WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Financial turbulence mounts as global economy slides deeper into slump
உலகப் பொருளாதாரம் ஆழ்ந்த மந்தநிலைக்குள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் நிதியக்
கொந்தளிப்பு பெருகுகின்றன
Nick Beams
17 April 2012
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகளில் இருந்து எளிதாகப்
பெறப்பட்ட பணம் உட்செலுத்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு பெரும்பாலும் நிதியச் சந்தைகள்
ஒரு ஏற்றத்தைக் கொண்டுள்ளன. ஆனால் காச நோயாளியின் கன்னங்களில் ரோசா வண்ணம் மலர்வது
போல், பங்குகளின் விலைகள் ஏறியுள்ளது, பொருளாதார ஆரோக்கியத்தின் வெளிப்பாடு அல்ல,
மாறாக ஆழ்ந்துபோயுள்ள
நோயின் அறிகுறியாகும்.
ஸ்பெயின் மற்றும் இத்தாலியக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் கடந்த
சில நாட்களில் மீண்டும் தீவிரமாக ஏறியிருப்பதால் காட்சி மாற்றமடைந்துள்ளது. மற்றொரு
ஐரோப்பிய நிதிய நெருக்கடிச் சுற்று அருகில் உள்ளது என்ற எச்சரிக்கைகளுக்கு நடுவே
இது நிகழ்ந்துள்ளது. ப்ளூம்பேர்க் மேற்கோளிட்டுள்ள ஒரு நிதியப் பகுப்பாய்வாளரின்
கருத்துப்படி,
“யூரோ
நெருக்கடி மீண்டும் வந்துவிட்டது”,
வட்டிவிகித உயர்வின் வேகம்
“புதிய
சந்தைப்பீதியின் கூறுபாடுகளை”
வெளிப்படுத்தியுள்ளது.”
ஸ்பெயின் குறித்த சந்தை அச்சங்கள் பிரதம மந்திரி மரியானோ ராஜோய்
அரசாங்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5% க்கு சமமான
வெட்டுக்களை நடத்த உள்ளது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வந்துள்ளன—ஒரு
முக்கிய தொழில்மயமாக்கப்பட்ட நாட்டில் மிகப் பெரிய வெட்டுத்திட்டங்களில் ஒன்றாகும்
இது.
ஆனால் புதிய கொந்தளிப்புச் சுற்றிற்கு ஆதாரம் ஸ்பெயின், இத்தாலி
நிலைமை மட்டும் அல்ல; உலகப் பொருளாதாரம் முழுவதிலும் ஆழ்ந்துள்ள இயக்கச்
சோர்வுதான். உலக நிதிய நெருக்கடி தொடங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரும், எதுவும்
இன்னும் தீர்க்கப்படவில்லை. பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ப்ரூக்கிங்ஸ்
நிறுவனம் தயாரித்துள்ள ஓர் அறிக்கையின்படி,
“உலகப்
பொருளாதாரம் உயிர்கொடுக்கும் கருவிகளை நம்பித்தான் இன்னமும் உள்ளது.”
நிதிநிலைமை ஏராளமான நிதியை நிதிய முறையில் உட்செலுத்துவதின்
மூலம்தான் உயிரோடு தப்பியுள்ளது. ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தின் பேராசிரியர் ஈஸ்வர்
பிரசாத் கருத்துப்படி,
“உலகப்
பொருளாதார நெருக்கடி உறுதியான பொருட்கள் வாங்குதல் இல்லாத நிலைமை, அவற்றின்
மட்டத்தை அடைந்துவிட்ட கொள்கைக் கருவிகளின் செயற்பாடுகள், அதிக மாற்றீடுகள் இல்லாத
நிலை மற்றும் வலுவற்ற சந்தைகளும் அரசியல் உறுதியற்ற தன்மை ஆகியவற்றால் இன்னமும்
தள்ளாடிக் கொண்டுதான் இருக்கிறது.”
கடந்த வாரம் கொடுத்த உரை ஒன்றில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)
நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின்
லகார்ட் உலகப் பொருளாதாரத்தின் இடர்கள்
“உயர்ந்துதான்
உள்ளன”,
“நிலைமை
நலிந்துதான் உள்ளது.”
பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு தரும் கொள்கைகள் தேவை என்று லகார்ட் அழைப்பு
விடுத்துள்ளார். ஆனால் அத்தகைய பேச்சு,
வங்கிகள் மற்றும் உலக நிதிய நிலையங்கள் ஆணையிட்டு, சர்வதேச நாணய
நிதியத்தினால் வலியுறுத்தப்படும் சிக்கனத் திட்டங்களைக் குறித்த
மேற்பூச்சுக்கள்தான்.
இத்திட்டத்தின் விளைவுகள் மிகத் தெளிவாக ஐரோப்பாவில் காணப்பட
முடியும். கிரேக்கம் ஏற்கனவே 1930ளில் இருந்த நிலைமைகளுக்கு ஒப்பத்
தள்ளப்பட்டுவிட்டது; கண்டம் முழுவதும் மந்தநிலைப் போக்குகள் ஆழ்ந்துவிட்டன.
பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின்
(OECD)
சமீபத்திய மதிப்பீடு 2012ல் பொருளாதார வளர்ச்சி கிட்டத்தட்ட பூஜ்யம்
என்பதைச் சுட்டிகாட்டியுள்ளது. மிக முக்கியமான ஜேர்மனியப் பொருளாதாரம் 0.1 சதவிகித
வளர்ச்சியை மட்டுமே இந்த ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் காணும் என
எதிர்பார்க்கப்படுகிறது; மிக நலிந்த 1.5 % ஐ இரண்டாம் காலாண்டில் எட்டலாம் என்றும்
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸைப் பொறுத்தவரை, இயைந்த புள்ளிவிவரங்கள் சுருக்கம் 0.2
சதவிகிதம், 0.9% ஏற்றம் என உள்ளன. இத்தாலி இரு காலாண்டுகளிலும் முறையே 1.6%, 0.1
சரிவைக் காணக்கூடும். ஐக்கிய இராச்சியத்தில் 0.4 சுருக்கம் முதல் காலாண்டிலும்,
அடுத்த காலாண்டில் 0.5 ஏற்றமும் அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு அமெரிக்க
வளர்ச்சி
“வலுவாக
இருக்கும்”
என்று கணித்திருக்கையில், சமீபத்திய வேலைபற்றிய அறிக்கை இதை
பொய்யாக்குகிறது; அதன்படி அமெரிக்கப் பொருளாதாரம் மார்ச் மாதம் 120,000 வேலைகளை
மட்டுமே உருவாக்கியது: இது முந்தைய மூன்று மாதங்களின் வளர்சியில் பாதிக்கும்
குறைவாகும்.
செப்டம்பர் 2008ல் உலக நிதிய முறிவின் ஆரம்பத்தில் இருந்தே,
முதலாளித்துவ முறைக்கு ஏற்றம் காண விரும்புவோர் சீனாவின் வளர்ச்சியை புதிய பாதைகள்
திறக்கலாம் என்பதற்குச் சான்றாகச் சுட்டிக் காட்டினர், ஒருவேளை இது
“ஆசிய
நூற்றாண்டு”
என்பதற்குக்கூட வழிவகுக்கலாம் என்றனர். ஆனால் இந்த ஊகங்கள் சீனாவின்
பொருளாதார வளர்ச்சி உலகப் பொருளாதாரத்தைத்தான் முற்றிலும் நம்பியுள்ளது என்ற
உண்மையை புறக்கணித்துள்ளன. இத்தொடர்புகள்தான் சீனாவின் விரிவாக்கத்திற்கு
மையத்தானமாக இருந்தன; அவை இப்பொழுது ஆழ்ந்துபோகும் உலகச் சரிவின் மாற்றும்
கருவியாகிவிட்டன.
சீனாவில் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு
8.1% என்று அறிவிக்கப்பட்டது; இது 11 காலாண்டுகளில் மிகவும் குறைவு, அரசாங்கத்தின்
கணிப்பான 8.4% ஐ விடக் குறைவாகும். விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவு ஏதோ ஒரு முறை
ஏற்படும் நிகழ்வு அல்ல. சீனாவின் பொருளாதார விரிவு 2010ன் கடைசி மூன்றுமாத
காலத்தில் இருந்து ஒவ்வொரு காலாண்டும் நலிந்து போகும் அடையாளத்தைத்தான்
காட்டியுள்ளது. மொத்த இறக்குமதிகள் 5.3% மட்டுமே உயர்ந்தன; எண்ணெய் இறக்குமதிகள்
5.8% குறைந்துவிட்டன. பித்தளை 4.6% குறைந்து, இரும்புத் தாதுப் பொருள் இறக்குமதி
3.2% குறைந்துவிட்டது.
உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்கள்
உத்தியோகபூர்வ விகிதங்களைவிட குறைவாகவே இருக்கலாம். போர்பஸில்
வெளியிடப்பட்டுள்ள ஒரு பகுப்பாய்வின்படி, பொருளாதாரத்தின் மற்ற பிரிவுகளைவிட
வளர்ச்சியில் அதிகமாக இருக்கும் மின்சக்தி உற்பத்தி 7.1% தான் உயர்ந்தது; இதன்
பொருள் உண்மையான மொத்த வளர்ச்சி விகிதம் 6% என்ற குறைந்த நிலையில் இருக்கலாம்
என்பதாகும்.
“தற்பொழுதுள்ள
இயக்கமுறை கீழ்நோக்கியதாகும்; ஒவ்வொரு நாளும் நாம் மாற்றுவதற்கு மிகவும் கடினமான
இயக்க நிலையைத்தான் காண்கிறோம்”
என்று கட்டுரை குறிப்பிட்டுள்ளது.
இதே போக்குகள்தான் இந்தியாவிலும் காணப்படுகிறது. அங்கு தொழில்துறை
வளர்ச்சி, முதலீடு ஆகியவற்றிலும் விரைவான சரிவு உள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சி
7%க்கும் கீழே போய்விட்டது. ஐரோப்பிய நெருக்கடியின் பாதிப்பு ஐரோப்பாவிற்கு
ஏற்றுமதி விற்பனைப் புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்கிறது. இது மார்ச் மாதம் 19.5%
என்றுதான் 2010-11ல் இருந்த 37.6% உடன் ஒப்பிடும்போது உள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் காணப்படும் ஆழ்ந்த மந்தநிலைப் போக்குகள்,
உடனடியான அரசியல் தாக்கங்களை கொண்டுள்ளன. இவை சிக்கன நடவடிக்களைச் சுமத்துதலுடன்,
பணிநீக்கங்கள், பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் ஊதிய வெட்டுக்கள் என்பவற்றுடன்
இணைந்து தொழிலாள வர்க்கத்தின்மீது சர்வதேசத் தாக்குதலை தீவிரப்படுத்தும். இந்த
முடுக்கிவிடப்படும் தாக்குதலை தொழிலாள வர்க்கம் தன்னுடைய சொந்த அரசியல்
மூலோபாயத்தின் மூலம்தான் எதிர்த்து நிற்க முடியும்; அதற்கு சர்வதேச தொழிலாளர்
ஐக்கியம் என்னும் தளம் தேவை. அது தொழிலாளர் அரசாங்கம் மற்றும் சோசலிசத்திற்கான
போராட்டத்தை அடித்தளமாக கொள்ள வேண்டும். |