World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French President Hollande calls for formation of Syrian opposition government

பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் சிரிய எதிர்ப்பாளர்கள் அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுக்கின்றார்

By Alex Lantier
28 August 2012
Back to screen version

நேற்று, பாரிசில் நடைபெற்ற பிரான்சின் தூதர்கள் ஒரு மாநாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அமெரிக்க ஆதரவுடைய சிரிய எதிர்ப்புக் கட்சிகள் அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்; அதை பிரான்ஸ் அங்கீகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க ஆதரவு பெற்ற அசாத்-எதிர்ப்பு போராளிகளுக்கு எதிராக இராசயன ஆயுதங்களை சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் பயன்படுத்த தயார் என்றால் அமெரிக்கா அந்நாட்டின்மீது படையெடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அச்சறுத்தி ஒரு வாரத்திற்குப் பின்னர் ஹாலண்டின் நடவடிக்கை வருகிறது. ஏகாதிபத்திய சக்திகள் சிரியாவில் நேரடியாக இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளும் என்னும் முதல் வெளிப்படையான அச்சுறுத்தலை இது குறிக்கிறது. இதுவரை அச்சக்திகள் தங்கள் பினாமிப் படைகளுக்கு நிதியளித்தல், ஆயுதம் வழங்குதல் ஆகியவற்றை ஏற்பாடு செய்துவந்தன; பொதுவாக சுன்னி இஸ்லாமியப் போராளிகளுக்கு; இது சௌதி, கட்டார் முடியரசுகள் மற்றும் துருக்கிய அரசாங்கம் ஆகியவற்றின் மூலம் நடத்தப்பட்டது.

ஹாலண்டின் கருத்துக்கள் பல சர்வதேசப் பிரச்சினைகளைப் பற்றி இருந்தாலும், அவற்றின் மையம் மத்திய கிழக்கு மற்றும் சிரிய நெருக்கடி பற்றித்தான் இருந்தது. இது சிரியாவில் இராணுவ பலத்தின் மூலம் ஆட்சி மாற்றம் கொண்டுவர வேண்டும் என முயற்சிக்கும் வாஷிங்டனுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பிரெஞ்சு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு எனக் கருதப்படலாம்.

ஹாலண்ட் கூறினார்: சிரிய எதிர்ப்பாளர்களை ஓர் இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு பிரான்ஸ் கேட்டுக் கொள்கிறது; இது அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும்; இது புதிய சிரியாவின் நெறியான பிரதிநிதித்துவம் ஆகும். நாம் எமது அரபுப் பங்காளிகளுடன் இந்த வழிவகையை விரைவுபடுத்த நாம் உழைப்போம்; அமைக்கப்பட்டவுடன் புதிய சிரிய இடைக்கால அரசாங்கத்தை பிரான்ஸ் அங்கீகரிக்கும்.

அமெரிக்க வெளிவிவகார செயலகத்தின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நியூலாண்ட், ஹாலண்ட் முன்மொழிந்த கருத்தை எதிரொலித்தார். சிரிய எதிர்ப்பாளர் குறித்துப் பேசுகையில், அவர் கூறினார்: எனவே ஒரு இடைக்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று உடன்பாடு கொண்டவர்கள் அனைவருக்கும் அதுதான் செய்ய வேண்டியதில் முதலாவது ஆகும். அவர்கள் முடிவெடுக்க வேண்டியது இது என்பது வெளிப்படை; பெயர்களை அறிவிக்கத் தொடங்குவது எப்பொழுது என்பதையும், முடியமா என்பதையும்.

வாஷிங்டன் இன்னும் பிற ஏகாதிபத்திய நட்புநாடுகள் ஆதரவுடன் சிரியாவில் மக்களிடையே நெறித்தன்மை இல்லாத ஒரு புதிய அரசாங்த்தைச் சுமத்துவதற்கு இது பாரிஸுக்கு ஒரு திட்டம். அசாத்-எதிர்ப்புச் சக்திகள்சுன்னி இஸ்லாமியப் போராளிகள், பல குட்டி முதலாளித்துவ இடது குழுக்கள், அல் குவேடாவுடன் பிணைந்துள்ள சர்வதேச_இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் ஆகியவை தம்மளவில் மிகவும் பிளவுற்றும் செல்வாக்கற்றும், குறிப்பாக சிரியாவின் முக்கிய நகரங்களான டமாஸ்கஸ்ஸிலும், அலெப்போவிலும் உள்ளன.

ஹாலண்டின் முன்மொழிவு மிகவும் திமிர்த்தனமானது; ஏனெனில் சிரியாவின் முன்னாள் காலனித்துவ சக்தியாக பிரான்ஸ் இருந்தது. இது அந்நாட்டை அனைத்து நாட்டுக் கழகம் (League of Nations) பிரான்ஸின் அதிகாரத்தின்கீழ்1920ல் இருத்தியதில் இருந்து இரண்டாம் உலகப் போர் முடியும் வரை ஆண்டது; அப்பொழுது ஒரு குறுகிய காலத்திற்கு நாடு பாசிச விச்சி ஆட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது.

சிரியாவில் அசாத்-எதிர்ப்பு சக்திகளின் பினாமிப் போருக்கு உதவும் ஹாலண்ட், இக்கொள்கையை ஆயுத வலிமையின்கீழ் செயல்படுத்தும் திட்டங்களைத் தான் கொண்டுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறியது: சிரியப் பகுதியில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை அமைப்பவர்களுக்கு குறிப்பாக நாம் உதவுகிறோம். துருக்கி முன்வைக்கும் இடைப்பட்ட பகுதிகள் குறித்தும் செயல்புரிகிறோம். நம் மிக நெருக்கமான பங்காளிகளுடன் இணைந்து இவற்றைச் செயல்படுத்துகிறோம். 

இத்திட்டங்களில் பிரான்ஸ், துருக்கி அல்லது அவற்றின் நட்பு நாடுகள் அசாத் எதிர்ப்பு சக்திகளுக்கு இராணுவப் பாதுகாப்பு அளிப்பதும் அடங்கியுள்ளது: அதையொட்டி அச்சக்திகள் சிரியாவின் நிலப்பகுதியில் பல பிரிவுகளை கைப்பற்றி, சிரிய அரசாங்கத்திற்கு எதிராக அதை நடத்த முடியும். இடக்கரடக்கல் சொல்லாட்சி இருந்தாலும், சிரியாவின் நிலப்பகுதி இறைமையை அச்சுறுத்தல் அல்லது இராணுவ பலத்தை பயன்படுத்துவது என்னும் ஹாலண்டின் முன்மொழிவு வெளிப்படையாக ஒரு போர்ச்செயல் ஆகும்.

பிரான்ஸின் மிக நெருக்கமான பங்காளிகள் என்ற குறிப்பின் மூலம் தன்னுடைய பிரகடனம் அமெரிக்காவுடன் விவாதிக்கப்பட்டது என்பதை ஹாலண்ட் எந்த ஐயத்திற்கும் இடமின்றி தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் அவருடைய உரையின் ஆரம்பத்தில் அவர் கூறினார்: நட்புக்கள், ஆம், அமெரிக்காவுடன் கொண்டிருக்கிறோம்; இந்த உறவு இன்று நம்பிக்கையுடன் சிறந்துள்ளது. ஜனாதிபதி ஒபாமாவுடன் முக்கிய சர்வதேசப் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடி, பொருளாதார வளர்ச்சியின் தவிர்க்க முடியாத தன்மை இவற்றின் பரிமாணத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நான் பெற்றேன்.

ஒபாமாவின் சிரியாவில் இராணுவ தலையீட்டு அச்சுறுத்தலையும் ஹாலண்ட் எதிரொலித்தார்: "நாம், ஆட்சி இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதை தடுக்க எங்கள் பங்காளிகளுடன் இணைந்து மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும்". இது சர்வதேச சமூகத்தின் நேரடி தலையீட்டுக்கு ஒரு நியாயமான காரணமாக காட்டப்படும்.

இராசயன ஆயுதங்கள் பயன்பாடு என்னும் அச்சறுத்தல் எழுப்பப்பட்டுள்ளது, ஹாலண்ட் சிரிய மக்களுடைய மனித உரிமைகள் குறித்துக் காட்டும் அக்கறையைப்போல் இழிவுத்தன்மையில் சற்றும் குறைந்ததல்ல; அம்மக்கள் வாடிக்கையாக குண்டுத்தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள் என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள், நேட்டோ சக்திகளாலும் மத்திய கிழக்கு நட்பு நாடுகளாலும் ஆயுதங்களை ஏராளமாகப் பெற்றுத் தாக்கப்படுவதை சந்திக்கின்றனர். அமெரிக்க பினாமிப் போர் ஓராண்டிற்கும் மேல் நடக்கிறது என்றாலும், அசாத் அரசாங்கம் இராசயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதில்லை. மேலும் சிரிய மக்களுக்கு எதிராக அவை பயன்படுத்தப்படமாட்டா என்றும் அது உறுதியளித்துள்ளது.

அரசியல் நெறி தன்மையில் இருந்து மிகத்தொலைவில் இருக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் செயல்கள், அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் செயல்கள் அடிப்படையில் குற்றம் சார்ந்தவை ஆகும். இவை ஒரு முன்னாள் காலனித்துவ நாட்டின்மீது ஒரு பிரதிநிதித்துவம் இல்லாத, சட்டமற்ற அரசாங்கத்தை சுமத்த முயல்கின்றன; அந்த அரசாங்கம் உலக நிதிய மூலதனத்துடனான பிணைப்புக்களையும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் பலத்திலும்தான் தங்கியிருக்கும்.

இத்தகைய ஆட்சியின் வர்க்கத் தன்மை பற்றிய ஒரு குறிப்பு டந்த ஆண்டு லிபியாவில் நேட்டோ போர்முடிவில் இருத்தப்பட்ட லிபிய ஆட்சியின் சான்றுதான்; அந்த பினாமிப்போரும் இப்பொழுது சிரியாவில் நடத்தப்படும்போர் போன்றே இருந்தது.

ஜூலை 7ம் திகதி தேர்தல்கள் நடந்தபோதிலும்கூட நாடு இன்னமும் போட்டியிடும் பிராந்திய, பழங்குடி, இஸ்லாமிய போராளிகள் தோற்றுவிக்கும் வன்முறையால் சேதமுற்றுள்ளது; கேர்னல் முயம்மர் கடாபியின் ஆட்சிக்கு எதிரான போரில் இஸ்லாமியப் போராளிகள் நேட்டோவின் பினாமிகளாக பணியாற்றினர். லிபியாவின் உள்துறை மந்திரி பவ்ஜி அப்தெல் அல் சமீபத்தில் சுபி புனிதத்தலங்களை மாசுபடுத்தியதிலும் மற்றும் சுன்னி இஸ்லாமிய அதி பழமைவாத நூலகங்களை எரித்ததிலும் உடந்தை என்பதை ஒட்டி  இராஜிநாமா செய்ய நேர்ந்தது.

லிபியாவில் தூதரகப் பணிகளை மீண்டும் தொடங்கிய நிலையில், அமெரிக்க வெளியுறவு செயலகம் அமெரிக்கக் குடிமக்களுக்கு அங்கு விஜயம் செய்வது மிகவும் ஆபத்தானது என்ற ஆலோசனையைத் தெரிவித்துள்ளது. அமெரிக்கக் குடிமக்களை மிக அடிப்படைத் தேவை இருந்தால்தான் லிபியாவுக்குச் செல்லலாம் என்று வெளியுறவு செயலகம் எச்சரிக்கிறது. வன்முறைக் குற்ற நிகழ்வுகள், குறிப்பாக கார்களைக் கடத்துதல், கொள்ளையடித்தல் ஆகியவை தீவிர பிரச்சினயாகிவிட்டன. இதைத்தவிர, அரசியல் வன்முறையும் படுகொலைகள், வாகனக் குண்டுகளை போடுதல் என்பவை பெங்காசி மற்றும் திரிப்போலியில் பெருகிவிட்டன.

சர்வதேச சட்டம் நிலைப்பாட்டில் இருந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் கொடுக்கும்வரை ஒபாமாவும் ஹாலண்டும் கருத்திற்கொண்டுள்ள சிரியா மீதான இராணுவ நடவடிக்கைகள் சட்டவிரோதமானது. ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை இராணுவ நடவடிக்கைகளை தொடக்கியிருக்கக்கூடிய அனைத்து சிரியா பற்றிய பாதுகாப்புக் குழுத் தீர்மானங்களையும் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தி ஏற்கவில்லை என்பதால், ஹாலண்ட் எப்படி அசாத் ஆட்சிக்கு எதிரான ஆக்கிரமிப்பிற்கு சட்டபூர்வ அனுமதியைப் பெறமுடியும் என்பது முற்றிலும் தெளிவாக இல்லை.

புஷ் நிர்வாகம் 2003ல் ஈராக்மீது அமெரிக்கச் சட்டவிரோதப் படையெடுப்பின்போது செய்ததைப் போல், இப்பிரச்சினை பற்றி ஹாலண்டே மறைவாகக் குறிக்கும் வகையில் பிரான்ஸ் பாதுகாப்புக் குழு அனுமதி என்னும் தேவையை தவிர்க்க முற்படும் என உட்குறிப்பாகத் தெரிவிக்கிறார்.

அவர் கூறினார்: இது அவசியம்அத்தோடு அதுதான் என்று எழுந்துள்ள வினாஅதாவது பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் தங்கள் பொறுப்பிற்கேற்றவாறு நடந்து கொண்டு, பாதுகாப்புக் குழு தனது முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டும். ஒரு முறை தடைக்கு உட்பட்டால், அதைச் சுற்றிச் செயல்பட வேண்டும், இல்லாவிடின் அது சக்தியற்றதாகப்போய்விடும்.

 “பாதுகாப்புக் குழுவில் சீர்திருத்தம் தேவை, புதிய நிரந்தர, நிரந்தரமற்ற உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியதற்கு ரஷ்யாவையும் சீனாவையும் ஹாலண்ட் விமர்சித்திருந்தார்.

சர்வதேச அரசியலில் உள்ள சட்டபூர்வமற்ற நிலையோடு, ஹாலண்ட்டின் கருத்துக்கள் ஐரோப்பாவிற்குள் ஜனநாயகத்தின் ஆழ்ந்த இழிசரிவு மற்றும் நெருக்கடி ஆகியவற்றைத்தான் சுட்டிக்காட்டுகிறது. போர் மற்றும் சமூகநலச் செலவுகளில் சிக்கனம் என்று அவருக்கு முன்னால் பதவியில் இருந்த நிக்கோலோ சார்க்கோசியுடைய கொள்கைகளுக்கு எதிரான மக்கள் விரோதப் போக்கை ஒட்டித் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், ஹாலண்ட்இப்பொழுது இன்னும் பரந்த போர்களை நடத்த, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளி என்னும் முறையில், முயல்கிறார்.