World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Focus of euro crisis shifts to Spain

யூரோ நெருக்கடியின் கவனம் ஸ்பெயினுக்கு நகர்கிறது

By Peter Schwarz
19 April 2012
Back to screen version

கிரேக்கத்திற்கு நேர்ந்த அதே கதியைத்தான் இப்பொழுது ஸ்பெயின் முகங்கொடுக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நிதியச் சந்தைகளின் அழுத்தங்களின் பேரில், அந்நாடு ஒரு கீழ்நோக்கிய சிக்கன நடவடிக்கைகள் மற்றும் மந்தநிலைக்குள் வீழ்கின்றது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து, மரியானோ ராஜோயின் பழமைவாத அரசாங்கம்  37 பில்லியன் யூரோ வெட்டுக்களை வரவு-செலவுத் திட்டத்தில் ஏற்றுள்ளது. இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை கடந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்- GDP- 8.55% என்பதில் இருந்து அடுத்த ஆண்டு 3.0% ஆக்கும். ஏற்கனவே வேலையின்மை விகிதம் 23%, இளைஞர்களிடையே 50% என்று உள்ள ஸ்பெயினின் மக்களைப் பொறுத்தவரை, இது தாங்கிக்கொள்ள முடியாத துன்பங்களை கொடுக்கும்.

இத்தகைய கடுமையான சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுள்ள போதிலும்கூட, நிதியச் சந்தைகள் நாட்டின் மீது தங்கள் அழுத்தங்களை முடுக்கிவிட்டுள்ளன. திங்களன்று 10 ஆண்டு அரசாங்கப் பத்திரங்கள் மீதான வட்டி விகிதங்கள் 6%க்கும் மேலாகச் சென்றன. இது ஐந்து மாதங்களில் மிகவும் அதிகமானது ஆகும். இந்த மட்டம் மிகவும் கடினமாகும். கிரேக்கம், அயர்லாந்து மற்றும் போர்த்துக்கல் ஆகியவை தங்கள் அரசாங்கப் பத்திரங்கள் வட்டி விகிதங்களில் இதேபோன்ற அளவை அடைந்தபோது சர்வதேச உதவியை நாடின.

வட்டி விகிதங்களில் ஏற்றத்திற்கான காரணம் அரசாங்கத்தின் கடுமையான சிக்கன நடவடிக்களினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஆழ்ந்த மந்த நிலையாகும். சர்வதேச நாணய நிதியம் ஸ்பெயினில் இந்த ஆண்டிற்கான பொருளாதாரச் சரிவு 1.8% என இருக்கும் என்று கணித்துள்ளது. யூரோப்பகுதி முழுவதற்குமே சர்வதேச நாணய நிதியம் 0.3 சதவிகிதச் சுருக்கத்தைத்தான் கணித்துள்ளது. இதன் விளைவாக, வேதனை தரும் வெட்டுக்கள் இருந்தபோதிலும்கூட, வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையில் இலக்கு கொள்ளப்பட்டுள்ள குறைப்பை நிறைவேற்றப்பட முடியாததுடன் கடன்களும் தொடர்ந்து அதிகரிக்கும்.

மந்த நிலையும் தீவிரமாகியுள்ள தன்மையில் மிகப் பெரிய விற்கமுடியாத சொத்துக்கள், பெறுமதியற்ற அடைமானச் சொத்துக்கள் என்ற குவியலில் உள்ள ஸ்பெயினின் வங்கிகளுடைய நெருக்கடியும் தீவிரமாகியுள்ளது. கிட்டத்தட்ட ஆட்களற்ற 700,000 அடுக்கு மனைவீடுகள் வாங்குவோருக்காகக் காத்திருக்கின்றன. அடைமானங்கள், கிட்டத்தட்ட 176 மில்லியன் யூரோ என்று நிலுவையில் உள்ளன. 2002-2008ல் சொத்துக்கள் குமிழி வெடித்ததின் விளைவுதான் இது.

மொத்தத்தில் ஸ்பெயினில் தனியார் கடன் மொத்தமாக 1.8 டிரில்லியன் யூரோ என்று உள்ளது. மந்த நிலையை ஒட்டி, அடைமானங்கள், கடன்கள் ஆகியவற்றிற்கான தொகையைத் திருப்பிக் கட்டமுடியாத ஏராளமான கடன் வாங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வங்கிகள் தாங்கள் உத்தரவாதமாக வைத்திருக்கும் விற்பனையாகாத சொத்துக்களின் மதிப்பை தமது பதிவேடுகளில் இருந்து தள்ளுபடி செய்ய நேரிட்டுள்ளது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பொருளாதார வல்லுனர்கள், ஸ்பெயினும் ஐரோப்பாவும் சிக்கன நடவடிக்கைகளின் விளைவாக இன்னும் ஆழ்ந்த மந்தநிலையில் தள்ளப்பட்டுவிடக்கூடும் என்று எச்சரிக்கின்றனர். அமெரிக்கப் பொருளாதார வல்லுனர் ஜோசெப் ஷ்ரீகிலிட்ஸ் பேர்லினில் ஒரு மாநாடு நடக்கும் நேரத்தில் கூறினார்: ஸ்பெயின் சேமிப்ப்பதன் மூலம் மரணமடைதல் என்பது கண்டத்திற்கு ஒரு தீர்வு ஆகாது.  அவருடைய சக ஊழியர் பரி ஐசன்கிரீன் செலவு, வளர்ச்சி இரண்டும் இல்லாவிட்டால், ஐரோப்பிய பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏதும் கிடையாது என்றார்.

 

ஷ்ரீகிலிட்ஸ் ஐப் போல் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றுள்ள போல் க்ருக்மனும் நியூ யோர்க் டைம்ஸில்  ஐரோப்பிய அரசியல்வாதிகள் முழுக் கண்டத்திற்கும் பொருளாதாரத் தற்கொலையைத்தான் கொடுக்க உள்ளனர் என்று கூறியுள்ளார். ஸ்பெயினின் வரவு-செலவுத் திட்ட பிரச்சினைகள் பொருளாதார மந்த நிலையின் விளைவே ஒழிய அதற்கான காரணமல்ல என்று அவர் வாதிட்டுள்ளார்.

ஊக வணிகர் ஜோர்ஜ் சோரோஸ் ஐரோப்பாவின் சிக்கனத் திட்டங்கள் வரலாற்றுத் தன்மை நிறைந்த பெரும் சோகங்களுக்கு வழிவகுக்கக் கூடும் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரான கிறிஸ்ட்ரின் லகார்ட் கூட ஸ்பெயினின் அரசாங்கம் மிக விரைவில் சிக்கன நடவடிக்கையை நாடக்கூடாது என்றும் வளர்ச்சி உந்துதல்களுக்கு இடம்கொடுக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். ஆனால் இந்த உந்துதல்கள் வரவு-செலவுத் திட்டத்திற்குச் சுமையாகக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய கருத்துக்கள் பிரஸ்ஸல்ஸின் எதிர்ப்பு, குறிப்பாக பேர்லினின் எதிர்ப்பு ஆகியவற்றால் பொருட்படுத்துவதில்லை. இவை சமரசத்திற்கு இடமில்லாத சிக்கனக் கொள்கையை வலியுறுத்துகின்றன. ஜேர்மனிய அரசாங்கம் ஸ்பெயினின் சிக்கன நடவடிக்கைகளில் தடுமாற்றம் ஏற்பட்டால் பாரிய நிதியுதவி வழங்க வேண்டும் என்பது குறித்து அச்சம் கொண்டுள்ளது.

யூரோப்பகுதியின் நான்காம் மிகப் பெரிய பொருளாதாரம் நிறைய மோதல்களுக்குப் பின் ஐரோப்பிய அரசாங்கங்கள் மார்ச் மாதம் ஒப்புக்கொண்டுள்ள ESM எனப்படும் ஐரோப்பிய உறுதிப்பாட்டு இயக்கமுறையில் இருந்து ஆதரவை நாடினால், அதன் திறன் விரைவில் சளைத்துவிடும். ESM கிட்டத்தட்ட 800 பில்லியன் யூரோ நிதியைக் கொண்டுள்ளது. ஒரு பகுதி ஏற்கனவே கிரேக்கம், போர்த்துக்கல், அயர்லாந்து ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஸ்பெயினின் பொதுக் கடனோ 700 பில்லியன் யூரோ என்று உள்ளது. இதில் 180 பில்லியன் யூரோக்கள் இந்த ஆண்டு கடன் நிதிகளுக்காகத் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.

மீட்பு நிதியில் இருந்து ஸ்பெயின் உதவி கேட்டால், நிதியச் சந்தைகளின் அடுத்த இலக்கு இத்தாலியாகக் கூடும். அங்கு பொதுக்கடன் கிட்டத்தட்ட 2 டிரில்லியன் யூரோ என்று உள்ளது.

லகார்ட், சோரோஸ், க்ருக்மன் ஆகியோர் சிக்கன நடவடிக்கைகளின் மையத்தானத்தில் உள்ள சமூகநலச் செலவுகள், ஊதியங்கள் மற்றும் வேலைகளில் வெட்டுக்கள் ஆகியவற்றை எதிர்க்கவில்லை. அவர்கள் வளர்ச்சி உந்துதல்கள் என்று கூறுவது பெருநிறுவன இலாபங்களுக்குத் தடை எனக் கருதப்படும் பணிநீக்கங்கள் மற்றும் பிற சமூக உரிமைகள் எனப்படும் சட்டப்பூர்வ பாதுகாப்புக்களை அழித்தலாகும். இத்துடன் தாராளமான நிதியங்களும் வங்கிகளுக்கு அளிக்கப்பட வேண்டும். அமெரிக்க, பிரிட்டிஷ் அரசாங்கங்கள் உதாரணமாகக் காட்டியிருக்கும் இச்செயல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து நிதிகள் இன்னும் உட்செலுத்தப்பட வேண்டும் என்பது இப்பொழுது விவாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ECB வங்கிகளுக்கு மொத்தம் 1 டிரில்லியன் யூரோ மதிப்புடைய கடன்களை கொடுத்தது. இவை 1% வட்டியை மட்டுமே கொண்டிருந்து மூன்று ஆண்டு காலத்திற்குக் கொடுக்கப்பட்டன. இது வங்கிகளுக்குப் பெரும் பரிசு மழை போன்றதாகும்; இவை இந்தப் பணத்தைப் பல ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிக வட்டிவிகிதத்தில் கடனாகக் கொடுத்தன.

குறிப்பாக ஸ்பெயினின் வங்கிகள் ECB யில் இருந்து பெறப்பட்ட எளிய கடன்களைப் பயன்படுத்தி ஸ்பெயினின் அரசாங்கப் பத்திரங்களில் பெரும்பகுதியை வாங்கியுள்ளன. இது அரசாங்க கடன்களுக்கு வங்கிகளை நம்பியிருக்கும் தன்மையை ஆழ்மைப்படுத்தியுள்ளதுடன், தொழிலாள வர்க்கத்தின்மீது இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்தும் வகையில் அரசாங்கப் பத்திரங்களுக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் நிதியச் சந்தைகளுக்கு உறுதிப்பாட்டை அதிகரித்துவிட்டது.

இப்பொழுது பிரஸ்ஸல்ஸ் ESM ல் இருந்து பெறப்படும் நிதியை வங்கிகளைக் காப்பாற்றுவது குறித்து விவாதிக்கிறது. இப்பொழுது கிடைப்பது போல் இந்நிதிகள் இனிக் கிடைக்காதுஅதாவது அரசாங்கங்களுக்கும் அரசாங்கங்கள் மூலமும் வங்கிகளுக்கு. மாறாக அவை நேரடியாக வங்கிகளுக்கு உட்செலுத்தப்ப்டும். இதையொட்டி மந்தநிலையின் விளைவுகளில் இருந்து அவை பாதுகாப்புப் பெறும்.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் லகார்ட் ஸ்பெயினின் வங்கிகள் நிலை குறித்துக் கவலை தெரிவித்து, அவர்களுக்கு மூலதனம் தேவை எனக் கோரினார். எனக்கு மிகவும் கவலையளிப்பது என்னவென்றால், ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய வங்கி மேற்பார்வையாளர்கள், ஸ்பெயினின் வங்கிகள் அவை போதுமான மூலதனத்தைக் கொண்டிருக்கவில்லை, போதுமான ஒரு இடைநிதியைக் கொண்டிருக்கவில்லை என்பது பற்றி கவலைப்படுவதாகும்.... என்று Frankfurter Allgemeine Zeigung பத்திரிகையிடம்  அவர் கூறினார்.

அரசாங்கங்களும் வல்லுனர்களும் நிதியக் கொள்கையின் விவரங்கள் குறித்து உடன்பாடு காணவில்லை என்றாலும், அடிப்படைப் பிரச்சினையில் அவர்கள் உடன்பாடு கொண்டுள்ளனர். அதாவது இந்நெருக்கடியைப் பயன்படுத்தி ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை, பணித்தரங்களை மூன்று தசாப்தங்களுக்கு முன்பு இருந்த நிலையில் தள்ளவிடுதல் என்பதே அது. மந்த நிலை மற்றும் வெகுஜன வேலையின்மை ஆகியவை இந்த இலக்கிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. தொழிற்சங்கங்கள் மற்றும் இடது கட்சிகள், அளிக்கும் முக்கிய உதவியுடன் இது நடத்தப்படுகிறது. இக்கட்சிகள் பரந்த எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி சிதைத்துவிடத்தான் இயங்குகின்றன.

நெருக்கடி அதன் சொந்த இயக்கவியலை வளர்க்கிறது. ஸ்பெயினும் இத்தாலியும் தங்கள் கடன்களுக்கு வட்டி கொடுக்க முடியவில்லை என்றால், ஐரோப்பிய ஒன்றியம் தப்பிப்பிழைப்பது அரிதாகும். ஐரோப்பா ஒரு கடுமையான நிதிய மோதல்கள் மற்றும் வர்க்கப் போராட்டங்கள் ஆகியவற்றை நோக்கிச் செல்லுகிறது. தொழிலாள வர்க்கம் இதை எதிர்கொள்ளத் தயாராக வேணடும்; அதையொட்டி அது அனைத்து முதலாளித்துவ முறை மற்றும் பிற்போக்குத்தன ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்களுடன் பிணைந்துள்ள அமைப்புக்கள், கட்சிகளுடன் முற்றிலும் முறித்துக் கொண்டு ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக போராட வேண்டும்.