World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Washington’s real concerns over the Afghanistan atrocity photos

ஆப்கானிஸ்தான் கொடூரப் புகைப்படங்கள் குறித்த வாஷிங்டனின் உண்மையான கவலைகள்

Bill Van Auken
20 April 2012
Back to screen version

உறுப்புக்கள் சிதறிய ஆப்கானியர்களின் சடலங்களுடன் இளம் அமெரிக்கப் படையினர் களிப்புடன் புகைப்படத்திற்கு காட்சி கொடுப்பது, ஒரு தசாப்த போர் குறித்த வெறுப்பூட்டும் ஆனால் துல்லியமான பிரதிபலிப்பையும் அது அமெரிக்க இராணுவத்தின் மீது கொடுத்துள்ள தளரச்சியின் தாக்கத்தையும் காட்டுகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் புகைப்படங்களைப் பிரசுரிப்பதைத் தடுப்பதற்கு பென்டகனும் ஒபாமா நிர்வாகமும் பெரும் அழுத்தங்களை கொடுத்தன. டைம்ஸிற்குக் கொடுக்கப்பட்ட 18 படங்களில் இரண்டு மட்டுமே அச்சேறின. 2010ல் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம், 82வது வான்பிரிவு 4வது பிரிகேட் போரிடும் குழுவின் ஏளனத்துடன் சிரிக்கும் ஒரு படையினன் தன் தோள்களில் இறந்த ஆப்கானியரின் துண்டிக்கப்பட்ட கையை வைத்துக்கொண்டுள்ளதாகும். மற்றொன்று இரு படையினர் ஒரு இறந்த தற்கொலைதாரியின் கால்களை உயர்த்திக் காட்டி வெற்றிக்கு அடையாளமாக கட்டை விரலையும் உயர்த்தி நகைத்துக்கொண்டிருப்பவர்களுடையது ஆகும்.

இவை 18 புகைப்படங்களில் குறைந்தபட்சக் கொடூரமானவை எனக்கூறப்படுகிறது. மற்றைய புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.

அவை வெளிவந்தவுடன், பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா செய்தி ஊடகத்திடம், ஆப்கானிய மக்களுடனான நம் மக்களுடைய உறவுகளுக்கு மேலும் ஏதும் ஊறு வருவதை நான் விரும்பவில்லை என்றார். வெள்ளை மாளிகையின் செய்திப் பிரிவுச் செயலர் ஜே கார்னே, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ....நிகழ்வைப் பற்றிய இப்புகைப்படங்கள் வெளியிடப்படுவது குறித்த முடிவைப்பற்றி நாம் பெரும் ஏமாற்றம் கொண்டுள்ளோம், என்றார்.

வாஷிங்டனின் பெரும் கவலை, புகைப்படங்கள் வெளியிடப்படுவதுதான் என்று திரும்ப திரும்ப கூறப்படும் இக்கருத்து ஆப்கானியப் பொதுமக்கள் கருத்திற்கு எரியூட்டுவதுடன், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் துருப்புக்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த தூண்டும் என்பதும் ஒரு பொய்யை அடித்தளமாகக் கொண்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் முதல் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பார்த்துத்தான் ஆப்கானியர்கள் தங்கள் நாட்டின்மீதான வெளிநாட்டு ஆக்கிரமிப்பை வெறுப்பர் என்று இல்லை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆக்கிரமிப்பு நீடித்துள்ளதுடன், நூறாயிரக்கணக்கான இறப்புக்களை ஏற்படுத்தி, இதைத்தவிர அன்றாட அவமானங்களும், அடக்குமுறைகளும் எதிர்கொள்ளப்படுகின்றன. ஆப்கானியர்கள் அத்தகையதொரு நிலையில் வாழ்கின்றனரே ஒழிய, வெறும் செய்தித்தாளைப் படித்து அறிந்து கொள்ளத் தேவையில்லை.

சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானின் மீது முடிவிலாக் கொடூரங்கள் இழைக்கப்படுதலின் பாதிப்பு எப்படி அமெரிக்க, உலக மக்களின் கருத்தில் எவ்வாறான தாக்கத்தை கொண்டிருக்கும் என்பதுதான் வாஷிங்டனின் உண்மையான கவலையாகும். அமெரிக்காவில் போருக்கு எதிர்ப்பு என்பது மிக அதிகளவில் உள்ளது. 30% மக்கள்தான் போரிடுவது உகந்ததே என்று கருதுகின்றனர்.

சர்வதேச அளவில், மனித உரிமைகளுக்காக உலகளாவிய புனிதப்போரில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது என்று இடைவிடாமல் கூறப்படும் மக்கள், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரும் அவர்களுடைய தளபதிகளும் உண்மையில் பாரிய அளவில் கொலைகள், மிருகத்தனம் ஆகியவற்றில் ஈடுபடுதல் என்பதைத்தான் செய்கின்றனர் என்பதைக் காணமுடியும்.  

போர் எதிர்ப்பு உணர்வை எதிர்ப்பதற்கு, அரசாங்கமும் இராணுவமும் தங்களால் முடிந்ததைச் செய்து போர் பற்றிய தகவல்களைக் கட்டுப்படுத்துவதுடன் எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க மக்கள் காணக்கூடிய புகைப்படத் தோற்றங்களையும் கட்டுப்படுத்த முடிந்த வரை செயல்படுகின்றன.

போரைப் பற்றிய புகைப்படங்களைக் கட்டுப்படுத்தும் இவ்வாறான முயற்சிகள் ஒன்றும் புதிதல்ல. ஜேர்மனிய இராணுவத்தின் சாதகமான வெளிப்பாடுகள் மட்டுமே பகிரங்கமாக வர வேண்டும் என்பதற்கு நாஜி ஆட்சி கடுமையாக உழைத்தது. கொடுஞ்சிறை முகாம்கள், ஹிட்லரின் இராணுவங்கள் நடத்திய குற்றங்களின் உண்மையான தன்மையை அது மறைந்தது. கிழக்கு முன்னணியில் படையினர் எடுத்த புகைப்படங்கள் நாஜி குற்றத்தன்மையின் அரக்கத்தனத் தன்மையைப் பரந்த முறையில் ஜேர்மனியப் பொதுமக்கள் அறிந்துகொள்வதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தன.

மூன்றாம் குடியரசை (Third Reich) விடச் சற்றும் குறையாத வகையில், வெள்ளை மாளிகையும், பென்டகனும் புகைப்படத் தோற்றங்கள் போரின் உண்மையான தன்மையைச் சக்திவாய்ந்த வகையில் வெளிப்படுத்தும் என்பதை நன்கு அறியும். இவ்வகையில்தான் வியட்னாமில், நேபாம் தாக்குதலில் கடுமையாக தீக்காயமுற்ற ஒன்பது வயதுப் பெண்ணின் புகைப்படங்களோ, மை லையில் புதைக்குழிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சடலங்களின் புகைப்படமோ இருந்தன. ஈராக்கில் நடந்த ஆக்கிரமிப்புப் போர் இறுதியில் அபு கிரைப்பில் கொடூரச் சித்திரவதை, பாலியல் இழிவு ஆகியவை பற்றிய மோசமான படங்களில் இருந்து பிரிக்க முடியாமல் போயிற்று.

சக்திவாய்ந்த பெருநிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதும் மற்றும் செல்வந்தர்கள், சக்திவாய்ந்தவர்களின் விசுவாசமிக்க நாய்போல் செயல்படப் பழக்கப்படுத்தப்பட்ட அமெரிக்கச் செய்தி ஊடகங்கள் இச்செயற்பாட்டில் முழுப் பங்காளிபோல் நடந்து கொள்கின்றன. பென்டகன் கொடுக்கும் உத்தியோகபூர்வத் தகவலை செய்தி ஊடகம் விசுவாசமாக திருப்பிக் கூறி, அமெரிக்கப் போர் இயந்திரத்தில் தன்னை ஒன்றிணைந்திருக்கும் சிறப்புசலுகைகளுக்காக எவ்வகை சுதந்திரத்தையும் எளிதில் விட்டுக் கொடுத்துவிடுகிறது.

இவ்வகையில் கிட்டத்தட்ட 2,000 அமெரிக்கத் துருப்பினர் நீடித்த சுதந்திரத்திற்கான செயற்பாடு என்ற பெயரில் நடத்தப்படும் 10 ஆண்டுக்காலப் போரில் உயிரை நீத்துள்ளனர். இதையொட்டி ஆப்கானிஸ்தானில் பணையினரின் அல்லது மரைன்களின் இரத்தம் சிந்தும் புகைப்படங்கள் வெளியிடப்படுவதில்லை. சமீப காலம் வரை, இதேபோன்ற பாதுகாப்பான முறை, வாடிக்கையாக போரில் காயமுற்ற மலைக்குவியல் போன்ற ஆப்கானிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரைப் பற்றிய புகைப்படங்களும் வெளிவராமல் இருந்தன.

கொல்லப்பட்ட ஆப்கானிய எழுச்சிப் போராளிகளுடைய குருதி கொட்டிய சடலங்கள்மீது அமெரிக்க மரைன்கள் சிரித்துக் கொண்டு சிறுநீர் கழிக்கும் வீடியோக் காட்சி போன்றவை, லாஸ் ஏஞ்சல்ஸ்  வெளியிட்ட புகைப்படங்கள் போன்று எங்கு விதிவிலக்குகள் இருந்தனவோ அவை செய்தி ஊடகத்தின் செயற்பாட்டினால் வெளிவரவில்லை. மாறாக தாங்கள் காணும் குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்த தனிப்பட்ட படையினரின் செயலினால்தான் வெளிவந்தன.

வெள்ளை மாளிகை மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டின் சீற்றமான கண்டனங்கள் இருந்தும், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் புகைப்படங்கள் விதிக்கு விலக்காக வந்தவை எனக் கூறுவதற்கு இல்லை. இரண்டு புகைப்படங்களை வெளியிடும் தன் முடிவைப் பற்றிக் கூறுகையில் பத்திரிகை பென்டகன் அதிகாரிகளுடன் நீடித்த பேச்சுக்களைப் பற்றி ஒப்புக் கொண்டுள்ளது. அவற்றில் பல தாமதங்களும், பெரும்பாலான படங்களைச் சுயக் கட்டுப்பாட்டின் மூலம் தணிக்கை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளது. சில படங்கள் அமெரிக்கத் துருப்புக்கள் மனிதத்தலை ஒன்றுடன் விளையாடுவதைக் காட்டுகின்றன; அனைத்துமே அச்சில் வந்தவற்றைவிட மிகவும் அதிர்ச்சி தருபவை ஆகும்.

உத்தியோகபூர்வ வாஷிங்டன் இப்புகைப்படங்களை எதிர்கொண்டுள்ள விதம், அச்சுறுத்தல் மற்றும் எல்லை மீறி செயற்பாடு போய்விடக்கூடாது என்பது இரண்டும் இணைந்தவகையில்தான் உள்ளது. ஒருபுறம், செய்தி ஊடகத்திற்கு ஆப்கானிய மக்களின் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கு அது பொறுப்பாகிவிடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தவிர பென்டகன் உறுதிமொழியளித்துள்ள விசாரணை பத்திரிகைக்கு எந்த படையினர் புகைப்படங்களை கொடுத்தார் என்பதை அடையாளம் கண்டு அவரைத் தண்டிக்கவேண்டும் என்ற ஒருங்கிணைந்த முயற்சி என நம்பும் வகையில் இருக்கிறது. ஒரு குண்டுத்தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர் எப்படி ஈராக்கியக் குடிமக்களைப் படுகொலை செய்தது என்று இரகசிய வீடியோ ஆவணம் தயாரித்து விக்கிலிக்ஸிற்குக் கொடுத்தார் எனக் கூறப்படுவதற்காக, சித்திரவதை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் பிராட்லி மானிங்கிற்குக் கொடுக்கப்படும் அதே தண்டனையை இந்த படையினரும் பெறக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது.

இப்புகைப்படங்கள் அதிகம் ஏதும் கூறவில்லை என மறுக்கும் முயற்சியும் உள்ளது. பானெட்டா, ஆப்கானிஸ்தானிஸ்தானில் தலைமைக் கட்டுப்பாட்டுத் தளபதியான ஜோன் ஆலென், வெள்ளை மாளிகை, நேட்டோ தலைமைச் செயலர் ஆண்டர்ஸ் போக் ரஸ்முசென் ஆகிய அனைவரும் இதே கருத்தையொட்டி அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் நம்மைப் பற்றியவை அல்ல, அமெரிக்க இராணுவத்தின் தரங்கள் இவை அல்ல, அமெரிக்காவின் அடிப்படை மதிப்புக்கள், ஆப்கானிஸ்தானத்தில் நம் பணியின் அடித்தளத்தில் இருக்கும் கொள்கைகள், மதிப்புக்கள் போன்ற சொற்றொடர்கள் அதிகம் கூறப்படுகின்றன.

இவை அனைத்தும் பொருளற்றவை; புகைப்படங்கள் பொய்கூறுவதில்லை. ஆப்கானியப் போரின் இயல்பான தன்மையான அதிர்ச்சிதரும் மிருகத்தனத் தரங்களைத்தான் புகைப்படங்களில் காண்கிறோம்; அதே போல் அதை நடத்த அனுப்பிவைத்திருக்கும் துருப்புக்களின் சிந்தனை தளர்ச்சியையும் காண்கிறோம். இத்தகைய கொடுமைகள் பொதுவாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குழு, கட்டுப்பாடு ஆகியவை முறிதலுடன் தொடர்பு கொண்டவை; தவிர்க்க முடியாமல் இவை முழு மக்களையும் அடக்கும் காலனித்துவவகைப் போர்களின் விளைவு ஆகும்.

போரின் தன்மையை மட்டும் இப்புகைப்படங்கள் வெளிப்படுத்தவில்லை. இன்னும் அடிப்படையாக, அதைத் தோற்றுவிக்கும் சமூகத்தைப் பற்றியும் வெளிப்படுத்துகின்றன. இது, அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் ஆழ்ந்த கவலையைக் கொடுத்துள்ளது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் முடிவில்லாத படுகொலைகள், சித்திரவதைகள், குற்றங்கள் என்று அமெரிக்க இராணுவம் வெளிநாட்டில் நடத்தும் செயல்கள் உள்நாட்டில் சமூக, அரசியல் ஒழுங்குமுறையுடனான அந்நியப்படுதலை கூடியளவில் தூண்டிவிடுகின்றன.

இதற்கு எவர் பொறுப்பு? மனிதனை இழிவுபடுத்துவது என்பது ஜெனிவா மரபுகளை மீறும் செயல் ஆகும்அது ஒரு போர்க்குற்றம் ஆகும். ஆனால் பிற கணக்கிலாக் கொடுமைகளைப் போலவே, இது ஒரு கொள்ளை மற்றும் புவி அரசியல் நலன்களுக்காக நடத்தப்படும் போரின் விளைவு ஆகும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிறுவப்பட்ட நூரெம்பேர்க் நீதிமன்றத்தில், அமெரிக்க அரசாங்க வக்கீல்கள் நாஜிக்களின் குற்றங்கள் அனைத்தும் ஹிட்லர் ஆட்சியின் அரசியல், மூலோபாய நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட ஆக்கிரோஷப் போர்மூலம் வெளிவந்தவை என்று வாதிட்டனர். ஆனால் துல்லியமாக இதைத்தான் அமெரிக்காவும் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் செய்துள்ளது. இக்கட்டம் வரை, ஓர் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகூட இவற்றில் எதற்கும் பொறுப்பாக்கப்படவில்லை.

அமெரிக்காவில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் இக்கொடுமைகள் குறித்த சீற்றமும், வெட்கமும் அடைந்துள்ளபோதிலும் இக்குற்றங்கள் அமெரிக்க மக்களின் பெயரில் செயல்படுத்தப்படுகின்றன. போருக்கு எதிரான போராட்டத்தைப் புதுப்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இராணுவவாதத்தின் ஆதாரமான முதலாளித்துவ இலாப முறைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன, வெகுஜன இயக்கத்தை இது அடித்தளமாகக் கொள்ள வேண்டும். இந்த இயக்கம் அதன் கோரிக்கைகளில் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களில் இருந்த ஆக்கிரோஷப் போர் என்னும் குற்றத்திற்கு பொறுப்பானவர்களை அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கியிருக்க வேண்டும்.