World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Above the law

சட்டத்திற்கும் மேலாக

Barry Grey
14 December 2012

Back to screen version

முக்கிய வங்கிகளுடைய குற்ற நடவடிக்கைகள் தொடர்புடைய சமீபத்திய ஊழலில், அமெரிக்க நீதித்துறை செவ்வாய் அன்று மெக்சிகன் மற்றும் கொலம்பிய போதைப்பொருள் கும்பலுக்காக மிகப்பெரியளவில் பணச் சலவை செய்ததற்காக (கறுப்புப் பணத்தை வெள்ளை பணமாக மாற்றுதல்) பிரித்தானியாவை தளமுடைய HSBC வங்கி மீது 1.9 பில்லியன் டாலர்கள் உடன்பாடு ஒன்றை அறிவித்துள்ளது.

இத்தகைய உடன்பாடு ஐரோப்பாவில் மிகப் பெரியதும், உலகில் மூன்றாவதுமான வங்கி அல்லது அதன் உயர்மட்ட நிர்வாகிகள் மீது குற்ற விசாரணை நடத்துவதை தவிர்க்கும்வகையில் வடிவமைக்கப்பட்டது. போதைப்பொருள் பிரபுக்களுக்காக பில்லியன் கணக்கான டாலர்களை பணச்சலவை செய்துள்ளதாக வங்கி அறிவித்திருந்தாலும், ஈரான், லிபியா, பர்மா மற்றும் கியூபாவிற்கு எதிரான அமெரிக்க நிதியத் தடைகளை மீறியதாக ஒப்புக் கொண்டுள்ள போதிலும், ஒபாமா நிர்வாகம் தண்டனையை தள்ளிப்போடப்படும் உடன்பாடு என்ற வகையில் குற்றச்சாட்டை சுமத்துவதைத் தவிர்த்துள்ளது.

இந்த உடன்பாடு, 2008ல் நிதியச் சரிவை ஏற்படுத்தி உலக மந்தநிலையைக்கொண்டு வந்த சட்டவிரோதச் செயல்களுக்காக எந்த உயர்மட்ட வங்கியாளரையும் பொறுப்புக் கூற வைக்கக் கூடாது என்று பாதுகாக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கையுடன் இயைந்துள்ளது. தற்போதைய நெருக்கடியைத் தூண்டியுள்ள மோசடி நடவடிக்கைகளுக்காக சிறையில் அடைக்கப்படுவது ஒருபுறம் இருக்க, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்கத்தினரின் வாழ்க்கைத் தரங்களை சிதைத்து மில்லியன் கணக்கான வேலைகளை தகர்த்ததற்கு வழி செய்த செயல்களுக்காக ஒரு முக்கிய வங்கியின் ஒரு உயர் நிர்வாகி கூட குற்றம் சாட்டப்படவில்லை.

அரச பாதுகாப்புடன், பரபரப்புடன் ஊக, மற்றும் ஏமாற்றுத்தனங்கள் குறைவின்றித் தொடர்கின்றன. இதனால் வங்கிகளுக்கு மிக அதிகளவு இலாபங்கள் ஏற்பட்டுள்ளன. எப்பொழுதையும் காட்டிலும் ஏழு இலக்க ஊதியத் தொகுப்பு உயர்மட்ட வங்கியாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

செவ்வாயன்று முதற்பக்க கட்டுரை ஒன்றில் நியூயோர்க் டைம்ஸ் HSBC மீது குற்றச்சாட்டு வேண்டாம் என்ற முடிவிற்கு வழிவகுத்த ஒபாமா நிர்வாகத்தின் உள் விவாதங்களை கோடிட்டுக் காட்டியுள்ளது. நீதித்துறை மற்றும் நியூயோர்க்கின் மாவட்ட வழக்குதொடுனர் அலுவலகமும் சமரசத்தை விரும்பினர் என்றும் இதையொட்டி வங்கி, பணச்சலவைக்கு குற்றஞ்சாட்டப்பட மாட்டாது. ஆனால் குறைந்த குற்றமான வங்கி இரகசிய சட்டத்தை மீறியதற்காக குற்றம் சாட்டப்படும் என்றும் டைம்ஸ் தெரிவிக்கிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கூட ஒபாமா நிர்வாகத்திற்கு அதிகமாகப் பட்டிருக்க வேண்டும். HSBC உட்பட முக்கிய வங்கிகள் மீது கண்காணிக்கும் பொறுப்பைக் கொண்ட முன்னாள் நியூயோர்க் மத்திய வங்கிக்கூட்டமைப்பின் தலைவர் டிமோதி கீத்னரின் தலைமையில் இருக்கும் நிதித்துறையும், நாணயக் கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகம், மத்திய கட்டுப்பாட்டு சபை ஆகியவை HSBCக்கு ஒரு தீவிர சட்டபூர்வ அடி என்பது நிதிய முறையைப் பாதிப்பிற்கு உட்படுத்தும் என்ற அடித்தளத்தில் அதன் மீதான குற்றச்சாட்டு வேண்டாம் என்று தடுத்துவிட்டன.

இதன் பொருள் என்ன? மெக்சிகன் இராணுவம் வாஷிங்டனுடைய ஒத்துழைப்புடன் நடத்துவதில் தீவிரம் கொண்டிருந்த 60,000பேருக்கும் மேல் பலியாகிவிட்ட போதைப்பொருள் போர் என அழைக்கப்படுவதற்கு எதிராக இயங்கிய போதைக் கும்பல்களின் செயல்களுக்கு ஆதரவழிப்பதனூடாக தன்னுடைய இலாப வேட்டையை HSBC நடாத்தியுள்ளது என்பதுதான். இதைவிட அமெரிக்காவிலும் உலகெங்கிலும் போதை வணிகத்தால் ஏற்படுத்தப்படும் மனிதத் துன்பங்களும் இருக்கின்றன.

வங்கி ஒரு பெயரளவிலான அபராதம் மட்டும் கட்ட அனுமதிக்கப்பட்டது. இத்தொகை 2011ல் அதன் இலாபங்களில் 10% க்கும் குறைவாகவும், போதைப் பிரபுக்களின் குருதிக்கறை படிந்த பணத்தைச் சலவை செய்ததற்காக அது பெற்ற பணத்தில் மிகச் சிறிய பகுதிதான். இதற்கிடையில் மக்களின் மிக வறிய, அடக்கப்பட்ட பிரிவுகளை சேர்ந்த சிறிய போதைத்தரகர்கள், பயன்படுத்துவோர் வாடிக்கையாகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளுக்கு அமெரிக்கச் சிறைக் குலாக்குகளில் தள்ளப்படுகின்றனர்.

உலகப் போதை வணிகம் தொடர்வதை பாதுகாக்கும் நிதிய ஒட்டுண்ணிகள், அதனால் உருவாக்கப்படும் சமூக ஏழ்மைப்படுத்தலால் பெரும் அளவிலான நிதியை ஈட்டுவோர் சட்டத்திற்கும் மேலாக உள்ளனர். டைம்ஸ் குறிப்பிடுவது போல், சில நிதிய அமைப்புக்கள், மிகப் பெரியவையாக வளர்ந்து ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்படுவதற்கு அப்பாலும் மிகப் பெரியதாக உள்ளன.

இங்குதான் ஊடுருவிப்பார்க்கக்கூடிய ஜனநாயகம் என்ற திரையின் பின்னே ஆதிக்கம் செலுத்தும் நவீனகால பிரபுத்துவமுறைக் கொள்கை பூதக்கண்ணாடியூடாக காணக்கூடியதாக உள்ளது. இன்றைய நிதியக் கொள்ளைப் பிரபுக்கள் தமக்குத் தாமே சட்டமாக உள்ளனர். எந்தவிதப் பொறுப்பையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற கவலையின்றி அவர்கள் திருடலாம், கொள்ளை அடிக்கலாம், விரும்பியபடி கொலைகூடச் செய்யலாம். தங்கள் பெரும் செல்வத்தின் ஒரு பகுதியை வாஷிங்டனில் அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள் ஆரம்பித்து உள்ளூர் பொலிஸ் தலைமையதிகாரி வரை அரசியல்வாதிகள், கட்டுப்பாட்டு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் பொலிசுக்கு இலஞ்சம் கொடுப்பதில் அவர்கள் செலவிடுவதால் அவர்களின் செல்வங்கள் பாதுகாக்கப்படுவதுடன் அவர்கள் குற்ற நடவடிக்கையில் இருந்து பாதுகாக்கப்படுவர் என்பதும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

மத்திய வங்கி கூட்டமைப்பு, பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC), நாணய கட்டுப்பாட்டு அமைப்பு ஆகிய கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் என அழைக்கப்படுபவை வகிக்கும் பங்கு வங்கியாளர்களை சுதந்திரமாக இயங்கவிடுவதாகும். இக்குற்றங்கள் அன்றாட அடிப்படையில் நடத்தப்படுகின்றன என்பதை அவை நன்கு அறியும். ஆனால் வோல் ஸ்ட்ரீட்டின் செயற்பாட்டிற்கும் இலாபங்களை உருவாக்குவதற்கும் இவ்வாறான குற்றச்செயல்கள் ஒரு ஒருங்கிணைந்த பாகமாக உள்ளதால் அவை அதைப்பற்றி சிறிதும் பொருட்படுத்துவதில்லை.

HSBC மற்றும் பிற முக்கிய வங்கிகளும் 2007ல் உறுதியாகத் ஆரம்பித்து செப்டம்பர் 2008ல் லெஹ்மன் பிரதர்ஸ் சரிவில் வெடித்த நிதிய நெருக்கடியை எதிர்கொள்வதற்காக போதைக் கும்பல்களுக்கும் பிற குற்றக் கும்பல்களுக்காகவும் தங்கள் பணச்சலவை செய்வதை முடுக்கிவிட்டனர் என்பதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன.

இதே போன்ற ஒத்திவைக்கப்படும் குற்றச்சாட்டு விசாரணை உடன்படிக்கை 2010ல் Wachovia Bank அதன் போதைப் பொருள் பணச்சலவை நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்டபோது, அப்பொழுது ஐக்கிய நாடுகள் சபையின் போதை, குற்றங்கள் பிரிவு அலுவலகத்தின் தலைவரான அன்டோனியோ மரியா கொஸ்டா, குற்றக் கும்பல்களின் நிதிப்பாய்வு நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் வங்கிகளுக்கு ஒரே பணப்புழக்கமுள்ள முதலீட்டு மூலதனமாக- liquid investment capital- இருந்தது என்று குறிப்பிட்டார். வங்கிகளுக்கு இடையேயான கடன்கள் போதை வணிகத்தில் பெறப்பட்ட பணத்தில் இருந்துதான் நிதியைப் பெற்றன. என்றார் அவர்.

அமெரிக்கக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் இந்தச் செயற்பாடுகளுக்கு வோல் ஸ்ட்ரீட்டை அதன் நிதிப் பைத்தியக்கார ஊகச் செயல்களின் விளைவில் இருந்து மீட்பதற்கு அவர்கள் விரைந்து எடுத்த நடவடிக்கையில் ஒரு பகுதி என்று மறைமுக ஒப்புதலைக் கொடுத்திருக்க வேண்டும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

வங்கிக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே இத்தகைய தகாத உறவு மற்றொரு சமீபத்திய வங்கி ஊழலிலும் முழுப்பார்வையை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் Deutsche Bank இன் மூன்று முன்னாள் ஊழியர்களால் பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் SEC- கொடுக்கப்பட்ட புகாரில் அது மோசடித்தனமாக 2007 முதல் 2009 வரையிலான ஆண்டுகளில் 12 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தினை மறைத்து வைத்தது என்று எழுதியுள்ளனர்.

பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் செயலாக்கப் பிரிவுத் தலைவர் ரோபர்ட் குசாமி இது குறித்த விசாரணையில் இருந்து பின்வாங்கிக்கொண்டார் என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது; இவ்வமைப்பில் அவர் பதவியை எடுத்துக்கொள்ள முன்பு அவர் Deutsche Bank  உடைய அமெரிக்காவிற்கான உயர்சட்ட ஆலோசகராக 2004ல் இருந்து 2009 வரை இருந்தார். வேறுவிதமாகக் கூறினால், தகவல் கொடுப்போரின் கருத்துப்படி வங்கியில் இம்மோசடி நடக்கும் காலத்தில், இவரும் வங்கியில் அதைச் சட்டபூர்வமாக பாதுகாப்பதற்காகப் பொறுப்பைக் கொண்டிருந்தார்.

இதே காலத்தில்தான் Deutsche Bank உம் பிற முக்கிய வங்கிகளும் உலக நிதிய முறையை தங்கள் விற்கமுடியாத அடைமான ஆதரவுடைய பாதுகாப்புப் பத்திரங்கள் மூலம் பில்லியன் கணக்கில் நச்சுப்படுத்தி வந்தன. கடந்த ஆண்டு விசாரணைகளுக்காக செனட்டின் நிரந்தரத் துணைக்குழு Deutsche Bank  உடைய மோசடி நடவடிக்கைகள் பற்றிய நிதியச் சரிவு குறித்த ஒரு 45 பக்கம் கொண்ட பெரிய அறிக்கையை முன்வைத்தது.

வங்கியின் உத்தரவாதம் வழங்கப்பட்ட கடன் வழங்கும் CDO- பத்திரங்களை உயர்மட்ட வணிகர்  அவற்றை குப்பை, பன்றிகள் போன்றவை எனக் குறிப்பிட்டு வங்கித் தொழிற்துறையின் இந்த CDO செயற்பாடுகள் ஒரு பொன்சி திட்டம் போன்றவை என்றார் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

அத்தகைய நபர் ஒருவர் வங்கிகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருத்தப்படுவது என்பது உண்மையில், நடைமுறையில் இருக்கும் செயலாகிவிட்டது. ஒபாமா நிர்வாகத்திற்கு குசுமியை வேலைக்குப் பரிந்துரைத்தவர் முன்னாள் பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் SEC- செயலாக்கப்பிரிவின் தலைவராக இருந்த தற்போது Deutsche Bank இல் முக்கிய சட்ட ஆலோசகராக இருக்கும் ரிச்சார்ட் வோக்கர் ஆவார்.

கடந்த ஆண்டு ஜேபி மோர்கன் சேசின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டைமன் செனட்டில் தெரிவிக்கப்படாத குறைந்தப்பட்ச 5 பில்லியன் டாலர்கள் இழப்புக்களை பற்றி சாட்சியம் கொடுத்தபோது, அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தவர் பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் செயலாக்கப் பிரிவின் தலைவராக இருந்த பின் அப்பதவிக்கு உயர்ந்த ஸ்டீபன் கட்லர் ஆவார்.

அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒவ்வொரு உத்தியோகபூர்வ நிறுவனத்துடனும் தொடர்பைக் கொண்ட இத்தகைய குற்றம் மற்றும் ஊழல்களின் குப்பைக்கூடம் சீர்திருத்தப்படமுடியாததாகும். பொருளாதார வாழ்வின்மீது நிதியப் பிரபுத்துவம் கொண்டுள்ள இரும்புப்பிடி, தொழிலாள வர்க்கத்தை பரந்த அளவில் அணிதிரட்டுவதன் மூலம்தான் முற்றுப்புள்ளி வைக்கமுடியும். அத்தகைய அணிதிரள்வு வங்கியாளர்களின் நிதிகளைக் கைப்பற்றி, முக்கிய வங்கிகளையும் நிதிய நிறுவனங்களையும் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழும் பொது உடைமையின் கீழும் கொண்டுவரப்படவேண்டும்.

கட்டுரையாளர் கீழ்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கின்றார்:

A law unto themselves
[15 August 2012] 

Ponzi scheme இத்திட்டங்களை நடாத்தும் நிறுவனங்களின் இலாபத்திலிருந்து வழங்காது, முதலீடு செய்தவருக்கு அவரின் பணத்தில் அல்லது அதற்கு அடுத்து முதலீடு செய்தவரின் பணத்திலிருந்தே இலாபத்தை வழங்கும் ஒரு ஏமாற்று முதலீட்டு நடைமுறை.