World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France’s Socialist Party government plans to force Roma into ghettos

பிரெஞ்சு சோசலிஸட் கட்சி அரசாங்கம் ரோமாக்களைச் சேரியில் தள்ளத் திட்டமிடுகிறது

By Kumaran Ira 
3 August 2012
Back to screen version

பிரான்ஸின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் பிரான்ஸில் உள்ள ரோமா முகாம்களை பலவந்தமாக அகற்றும் அச்சுறுத்துலைக் கொடுத்துள்ளது; இது ரோமாக்களை பரந்த அளவில் வெளியேற்றும் நிலைப்பாட்டைத்தான் எழுப்புகிறது. ரோமாக்களை ஒருங்கிணைப்புக் கிராமங்களில் வசிக்குமாறு கட்டாயப்படுத்தும் திட்டத்தையும் அது அறிவித்துள்ளது.

PS ன் உள்துறை மந்திரி மானுவல் வால்ஸ் ரோமா முகாம்கள் மூடப்பட வேண்டும் என்னும் பிரச்சாரத்தில் முன்னணியில் நிற்கிறார். ஜூலை 31ம் திகதி அவர் Europe 1 இடம் கூறினார்: பொலிஸ் தலைமை அதிகாரி ரோமா முகாம்களை கலைத்துவிடும் பணியை ஒரு நீதிமன்றத் தீர்ப்பு வரும்போது செய்ய கடமைப்பட்டுள்ளார். நடைமுறைகள் எளிமையானவைதான். ஆம், ஒரு நீதிமன்ற தீர்ப்பு இருக்கும்போது, முகாம்கள் கலைக்கப்பட்டுவிடும்.

ரோமாக்களை அகற்றும் நடவடிக்கைகளை தயாரிக்கையில், அவர்களை ஒருங்கிணைப்புக் கிராமங்கள் என அழைக்கப்படுபவற்றில் இருத்தும் திட்டங்களும் உள்ளன. அங்கு ரோமாக்கள் மிகவும் வசதிகுறைந்த முன்கூட்டித் தயாரிக்கப்பட்ட வீடுகளில் இருக்குமாறு கட்டாயப்படுத்துவர்; இதை அரச ஊழியர்களும் பாதுகாப்புப் படையினரும் கண்காணிப்பர்.

Le Monde கருத்துப்படி ஐந்து கிராமங்கள் இப்பொழுது உள்ளன, இன்னும் மூன்று PS இன் முதல்செயலர் மற்றும் லில் மேயர் மார்ட்டின் ஆப்ரியின் சொந்த ஊரான லில் இல் கட்டப்படுகின்றன. ரோமாக்களுக்கு சமூக ஆதரவு வழங்கும் போர்வையின் கீழ் அத்தகைய ஒருங்கிணைப்புக் கிராமங்களின் கட்டமைப்புக்கள் ரோமா மக்களை சேரி வாழ்வில் தள்ளுவதுதான்.

ரோமாவிற்கு எதிரான மானுவல் வால்ஸ் இன் பிரச்சாரம் PS அரசாங்கத்தின் பிற்போக்குத்தனத்தின் தெளிவான வெளிப்பாடாகும்; இது ரோமாக்களுக்கும் பிற புலம்பெயர்ந்தவர்களுக்கும் முந்தைய கன்சர்வேட்டிவ் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி அரசாங்கம் இழைத்து வந்த துன்புறுத்தல்களைத்தான் தொடர்கிறது.

ஜூலை 30, 2010ல் Grenoble இல் கொடுத்த உரை ஒன்றில், ஜனாதிபதி சார்க்கோசி பிரான்ஸ் முழுவதும் இருக்கும் ரோமா முகாம்கள் அகற்றப்பட வேண்டும், அக்குடும்பங்கள் அபராதத்திற்கு உட்படுத்தப்படவேண்டும், குடியேறுபவர்களின் குடிமை உரிமைகள் பறிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அவருடைய பேச்சுக்குப்பின் சார்க்கோசியின் அராசங்கம் 10,000 ரோமாக்களுக்கும் மேலானவர்களை ருமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு கடத்தியது. கிட்டத்தட்ட 15,000 எண்ணிக்கையிலான ரோமாக்கள் தற்காலிகமாக உருவாக்கிய வீடுகள் முகாம்களில் பிரான்ஸ் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்குப் புறத்தே வசிக்கின்றனர்.

PS  ன் ரோமாக்களைத் தாக்கும் திட்டங்கள் 2012 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது சார்க்கோசியின் ரோமா எதிர்ப்புக் கொள்கைகள் குறித்த குறைந்தப்பட்ச குறைகூறல்களில் இருந்த இழிந்த தன்மையைத்தான் அம்பலப்படுத்துகின்றன.

மார்ச் மாதம் PS இன் ஜனானதிபதி வேட்பாளராக நிற்கையில், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் குடியேறுவோர் சார்பு இரு அமைப்புக்களிடம் கூறினார்: சுகாதாரமற்ற முகாம்கள் அகற்றப்படும்போது மாற்றீட்டுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும். தீர்வுகள் இல்லாமல் குறிப்பிட்ட இடங்களில் இருந்து குடும்பங்கள் அகற்றப்படுவதை நாம் தொடர்ந்து ஏற்பதற்கில்லை.

ஆனால், இப்பொழுது பதவிக்கு வந்தபின், ஹாலண்ட் நிர்வாகம் சார்க்கோசி குறித்த அதன் குறைகூறல்களை எல்லாம் விரைவில் கைவிட்டு விட்டு, ரோமாக்களை இனவழியில் தாக்க இலக்கு கொண்டுள்ளது.

சார்க்கோசியின் கொள்கைகள் குறித்து மிகக் குறைந்தப்பட்ச குறைகூறல்களை தெரிவித்த செய்தி ஊடகத்தின் கருத்துக்கள்கூட இனி ஏற்பதற்கில்லை என்று அது வலியுறுத்துகிறது. வால்ஸ் நான் இந்த விடையத்தை அமைதியாக சமாளிக்க விரும்புகிறேன். இது எளிதானதல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட பொது விவாதம் போல் இப்பொழுதும் நடத்தப்பட்டால் எதையும் செய்ய முடியாமல் போய்விடும். என்றார்.

வால்ஸின் கருத்துக்கள் முழு அரசியல் நடைமுறையில் இருந்தும் முழு ஆதரவைப் பெற்றுள்ளன. UMP (Union for a Popular Movement) கன்சர்வேடிவ் கட்சியின் பிரதிநிதியான Eric Ciotti, வால்ஸ் கருத்துப் பற்றிக் கூறினார்: அவர் இவற்றைச் செய்தால் [ரோமா முகாம்களை அகற்றுதல்] நான் அவருக்கு ஆதரவு கொடுப்பேன்.

பிரதம மந்திரி Jean-Marc Ayrault இன் பேச்சாளர், வால்ஸின் நிலைப்பாட்டைப் பாராட்டி: இந்த நிலைப்பாட்டில் குடியரசின் மதிப்புக்களை மதிக்கும் தன்மை இருப்பதுடன் உறுதிப்பாடும், கௌரவமும் இணைந்துள்ளது. என்றார்.

சார்க்கோசியின் Grenoble உரைக்குப் பின் சில அரசியல் வாதிகளும் செய்தி ஊடகங்களும் அவரைக் குறைகூறின, ரோமாக்களை இன வழியில் தாக்கும் அவர் இலக்கை ஜனநாயக விரோதச் செயல்கள் என்றன. சார்க்கோசியின் நடவடிக்கைகள் பரந்த முறையில் இனவழிச் சிறுபான்மையினரைரோமாக்கள் உட்படஇரண்டாம் உலகப் போர்க்காலத்தில் நாஜிக்களுடன் ஒத்துழைத்த விஷி ஆட்சி துன்புறுத்தியதுடன் ஒப்பிடப்பட்டது. (பார்க்க: “விஷி காலத்திற்கு மீண்டும் திருப்பல்).

இப்பொழுது அதையொத்த ரோமா-எதிர்ப்புக் கொள்கையை PS முன்வைக்கும்போது அவற்றிற்கு அரசியல் அமைப்புமுறைக்குள் இருந்து எதிர்ப்பு ஏதும் தோன்றவில்லை. குட்டி முதலாளித்துவ இடது கட்சிகள், புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்றவை, ஹாலண்டின் தேர்தலுக்கு ஆதரவு கொடுத்தவை இப்பொழுது ரோமாக்களை வால்ஸ் துன்புறத்தும்போது மௌனம் சாதிக்கின்ன.

சமீபத்திய ஆண்டுகளில் பிரெஞ்சு ஆளும் வர்க்கம் முறையாக குடியேற்ற எதிர்ப்புக் கருத்துக்களை தூண்டுகிறது, தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக அடிப்படை ஜனநாயக உரிமைகளை மிதிக்கும் அதேவேளை ஆழமான வெறுப்பை சம்பாதித்த ஊதிய, சமூக வெட்டுக்கள் உள்நாட்டிலும், போர்கள் வெளிநாட்டிலும் செயல்படுத்தப்படுகின்றன.

2004ம் ஆண்டு கன்சர்வேடிவ் ஜனாதிபதி ஜாக் சிராக் பொதுப் பள்ளிகளில் தலைமறைப்புத் துணிகள் மீது தடைவிதித்தார்: இது முஸ்லிம் எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதற்கு நிகழ்ந்தது. அவருக்குப் பின் வந்த சார்க்கோசி இந்த முஸ்லிம் எதிர்ப்பு, குடியேற்ற-எதிர்ப்புக் கொள்கைகளை தொடர்ந்தார்குறிப்பாக பர்க்கா பொது இடங்களில் அணியப்படுவதைத் தடுக்கும் அரசியலமைப்பிற்கு விரோத தடையைச் செய்லபடுத்தினார்; இது FN எனப்படும் புதிய பாசிசத் தேசிய முன்னணியின் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுவதற்கும் அதே நேரத்தில் ஆழ்ந்த பொதுநலச் செலவுக் குறைப்புக்கள் நடத்தப்படுவதற்கும் பயன்பட்டது.

தான் சார்க்கோசியின் பிற்போக்குத்தன நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்குவதாக இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள ஹாலண்ட் அதே பிற்போக்குத்தன வழிவகைகளை பிரான்ஸில் ஒரு இனவெறிச் சூழ்நிலையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளார்.

பதவிக்கு வந்த மூன்று மாதக் காலத்திற்குள்ளேயே PS  ன் செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது. பிரெஞ்சுப் போட்டித்தன்மையை வளர்த்தல் என்னும் பெயரில், ஹாலண்ட் நிர்வாகம் தொழிலாள வர்க்கத்தின்மீது ஆழ்ந்த தாக்குதல்களை முன்வைத்துள்ளதுஇதில் சமூகநலச் செலவுகளில் ஆழ்ந்த வெட்டுக்கள், பல தொழில்துறைகளில் தொடர்ச்சியான பெரும் பணி நீக்கங்கள் மற்றும் ஊதியக் குறைப்புக்களும் பிற தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்களும் அடங்கியுள்ளன.

கார்த்தயாரிப்பு நிறுவனம் PSA Peugeot Citroen  உடைய அறிவிப்பான பாரிஸிற்கு அருகில் உள்ள ஒல்நே ஆலை மூடப்படும், பிரான்ஸ் முழுவதும் 8,000 வேலைகள் அகற்றப்படும் என்பதை ஹாலண்ட் அரசாங்கம் ஆதரித்துள்ளது.

வேலையின்மையும் சமூக சமத்துவமின்மையும் தீவிரமாகையில், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து கடுமையான போராட்டங்கள் வரும் என சோசலிஸ்ட் கட்சி எதிர்பார்க்கிறது. ரோமாக்கள் மீதான அடக்குறை என்பது,  சோசலிஸ்ட் கட்சி, ஏகாதிபத்திய போர்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதற்கு எதிராக வந்துள்ள தொழிலாள வர்க்கத்தின் பரந்த எதிர்ப்பை குடியேறுவோர் எதிர்ப்பு வெறுப்புக்கள் என்ற திசைகளில் திருப்பும் பரந்த பிரச்சாரத்தின் ஒரு பாகமாகும்.