஆதரவாகவும் 43.5% எதிர்த்தும் போட்டப்பட்டன என்று அதன் வலைத் தளத்தில் அறிவித்துள்ளது.

சற்றுக் கூடுதலான மதச்சார்பற்ற எதிர்க்கட்சியான தேசியத் தீர்வு முன்னணி NSF, எகிப்தியர்களில் 66% முதல் சுற்றில் அரசியலமைப்பு வரைவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்று கூறியுள்ளது. NSF என்பது பல தாராளவாத, போலி இடது கட்சிகளின் கூட்டு ஆகும்; இதற்கு முன்னாள் ஐ.நா. அதிகாரி மகம்மது எல்பரடேய் தலைமை தாங்குகிறார்.  முன்னாள் நாசரி ஜனாதிபதி வேட்பாளர் ஹம்தீன் சபஹி மற்றும் முபாராக் ஆட்சியின் முன்னாள் அதிகாரி அம்ர் மௌசா ஆகியோரும் இதில் உள்ளனர்.

அரசாங்கம் “முன்னோடியில்லாத அளவிற்கு தில்லுமுல்லை செய்துள்ளது என்று NSF குற்றம் சாட்டியுள்ளது; ஆளும் உட்பகுதிகளில் வாக்கெடுப்பில் 750 மீறல்கள் நடந்துள்ளன என்றும் அது கூறியுள்ளது.

மனித உரிமைகள் குழுக்கள் மறுவாக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளன. மனித உரிமைகளுக்கான கெய்ரோ கூடத்தின் தலைவர் பஹி எல்-தின் ஞாயிறன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் “புரட்சி இருந்தபோதிலும், முபாரக் சகாப்தத்தில் நடைபெற்றது போல் நாம் வாக்கெடுப்பைக் கொண்டுள்ளோம் என்றார்.

இத்தகைய குறைகூறல்கள் இருந்போதிலும், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி இஸ்லாமிய வாதிகளும் இராணுவமும் அரசியலமைப்பை எப்படியும் செயல்படுத்த வேண்டும் என்னும் முயற்சியில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டுள்ளனர். NSF மற்றும் போலி இடது குழுக்கள், புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS)  அனைத்துமே வாக்கெடுப்பிற்கு நெறி கொடுக்கப்பட வேண்டும் என முயன்று, தொழிலாளர்கள், இளைஞரகளை இந்த மோசடிச் செயலில் பங்கு பெற அழைப்பு விடுத்துள்ளன.

முதலாளித்துவ எதிர்ப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளும்—அவை தாராளவாதிகளாயினும், குட்டி முதலாளித்துவ இடதாயினும்—எகிப்திய ஆளும் உயரடுக்கில் இருக்கும் இஸ்லாமியப் பிரிவுகளை விட சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தைக் கண்டு அஞ்சுகின்றன. இஸ்லாமிய பிரிவுகளுடன் இவை அடிபடையில் ஒரே வர்க்க நலன்களைத்தான் கொண்டுள்ளன.

ஒரு முக்கிய கணத்தில் அம்ர் மௌசா, NSF ன் தலைவரும் நிறுவனரும், முன்னாள் முஸ்லிம் சகோதரத்துவத்தின் தலைமை வழிகாட்டியுமான மஹ்தி அகெப்பைச் சந்தித்தார்; இது புதிய கெய்ரோவில் ஒரு வாக்குச் சாவடியில் நடைபெற்றது. அவர்கள் கைகுலுக்கிக் கொண்டதுடன், புகைப்படத்திற்கும் அனுமதியளித்தனர்; அப்புகைப்படம் எகிப்திய நாளேடு அல்-அஹ்ரத்தின் அரபு வலைத் தளத்தில் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து குறுகிய நேரத்தில், போபங்கொண்ட பெண் வாக்காளர்கள் ஒரு பல  மில்லியன்களை கொண்ட செலவந்தரும் முஸ்லிம் சகோதரத்துவத்தின் துணை உயர் வழிகாட்டியுமான கைரத் அல்-ஷடெரை, “நெறியற்றவர், “ஷெடர் வெளியேறுக என்று கோஷமிட்டபடி துரத்தியடித்தனர்.