World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

What was French Left Front candidate Jean-Luc Mélenchon’s campaign?

பிரெஞ்சு இடது முன்னணி வேட்பாளர் ஜோன் மெலன்சோனின் பிரச்சாரம் என்னவாய் இருந்தது

By Alex Lantier in Paris
26 April 2012
Back to screen version

ஞாயிறன்று நடந்த பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் 11 சதவீத வாக்குகளை பெற்றதற்குப் பின், இடது முன்னணியின் வேட்பாளரும் சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் அமைச்சருமான ஜோன் லூக் மெலன்சோன் வெளிப்படையாக PS வேட்பாளர் பிரான்சுவா ஹாலண்டின் பாதைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

தேர்தல் நடந்த அன்று இரவு, மெலன்சோன், மே 6 அன்று நடைபெறவிருக்கும் தேர்தல் சுற்றுக்கு நடப்பு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிக்கு எதிராக ஹாலண்டை நிபந்தனையின்றி வழிமொழிந்தார். அவரது ஆதரவுக்குப் பிரதிபலனாக PS இடம் இருந்து அவர் எதனையும் கோரவில்லை என்பதற்காக ஹாலண்ட் மெலன்சோனுக்கு நன்றி தெரிவிக்கவும் கூடச் செய்தார். மெலன்சோனின் சுமார் 4 மில்லியன் வாக்காளர்களில் பெரும்பாலானோர் ஹாலண்டுக்கு வாக்களிப்பார்கள் எனக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. வங்கிகளுக்குமிக ஆபத்தானவனாகதன்னை அறிவித்துக் கொண்ட மெலன்சோன், பெப்ரவரியில் லண்டன் வங்கியாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில்தான் ஆபத்தற்றவன்என்று அழைத்துக் கொண்ட ஒருவரை இப்போது முழுமையாக ஆதரித்துக் கொண்டிருக்கிறார்.

இடது கூட்டணியின் (ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF), 2008 இல் PS இல் இருந்து உடைந்த மெலன்சோனின் இடது கட்சி (PG), மற்றும் குட்டி முதலாளித்துவஇடதுகட்சியான புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA)இன் கிறிஸ்டியன் பிக்கே தலைமையிலான ஒரு கன்னை போன்ற PS இன் நெடுங்காலக் கூட்டாளிகளின் கூட்டணியாகும் இது.)ஒரு ஆரம்பகட்ட வரவுசெலவு அறிக்கையை வரைவதற்குப் பொருத்தமான ஒரு அமைவினை இந்த நிகழ்வுகள் வழங்குகின்றன. பல்வேறு குட்டி முதலாளித்துவஇடதுகட்சிகளும் இடது முன்னணியின் மீது பாராட்டைப் பொழிவதையும் அதன் சரியான அரசியல் அர்த்தத்தில் இது பொருத்திக் காட்டுகிறது.

பிரிட்டிஷ் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (Socialist Workers Party)மெலன்சோன் மீதான தனது கட்டுரைக்கு வைத்த தலைப்பு: “இடதின் எழுச்சி பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தை உலுக்குகிறது.” “பிரான்சு ஜனாதிபதித் தேர்தலின் சமநிலையை அதிரச் செய்திருக்கும் ஒரு தீவிரப்பட்ட இடது அரசியல்வாதியாய் அது அவரை வருணித்தது.

அமெரிக்காவில், சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் (International Socialist Organization) லீ சுஸ்தார் மெலன்சோனைஇடதுசாரி எழுச்சியின் மையம் என்று புகழ்ந்தார். மெலன்சோன்ஒட்டுமொத்த அரசியல் விவாதத்தையும் இடது நோக்கித் தள்ளியிருந்ததாக குதூகலித்த அவர் கூறினார்: “மெலன்சோனின் பிரச்சாரத் தளம் சோசலிஸ்ட் கட்சியின் வழமையான வணிக-ஆதரவு வாய்ஜாலத்தில் இருந்தான ஒரு முறிவை அடையாளப்படுத்துகிறது. குறைந்தபட்ச ஊதியத்தில் 20 சதவீத அதிகரிப்பு கோருகிறார், இலாபகரமான நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ய தடை கேட்கிறார், நிதிப் பரிவர்த்தனைகள் மீது வரிகளைக் கடினமாக்கக் கோருகிறார், அத்துடன் வருமான வரிக்கான வருட வரம்பை 472,000 டாலர்களாக ஆக்கக் கோருகிறார், அதற்கு மேல் போனால் வரி செலுத்த வேண்டியிருக்கும்.” 

உண்மையில் இடது முன்னணிஅரசியல் விவாதத்தை இடது நோக்கி மாற்றவில்லைஏனென்றால் அதன் சொந்தப் பிரச்சாரம் அடிப்படையில் ஒரு அரசியல் பொய் ஆகும். மிக அதிக வாக்குகளுடன் இருக்கும்இடதுவேட்பாளருக்கு, அதாவது ஹாலண்டுக்கு, இரண்டாவது சுற்றில் வாக்களிக்க அழைப்பு விடுப்பதற்கே தனக்கு விருப்பமென்பதை மெலன்சோன் எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறார். ஹாலண்ட் மற்றும் சார்க்கோசி ஆகிய நன்மதிப்பற்ற இரண்டு  வேட்பாளர்களினால் மேலாதிக்கம் செலுத்தப்படும் ஒரு பிரச்சாரத்தில், மெலன்சோனின் வேலை என்பது, ஹாலண்ட் செய்யவிருப்பதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த நோக்கமில்லாத அதே சமயத்தில் மக்களிடம் போலி நம்பிக்கைகளை உருவாக்குகின்ற வீராவேசமானஇடதுவாய்ஜாலத்தை செய்து PS இன் வாக்குகளை வலுப்படுத்துவது தான்

115 பில்லியன் யூரோ நிதி வெட்டுக்கு உறுதி பூண்டிருக்கின்ற, அத்துடன் மெலன்சோன் வெளிப்படையாக பிரச்சாரம் செய்த கோரிக்கைகளில் எதையுமே நிறைவேற்றப் போகாத, நிதிப் பிரபுத்துவத்தின் ஒரு வேட்பாளரை மெலன்சோன் இப்போது நிபந்தனையின்றி ஆதரிப்பதன் காரணத்தை இது விளக்குகிறது. “புதிய அரசியல் காட்சியில் தான் இல்லாமல் போகலாம்என்று மெலன்சோன் நேற்று கருத்து தெரிவித்திருந்தார். துல்லியமாய் சொல்வதானால், இப்போது அவர் தனது வாக்காளர்களை ஹாலண்டுக்கு கை மாற்றி விட்டு விட்டதால், ஜனாதிபதித் தேர்தலில் தனது பாத்திரம் நிறைவு பெற்று விட்டதாய் அவர் காண்கிறார்.

இத்தகைய வெளிப்படையான அரசியல் சிடுமூஞ்சித்தனம், பிரெஞ்சு வாக்காளர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் தமது எதிர்ப்பு வாக்கினை முதலாளித்துவஇடதுகட்சிகளின் ஊடாகச் செய்யாமல் மாறாக நவ பாசிசவாதிகளுக்கான வாக்கின் மூலமாக பதிவு செய்யும் நிலை வந்ததற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. நவ பாசிச வேட்பாளரான மரின் லு பென்னை விஞ்சி வாக்குகள் பெறுவேன் என்று சபதமெடுத்திருந்த மெலன்சோன் லு பென்னுக்கு (18 சதவீதம்)அடுத்த நான்காவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

சோசலிஸ்ட் கட்சியின்இடதுதுணைக்கோள்களால் நடத்தப்பட்ட கைப்புரட்டுகளின் விளைவாய் நடந்த இந்த எதிர்பார்க்கத்தக்க விளைவானது, பிரெஞ்சு மற்றும் சர்வதேச குட்டி முதலாளித்துவஇடதுகளில் மெலன்சோனுக்கான ஆர்வத்தைக் குறைத்து விடவில்லை. ஜூன் மாத சட்டமன்றத் தேர்தலில் இன்னும் சில இடது முன்னணி நிர்வாகிகள் தொகுதிகளை வெல்லக் கூடிய சாத்தியம் கிட்டியிருக்கிறது என்பதை தவிர்த்து, மார்க்சிசத்துக்கும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கும் கடுமையான குரோதம் பாவிப்பதன் அடிப்படையில் மெலன்சோனின் பிரச்சாரம் அமைந்திருந்தது என்பதையே மெலன்சோன் நிகழ்வில் இந்த சக்திகள் கண்டன.

இது மெலன்சோனின் அவலமான அரசியல் வரலாற்றின் விளைபொருள் ஆகும். 1968 பொது வேலைநிறுத்தத்திற்கு பின்னதாய் மாணவர் அரசியலில் ஆரம்பித்த அவர், 1972 இல், அதாவது சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பானது (OCI) இன்று உலக சோசலிச வலைத் தளத்தை வெளியிடும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து முறித்துக் கொண்டதற்குப் பிந்தைய ஆண்டில், OCI இல் இணைந்தார். அந்த சமயத்தில் OCI செயல்பட்டு வந்த ஒரு போலியான, தேசியவாத முன்னோக்கு பின்வருமாறு இருந்தது: PCF மற்றும் புதிதாய் உருவாக்கப்பட்ட PSக்கு நெருக்குதலளித்துஇடது ஒன்றியம்ஒன்றினை உருவாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமாக OCI ஒரு வெகுஜன புரட்சிகர இயக்கத்தைக் கட்ட முடியும்.

அதனையடுத்து மெலன்சோன் 1976 இல் PS இல் இணைந்து ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் கீழ் வேலை செய்தார். 1983 இல் மித்திரோன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தனதுசிக்கன நடவடிக்கைத் திருப்பத்தை நடத்தியதற்குப் பின் இவர் ஒரு செனட்டரானார், பின் 1997-2002 பன்முக இடது அரசாங்கத்தில் ஒரு அமைச்சராகவும் ஆனார். ஆயினும், மெலன்சோன், சாதாரணமான ஆர்ப்பாட்ட முழக்கங்களையும் பிரெஞ்சு தேசியவாதத்தையும் ஒன்று கலந்து சோசலிசத்துக்குக் குரோதமான போலி-இடது வார்த்தைவரிசைகளாக மாற்றித் தரும் தனது திறமையை, அவர் குட்டி முதலாளித்துவஇடதுஅரசியலில் இருந்த காலத்தில் இருந்தே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

மெலன்சோன் 2012 தேர்தலுக்கான தனது வேலைத்திட்டத்தை இரண்டு ஆவணங்களில் முன்வைத்தார். ’மானுடம் முதலில்என்கிற இடது முன்னணியின் 2012 தேர்தல் வேலைத்திட்டம், அத்துடன்அவர்கள் அனைவருமே அகல வேண்டும்-சீக்கிரமாய், ஒரு குடிமக்கள் புரட்சிஎன்கின்ற ஒரு நெடிய புத்தகம் ஆகியவையே அந்த இரண்டு ஆவணங்கள். இங்குகுடிமக்கட்புரட்சிஎன்று அவர் குறிப்பிடுவது ஈக்வடாரின் ஜனாதிபதியான ரஃபேல் கோரியா தனது ஜனாதிபதிப் பதவிக்கு அடித்தளமாய்க் கொண்டதை. மெலன்சோன் அதற்கு புகழ்மாலை சூடுகிறார்.

குடிமக்கட் புரட்சி என்ற பெயரே உடனடியாகக் கூறி விடுகிறது மெலன்சோனின் மனதில் இருப்பது தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்கமல்ல, மாறாக நாட்டின் அனைத்து குடிமக்களையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்கத்தை என்று. அத்தகையதொரு முன்னோக்குக்கும் மார்க்சிசத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

1789 பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் ஒவ்வொரு மகத்தான புரட்சிகரப் போராட்டமும் தொழிலாள வர்க்கத்துக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான ஒரு தீவிரமான மோதலைக் கண்டிருக்கக் கூடிய பிரெஞ்சு வரலாற்றின் பொருளில் மட்டுமாய்க் கொண்டு முழுமையாகப் பார்த்தால் கூட, இத்தகையதொரு வேலைத்திட்டம் ஒரு வலதுசாரி குணாம்சத்தைத் தான் கொண்டிருக்க முடியும் என்பது தெரியும். மெலன்சோன் தெளிவாக்குவதைப் போல, நாட்டின் சுரண்டும் வர்க்கங்களும் சுரண்டப்படும் வர்க்கங்களும் பொதுவான நலன்களைக் கொண்டிருக்கின்றன என்கிற கருத்து தான் அதன் உந்துசக்தியாக உள்ளது

ஆதிக்கம் செய்பவர்களின் சமூக நலன்களும் ஆதிக்கம் செய்யப்படுபவர்களின் சமூக நலன்களும் மோதலில் இருப்பதாய்நம்புகின்றவர்கள் ஒட்டுமொத்த நாட்டின்பொதுவான நலன்என்கிற கருத்தை விமர்சிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். “அவர்களைப் பொறுத்தவரை பொது நலன் என்பது, மேலாதிக்கம் புரிபவர்கள் அவர்களது நலன்களை பொது நலன் போன்று தோன்றச் செய்வதற்கு சேவை செய்கிற வெறும் மாயையாக மட்டுமே இருக்க முடியும்இந்த விவாதத்தில் தீர்வளிக்கும் அனுகூலம் அரசியல் சூழலியலுக்கு இருப்பதாய் நான் நினைக்கிறேன். ஆம், வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கிறதான, ஒட்டுமொத்த மானுடத்திற்கும் பொதுவானதான, ஒரு புறநிலை பொது நலன் என்பது இருக்கிறது. அது தான் மனித வாழ்க்கை சார்ந்திருக்கக் கூடிய சூழலமைப்பினைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. குடிமக்கட் புரட்சி அரசியல் சூழலியலால் நோக்குநிலை அளிக்கப்படுகிறது.

மூலதனத்தின் நலன்களும் உழைப்பின் நலன்களும் மோதலில் இருக்கின்றன என்று வாதிடுகின்ற மார்க்சிச அரிச்சுவடிக்கு எதிராக வாதிடுகின்ற மெலன்சோன், யாருக்கு எதிராக எதற்கு எதிராக அவர் வாதிடுகிறார் என்பதை அடையாளம் காட்டுவதை தவிர்த்து விடுகிறார். அதற்கு நேரெதிராய், “குடிமக்கட் புரட்சியானது சோசலிசப் புரட்சியை அடக்கியொடுக்குவதான அடிப்படையில், மெலன்சோனின் வார்த்தைகளில் கூறுவதானால், “மேலாதிக்கம் புரிபவர்களுக்கும்மேலாதிக்கம் செய்யப்படுபவர்களுக்கும் நல்லிணக்கம் காண நோக்கம் கொண்டிருக்கிறது

வாக்குப் பெட்டியைப் பிரதானமாக்கஅழைப்பு விடுக்கும் அவர் எழுதுகிறார்: “நான் விரும்பும் புரட்சி என்பது ஒருகுடிமக்கட் புரட்சி தான். முதலாவதாய் அது சமூக இயக்கத்தில் வேர் கொண்டிருக்கிறது, வாக்குப் பெட்டிகள் மூலமாகவும் தேர்தல்கள் மூலமாகவும் தான் அது தூண்டப்படுகிறது, அபிவிருத்தியடைகிறது. பழைய பாணியில்சுரங்கத் தொழிலாளிக்கே சுரங்கம் உழைப்பவருக்கே நிலம்என்றெல்லாம் கத்திக் கொண்டிருப்பதல்ல. நமது அத்தனை தவறான முன்னனுமானங்கள் மற்றும் தனிநபர் நலன்களையும் நம்மிடம் இருந்தே நாம் கிழித்தெறிய வேண்டும்.” புரட்சியைஆயுதமேந்திய ஒரு மகத்தான இரவுடன் மடத்தனமாய் தொடர்புபடுத்துகின்ற எவரையும் அவர் கண்டனம் செய்கிறார்.

சுருக்கமாய் சொல்வதானால், முதலாளித்துவ அரசுக்கான தேர்தலின் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்களை (“சமூக இயக்கம்”)பயன்படுத்துவதைத் தான் மெலன்சோன்புரட்சிஎன்றழைக்கிறார். இது புரட்சியல்ல, மாறாக பிரான்சிலும் பல பிற ஐரோப்பிய நாடுகளிலும் முதலாளித்துவத்தின் கீழான அரசியல் வாழ்வின் வழமையான பாதையே இதுதான்.

செவ்வியல் மார்க்சிசத்தின் மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் புரட்சிகரப் போராட்டங்களின் பாரம்பரியம் பற்றியெல்லாம் மெலன்சோன் குறிப்பிடுகின்ற மட்டத்திற்கு, அது வெறுமனே கேலி செய்வதற்காய் தூக்கிப் பிடிப்பதாகவே இருக்கிறது. செல்வந்தர்களுக்கு வரிவிதிப்பது குறித்து வெற்று ஆர்ப்பரிப்பு செய்கின்ற போதிலும், ”சுரங்கத் தொழிலாளிக்கே சுரங்கத்தை அளிப்பதற்கு” , அல்லது இன்னும் பரந்த அளவில் பார்த்தால், பொருளாதாரத்தின் மீதான ஜனநாயகக் கட்டுப்பாட்டை தொழிலாள வர்க்கத்திடம் அளிப்பதற்கு, மெலன்சோனுக்கு எண்ணமிருக்கவில்லை. வாக்குப் பெட்டி மூலம்புரட்சிசெய்வதற்கான மெலன்சோனின் திட்டங்களில் இத்தகைய கோரிக்கைகளுக்கு எந்த இடமுமில்லை.

"ஆயுதமேந்திய மகத்தான இரவு” மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் மீதான அவரது மேலெழுந்தவாரியான தாக்குதல் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு  எதிராக செலுத்தப்பட்டது அல்ல, அவர்களுக்கு “மகத்தான இரவு” என்கிற வார்த்தை பொருத்தமற்றது, மாறாக சமூகப் புரட்சிக்கு எதிராக செலுத்தப்பட்டதாகும்.  மெலன்சோனின் “குடிமக்கட் புரட்சி”க்கு பாஸ்டிலுக்குள் அதிரடியாய்ப் புக அவசியமில்லை, அல்லது செம்படையினர் புரட்சிகர ரஷ்யாவின் அதிகாரத்தைக் கையிலெடுத்திருப்பதை சமிக்ஞை செய்யும் விதமாக குளிர்கால அரண்மனை மீது அரோராவில் (Aurora) இருந்து அடையாளச் சூடு நடத்த அவசியமில்லை என்கிற உண்மையானது இலகுவாய் அடையாளப்படுத்துவது என்னவென்றால் அது புரட்சியே அல்ல என்பதைத் தான்.

அவர் குரோதம் பாவிக்கின்ற பாரிய சமூக எழுச்சி இல்லாமல் மகத்தான சமூக சமத்துவத்திற்காக முன்னெடுப்பதாய் அவர் கூறிக் கொள்கின்ற கோரிக்கைகள் நிறைவேற முடியாது என்பது அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான மெலன்சோனுக்கு நன்கு தெரியும். அப்படியென்றால் எப்படி அவர் தன் முழக்கங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடிகிறது? மெலன்சோன் விளக்குகிறார்: “என்னுடைய ஆசைகளை யதார்த்தங்கள் போலவே நான் நனவுடன் நடத்துகிறேன். இது  அவற்றை தொற்றுப் போல ஆக்குகிறது. இந்த வழிமுறை ஊக்கமளிக்கும் ஒன்றாய் நான் காண்கிறேன். தீவிரமயம் என்பதை இந்த வகையில் தான் நான் புரிந்து கொள்கிறேன்: மிக ஸ்தூலமானதாயும் ஆளுகின்றதாயும் இருக்க வேண்டும்.”

இந்த அசாதாரணமான கருத்துரை தான் மெலன்சோனின் பிரச்சாரமாக இருக்கும் அரசியல் பொய்யின் இருதயத்தானத்தில் இருக்கிறது. மெலன்சோன் பேசக் கேட்பதென்பது, அவரே ஒப்புக் கொள்கிறார், அரசியல் ரீதியாக நம்ப முடியாததை நம்பச் செய்கின்ற ஒரு பூமிக்குள் பிரவேசிப்பதாகும். அதில் ஆதரவை வெல்வதற்கு அவர் எதை வேண்டுமானாலும் முன்வைக்க முடியும், பின் இறுதியாக, தொழிலாள வர்க்கத்தை PS அல்லது இதேபோன்ற முதலாளித்துவ, சிக்கன நடவடிக்கை ஆதரவுக் கட்சிகளுடன் கட்டிப் போடலாம். என்றால் இது ஒரு புரட்சிவாதியின் “வழிமுறை”யாக இருக்க முடியாது, மாறாக எந்த அரசியல் உறுதிப்பாடும் அற்ற ஒரு பிழைப்புவாத மனிதனின் செயல்பாட்டு வழிமுறையாகத் தான் இருக்க முடியும்.

பிரான்சுக்குள் வலதுசாரி சமூக வீராவேசப் பேச்சினால் ஆயுதபாணியாக்கப்பெற்று மெலன்சோன் உலக அரங்கில் காலடி எடுத்து வைக்கிறார். அங்கு அவர் ஏகாதிபத்தியப் போரின் ஒரு அப்பட்டமான ஆதரவாளராய் தன்னை வெளிக்காட்டுகிறார். போர் என்பது மனித சமுதாயத்தில் அடிப்படையாய் தவிர்க்கமுடியாத ஒரு அம்சமாக இருக்கிறது என்பதே தன் கருத்து என்பதை அவரே குறிப்பிடுகிறார்.

’அவர்கள் அனைவரும் அகல வேண்டும்’ ஆவணத்தில் அவர் விளக்குகிறார்: “ஒருவர் அண்டை அயலாருடன் சண்டையிடுவதற்கு உள்முகமாகவும் வெளியிலும் நிரந்தரமாய் ஒரு செலுத்துசக்தி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நலன்களிடையேயான மோதல் உருவாகிறது, அது மனித சமுதாயங்களை இன்னும் ஆழமாய் பிளவுபடுத்துகிறது. உலகம் ஏற்கனவே பெரும் சக்திகள் இடையிலான மோதல்களால் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனித எண்ணிக்கை வெடித்துப் பெருக பெருக அவை நாளை இன்னும் உத்வேகம் பெற்று நிகழும். உங்களுக்குப் புரிகிறதா? மானுடம் தொடங்கிய காலத்திலிருந்து இருந்து வந்ததைக் காட்டிலும் இன்று அதிகமான மக்கள் வாழ்கிறார்கள்....வரலாறு அமைதியடையும் என்றா நினைக்கிறீர்கள்?

முதல் பார்வையில், மெலன்சோனின் வெளிநாட்டுக் கொள்கை யோசனைகளில் அமெரிக்கா மற்றும் ஜேர்மனி ஆகிய இரண்டு இலக்குகள் தான் இருப்பதாய் தெரிகிறது. ஆனால் அவரது நிலைப்பாடுகளை கூர்ந்து பார்த்தால் ஒரு வித்தியாசம் இருப்பது புலப்படும்.

அவரது அமெரிக்க-எதிர்ப்பு கோபாவேசங்கள் மற்றும் அமெரிக்காவிடம்  இருந்து “உலகளாவிய” சுதந்திரம் கிட்டுவதற்கான அவரது அழைப்பு இவை எல்லாம் சமீபத்திய அமெரிக்க தலைமையிலான போர்களில் - லிபியாவில் நேட்டோ குண்டுவீச்சிலும் சரி மற்றும் சிரியாவில் ஏகாதிபத்திய ஆதரவு சக்திகளுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளிலும் சரி இரண்டிலுமே - பிரான்ஸ் பங்குபெறுவதை ஆதரிப்பதில் இருந்து அவரைத் தடுத்து விடவில்லை. அதேபோல் சமீப காலங்களில் ஐவரி கோஸ்ட் போன்ற தனது முன்னாள் காலனித்துவ நாடுகளில் பிரான்ஸ் அமெரிக்க ஆதரவுடன் ஏகாதிபத்தியத் தலையீடுகளை புரிந்ததற்கான எந்த உண்மையான விமர்சனத்தையும் மெலன்சோன் வைக்கவும் இல்லை. இன்னும் சொன்னால், அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையுடன் பிரெஞ்சு ஏகாதிபத்தியமும் சமீபத்தில் அதே அணியில் நிற்பதற்கு மெலன்சோன் பக்கபலமாய் இருக்கிறார்.

ஜேர்மனியுடனான மோதல் குறித்து மெலன்சோன் நிறையக் குறிப்பிடுகிறார். அவர் எழுதுகிறார்: “துரதிர்ஷ்டவசமாய் ஐரோப்பா அமைதிக்கான தலைவிதியைக் கொண்டிருப்பதாய் நான் கருதவில்லை.... மறுஇணைவு கண்ட ஜேர்மனியின் ஆள்வோரது தலைமுறை இனியும் சுயவருத்தத்தால் பகுத்தறிவின் பக்கம் கொண்டு வரப்பட்டதாயும் மற்றும் இரண்டு அரசுகளால் பிளவுபட்டிருந்ததால் அடக்கி வைக்கப்பட்டதாயும் இனியும் இல்லை என்பதை பிரெஞ்சு மக்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும். கூச்சமற்ற ஜேர்மன் தலைவர்களுக்கு எதிராக பிரமை அகற்றப்பட்ட பிரெஞ்சுத் தலைவர்களை நாம் முன்நிறுத்த வேண்டும்.”

பிரான்ஸ் ஒரு “உலகளாவிய விழுமியங்களுடனான” (universalist) நாடு என்பதான அவரது மேலாதிக்க நடிப்புகள் எல்லாம் இருந்தபோதும் ஐரோப்பாவுக்குள் போர் ஆபத்துக்கு எதிராய் ஜேர்மன் தொழிலாளர்களுடன் சர்வதேச வர்க்க ஐக்கியத்திற்காக அவர் எந்த விண்ணப்பமும் அளிப்பதில்லை. அதற்குப் பதிலாக, கிழக்கு பெல்ஜியத்தை இணைத்துக் கொள்ளும் சாத்தியத்தைத் தான் அவர் ஊக்குவிக்கிறார், பிரான்ஸை ஜேர்மனிக்கு எதிராய் மேலேற்றி அமர்த்துவதற்கு.

பெல்ஜியம் ஒரு “செயற்கையான அரசு” என்று நிராகரித்து அவர் எழுதுகிறார்: “பெல்ஜியத்தின் டச்சுக்காரர்கள் (Flemish) பெல்ஜியத்தைத் துண்டாடினர் என்றால், வாலூன்கள் [பெல்ஜிய பிரெஞ்சுக்காரர்கள்] பிரெஞ்சு குடியரசை இணைக்க வாக்களிக்க முடியும் என்பதை ஒருவர் சுலபமாய் எண்ணிப் பார்க்க முடியும். என்னைப் போன்ற பல பிரெஞ்சுக்காரர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்... அது உண்மையிலேயே மிகப்பெரிய பிரான்ஸை உருவாக்கும்.”

ட்ரொட்ஸ்கி ஒரு ஸ்ராலினிச முகவரால் கொல்லப்படுவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஒரு அமெரிக்க செய்தித்தாளுக்கு அளித்திருந்த நேர்காணலில் குறிப்பிட்டார், வெளிநாட்டுக் கொள்கை என்பது “உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியும் அபிவிருத்தியுமே” என்று. ஐரோப்பிய வரைபடத்தை மறுவரைவு செய்வதற்கான மெலன்சோனின் திட்டங்கள் எல்லாம் அவற்றின் சொந்த வழியில் மெலன்சோனது “குடிமக்கட் புரட்சி”யின் வர்க்க குணாம்சத்தின் மீதான மிகத் தெளிவான வருணனைகளாய் சேவை செய்கின்றன.

அவரது இலக்கு புரட்சியல்ல, மாறாக தாயகத்தில் தொழிலாள வர்க்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களை ஊக்குவிப்பதற்குமாய், முதலாளித்துவ கட்சிகளாலும் மற்றும் குட்டிமுதலாளித்துவக் கட்சிகளாலும் “இடது” அரசியல் நெடுங்காலமாய் ஆதிக்கம் செய்யப்பட்டு வருவதால் உருவான அரசியல் குழப்பத்தை சுரண்டிக் கொள்வது தான் அவரது இலக்கு. இதனால் தான் மெலன்சோன் கூடுதல் செல்வாக்கு பெற்ற ஏகாதிபத்திய அரசியல்வாதியான ஹாலண்டின் பின்னால் அணிவகுத்து நிற்கிறார், இதனால் தான் அவரது ஜனாதிபதி வேட்புநிலைக்கு சர்வதேச அளவில் நடுத்தர வர்க்க, முன்னாள் இடது சக்திகளிடம் இருந்து ஆதரவு கிட்டியிருக்கிறது.