World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

German court sanction for domestic deployment of the military

உள்நாட்டு நடவடிக்கைகளில் இராணுவம் தலையிட ஜேர்மன் நீதிமன்றம் அனுமதிக்கிறது

Peter Schwarz
23 August 2012
Back to screen version

ஜேர்மனியில் அரசியலமைப்பு நீதிமன்றம் இராணுவம் உள்நாட்டு இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அனுமதித்துள்ளது. இது கூட்டாட்சிக் குடியரசில் 1968 மே மாதம் இயற்றப்பட்ட அவசரகால சட்டங்களைப் போல் ஒரு திருப்பு முனையைக் குறிக்கிறது.

அந்த நேரத்தில் ஜேர்மனிய பாராளுமன்றம் அரசியலமைப்பின் 28 ம் விதிகளை திருத்தி போர் ஏற்பட்டால், அல்லது உள்நாட்டு நெருக்கடி ஏற்பட்டால் அல்லது இயற்கைப்பேரழிவு ஏற்பட்டால் அரசாங்கம் அடிப்படை ஜனநாயக உரிமைகளைத் தற்காலிகமாக செயலிழக்கச்செய்யலாம் அல்லது மட்டுப்படுத்தி வைக்கலாம் என இயற்றியது. அவசரகாலச் சட்டங்கள் மத்திய அல்லது ஒரு மாநிலத்தின் சுதந்திர ஜனநாயக ஒழுங்குமுறைக்கு தவிர்க்க முடியாத ஆபத்து வந்தால்தான் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதமேந்திய எழுச்சி ஏற்பட்டால் அதை எதிர்த்துபோராட ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) உள்நாட்டில் ஈடுபடுத்தப்படலாம் என்று அனுமதித்தது.

அரசியலமைப்பு நீதிமன்றத்தின் கடந்த வாரம் வெளியிடப்பட்ட தீர்ப்பு ஒருபடி மேலே செல்லுகிறது. இராணுவம் பயன்படுத்துவதற்காக நுழையக்கூடிய வகையை இது இன்னும் இலகுவாக்கி, பொலிஸாருக்கு மேலதிக உதவியளிக்க அனுமதிப்பது மட்டும் இல்லாமல், போர் ஜெட் விமானங்கள், டாங்கிகளும் பயன்படுத்தப்படலாம் என அனுமதிக்கிறது.

இத்தீர்ப்பின் அடிப்படையில், ஜேர்மனிக்குள் பேரழிவுகரமான பரிமாணங்களுடனான சேதம் ஏற்படக்கூடும் என்ற அச்சுறுத்தல் இருந்தால் இராணுவம் பயன்படுத்தப்படலாம். இந்த அளவுகோல் மிகவும் குழப்பமானதும், விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளப்படக்கூடியதுமாகும். எந்த வகை சமூக அல்லது அரசியல் எதிர்ப்புக்கு எதிராகவும் செயல்படுத்தப்படலாம். நிறைவேற்று அதிகாரப்பிரிவின் கண்டுபிடிப்புத் தன்மை மட்டுப்படுத்தப்படவில்லை. இராணுவம் மக்கள் மீது இரத்தம்தோய்ந்த தாக்குதலை நடத்த கதவு திறந்துவிடப்பட்டுள்ளது. இவ்வாறுதான் முன்னர் ஜேர்மன் குடியரசிலும் பின்னர் அதைத்தொடர்ந்த வைமார் குடியரசுக்காலத்திலும் நடைபெற்றது.

1968ல் அவசரகாலச் சட்டங்கள் இயற்றப்பட்டபோது, ஐரோப்பாவும் அமெரிக்காவும் சமூகக் கொந்தளிப்பில் இருந்தன. மே 30ம்திகதி, ஜேர்மனிய பாராளுமன்றத்தில் வாக்களிப்பு நடத்தப்பட்ட அன்று, அண்டை பிரான்ஸ் நாடு புரட்சியின் விளிம்பில் நின்றது. பத்து மில்லியன் மக்கள் இருவார காலமாக பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். அடுத்தநாள் பிரெஞ்சு ஜனாதிபதி டு கோல் ஜேர்மனியின் பாடன் பாடன் நகருக்கு தன் இராணுவத் தலைமையுடன் ஆலோசனை நடத்தச் சென்றிருந்தார்.

ஜேர்மனியில் மாணவர் கிளர்ச்சி எழுச்சியடைந்திருந்ததுடன், தொழிற்சாலைகளில் அமைதியின்மை படர்ந்து நின்றது. மூன்று வாரங்களுக்கு முன்புதான் மாணவர் தலைவர் ரூடி டொய்ச்க ஒரு வலதுசாரி கொலைகாரனாக ஆகியிருக்க வேண்டியவனால் மோசமான முறையில் காயமுற்றிருந்தார். அவசரகாலச் சட்டங்கள் எழுச்சி பெற்ற இளைஞர்கள், தொழிலாளர்களுக்கு எதிராக இயக்கப்பெற்றன என்பது வெளிப்படை.

ஆனால் அவை முழுமையாகச் செயற்பாட்டிற்கு வரவில்லை. ஏனெனில் ஆளும் வர்க்கம் நிலைமையை மற்ற வழிவகைகளில் கட்டுப்படுத்த முடிந்தது. பிரான்ஸில் தளபதி டு கோல் பொது வேலைநிறுத்தத்தை  கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தொழிற்சங்க கூட்டமைப்பின் (CGT) உதவியினால் தனிமைப்பபடுத்தி நெரித்தார். ஜேர்மனியில் சமூக ஜனநாயக வில்லி பிராண்ட் 1969ல் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தடியும் இனிப்பும் கொள்கையை பயன்படுத்தினார். அதாவது இளைஞர் எழுச்சியை நசுக்க சமூகநலச் சலுகைகளைக் கொடுத்து, அதே நேரத்தில் முக்கிய பதவிகளில் இடதுசாரிகள் இருப்பதை  தடைக்குட்படுத்தினார்.

இப்பொழுது நிகழ்வுகள் வித்தியாசமாக உள்ளன.

சமூகப் பிளவு 1968ல் இருந்ததைவிட மிக ஆழ்ந்துள்ளது. அப்பொழுது மேற்கு ஜேர்மனியில் சராசரியாக 323,000 மக்கள் வேலையற்றிருந்தனர், பொருளாதாரம் 7.2%த்தில் வளர்ந்து வந்தது. இன்று 2,876,000 மக்கள் மறுஐக்கியப்பட்டுவிட்ட நாட்டில் வேலையின்றி உள்ளனர், பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளது. உத்தியோகபூர்வ வேலையின்மை எண்ணிக்கை மில்லியன்கள் கணக்கில் தொழிலாளர் பிரிவில் இருந்து கைவிடப்பட்ட எண்ணிக்கையை அல்லது சமூகத்தில் தப்பிப் பிழைப்பதற்கு தற்காலிக தொழிலாளர்களாக இருப்போரை சேர்ப்பதில்லை.

1968ஐப் போலன்றி, சர்வதேச பொருளாதார நிலைமை சமூக அழுத்தங்களைக் குறைப்பதற்குச் சலுகைகள் எதையும் கொடுக்க அனுமதிக்கவில்லை. சமூக முரண்பாடுகள் முறிந்துவிடும் நிலையில் உள்ளன. ஆனால் தொழிலாளர்களின் சீற்றம் இருக்கும் அரசியல் நடைமுறைக்குள் வெளிப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் பரந்த மக்களுக்கு எவ்வித உண்மையான அரசியல் பிரதிநிதித்துவமும் இல்லை.

ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்தை ஒரு உதாரணமாக்கிக் கொண்டிருப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை பல தசாப்தங்கள் பின்னோக்கி தள்ளுகிறது. அனைத்து ஐரோப்பாவிற்குமான அடையாள அளவுகோலை கிரேக்கம் கொடுக்கின்றது. இதேபோன்ற சிக்கன நடவடிக்கைகள் இப்பொழுது போர்த்துக்கல், அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஜேர்மனியும் இதை பின்பற்றத் தயாராகவுள்ளது. பெரும் ஏற்றம் கொண்ட ஏற்றுமதித்துறை இருந்தபோதிலும்கூட, நாட்டில் மிகப் பெரிய குறைவூதியத் துறை வளர்ந்துவிட்டது. மேலும் ஏற்றமதிகளின்மீது ஜேர்மனியின் நம்பகத்தன்மை அதன் பொருளாதாரத்திற்கே பெரும் ஊறு விளைவிக்கலாம். உலக மந்தநிலை தவிர்க்க முடியாமல் வருமானங்கள் மற்றும் வேலைகள் மீது இன்னும் தாக்குதல்களை கொண்டுவரும்.

இந்தப் பின்னணியில்தான், அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு காணப்பட வேண்டும். இது வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கான ஒரு தயாரிப்பு ஆகும். 1968 அவசரகாலச் சட்டங்களைப் போலவே, இது எழுச்சி பெறும் தொழிலாளர்கள், இளைஞர்களுக்கு எதிராக இயக்கப்படுகிறது.

எனவேதான் அரசியலமைப்பை திருத்தும் முயற்சி அமைதியாக, பொது விவாதம் ஏதும் இன்றி, வெளிப்படையான உடனடிக்காரணம் ஏதும் இல்லாமல் செயல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு நீதிமன்றம் பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளிலும் மூன்றில் இரு பங்குப் பெரும்பான்மையுடன் எடுக்கப்பட வேண்டிய முடிவை எடுத்துள்ளது. ஆயினும்கூட அரசியல் கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புக்கள் ஏதும் இல்லை.

பழைமைவாத கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் மற்றும் கிறிஸ்துவ சமூக ஒன்றியம் ஆகியவை எதிர்பார்த்தபடி தீர்ப்பை வரவேற்றுள்ளன. தாராளவாத ஜனநாயகக் கட்சி, பசுமைக்கட்சி மற்றும் பிராட் கட்சி ஆகியவை இதை ஏற்று அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து, அதன் பொருளையும் சிதைத்துள்ளன. இடது கட்சி தொலை விளைவுடைய தாக்கங்கள் எதையும் குறிப்பிடாமல் இலேசான எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளது.

நாஜி ஆட்சியின் குற்றங்களுக்குப்பின் ஜேர்மன் அரசாங்கம் புனைந்துள்ள ஜனநாயக போலித்திரை கணிசமான விரிசல்களைக் காட்டுகிறது. இது எப்பொழுதுமே குறிப்பிடத்தக்க வகையில் உறுதியாக இருந்தது இல்லை. பிஸ்மார்க்கின் கீழ் குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து ஜேர்மனிய நாட்டை உருவமைத்த மேலிருந்து சர்வாதிகார ஆட்சி என்ற பாரம்பரியம் பலமுறையும் மேற்பரப்பிற்கு வந்துள்ளது.

தலைமை நீதிமன்றம் அதன் முடிவை எடுத்த வழிவகைகூட ஆழ்ந்த ஜனநாயக விரோதப் போக்கைத்தான் கொண்டிருந்தது.

பொதுவாக அரசியலமைப்பு புனிதம் எனக் கருதப்படுகிறது. சில பந்திகள் நிலையான பிரிவில் உள்ளன. பாராளுமன்றத்தில் மூன்றில் இரு பெரும்பான்மை இருந்தாலும் அவை மாற்றப்பட முடியாது. அரசியலமைப்பின் அத்தகைய விதியை, முதலாளித்துவ சொத்துடைமை உத்தரவாதம் செய்யப்படுவதை கேள்விக்குட்படுத்தும் எவரும் அரசியலமைப்பின் விரோதி எனக் கருதப்பட்டு உள்நாட்டு உளவுத்துறைப் பிரிவின் கண்காணிப்பிற்கு இலக்காவர். இத்துறை தன்னை இழிந்த முறையில் அரசியலமைப்பின் பாதுகாப்பிற்கான மத்திய அலுவலகம் என அழைத்துக் கொள்கிறது.

ஆனால் ஆளும் வர்க்கம் அரசியலமைப்பின் ஒரு விதி பற்றி அதிருப்தி அடைந்தால், உள்நாட்டில் இராணுவச் செயல்கள் கூடாது என்பதைப்போல், இது பாராளுமன்ற நடைமுறையைத் தூக்கி எறிகிறது. இவ்வகையில் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு இதே நீதிமன்றம் ஜூலை 12, 1994ல் ஜேர்மனிய இராணுவம் சர்வதேச அரங்கில் ஈடுபட வழிவகுத்ததைத்தான் நினைவுபடுத்துகிறது.

இன்றிருப்பதுபோல், 1994 தீர்ப்பும் தன் எல்லைக்கு அப்பாற்பட்ட இந்த இராணுவ தலையீடும் அசாதாரண சூழலில்தான், கடைசிப் பட்சமாக செயல்படுத்த வேண்டும் எனக் கூறி அதில் பலவித தடுப்புக்களையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இன்று அவை அனைத்தும் மறக்கப்பட்டு விட்டன. சர்வதேச போர் அரங்குகளில் இராணுவம் ஈடுபடுத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

அதே நேரத்தில் ஜேர்மனிய இராணுவத்தின் தன்மையும் மாற்றப்பட்டுள்ளது. ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே சீருடை அணியும் கட்டாய இராணுவச்சேவை செய்யும் மக்களை இது கொண்டிருக்கவில்லை. இதில் ஆப்கானிஸ்தானிலும் பிற இடங்களிலும் கொல்லுவதற்கு பயிற்சிபெற்ற தொழில்நேர்த்தி உடைய படையினர்கள்தான் உள்ளனர்.

ஜேர்மனிக்குள் இராணுவச் செயற்பாடுகள் சட்டமாக்கப்படுவது ஒரு சர்வதேச போக்கின் பாகம்தான். செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களில் இருந்து அமெரிக்கா ஒரு பரந்த பாதுகாப்பு வலைப்பின்னலை கட்டமைத்துள்ளது. இது முழு மக்கள்பிரிவின் மீதும் உளவுவேலை பார்க்கிறது.

ஐரோப்பாவில் ஜனநாயக உரிமைகள் என்பது யூரோ நெருக்கடி காலப் போக்கில் அகற்றப்பட்டுவிட்டன. மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை அழிக்கும் சிக்கன நடவடிக்கைத் திட்டங்கள் வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், அதன் தேசிய அரசாங்கங்களில் உள்ள அவற்றின் எடுபிடிகளுடைய ஆணைகளின்படி, மக்களிடம் எந்த ஆலோசனையும் கேட்கப்படாமல் செயல்படுத்தப்படுகின்றன. குடியேறும் மக்கள் மற்றும் ரோமாக்கள் போன்ற சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் பெரும்பாலும் கடந்தகாலத்திற்கு உரியவை எனப் போய்விட்டன.

மத்திய அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதென்பது, அரசு மற்றும் அதன் நிறுவனங்களுக்கு கோரிக்கை வைப்பதை அடித்தளமாகக் கொள்ளமுடியாது என்பதைத் தெளிவாக்கிவிட்டது. இதற்கு நெருக்கடிக்கு ஆதாராமாக இருக்கும் முதலாளித்துவ முறையை ஒழிக்கும் இலக்கு கொண்ட ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அணிதிரள்வு அவசியமாகிறது.