World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

One year since the UK riots

இங்கிலாந்துக் கலகங்களுக்கு ஓராண்டிற்குப் பின்

Robert Stevens
8 August 2012


Back to screen version

லண்டன் டோட்டன்ஹாமில் ஆகஸ்ட் 6, 2011 அன்று பொலிசார் நிராயுதபாணியான, நான்கு குழந்தைகளுக்கு தகப்பனாரான மார்க் டுக்கனைக் கொன்ற பின்னர் கலகங்கள் வெடித்தன.

மற்றொரு மிருகத்தனமான பொலிஸ் கொலையால் தூண்டப்பட்டபோதிலும் இக் கலகங்கள் இன்னும் அடிப்படையில் பேரழிவு தரும் வறுமை, வேலையின்மைக்கு எதிரான இயல்பான எதிர்ப்பாகும். இவை விரைவில் தலைநகர் முழுவதும் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஏனைய நகரங்களிலும் பரவின.

ஓராண்டிற்குப் பின், தொடர்புடையவர்கள் எனக் குற்றசாட்டிற்கு உட்பட்டவர்கள் மீது அசாதாரண அரசாங்க அடக்குமுறைத்தன்மை தொடர்கிறது. பாரிய பொலிஸ் தேடுதல்கள் நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்படுவதில் முடிவடைந்தது.  இதில் லண்டனில் மட்டும் 4,350 பேருக்கும் மேல் கைதுசெய்யப்பட்டனர்.  நீதித்துறைப் புள்ளிவிவரங்கள் 3,000 பேருக்கும் மேல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், 1,292 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது. கலகங்களில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றச்சாட்டிற்கு உட்பட்டவர்களுக்கு மொத்தம் சிறையில் 1,800 ஆண்டுகள் என்ற தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்கள் 24 மணி நேரமும் செயல்பட்ட நிலையில் கலகக்காரர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டவர்களை வரிசையில் நிறுத்தி குற்றம்சாட்டப்பட்டபோது வழமையான அடிப்படை ஜனநாயக உரிமைகள் கிழித்தெறியப்பட்டதுதான் நடந்தது. சராசரி காவலில்வைக்கும் தண்டனை 16.8 மாதங்கள் என்று ஆயின. இது இதே போன்ற குற்றங்களுக்கு மாஜிஸ்ட்ரேட்டுக்கள் நீதிமன்றங்களில் கொடுக்கப்படும் தண்டனையைப்போல் நான்கு மடங்கு அதிகம் ஆகும். ஒருவர் ஒரு கடையில் இருந்து 3.50 பவுண்டுகள் மதிப்புள்ள குடிநீரை எடுத்துக் கொண்டதற்கு 6 மாதக் காலச் சிறைவாசம் பெற்றார். இரு நபர்கள் கலகத்திற்கு ஆதரவு கொடுத்த பேஸ்புக் குறிப்புக்களை அனுப்பியற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையைப் பெற்றனர்.

ஓராண்டிற்குப் பின் மக்கள் இன்னமும் கைது செய்யப்படுகின்றனர்; மெட்ரோபொலிடன் பொலிசார் வரவிருக்கும் மாதங்களில் இன்னும் 600 கைதுகள் நடக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அந்நபர் கொல்லப்படுகையில் 31 பொலிஸ் அதிகாரிகள் சூழ்ந்திருந்தனர் என்ற போதிலும் ஒரு பொலிஸ் அதிகாரி கூட டக்கன் கொலை குறித்து நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை.

லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு தயாரிப்பு நடத்துகிறது என்ற அறிக்கைகளின் பேரில் பாரிய அடக்குமுறை நியாயப்படுத்தப்பட்டது. தெருக்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதற்கு கலகக்காரர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கருதப்பட்டது. இது அப்பொழுதில் இருந்து தலைநகருக்கு இயல்பாகிவிவிட்ட பெருகிவிட்ட அடக்குமுறையை வரவேற்றது. இப்பொழுது கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ள ஒரு நகரத்தில்தான் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன. அதற்குக் காவலாக 49,000 சீருடை அணிந்த பாதுகாப்புபடையினர் உள்ளனர். அவற்றுள் 17,000 துருப்புக்களும் அடங்குவர்.

முழுக்காலத்திலும் கன்சர்வேடிவ்/லிபரல் ஜனநாயக அரசாங்கம், எதிர்க்கட்சியான தொழிற்கட்சி மற்றும் செய்தி ஊடகம் ஆகியவை எதிர்கொண்டவிதம் கலகங்களை முற்றிலும் ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக நடத்தியதுதான். அமைதியின்மைக்கான சமூக உந்துதல் பற்றிய எக்கருத்தும், குற்றம் குறித்து மென்மையான உணர்வு என்பதற்குச் சான்று என எள்ளி நகையாடப்பட்டது.

கலகங்களை தொடர்ந்து, அமைதியின்மைக்கு வழிவகுத்த சமூக நிலைமைகளை சீர்திருத்துவது குறித்து ஒரு கருத்துக் கூட முன்வைக்கப்படவில்லை. மாறாக சமூக நிலைமைகள் முறையாக ஆழ்ந்த மந்தநிலையின்போது சிக்கன வெட்டுக்கள் என்று பல பில்லியன்களை சுமத்திய அளவில் சரிந்துவிட்டன. இளைஞர்களிடையே வேலையின்மை என்பது இக்கோடைக்காலத்தில், ஓராண்டிற்கு முன் இருந்ததைவிட அதிகமாக இப்பொழுது 12% அதிகமாக உள்ளது.

கலகங்களுக்கான பரந்த காரணங்களை ஆராய மறுப்பது 1981ல் பிரிக்ஸ்டன், லண்டன் இன்னும் பிற நகரங்களில் வெடித்த கலகங்களை எதிர்கொண்டதற்கு முற்றிலும் மாறாக உள்ளது. அப்பொழுதே ஒரு கன்சர்வேடிவ் அரசாங்கம் அரசாங்கத்தின் முன்எல்லைகளை சுருட்டி வைப்போம் என்று உறுதி கொண்டு, தொழிலாள வர்க்கத்தின்மீது கடுமையான தாக்குதல்களை சுமத்தினாலும், அத்தகைய எழுச்சியில் ஒரு சமூக உந்துதல் இருந்தது என்பதை ஒப்புக்கொண்டது. மார்கரெட் தாட்சரின் அராசங்கம் ஸ்கார்மன் விசாரணைக் குழுவிற்கு உத்தரவிட்டது. அது பொலிஸ் மிருகத்தனம், குறிப்பாக இளம் கறுப்பர்கள்மீது நடத்தப்பட்டதுதான் கலகங்களுக்கு முக்கிய காரணம் என்று கண்டறிந்தது. இத்தகைய அறிக்கை சமூகம் என்பது போன்ற ஒன்றும் கிடையாது! என அறிவித்து, புகழ் பெற்ற ஒரு பிரதம மந்திரியின் அரசாங்கக் காலத்தில் நடைபெற்றது.

இன்று தாட்சரின் வழித்தோன்றல்கள் அடக்குமுறையை அதிகரிக்கின்றனரே ஒழிய, மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் சமூகத் தீமைகளை அகற்ற ஏதும் செய்யவில்லை. தொழிலாள வர்க்கம் மற்றும் சமூகத்தின் வறிய நிலையில் உள்ளவர்களுடைய வாழ்க்கைத் தரங்களை தாக்குதல் என்பது, பிரதம மந்திரி டேவிட் காமெரோன் உடைய கூட்டணியால் சுமத்தப்படுவது தாட்சர் செய்த செயல்கள் எல்லாவற்றையும் குறைத்துவிட்டது.

2011 கலகங்கள் 2008 உலக நிதிய நெருக்கடிக்குப் பின் விளைந்தவை. இக்கரைப்பு, உலக முதலாளித்துவ முறையின் முறிவினால் விளைந்தது, பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் ஆளும் உயரடுக்கினார் சமூகநலன்புரி அரசுத் திட்டத்தில் எஞ்சியிருப்பவற்றை அகற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்பட்டு, தொழிலாளர்களின் ஊதியங்கள், பணிநிலைமைகள் ஆகியவற்றை சீனா, இந்தியா, கிழக்கு ஐரோப்பா ஆகியவற்றில் இருக்கும் நிலைமைகளுக்கு குறைத்துவிடவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கருத்தியலளவில் தாட்சரையும் காமெரோனையும் எதுவும் பிரிக்கவில்லை. 1980களில் ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட எதிர்ப்பு உள்ளது, கருத்திற் கொள்ளப்பட வேண்டும் என உணர்ந்தது. உள்நகரங்களை அமைதிப்படுத்துவது என்பது தொழில்துறை தொழிலாள வர்க்கத்துடன் உறுதியான மோதலுக்குப் பாதையை அமைத்தது. அதில் எஃகுத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் ஆகியோருடனான மோதல் இருந்தது. மிகவும் வெறுக்கப்பட்ட அரசாங்கம் இறுதியில் தன் தாக்குதல்களை சுமத்தி தொழிலாள வர்க்கத்தின் மிகப் போராளித்தன பிரிவுகளை தோற்கடிக்க முடிந்தது; இதற்குக் காரணம் தொழிற்கட்சியும் தொழிற்சங்க அதிகாரத்துவமும்தான். இவர்கள் டோரிக்களுக்கு முன் தங்களை தாழ்த்திக் கொண்டனர்; தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு போராட்டத்தையும் காட்டிக் கொடுத்தனர். அவையோ 1984-85 சுரங்கத் தொழிலாளர்களின் வரலாற்றுத் தன்மை நிறைந்த தோல்வி வரை சென்றன. இறுதியில் டோரிக்களுடைய பிற்போக்குத்தன தடையற்ற சந்தைப் பொருளாதார பெருமைகளையும் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டனர்.

கால் நூற்றாண்டிற்குப் பின், 2011 கலகங்களுக்கு முன்போ, பின்னரோ, தொழிற்கட்சியோ தொழிற்சங்கங்களோ சமூகத்தில் அடக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சிறிதளவேனும் பரிவுணர்வு காட்டிய நிகழ்வு அல்லது செய்தி ஒன்றுகூட வெளிப்படவில்லை. மாறாக அவர்களும் விசுவாசத்துடன் சட்டம் மற்றும் ஒழுங்குக் கூட்டத்துடன் வரிசையில் நின்றனர். அரசியல், சமூகப் பணிகள் மற்றும் செய்தி ஊடகங்களில் கறுப்பின சமூகத்தின் தலைவர்கள் எனக் கூறப்பட்ட ஏராளமான நபர்கள் குறித்தும் இதேதான் உண்மையாகப் போயிற்று.

ஐக்கிய இராஜ்ஜியத்தில் இன்னும் கூடுதலான சமூக அமைதியின்மையே ஏற்படும். மோசமான நிலைமைகளை ஒட்டி அவை தவிர்க்க முடியாதவை. ஆனால் கலகங்கள் என்பது ஆழ்ந்த சமூகத் தீமையின் அடையாளமாகும்; அடக்கிவைக்கப்பட்டுள்ள பெருவெறுப்பு, சீற்றம் இவற்றின் வெளிப்பாடாகும். இவை முன்னோக்கியபாதைக்கும் வழிகாட்டுவதில்லை, எதிர்த்துப் போரிட வும் வழிகாட்டுவதில்லை.

தற்போதுள்ள அரசியல் நிலைமையில் பரந்த தொழிலாள வர்க்கத்தினர், இளைஞர்கள் தங்கள் ஆழ்ந்த சமூகக்குறைகளை வெளியிடுவதற்கு வழி இல்லை. அதேபோல் தங்கள் நலன்களுக்கு போராடித் தீர்வு காணவும் வழியில்லை. தொழிலாளர் இயக்கம் என்று முன்பு அறியப்பட்டது உள்ளிருந்தே இப்பொழுது அழிக்கப்பட்டுவிட்டது.

உயர்மட்டத்தில் இருக்கும் வணிகச் சார்புடைய கருவிகள், தேவையற்றவை என்றோ வெளிப்படையான விரோதப் போக்குடனோ இளைய தலைமுறையினால் காணப்படுகின்றது. தொழிற்கட்சி, டோரி, லிபரல் அரசியல்வாதிகளிடையே மாறுபட்ட தன்மை என்று இப்பொழுது பிரித்துக் காண்பதற்கு எதுவும் கிடையாது. அனைவருமே ஊழல் பிடித்தவர்கள் எனக் காணப்படுகின்றனர். 25 வயதிற்கு கீழே உள்ள எவரும் தொழிற்சங்க உறுப்பினராக இல்லை. அந்த அமைப்புக்களில் அப்படி இருக்கும் மிகச்சிலரும் ஒன்றைத் தொடர்ந்து மற்றொரு இழிந்த காட்டிக் கொடுப்பிற்கு உட்படுகின்றனர்.

இத்தலைமுறைக்கு முன்னே உறுதியாக முன்நிறுத்தப்படுவது ஒரு புதிய அரசியல் தலைமை கட்டமைக்கப்பட வேண்டும் என்பதாகும். ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சர்வதேச அளவில் உள்ள நம் அரசியல் சக சிந்தனையாளர்கள் இலாபமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்குப் பதிலாக பெருநிறுவன இலாபங்கள் என்று இல்லாமல் மனிதத் தேவைகளை நிறைவுசெய்யும் பொருளாதார வாழ்விற்கேற்ப சோசலிச சமுதாயம் நிறுவப்பட வேண்டும் என்று தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். இந்த மகத்தான போராட்டத்தில்தான் இளைஞர்களின் வருங்காலம் இணைக்கப்படும்.