World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Colombo press conference announces US SEP presidential candidate’s visit to Sri Lanka

கொழும்பு செய்தியாளர் மாநாட்டில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் இலங்கை விஜயம் பற்றி அறிவிக்கப்பட்டது

By our correspondents
23 August 2012
Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட் இலங்கைக்கு விஜயம் செய்வதைப் பற்றி அறிவிக்க நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தியது. வைட் முறையே கொழும்பு, கேகாலை மற்றும் காலியில் ஆகஸ்ட் 26, 28 மற்றும் 30ம் திகதிகளில் பொதுக் கூட்டங்களில் உரையாற்றுவார்.

சோசலிச சமத்துவ கட்சி வைட்டின் வருகையின் முக்கியத்துவம் பற்றிய ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து, இந்த கூட்டங்களுக்காக தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது. நிப்போன் ஹோட்டல் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம், இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். தமிழ் தினசரியான தினக்குரல், மற்றும் சிங்களம் வாரப் பத்திரிகையான ராவயவும் பத்திரிகையாளர்களை அனுப்பியிருந்ததோடு, மற்றொரு தமிழ் தினசரியான சுடர் ஒளி ஒரு கட்டுரை ஒன்றுக்காக தகவல் கோரியது.

செய்தியாளர் மாநாட்டுக்கு தலைமை வகித்த சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ் தெரிவித்ததாவது: "அமெரிக்க சோ.ச.க.யின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் நோக்கம், ஒரு அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், முதலாளித்துவத்திற்கு எதிராக உலக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காகப் போராடுவதே. வைட் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவே இலங்கைக்கு விஜயம் செய்கின்றார்." அமெரிக்க சோ.ச.க., உலக ட்ரொட்ஸ்கிச கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI), சகோதரக் கட்சியாகும் என அவர் விளக்கினார்.

சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், வைட்டின் வருகையின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தினார். வைட் உலக பயணத்தின் ஒரு பகுதியாக பிரிட்டன் மற்றும் ஜேர்மனியிலும் கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். 52 வயதான வைட், மூன்று தசாப்தங்களாக சோசலிச முன்னோக்குக்காகப் போராடுபவராவார், மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் பிளிஸ் ஷெர்ரெரும் சோசலிச முன்நோக்கிற்காக தசாப்த காலமாக போராடுபவராவார் என டயஸ் மேலும் கூறினார்.

"அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சர்வதேச ரீதியில் அரசியல் தாக்கங்களை கொண்டது. அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கைகள் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன, "என டயஸ் கூறினார். "இந்த சூழ்நிலையில், அமெரிக்கவிலும் உலகளவிலும் அந்த கொள்கைகளை தோற்கடிப்பது ஒரு சர்வதேச பணியாக உள்ளது... அதனாலேயே எமது இயக்கத்தின் உலக சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜெரி வைட், அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் முன் உரையாற்ற முடிவெடுத்தார்."

சோசலிசத்துக்காகப் போராட உலகத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் 1938 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நான்காம் அகிலத்தின் மரபுரிமையை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவே தொடர்ச்சியாகக் கொண்டுள்ளது என்றும், சோசலிசப் போராட்டத்துக்கான வரலாற்றுப் பணியை தொழிலாள வர்க்கம் பொறுப்பெடுப்பதை தடுப்பதற்காக ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் பல்வேறு மத்தியவாத தலைமைகள் எடுத்த முயற்சிகளுக்கு எதிராகவே நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது என்றும் சோ.ச.க. பொது செயலாளர் வலியுறுத்தினார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான படையெடுப்பில் இருந்து, லிபியாவில் ஆட்சி மாற்றம் மற்றும் சிரியாவிலும் ஈரானிலும் அத்தகைய தலையீடுகளுக்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் வரை, அமெரிக்க அரசாங்கம் இராணுவ ஆக்கிரமிப்பை நாடுவது அதிகரித்து வருவது பற்றி டயஸ் சுட்டிக்காட்டினார். அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் உட்பட உலக தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச இயக்கத்தினால் மட்டுமே போர் அச்சுறுத்தலுக்கு பதிலிறுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

"அந்த சூழ்நிலையில், அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சர்வதேச சோசலிசத்துக்காகப் போராடும் சோ.ச.க., ஜெரி வைட்டின் சுற்றுப்பயணத்தின் மூலம், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மற்றும் அதன் சர்வதேச பகுதிகளுடன் இணைந்து, உலக தொழிலாள வர்க்கத்துக்கு உலக சோசலிச வேலைத்திட்டத்துக்கான போராட்டத்தை கொண்டு செல்கின்றது" என டயஸ் கூறினார்.

வைட் உரையாற்றவுள்ள கூட்டங்களின் அரசியல் முக்கியத்துவம் பற்றி மேலும் விவரித்த டயஸ், சீனாவின் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை எதிர்ப்பதற்காக அமெரிக்கா ஆசியாவை நோக்கி ஆத்திரமூட்டும் வகையில் எடுத்துள்ள திருப்பத்த்தில் இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது என்றார். அமெரிக்கா, சீனாவிடம் இருந்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தை தூர விலக்கி, அமெரிக்கப் பாதையில் செல்ல வைப்பதற்காக வெறுமனே அழுத்தம் கொடுப்பதற்கும் அப்பால் செல்லும் என அவர் எச்சரித்தார்.

"இந்த சூழ்நிலையில், தென் ஆசியாவில் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் சோசலிச பிரதிநிதி ஒருவர் செய்யும் தலையீடு மிக முக்கியமானது," என டயஸ் விளக்கினார். "இது ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு மூலோபாயத்துக்கு எதிரான எமது இயக்கத்தின் சோசலிச அனைத்துலகவாத மூலோபாயத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்."

டயஸ் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் (பி.எல்.பீ.ஐ.) கொள்கைப் பிடிப்பான போராட்டத்தை நினைவூட்டினார். 1940ல் நான்காம் அகிலத்தின் இந்திய பகுதியான பி.எல்.பீ.ஐ., ஒரு சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் துணை கண்டம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டப் போராடியது. அவர் இந்த கொள்கைகளை லங்கா சமசமாஜ கட்சி (ல.ச.ச.க.) காட்டி கொடுத்தமைக்கு எதிரான போராட்டத்தில் 1968ல் ஸ்தாபிக்கப்பட்ட புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.), அடுத்த வளர்ச்சிக் கட்டமே சோசலிச சமத்துவக் கட்சியாகும் என்று சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் வருகை, "அந்த வரலாற்று படிப்பினைகளுக்கு புத்துயிரூட்டுவதோடு ஏகாதிபத்தியத்தின் போர் திட்டங்களுக்கு எதிராக, இந்த நாட்டினதும் தெற்காசியாவினதும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட" உதவும், என்று சோ.ச.க. பொது செயலாளர் தெரிவித்தார்.

தினக்குரல் பத்திரிகையின் நிருபர், வைட்டின் வருகையானது செப்டம்பர் 8 அன்று நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று கேட்டார். அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும், ஆனால், "சோ.ச.க. வைட்டின் விஜயத்தையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்தது மாகாணசபை தேர்தலின் காரணமாக அல்ல. நாம் அதற்கும் அப்பாற்பட்ட தீவிரமான அரசியல் முன்னோக்கு பற்றி கலந்துரையாட வேண்டியுள்ளது," என்று டயஸ் விளக்கினார்.