World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek government launches mass round-up and deportation of immigrants

ஏராளமான குடியேறியவர்களைச் சுற்றி வளைத்து வெளியேற்றும் நடவடிக்கையை கிரேக்க அரசாங்கம் தொடங்குகிறது

By Christoph Dreier
9 August 2012
Back to screen version

கிரேக்க அரசாங்கம் சமூகநலச் செலவுகளில் 11.5 பில்லியன் யூரோக்களை அறிவித்து ஒரே வாரத்திற்குப் பின் 4,500 பொலிஸ் அதிகாரிகள், தோட்டாக்கள் ஊடுருவ முடியாத உடைகளை அணிந்து, அல்சேஷன் நாய்களின் துணையோடு, ஏதென்ஸ் நகரத் தெருக்களில் வெளிநாட்டு-தோற்றமுள்ள மக்களைத் தேடிப் பிடிக்கப் புறப்பட்டனர்.

கிட்டத்தட்ட 6,000 பேரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். கைது செய்தவர்களில் 1,400 முதல் 2,000 நபர்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுடைய தாய்நாட்டிற்கும் அனுப்பப்படுவர்.

நேரில் பார்த்தவர்கள் பிரித்தானியாவின் கார்டியன் செய்தித்தாளுக்கு கொடுத்துள்ள தகவல்படி, பொலிஸ் குழுக்கள் பெரும் மிருகத்தன்மையுடன் செயல்பட்டன. தமக்குத் தோன்றிய வகையில் பொலிசார் வெளிநாட்டினர் போல் தோன்றும் நபர்களை நிறுத்தி, சன்னல்கள் அற்ற பஸ்களில் ஏற்றினர். பல மணி நேரத்திற்குப்பின், அதிகாரிகள் அவர்களை சோதனைக்கு உட்படுத்தி அவர்களுடைய ஆவணங்களையும் சோதித்தனர். வசிக்கும் உரிமம் பெற்றிருந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர்; மற்ற அனைவரும் பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஏதென்ஸ் அருகே தற்காலிக காவல் மையத்தில் இருத்தப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று 88 பாக்கிஸ்தானியர்கள் உடனடியாக தாய்நாட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

பல மணி நேரம் பாதிக்கப்பட்டவர்கள் தரையில் முழந்தாளிட்டுச் செலவழிக்கும் இழிந்த காட்சிகள் குறித்தும் தகவல்கள் கூறுகின்றன. காவலில் இருப்பவர்கள்மீது பொலிஸ் அதிகாரிகள் வன்முறைத் தாக்குதல்கள் நடத்திய தகவல்களும் வெளிவந்துள்ளன.

UNHCR இன் ஏதேன்ஸ் பிரதிநிதி  பெட்ரோஸ் மஸ்டகஸ், குடியேறுபவர்களின் உரிமைகளை பொலிஸ் நடவடிக்கை மீறுகிறது என சுட்டிக் காட்டினார். தஞ்சம் கோருபவர்கள் பாதுகாப்பிற்கான அந்தஸ்த்திற்கு விண்ணப்பிப்பது என்பது மிகவும் கடினம், கிட்டத்தட்ட இயலாது, இதையிட்டு நாங்கள் கவலை கொண்டுள்ளோம், கைது செய்யப்பட்டவர்களுள் பாதுகாப்பை நாடுபவர்கள் இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் தங்கள் வேண்டுகோளை அவர்களால் சமர்ப்பிக்க முடியாமல் இருக்கலாம்.

”Operation Xenios Zeus” என்று அழைக்கப்படும் இந்த பரந்த நாடுகடத்தல் நடவடிக்கை, குடியேறுபவர்களுக்கு எதிரான பரந்த நடவடிக்கையின் ஒரு பாகமாகும். ஏப்ரல் மாதத்தில் இருந்து கைதுக்கள், நாடுகடத்தல்கள் ஆகியவற்றிற்கு வகை செய்யும் இடைவிட வெகுஜனச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் மட்டும் 819 பேர் கிரேக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆண்டு இறுதிக்குள் அரசாங்கம் எட்டு நாடுகடத்தல் முகாம்களை கட்டமைக்கும் திட்டங்களை கொண்டுள்ளது; இவற்றில் 10,000 பேர் காவலில் வைக்கப்பட முடியும். இத்தகைய பரந்த கைதுகளை கிரேக்கம் கண்டதில்லை; சிறை முகாம்கள் பயன்பாடும் 1967-74 கேர்னல்களின் சர்வாதிகாரக் காலத்தில் இருந்து இருந்ததில்லை. அப்பொழுது ஆயிரக்கணக்கான தொழிலாளர்ளும் இளைஞர்களும் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குட்பட்டு, லெரோஸ் மற்றும் கைரோஸ் தீவுகளில் இருந்த கொடுஞ்சிறை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

குடிமக்கள் பாதுகாப்பிற்குப் பொறுப்பான கன்சர்வேடிவ் புதிய ஜனநாயகக் கட்சியின் மந்திரியான நிக்கோஸ் டென்டியாஸ், அகதிகள் தஞ்சம் கோரும் நடவடிக்கையை, இரண்டாம் உலகப் போரின்போது கிரேக்கத்தின்மீது படையெடுத்த ஜேர்மனிய துருப்புகளைவிட மோசமானது எனக் கண்டித்தார். Skai TV  யில் பேசிய அவர் குடியேறுபவர்களை நாட்டை குடியேற்றச் சேரிகளாக ஆக்கும்” “ஆக்கிரமிப்பாளர்கள் என விவரித்தார்.

நாம் நாட்டை இழந்து வருகிறோம்” “இப்பொழுது கிரேக்கத்தில் நடைபெறுவது இதுகாறும் இல்லாத மிகப் பெரிய படையெடுப்பாகும். இச்சொற்கள் பாசிசக் கட்சியான Golden Dawn (Chrysi Avgi) உடைய பிரதிநிதியால் கூறப்பட்டவை; இது கிட்டத்தட்ட 7% வாக்குகளை கடந்த தேர்தலில் பெற்று, முதல் தடவையாக கிரேக்கப் பாராளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளது.

நாஜிக்களுடைய வணங்கும் முறையைப் பயன்படுத்தி, சற்றே மாறியுள்ள ஸ்வஸ்திகா சின்னத்தையும் பயன்படுத்தும் Chrysi Avgi குடியேறுபவர்கள்மீது சூனிய வேட்டை நடத்துவதில் மத்திய பங்கை கொண்டுள்ளனர். கட்சியின் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் குடியேறுபவர்கள் மீது நடத்தும் மிருகத்தனத் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் அதிகரித்துள்ளன.

பாதுகாப்புப் பிரிவினருக்கும் Chrysi Avgi க்கும் இடையே நெருக்கமான பிணைப்புக்கள் உள்ளன. To Vima என்னும் கிரேக்கச் செய்தித்தாள் பொலிஸ் அதிகாரிகளில் பாதிக்கும் மேலானவர்கள் பாசிசக் கட்சிக்கு வாக்களித்தனர் என்று தெரிவிக்கிறது. சமீபத்தில் Chrysi Avgi பாராளுமன்ற துணைத் தலைவர் தேர்தலில் 41 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றார். கட்சிக்கே 18 உறுப்பினர்கள்தான் உள்ளனர் என்ற நிலையில், மற்ற கட்சிகளில் இருந்து 23 உறுப்பினர்கள் பாசிஸ்ட்டுக்களை ஆதரித்துள்ளனர்.

மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஜூலை மாதம் கொடுத்துள்ள அறிக்கை ஒன்று குடியேறுபவர்கள் மீதான தாக்குதல்கள் ஓரளவு உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அறிக்கையின்படி, பொலிஸ் அதிகாரிகள் பல நேரமும் வன்முறை பற்றிய சான்றுகளை முகங்கொடுக்கும்போது, அவற்றைப் பொருட்படுத்துவதில்லை; சொல்லப்போனால் குடியேறுபவர்கள் தாக்கப்படும்போது வெற்றுத்தனமாகப் பேசாமல் நின்கின்றனர். ஆவணமற்ற குடியேறியவர்கள் வாடிக்கையாக உத்தியோகபூர்வ புகார்களைக் கொடுக்க மறுக்கப்படுகின்றனர் என்று அறிக்கை கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களிடம் பொலிசார் புகாரைப் பதிவு செய்யக் கட்டணம் கொடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

Expel Racism  என்னும் அமைப்பு பொலிசார் நிற்கும்போது மக்கள் தாக்கப்படுவது குறித்து நூற்றுக்கணக்கான தகவல்களைப் பெற்றுள்ளது. இனவெறி எதிர்ப்பு தீவிரச் செயலர் Thanassis Kourkoulas கருத்துப்படி, பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் நிலையங்களில் குடியேறுபவர்களை அடிக்கின்றனர்; குடியேறுபவர்களைப் பற்றிப் புகார் கொடுக்கும் உள்ளூர் வாசிகளிடம் Chrysi Avgi உடைய தொலைப்பேசி எண் கொடுக்கப்படுகிறது.

Xenios Zeus நடவடிக்கைக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவும் உள்ளது. பல ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்தில் எல்லைக் கட்டுப்பாடுகள் இல்லாதது குறித்துக் குறைகூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பல சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் துருக்கிய-கிரேக்க எல்லை வழியே வருகின்றனர்.

2003ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம், இரண்டாம் டப்ளின் கட்டுப்பாட்டு விதிகளை ஏற்றது. அப்பொழுது முதல் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் முறையான விசா இல்லாமல் நுழையும் குடியேறுபவர்கள், நுழையும் நாட்டில்தான் தஞ்சக் கோரிக்கையை முன்வைக்க முடியும். இதன் பொருள் கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லையைக் காக்கும் கடமையை கொண்டுள்ளது என்பது மட்டுமின்றி, தஞ்சம் நாடுபவர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லாமல் தடுக்கும் கடுமையையும் கொண்டுள்ளது. இந்த விதியின்படி, குடியேறுபவர்கள் பலமுறையும் ஜேர்மனியில் இருந்து மீண்டும் கிரேக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஆணையம் ஏராளமான குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை பாராட்டியுள்ளது. கிரேக்க அரசாங்கம் தன் எல்லை நிர்வாகத்தை முன்னேற்றும் முயற்சிக்கு ஆணையம் ஆதரவு கொடுக்கிறது; அதேபோல் எல்லைகளில் பல மாதங்களாக கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது குறித்தும் ஊக்கம் அளிக்கிறது. என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Xenios Zeus நடவடிக்கை, அகதிகளுக்கு எதிராக மட்டுமின்றி, முழு கிரேக்க, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் இயக்கப்படுகிறது. குடியேறுவோர் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் அடக்குமுறை ஆகியவை, முதலில் தொழிலாள வர்க்கத்தின் மீதும் மத்தியதர வர்கத்தின் கணிசமான பிரிவுகள் மீதும் சுமத்தப்படும் காட்டுமிராண்டித்தனச் சிக்கன நடவடிக்கைகளில் இருந்து ஒரு பிற்போக்குத்தன திசை திருப்பல் என்பதற்குத்தான் உதவுகிறது.  கிரேக்க அரசாங்கம் மற்றும் கிரேக்க, ஐரோபிய ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளுக்கு வெகுஜன எதிர்ப்பை முகங்கொடுக்கையில், முதலாளித்துவம் பேசும் பொருளை மாற்றுவோம் என்பதில் ஈடுபட்டு, இனவெறி, தீவிர நாட்டுப்பற்று ஆகியவற்றைத் தூண்டி தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துகிறது.

குடியேறுபவர்களை அச்சுறுத்துவது என்பது அதேநேரத்தில் தொழிலாள வர்க்கத்தை மிரட்டும்  நோக்கத்தையும் கொண்டுள்ளது; அதைத்தவிர அரசாங்கக் கருவியை வலுப்படுத்தவும் அரசியல், சமூக எதிர்ப்புக்களுக்கு எதிராக வெகுஜன அடக்குமுறைத் தயாரிப்பிற்காக பாசிச சக்திகளுக்கு ஆதரவு கொடுக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

கிரேக்கத்திலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் பாரிய எதிர்ப்பு உள்ளது. தொழிற்சங்கள், மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள போலி இடது அமைப்புக்களான சிரிசா, அன்டார்ஸ்யா போன்றவை சமூகச் சீற்றத்தை தீமையில்லாத வழிகளில் திசைதிருப்புவதை கடினமாகக் காண்கின்றனர். தாக்குதல்களை தொடர, ஆளும் உயரடுக்குகள் வெளிப்படையான அடக்குமுறை வழிவகைகளுக்குத்தான் செல்ல வேண்டும்.

சில வாரங்களுக்கு முன்பு பொலிஸ் வன்முறை ஏதென்ஸுக்கு அருகே ஒரு எஃகு ஆலையில் எஃகுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறிக்கப் பயன்படுத்தப்பட்டது. கடந்த ஞாயிறன்று பொலிசார் ஹல்கிடிக்கியில் தங்கச் சுரங்கம் கட்டமைக்கப்படுவதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை இரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் ஆகியவற்றின் மூலம் தாக்கினர்.

சமீபத்தில் அரசாங்கம் இராணுவத் தலைமையில் மாற்றங்களைக் கொண்டுவந்து, துருப்புக்களின் விசுவாசத்தை உறுதிபடுத்த முற்பட்டது. பல ஆண்டுகளாக இராணுவம் கலகங்களை அடக்குவதற்கு இராணுவத்தினர்களுக்கு பயிற்சி அளிக்கும் உத்திகளை நடத்தி வருகிறது.

கிரேக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்கள், அரசாங்கம் மற்றும் போலீஸ் தாக்குதல்களுக்கு எதிராக குடியேறியவர்களை பாதுகாக்க வேண்டும். பரந்த சமூகத் தட்டுக்களின் வாழ்வாதாரங்களையே அழித்துவரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு ஒருங்கிணைந்த பாகமாகும்.