WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
இலங்கை: கொழும்பு பொதுக்கூட்டத்தில் அமெரிக்க சோசலிச சமத்துவக்
கட்சி
ஜனாதிபதி வேட்பாளர் உரையாற்றினார்
By our
correspondents
27 August 2012
use this version to print | Send
feedback
சோசலிச
சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட்டின் உரையைக்
கேட்பதற்காக நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் 200
க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்,
இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களும் கலந்து கொண்டனர். வைட் சர்வதேச
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவர் சோசலிச
சமத்துவ கட்சியும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பும் 28ம் திகதி
கேகாலையிலும் 30ம் திகதி காலியிலும் ஒழுங்கு செய்துள்ள கூட்டங்களிலும்
உரையாற்றுவார்.
கொழும்பு கூட்டத்தில் வடக்கில் யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து பிரதிநிதிகளும்,
மத்திய மலையக பகுதியில் இருந்து தோட்ட தொழிலாளர்களும்,
மற்றும் தீவின் பிற பகுதிகளில் இருந்து மாணவர்களும் இளைஞர்களும் பங்குபற்றினர்.
தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினியின்
ஒரு வீடியோ ஊடகவியலாளர் நிகழ்வை பதிவு செய்தார்.
விஜே டயஸ்
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சோ.ச.க. பொது செயலாளர் விஜே டயஸ்,
வைட்டை அறிமுகப்படுத்தியதோடு அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில்
சோ.ச.க. அதன் ஜனாதிபதி வேட்பாளரை அனுப்ப முடிவு செய்தது ஏன் என்பதையும்
விளக்கினார். "அமெரிக்க சோ.ச.க., மாற்று சோசலிச கொள்கைகளுக்காகப் போராடவும் அந்த
திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை
வழிநடத்தவும் ஜனாதிபதி தேர்தலில் தலையீடு செய்கின்றது,"
என்று அவர் கூறினார்.
சர்வதேச
நாணய நிதியம் கட்டளையிட்டுள்ளவாறு இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் தொழில் மற்றும்
வாழ்க்கை தரத்தின் மீது இராஜபக்ஷ அரசாங்கம் தொடுக்கும் தாக்குதல்கள், சர்வதேச
ரீதியிலான மேலோங்குதல்களுடன் வர்க்க போராட்டத்தின் எழுச்சியை ஏற்படுத்தும் என டயஸ்
கூறினார். "இந்த சூழ்நிலையில்,
உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் முன்னோக்குகள் சர்வதேச தொழிலாள
வர்க்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தீர்க்கமானதாக இருக்கும்,"
என்று அவர் கூறினார்.
ஜெரி
வைட்
வைட்டின் உரை அவ்விடத்திலேயே சிங்களம் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தனது
பயணம், சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அமெரிக்கவிலும் அனைத்துலகிலும் உள்ள
தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காகப் போராடும் சோ.ச.க.யின் ஜனாதிபதி தேர்தல்
பிரச்சாரத்தின்
ஒரு
முக்கிய பகுதியாகும் என்று வலியுறுத்தி வைட் உரையை ஆரம்பித்தார்.
சர்வதேச
மற்றும் அமெரிக்க அரசியல் அபிவிருத்திகள் குறித்து வைட் தெரிவித்ததாவது: "புஷ்
நிர்வாகம் ஈராக்கிற்கு எதிராக இராணுவ தாக்குதல்களை முன்னெடுத்து கிட்டத்தட்ட பத்து
வருடங்களின் பின்னர், ஜனாதிபதி ஒபாமா சிரியா மீது அமெரிக்க படையெடுக்க
அச்சுறுத்துகின்ற நிலையில்,
அதே சிடுமூஞ்சித்தனமான கூற்றுக்களை மீண்டும் தெரிவிக்கின்றார். இத்தகைய போர் ஈரான்
மீது விரிவாக்கப்படவுள்ளதோடு அத்துடன் அது அணு ஆயுதங்களைக் கொண்ட ரஷ்யா மற்றும்
சீனாவுடனான ஒரு மோதலுக்கான ஆபத்தைக் கொண்டுள்ளது."
வாஷிங்டனானது சீனா மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளான
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே பிராந்திய எல்லைப் பிரச்சினைகளைத்
தூண்டிவிடுகின்றது என வைட் விளக்கினார். "இராணுவ ரீதியில் சீனாவை சுற்றிவளைக்கும்
அமெரிக்காவின் பூகோள-அரசியல் திட்டங்களுக்குள் இலங்கையின் 21 மில்லியன் மக்களும்
இழுத்துப்போடப்பட்டு வருகின்றனர்."
"ஆசியாவின் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில், ஒரு
அமெரிக்க இராணுவவாதத்துக்கும் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தில்
மிகவும் இன்றியமையாத பங்காளி அமெரிக்க தொழிலாள வர்க்கமே ஆகும்,"
என வைட் கூறினார்.
லெஹ்மன்
பிரதர்ஸின் சரிவை தொடர்ந்து 2008ல் அமெரிக்காவில் தொடங்கிய நிதிப் பொறிவு,
உலகம் முழுவதும் பரவியது,
என வைட் விளக்கினார்.
ஐரோப்பிய முதலாளித்துவம் இந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எப்படி
சமாளிப்பது என்பது பற்றி உடன்பாடுகொண்டிருக்காததோடு,
பிரேசில்,
சீனா,
இந்தியா மற்றும் இலங்கை உட்பட வளரும் நாடுகள்
ஏற்றுமதிக்கான கேள்வியில் ஒரு தீவிர சரிவையும், சம்பளத்தைக் குறைக்க வேண்டிய
அழுத்தம் புதுப்பிக்கப்படுவதையும் மற்றும் வேலையின்மை வளர்ச்சியடைவதையும் கண்டன, என
அவர் சுட்டிக்காட்டினார்.
"அமெரிக்காவில்,
நவம்பர்
தேர்தலில் ஜனாதிபதி ஒபாமா வென்றாலும் சரி அல்லது அவரது குடியரசு போட்டியாளர் மிட்
ரொம்னி வென்றாலும் சரி,
பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்குகள் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளை வெட்டி
அகற்றுவதில் உறுதியாக உள்ளன,"
என வைட் விளக்கினார்.
இந்த
வளர்ச்சிகள், "அமெரிக்க தொழிலாளர்களின் அரசியல் நனவில் ஆழ்ந்த மாற்றத்துக்கு
வழிவகுக்கின்றன," என வைட் தெரிவித்தார். இன மற்றும் அடையாள அரசியலின் அடிப்படையில்,
பழைய தொழிற்சங்கங்களுடனும் ஒபாமாவுடனும் தொழிலாள வர்க்கத்தைக் கட்டிப் போட
முயற்சிக்கும் போலி இடது அமைப்புக்களுக்கு எதிராக சோ.ச.க. தனது போராட்டத்தை நடத்தி
வருகின்றது, என வைட் தொடர்ந்தார்.
கூட்டத்தின்
ஒரு
பகுதியினர்
வைட்
வலியுறுத்தியதாவது: "பல தசாப்தங்களாக, எங்கள் இயக்கமான
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு,
அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு புரட்சிகர முன்னோக்கைப் பாதுகாக்க போராடி
வருகின்றது. இப்போது நாம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின், குறிப்பாக அமெரிக்க
தொழிலாள வர்க்கத்தின் மிக பெரும் வர்க்க போராட்டங்கள் வெடிக்கும் சூழ்நிலையை
நெருங்கியுள்ளோம்.
"ட்ரொட்ஸ்கி புரட்சிகர போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் விளக்கியது போல்:
“ஐரோப்பா
மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் பணி, நன்கு சிந்தித்து
உருவாக்கப்பட்ட முதலாளித்துவத்தின் எதிர்ப் புரட்சிகர மூலோபாயத்தை எதிர்த்துத்
தாக்குவதை உள்ளடக்கியதாகும். அதன் சொந்த புரட்சிகர மூலோபாயம் கடைசிவரை அதே போல்
நன்கு சிந்தித்து ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.”
இத்தகைய
புரட்சிகர தலைமைக்கு அமெரிக்காவிலும் அனைத்துலகிலும் சோ.ச.க.யை கட்டியெழுப்புவது
அவசியமாகும் என சுட்டிக்காட்டி வைட் தனது உரையை முடித்தார்.
வைட்டின் உரையைத் தொடர்ந்து நீண்ட கேள்வி, பதில் நிகழ்வு தொடர்ந்தது.
பார்வையாளர்கள், விஸ்கான்சின் எதிர்ப்பு போராட்டத்தின் தலைமைத்துவம் பற்றி,
2011ல் வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் பற்றி,
அமெரிக்காவின் சுதந்திரப் போர் மற்றும் உள்நாட்டு போரின் புரட்சிகர தன்மை பற்றியும்,
மற்றும் முதலாளித்துவ அமைப்பை மாற்றியமைக்கவும் ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்
புரட்சிகர மூலோபாயத்தை எதிர்கொள்ள எப்படி சோ.ச.க. முயற்சிக்கின்றது என்பது
பற்றியும் கேள்விகளை எழுப்பினர். இந்த கேள்விகளுக்கும் ஏனைய கேள்விகளுக்கும் வைட்
நீண்ட பதில்களை வழங்கினார்.
மேலும்,
நவம்பர் 6 நடக்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சோ.ச.க. வேட்பாளரை
வாக்குச்சீட்டில் இருத்த வேண்டும் என விஸ்கான்சின் அரசாங்க பொறுப்பு குழுவுக்கு
கோரிக்கை விடுக்கும் தீர்மானம் ஒன்று கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் கூறியதாவது: "அமெரிக்காவில் நவம்பரில் நடக்கவுள்ள தேர்தலில் சோசலிச
சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜெரி வைட் மற்றும் துணை ஜனாதிபதி
வேட்பாளர் பிளிஸ் ஷெரரும் விஸ்கான்சின் வாக்குச் சீட்டில் இடம்பெறுவதற்கு அரச
அதிகாரிகள் இடும் சகல தடங்கல்களும் அகற்றப்பட வேண்டும் என இந்த கூட்டம்
கோருகின்றது.”
வைட்
உரையாற்றும் பொதுக் கூட்டங்கள் மற்றும் இலங்கை சோ.ச.க. போட்டியிடும் எதிர்வரும்
மாகாண சபை தேர்தல் பிரச்சாரங்களை மேம்படுத்த உதவுவதற்கு 14,000 ரூபாய் நிதி
வழங்கப்பட்டது. இலங்கை சோசலிச சமத்துவ கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச
அடித்தளங்கள் உட்பட ரூபா 10,000 க்கும் மேற்பட்ட பல இலக்கியங்கள் விற்பனையாகின.
“சர்வதேசிய
கீதத்துடன்”
கூட்டம் முடிவுக்கு வந்தது. |