World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Two years since the BP Deepwater Horizon disaster

பிரிட்டிஷ் பெற்றோலிய டீப் வாட்டர் ஹொரிசோன் பேரழிவிற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்

Andre Damon
21 April 2012
Back to screen version

நேற்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் மெக்சிகோ வளைகுடாவிலுள்ள டீப் வாட்டர் ஹொரிசோன் எண்ணெய் தோண்டும் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிப்பு ஒன்று 11 தொழிலாளர்களை கொன்றதுடன், அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவையும் கட்டவிழ்த்தது.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பின் அது இறுதியாக முடிவுற்றபின், இந்த வெடிப்பு 4.9 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வெளியேற்றி, இதுகாறும் இல்லாத அளவு மிகப்பெரிய விபத்தான எண்ணெய் கசிவாகிவிட்டது. டெக்சாஸில் இருந்து பிளோரிடா வரை உள்ளூர் பொருளாதாரத்திற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் சேதத்தை ஏற்படுத்தியது. மனித ஆரோக்கியம் மற்றும் வளைகுடாவின் சுற்றுச்சூழல் முறைக்கு அது கொடுத்துள்ள பாதிப்பு பல தசாப்தங்கள் நீடிக்கும் என்பதுடன் இதன் விளவுகள் முற்றிலும் இன்னும் அறியப்படவில்லை.

ஆனால் இன்றுவரை பிரிட்டிஷ் பெற்றோலியத்தில் இருந்தோ, தோண்டும் நிறுவனமான  Transocean  அல்லது தோண்டும் ஒப்பந்தக்கார நிறுவனம் ஹாலிபர்ட்டனில் இருந்தோ, ஒரு நிர்வாகிகூட குற்றம்சார்ந்த தன்மையில் பொறுப்பாக்கப்படவில்லை. பெரும் எண்ணெய் நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திற்கு இன்னமும் அந்த அபாரதத் தொகையையும் கட்டவில்லை.

இதற்கிடையில், பிரிட்டிஷ் பெற்றோலியம் இப்பொழுது ஏராளமான இலாங்களை அடைந்துவருகிறது. நிறுவனம் 2011ல் $26 பில்லியன் இலாபத்தைக் கண்டு, அதற்கு முந்தைய ஆண்டு ஏற்பட்டிருந்த $4பில்லியன் இழப்பை எடுத்துவிட்டது. எதிர்வரவிருக்கும் ஆண்டுகளில் இது இன்னமும் அதிக இலாபங்களை எதிர்பார்க்கிறது. எண்ணெய் விலைகளோ ஏற்றத்தில் உள்ள நிலையில் புதிய தோண்டும் திட்டங்கள் வரவுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் கடலோரப் பாதுகாப்புப் படை கசிவிக்குப் பின் முதல் தடவையாக பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் தோண்டுதலுக்கு ஒப்புதல் கொடுத்தது. இது நியூ ஓர்லீன்ஸிற்கு தென்மேற்கே 250 மைல் தொலைவில் உள்ளது. டீப்வாட்டர் ஹொரிசோன் பேரழிவு நடந்த மாகோன்டோ பிராஸ்பெக்ட் என்னும் இடத்தை விட 1,000 அடி அதிக ஆழமாகும். ஆர்க்டிக் உட்பட இன்னும் தொலைதூரப் பகுதிகளிலும் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதற்கான தன் முயற்சிகளை நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது.

புதன் கிழமை அன்று பிரிட்டிஷ் பெற்றோலியம் கசிவை ஒட்டி வாழ்க்கை, ஆரோக்கிய பாதுகாப்பு ஆகியவற்றில் பாதிக்கப்பட்டிருந்த 100,000 மீனவர்களுடன் $7.8 பில்லியன் மதிப்பிற்கு ஒரு உடன்பாட்டைக் கண்டது. இந்த உடன்பாடு சேதங்களுக்காக அது ஒதுக்கி வைத்திருந்த $20 பில்லியனையும் முழுமையாகக் கொடுக்கக்கூடும் என்ற ஊகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தூய நீர் சட்டத்தின்படி (Clean Water Act), நிறுவனம் அபராதங்களாகக் கிட்டத்தட்ட $17 பில்லியனைக் கொடுக்க நேரிடும். ஆனால் இதைவிட மிகவும் குறைவாகத்தான் கொடுக்கப்படலாம் என்ற நம்பிக்கையில் நிறுவனம் இதற்காக $3.5 பில்லியனைத்தான் ஒதுக்கியுள்ளது.

பிரிட்டிஷ் பெற்றோலியம் விரைவில் இலாபம் அடையத் தொடங்கி, பேரழிவிற்கு வழிவகுத்த ஆபத்தான செயற்பாடுகளை மீண்டும் மேற்கொண்டிருப்பது ஒபாமா நிர்வாகத்தின் செயல்களால்தான் என்று கூறுமுடியும். கசிவிற்கு முன்பும், கசிவின்போதும், கசிவிற்குப் பின்பும் அமெரிக்க அரசாங்கம் பெரும் எண்ணெய் நிறுவனத்தின் பாதுகாவலன் போல்தான் செயல்பட்டது.

மற்ற கணக்கிலடங்கா திட்டங்களைப் போலவே, பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் டீப்வாட்டர் ஹொரிசோன் தோண்டுதல் திட்டம் அரசாங்கத்தால் விரைவில், முதலில் புஷ்ஷின் கீழும் பின்னர் ஒபாமாவின் கீழும் அனுமதிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வு ஏதும் நடத்தப்படாமல் நிறுவனம் செயலைத் தொடக்க அனுமதிக்கப்பட்டது. ஒபாமாவின் உள்துறைச் செயலர் கென் சலாசர் இச்செயற்பாட்டைத் தாமதித்திருக்கக் கூடிய நீதிமன்றத் தீர்ப்பை எதிர்ப்பதில் தலையீடு செய்திருந்தார்.

டீப்வாட்டர் ஹொரிசோன் குறிப்பிட்ட நேரத்திற்குப் பதிலாக தாமதமாகச் செயற்பாட்டிற்கு உட்பட்ட நிலையில், பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் நிர்வாகிகள் செலவுகளைக் குறைக்கவும், பாதுகாப்பு முறைகளை ஒதுக்கிவைக்கவும் பல டஜன் கணக்கான குறிப்பிட்ட முடிவுகளை எடுத்தனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இவற்றைப் பொருட்படுத்தவில்லை, எந்த வினாக்களையும் எழுப்பாமல் நிறுவனத்தின் திட்டங்களுக்கு இசைவு கொடுத்தனர்.

பேரழிவு தாக்கியவுடன், வெள்ளை மாளிகை நிறுவனத்திடமே அனைத்துத் தூய்மைப்படுத்துதல், மற்றும் மீட்புப் பணிகளை பொறுப்புவிட்டுவிட்டது; இது பிரிட்டிஷ் பெற்றோலியத்தை சான்றுகளைத் திரிப்பதற்கு அனுமதித்தது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு நிறுவனங்களும் கடலோரப் பாதுகாப்புப் படைப் பிரிவுகளும் கிட்டத்தட்ட நிறுவனத்தின் துணைஅமைப்புக்கள் போல் மாற்றப்பட்டன; கசிவைத் தொடர்ந்த சில மாதங்களுக்கு நிறுவனங்களுக்கு, வளைகுடாக் கடலோரப் பகுதியில் கிட்டத்தட்ட சர்வாதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் இருந்தே ஒபாமா நிர்வாகம் பேரழிவு எந்த வகையிலும் கடற்பகுதியில் எண்ணெய் எடுப்பது விரிவாக்கப்படும் என்ற அதன் உறுதிப்பாட்டைப் பாதிக்காது என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது. பேரழிவிற்கு மூன்று நாட்கள் பின்னர், ஏற்கனவே அது 11 பேர்களைக் கொன்றிருந்தாலும்கூட, வெள்ளை மாளிகையின் செய்திச் செயலர் ரோபர்ட் கிப்ஸ் ஊடகத்திடம் கூறினார், நமக்குக் கூடுதலான உற்பத்தி தேவை.... இதுதான் முதல் விபத்தாக இருக்கும் என்றோ அல்லது கடைசி விபத்தாக இருக்கும் என்றோ நான் ஒன்றும் சந்தேகிக்கவில்லை.

வெடிப்பிற்குப் பல வாரங்களுக்குப் பின், அரசாங்கமும் செய்தி ஊடகமும் சற்றும் எவ்வித விமர்சனமும் அற்று பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் தவறான, தனக்கே உதவியான, அதன் அளவு மற்றும் விளைவுகள் என்று கசிவு பற்றிய அளவின் மதிப்புக்களை ஏற்று, அதைப் பரப்பியும் வந்தன. இத்தவறான தவகல் விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள் மற்றும் பிறரைப் பேரழிவைக் கட்டுப்படுத்தத் தேவையான அவசரக்கால நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து தடுப்பதில் முக்கியப் பங்கைக் கொண்டிருந்தது.

மறைக்க முடியாத அளவிற்கு பேரழிவின் தன்மை மிகப் பெரிதாக ஆனபின், நிர்வாகம் பிரிட்டிஷ் பெற்றோலியத்தையும் அதன் நிர்வாகிகளையும் பாதுகாப்பதற்குப் பரபரத்தது. பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் ஒப்புதலுடன் அனைத்து அதிகாரமும் கொண்டிருந்த கென்னத் பீன்பெர்க் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய நிதியை மேற்பார்வையிடுவார் என்று “Independent”  பத்திரிகை கூறியது. வரம்புகளை அவர் குறைக்க முற்படுகையில், தன் நிலைப்பாடு முதலீட்டாளர்களுக்கு உதவும் அடையாளமாக இருக்கும் என்று அவர் அறிவித்தார்.

பிரிட்டிஷ் பெற்றோலியத்தினால் ஏற்பட்ட பேரழிவை அரசாங்கம் எதிர்கொண்டவிதம் நிதிய நெருக்கடியை அது முகங்கொடுத்ததற்கு ஒப்பானதாகத்தான் இருந்தது. பொறுப்பற்ற முறையில் இலாபத்தை அதிகரிக்க வேண்டும் என்னும் உந்துதலில் பெருநிறுவனங்கள் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலின்மீதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சிறிதும் அச்சமின்றித் தங்கள் குற்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்தின. அரசாங்கம் இதற்குப் பாதுகாப்புக் கொடுத்தது. இறுதியில் அவை முன்னையும்விட அதிக இலாபத்தைத்தான் சம்பாதித்தன.

பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் பேரழிவும் அதன் பின் நடந்தவையும், முதலாளித்துவ அமைப்புமுறை பற்றிய குற்றச்சாட்டுக்கள் ஆகும். இம்முறை வாழ்வின் அனைத்துக் கூறுபாடுகளையும் ஒரு சலுகை பெற்ற உயரடுக்கின் செல்வக்குவிப்பின் தேவைக்கு அடிபணியவைக்கின்றது. ஒரு நாகரிக வாழ்வின் அடிப்படைத் தேவைகள் ஒரு பெருநிறுவன, நிதியப் பிரபுத்துவத்தின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் ஒரு முறையுடன் இயைந்து நிற்க முடியாது.

பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் சக்தி முறிக்கப்படும்வரை, சமூகம் இன்னும் பெரும் பேரழிவுகளைத்தான் எதிர்பார்க்க முடியும். உண்மையில், வரலாற்றில் மோசமாக எண்ணெய்க் கசிவு நிகழ்வு ஓராண்டிற்குப் பின் ஜப்பானில் புகுஷிமா அணுக்கரைப்பு ஏற்பட்டது. இது அணுச்சக்தித் துறையிலேயே இரண்டாம் மோசமான பேரழிவு ஆகும். மேலும் கடந்த ஆண்டில் சீனாவில், பிரேசில் கடல் பகுதிக்குச் சற்றுத் தள்ளி மற்றும் வட கடலில் என மூன்று குறிப்பிடத்தக்க எண்ணெய்க் கசிவுகள் நடந்துள்ளன.

பிரிட்டிஷ் பெற்றோலியத்தின் பேரழிவு, சோசலிசத்திற்கு ஆதரவான ஒரு வாதம் ஆகும். பூகோளமயமான, சிக்கலான, ஒன்றுடன் ஒன்று இடைத்தொடர்புடைய தற்கால வெகுஜன சமூகம் இனியும் பகுத்தறிவற்ற, பெரும்குழப்பம் நிறைந்த, சமூகத்திற்கு கேடு கொடுக்கும் இலாப உந்துதுல், தனியார் செல்வக்கொழிப்பு ஆகியவற்றிற்கு அடிபணிய செய்யப்படக்கூடாது. பெருநிறுவனங்கள் தனியார் கரங்களில் இருந்து அகற்றப்பட்டு சமூகத்தின் முழு ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.