World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Election in North Rhine-Westphalia: Parties compete on welfare cuts

வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா தேர்தல்: பொதுநலச் செலவுகள் குறைப்பிற்கு கட்சிகள் போட்டியிடுகின்றன

By Dietmar Henning
17 April 2012
Back to screen version

மே 13ம் திகதி, ஜேர்மனியில் அதிக மக்கள் வாழும் மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் (NRW)  மாநிலத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. பெருகும் வறுமை, வேலையின்மை மற்றும் சிதையும் நகரங்கள் என்னும் சமூகப் பிரச்சினைகள் பிரச்சாரத்தில் முக்கிய கவனமாக இருக்கும்.  

முதலமைச்சர் ஹெனலோர கிராவ்ட் (SPD) தலைமையிலான வெளியேறும் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கூட்டணியின் மாநில அரசாங்கம் மார்ச் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தந்திரத்தைப் பயன்படுத்தி முன்கூட்டிய தேர்தலைக் கொண்டு வந்தது. மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட உள்ள சமூகநலத் தாக்குதல்களுக்குத் தயாரிப்புக்களை நடத்துவதற்கு ஒரு உறுதியான கூட்டணியைப் பெற வேண்டும் என்பதுதான் தற்போதைய நம்பிக்கையாகும்.

மாநிலமும் அதன் 18 மில்லியன் மக்களும் ஏற்கனவே சமூக அளவில் ஆழமாக பிளவடைந்துள்ளன. மாநிலத்தின் தலைநகரான டுசுல்டோர்ப் மற்றும் சில பெரிய நகரங்களின் பகுதிகள் போன்ற செல்வம் மிக்க பிராந்தியங்கள் வறுமை நிலைமைகளை எதிர்கொள்கின்றன. இத்தகைய வறுமை முன்பு பேர்லினிலும் கிழக்கு ஜேர்மனியிலும்தான் காணப்பட்டிருந்தன. வறுமை நிறைந்த பகுதிகளில் வேலையின்மையும் வறிய நிலையும் பாரியளவில் உயர்ந்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பாக புலம்பெயர்ந்த பின்னணி உள்ளவர்கள், ஒற்றைப் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் என்று உள்ளனர். வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் ஒரு பெற்றோர் உள்ள குடும்பத்தில் அரைப்பகுதி பொதுநல நிதியைத்தான் நம்பியுள்ளனர்.

மேற்கே டியூஸ்பேர்க், கிழக்கே டோர்ட்முண்ட் இவற்றிற்கு இடையே ரூர் பகுதியில் குறிப்பாக நிலைமை பேரழிவுத் தன்மையைக் கொண்டுள்ளது. இங்கு உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 10%க்கும் அதிகமாக உள்ளது. சமூக பூமத்திய ரேகைஎனப்படும் A40 வேகமோட்டார்ப்பாதை பகுதியை வறிய மற்றும் குறைந்த வறியஎன்னும் வகையில் பிரிப்பதாக Süddeutsche Zeitung பத்திரிகை தெரிவிக்கிறது. வடக்கே வறிய நகர்ப்பகுதிகளில் வேலையின்மை 30 முதல் 40% அதற்கும் அதிகம் என்ற நிலையில் உள்ளது.

அறக்கட்டளைகளின் கூட்டு பொதுநலச் சங்கத்தின் தலைமை நிர்வாகியான உல்ரிச் ஷினைடர் பெப்ருவரி மாத இறுதியில் வறிய குழந்தைகள், வறிய பெற்றோர்கள், Hartz IV [பொதுநல சலுகை]  ஐ நம்பியுள்ள குடும்பங்கள்என்று ஓர் ஆய்வை அளித்துள்ளார். இதில் அவர் ரூர் பகுதியை சிறப்புப் பிரச்சினைகள் பகுதி என்று விவரிக்கிறார்.

ஷினைடரின் கருத்துப்படி ரூர் பகுதியில் நம்பியுள்ள வீடுகளில்  Hartz IV  தங்கியுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கிழக்கு ஜேர்மனியில் உள்ள குழந்தைகளைவிட 25% அதிகம் ஆகும். கெல்சன்கியர்சன் நகரில் இது 34.4% என உள்ளது. இது பேர்லினை விட அதிகமாகும்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வேலை வெட்டுக்களும் உள்ளூராட்சிகளின் பரிதாப நிதி நிலைமையும் நிலமையை இன்னும் மோசமாக்கும்.

ஏற்கனவே வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் உள்ள 396 நகரசபைகளில் தான் சமப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டங்களை முன்வைத்துள்ளன. மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களில் இருந்து மாற்றப்பட்டுவிட்ட செலவினங்களால் உள்ளூராட்சி சபைகள் பெருகிய இடரில் உள்ளன. முதலமைச்சர் கிராவ்ட் இன் கீழ் உள்ள மாநில அரசாங்கம் வரி வருவாய்களில் நகரசபைகளுக்குக் கொடுக்கும் பங்கை மறுக்கின்றன. இதையொட்டி உள்ளூராட்சி சபைகளுக்கு அவை உதவுவதில்லை.

இதுதான் சமூக ஜனநாயக-பசுமைக் கட்சி அரசாங்கத்தின் நகரசபை நிதிகளுக்கான உறுதிப்பாட்டு உடன்படிக்கையின்விளைவாகும். நகரசபைகளுக்கு இத்தகைய உதவி எனக் கூறப்படுபவை கிரேக்க மீட்புப் பொதிவகைகளின் மாதிரியில்தான் உள்ளது. அதிகம் கடன் பெற்றுள்ள 34 நகரசபைகள், அவற்றுள் பல ரூர் பகுதியில் உள்ளவை, 350 மில்லியன் யூரோக்கள் ஆண்டிற்கு கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவையும் பல மில்லியன்கள் குறைக்கும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தினால்தான் என்ற விதியின்கீழ். சட்டப்படி இத்தகைய உதவியை நகரங்கள் பெறுவது நிராகரிக்கப்படுகிறது. இதையொட்டிய சிக்கன நடவடிக்கைகளின் மூலமும் அவை பயன் பெறுவதில்லை.

சமூகநலச் செலவுகளில் இன்னும் கூடுதல் வெட்டுக்கள், உள்கட்டுமானம் பெருகிய முறையில் புறக்கணிக்கப்படுவது ஆகியவை விளைவுகளாகும். உட்புற நீச்சல் குளங்கள், நூலகங்கள், அரங்குகள், பள்ளிகள், இளைஞர் மையங்கள் போன்றவை மூடப்படுகின்றன. ஜேர்மனியிலேயே தலா நபர் கடன் அதிகமாக இருக்கும் ஒபர்ஹெவுசன் நகரில் சமூக ஜனநாயகக் கட்சி ஆதிக்கத்தில் இருக்கும் நகரவை மூன்று நீச்சல் குளங்களை மூடியதுடன், கடைசியாக இருக்கும் நகர்ப்புற இளைஞர் மையத்தையும் மூட இருப்பதாக அறிவித்துள்ளது.

எல்லா நகரவை ஆட்சிகளும் சமீபத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பொதுத்துறை ஊதிய ஒப்பந்தத்திற்கு உடன்பட்டுள்ளன; இது வெட்டுக்களை நியாயப்படுத்துவதற்காக செய்யப்படுவது ஆகும். டோர்ட்முண்ட் நகரத்தின் நிதியாளர் ஜோர்க் ஸ்ரூடமான் (SPD) அடுத்த இரு ஆண்டுகளில் நகரத்திற்குத் தேவைப்படும் கூடுதல் செலவுகளுக்கு வரிகள் மற்றும நகரசபை வசதிகளுக்கு அனுமதிக் கட்டணம் ஆகியவற்றின்மூலம் பெறுவதைத்தான் நம்பியுள்ளது என்றார். எல்லா நகரவைகளும் இதேபோன்ற திட்டங்களைக்கொண்டுள்ளன. பல பொதுத்துறைகளில் ஏற்கனவே வேலைக்குறைப்புக்களைச் செய்துள்ளன. ஆனால் ஸ்ரூடமான் வர்த்தகங்கள் மீதான வரிகளை உயர்த்துவது இயலாது என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

எதிர்வரவிருக்கும் மாதங்களில் இந்த இருண்ட போக்கு அதிகரிக்கத்தான் செய்யும். பல நிறுவனங்கள் மூடல்கள் அல்லது பெரும் பணி வெட்டுக்களைச் செய்தல் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளன. உதாரணமாக 1962 நிலச்சுரங்கங்கள் மூடப்பட்டபின் மறுகட்டமைக்கப்பட்ட போஹும் நகரில் நீண்டகாலமாக உள்ள ஓப்பல் ஆலை கிட்டத்தட்ட 25,000 பேர் உச்சக்கட்டத்தில் வேலையிலிருந்த நிலையைக் கண்டது, இப்பொழுது சுமார் 3,000 தொழிலாளர்களைத்தான் கொண்டுள்ளது. இப்பொழுது அது முற்றிலும் மூடப்பட இருக்கிறது.

ஆலைமுடல் என்பது ஏற்கனவே சிதைந்துள்ள நகரத்தில் நீண்டகால சமூக விளைவுகளைக் கொடுக்கும். ஓப்பலை இன்னும் நம்பி உபரி பாகங்களை விநியோகிக்கும் 15,000 வேலைகள் உள்ளன. வாங்கும் திறன் இழக்கப்படுதல் என்பது இன்னும் பல வேலைகளை வணிகம், பணிகள் ஆகிய துறைகளில் குறைத்துவிடும். தொழில், வணிகக் கூட்டமைப்பின் (IHK) நிர்வாக இயக்குனரான ஹெல்முட் டீகல், “நம் கூட்டமைப்புப் பகுதியில் 40,000 வேலைகள் ஓப்பல் ஆலையை நம்பியுள்ளவை. என்றார்.

சுதந்திர ஜனநாயகக் கட்சியை(FDP)  தவிர அனைத்து பாராளுமன்றக் கட்சிகளும்  போஹும்  ஆலை தொடர்ந்து இயங்கவேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் இது தொழிலாளிகளுக்கு பிரயோசனம் அதிகமற்ற தங்கள் தேர்தல் வாய்ப்புக்களுக்கு உதவும் வகையிலாகும். மேலும் இவர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களுக்கு ஆதரவைக் கொடுக்கின்றனர். சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடது கட்சி இரண்டும் குறிப்பாக தொழிற்சங்கங்களுக்கும், தொழிற்சாலை தொழிலாளர்குழுக்களுக்கு ஆதரவு கொடுக்கும் காரணம் அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸுக்கு நடந்த வழிவகையிலேயே தாக்குதல்கள் தொழிலாளிகள் மீது இங்கும் நடத்தப்படுவதைத் தொடர வேண்டும் என்பதற்குத்தான்.

பாராளுமன்றத்தில் இடது கட்சியின் தலைவரான கிரிகோர் கீஸி கடந்த வாரம் போஹும் இற்கு வருகை புரிந்து, தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களுக்கு தன் ஆதரவை உத்தரவாதம் செய்ய முயன்றார். முன்னதாக கீஸி IG Metall union அழைப்பின் பேரில் டுயிஸ்பேர்க்கில் உள்ள TSTG Rail Technology க்கு வருகை புரிந்தார். இது மூடப்படும் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது. 1984ல் இருந்து செயல்படும் இரயில் தடத் தண்டவாளங்களின் உற்பத்தி நிறுவனம், 1998ம் ஆண்டு Thyssen நிறுவனத்தின் ஆஸ்திரிய Voest-Alpine குழுவால் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு இறுதியில் மூடப்பட உள்ளது. குறைந்தப்பட்சம் 350 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழப்பர்.

கூடியிருந்த TSTG தொழிலாளிகளின் முன்னர், சான்சிலர் அங்கேலா மேர்க்கெலிடம் முன்வைத்த கோரிக்கையை வாசித்தார். அதில், அவர் அந்த தொழிற்சாலையின் முக்கிய வாடிக்கையாளரான தேசிய இரயில் சேவையான Deutsche Bahn AG இன் உரிமையாளர் என்ற வகையில் அரசாங்கம் ஆதரவுகொடுக்கவேண்டும் என அழைப்புவிட்டார். இடது கட்சியினர் SPD,CDU மற்றும் பசுமைக்கட்சிக்கு அழுத்தம்கொடுப்பதன் மூலம் அவற்றை தொழிலாளர்களின் நலன்களுக்கு ஏற்றவாறு இயங்கச்செய்யமுடியும் என்ற நப்பாசையை பரப்ப பரிதாபகரமாக முயல்கின்றது. கீசி போஹும் இல் “SPD எந்த திசையில் செல்லும் மற்றும் அது சமூக ஜனநாயக பாதைக்கு திரும்புவதும் இடதுகட்சியின் பலத்தில்தான் தங்கியிருப்பதாக கூறினார்.

இடதுகட்சி தொடர்பு கொண்டிருந்த முந்தைய அரசாங்கங்களின் செயற்பாடுகள் இத்தகைய கருத்தாய்வுகளால் என்ன எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தெளிவாக்குகிறது. இது குறிப்பாக சமூக ஜனநாயகக் கட்சி- இடதுகட்சிக் கூட்டணி பேர்லின் மாநில அரசாங்கத்தை 2001 முதல் 2011 வரை நடத்தியபோது உண்மையாக இருந்தது: இதைத்தவிர வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் கடந்த இரு ஆண்டுகளாக சிறுபான்மை அரசாங்கம் இடது கட்சியினால்தான் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவின் 2011 வரவுசெலவுத்திட்டம், இடது கட்சியின் ஆதரவிற்கு உட்பட்டிருந்தது; அது 620 மில்லியன் யூரோக்கள் வெட்டுக்களைச் சுமத்தியபோதிலும்கூட. அதேபோல் 2012 ன் வரைவு வரவுசெலவுத்திட்டம் திட்டம், இன்னும் முடிவிற்கு வரவில்லை என்றாலும், உலகளவு சேமிப்பான 750 மில்லியன் யூரோக்களைக் கொள்ளக்கூடும்.

ஆனால் மாநில அரசாங்கத்தின் திட்டங்கள் இன்னும் அதிகமாகச் செல்லுகின்றன. 2009ம் ஆண்டு SPD-CDU பெரும் கூட்டணியினால் அமைக்கப்பட்ட மத்திய அரசாங்கம் அரசியலமைப்பு சட்டத்தில் எழுதியது போல் கடன் வரம்பு 2020 வரை புதிய கடன்களை மாநிலங்கள் மேற்கொள்ளக்கூடாது என வரையறுத்துள்ளது. 2012-2017 சமூக ஜனநாயக கட்சி அரசாங்கத் திட்டம் என்னும் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவின் ஆவணத்தில் கட்சி கடன் வரையறையை நிலைநிறுத்தப் போவதாக உறுதியளித்துள்ளது.

வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் சமூக ஜனநாயக கட்சி இதுபற்றித் தீவிரமாக உள்ளது என்பது மாநிலப் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட உடன், புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபின், வெளியேறும் மாநிலப் பிரதமர் கிராப்வ் முன்னாள் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா  பிரதமமந்திரி பீர் ஸ்ரைன்ப்ரூக் (SPD) உடைய ஆதரவைக் கேட்டார் என்ற உண்மையிலும் காணப்படலாம். 2009ம் ஆண்டு CDU உடனான பெரும்கூட்டணியில் கூட்டாட்சி மந்திரி என்னும் முறையில், நிதிய ஒருங்கிணைப்பிற்காக வாதிடும் இவர் சான்ஸ்லர் மேர்க்கெலுடன் இணைந்து கடன் வரம்பைச் சுமத்தும் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

பசுமைக் கட்சியின் முக்கிய வேட்பாளரும் முன்னாள் மாநிலக் கல்வி மந்திரியுமான சில்வியா லோஹ்ர்மன் வரவு செலவுத் திட்டத்தில் இன்னும் ஆழ்ந்த வெட்டுக்களை அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒருமனதாக பசுமைக் கட்சி ஏப்ரல் 2010ல் தான் ஏற்ற தேர்தல் வேலைத்திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புக் கொண்டுள்ளது. இது வரவு செலவுத் திட்டத்தை சமப்படுத்துவதில் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

CDU, FDP, இடது கட்சி என்னும் பிற கட்சிகளும் SPD, பசுமைக் கட்சிகளின் நிதிய ஒருங்கிணைப்பின் நோக்கங்களுக்கு ஆதரவைக் கொடுக்கின்றன. இரண்டாண்டு வரைகாலத்தில், கிராவ்வின் கீழ் உள்ள SPD-Green சிறுபான்மை அரசாங்கம் இடது கட்சியை எப்பொழுதும் நம்ப முடிந்தது. இதனால் 2010, 2011 வரவு-செலவுத் திட்டங்களையும் பெரும்பான்மையுடன் இயற்ற முடிந்தது. சமீபத்தியக் கருத்துக் கணிப்புக்கள் இடது கட்சி 5%தடையைக் கடப்பதில் தோல்வி அடையக்கூடும் எனக் காட்டுகின்றன; இதையொட்டி அது புதிய மாநிலப் பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளைப் பெறாது. இது FDP  க்கும்பொருந்தும் என்பது அநேகமாக உறுதியாகின்றது.

பிராட் கட்சி -Pirate Party-  சிறப்பான செய்தி ஊடக கவனத்தைப் பெறுகிறது; சமீபத்தியக் கருத்துக் கணிப்புக்களின்படி கிட்டத்தட்ட மொத்த வாக்குகளில் 13% மாக பசுமைவாதிகளைவிடக் கூடுதலாகப் பெறக்கூடும். பிராட் கட்சி மற்ற கட்சிகளுடன் ஒத்துழைக்கும் தன் விருப்பத்தை அறிவித்துள்ளது. இந்த வார இறுதியில் இது தன்மாநிலத் தேர்தல் திட்டம் பற்றி உடன்பாட்டைக் கொள்ளும். அதுவும்கூட பிரச்சாரத்தின் மையத்தில் நிதிய ஒருங்கிணைப்பை முன்வைத்துள்ளது.

வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு, ரைன் மற்றும் ரூர் பிராந்தியங்களில் தேர்தல்கள் மத்திய ஆட்சி மட்டத்திலும் பாதிப்பைக் கொள்ளும் என்பது தெளிவாகிறது. அனைத்து நடைமுறைக் கட்சிகளும் சிக்கன நடவடிக்கைகள், சமுகநலச் செலவுகளைக் குறைத்தல் பற்றி போட்டி போடுகின்றன. எப்படி அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் என்பது குறித்த பிரச்சினையை சுற்றித்தான் முரண்பாடுகள் உள்ளன. இதனால் அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் பொது மக்களுக்கு கேடுவிளைவிக்கும் இன்னும் கூடுதலான வெட்டுக்களைச் சுமத்த முடியும்.