World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The American working class and the 2012 presidential election

அமெரிக்கத் தொழிலாள வர்க்கமும் 2012 ஜனாதிபதித் தேர்தலும்

Patrick Martin
16 April 2012
Back to screen version

குடியரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனப் போட்டி உறுதியாக முடிந்துவிட்ட நிலையில், 2012 ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயகக் கட்சியின் தற்போதைய ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கும் குடியரசுக் கட்சியின் முன்னாள் மாசச்சுஸட்ஸ் ஆளுனருமான மிட் ரோம்னிக்கும் இடையே போட்டி என்று உருவாகியுள்ளது.

தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை இரண்டு வலதுசாரி பல மில்லியன்களை உடைய அரசியல் வாதிகளில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைத்தான் கொண்டுள்ளனர்; முன்னாள் முதலீட்டு வங்கியாளரும், சொந்தத்தில் கால் பில்லியன் டாலர் சொத்துக்களையும் கொண்டுள்ள ரோம்னி ஒருவர்; மற்றொருவர் நிதியப் பிரபுத்துவத்திற்கு காப்பாளர் என நிரூபிக்கப்பட்டுள்ளவர்.

ரோம்னி மற்றும் ஒபாமாவைப் பொறுத்தவரை எத்தகைய அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், அவை இரண்டாந்தரத் தன்மை உடையவற்றுடன் நிற்கின்றன. குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் முக்கியமான பிரச்சினைகளில் உடன்பாட்டைத்தான் கொண்டுள்ளனர்: அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்களைத் தொடர்தல், விரிவாக்குதல், பாரிய வங்கிகள் மற்றும் பெறுநிறுவனங்களின் இலாபங்களைத் தொழிலாளர்களின் இழப்பில் பாதுகாத்தல், பயங்கரவாதத்திற்கு எதிரான என்னும் முடிவிலாப் போரின் பெயரில் ஒரு பொலிஸ் அரசாங்கத்திற்கான உள்கட்டமைப்பை உறுதியாக்குதல் என்னும் முறையில்.

நவம்பர் 6ம் தேதி வாக்குப் பெட்டிகளின் முடிவு அமெரிக்க மக்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிர்ணயிக்கப்படா து; ஆனால் ஆளும் உயரடுக்கு, தொடர்ந்து ஒபாமா நிர்வாகத்திற்குத் தன் நலன்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை, தொடர்ந்து கொடுக்கலாமா அல்லது கொள்கைகளில் சில உத்திமாற்றங்களை அறிமுகப்படுத்தும் புதிய நிர்வாகத்தைப் பதவியில் இருத்தலாமா என முடிவெடுப்பதைப் பொறுத்து அது அமையும். மக்களுடைய கருத்துக்களும் உணர்வுகளும் சிறிதும் ஈடுபாடு உடையவையாக இருக்காது; அதுவும் பெரும்பாலான மக்கள் ஒபாமா, ரோம்னி இருவரையுமே விரோதப் போக்கில் காண்கின்றனர் என்று கருத்துக் கணிப்புக்கள் காட்டும் நிலையில்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் நீண்டகாலமாகவே அரசியல் மோசடி மற்றும் செய்தி ஊடகத்தின் திரித்தல் ஆகியவற்றின் மேலாதிக்கத்தைத்தான் கொண்டுள்ளன. இரு கட்சிகளுமே நிதிய உயரடுக்கின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளவை; தங்கள் வேட்பாளர்களின் வெற்றிக்காக மிகவும் இழிந்த பெருநிறுவனச் சந்தைமுறை வழிவகைகளைத்தான் பயன்படுத்துகின்றன. முழு ஊழல் மிகுந்த வடிவமைப்பும் அரசியல் விருப்பத்தை ஏற்படுத்தும் போலித்தன்மையை உருவாக்குகின்றன; உண்மையில் கொடுக்கப்படும் மாற்றீடுகளோ பெருநிறுவனத் தன்னலக்குழுவின் விருப்பத்தை ஒட்டி அளிக்கப்படுகின்றன.

தேர்தல்கள் முற்றிலும் பெரும்பணத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை; இது பகிரங்கமாகவும், வெட்கம் கெட்டதனமாகவும் வேட்பாளர்களையும் அரசியல் செல்வாக்கை வாங்கவும்தான் பயன்படுத்தப்படுகிறது. முழு வழிவகையிலும் எத்தகைய உண்மையான ஜனநாயக நெறியும் காணப்பட முடியாது.

புஷ் நிர்வாகம் மற்றும் குடியரசுக் கட்சிமீது மக்களுக்கு இருந்த விரோதப் போக்கை தீமைதராத வகைகளில் திருப்புவதற்காக அமெரிக்க ஆளும் உயரடுக்கினால் கவனமாகத் தயாரிக்கப்பட்டிருந்த ஒபாமா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நம்பிக்கை, மாற்றம் ஆகியவற்றைப் பொதுமக்களுக்கு அளிப்பதாகக் கூறினார்; அதே நேரத்தில் தன்னுடைய பல மில்லியன்களை உடைய ஆதரவாளர்களுக்குக், குறிப்பாக வோல் ஸ்ட்ரீட் பிணைஎடுப்பிற்கு ஆதரவு கொடுத்ததின்மூலம், தான் அவர்களுடைய நலன்களை விசுவாசமாகச் செயல்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.

பிரச்சாரத்தின் போது 2008ம் ஆண்டில் மக்களிடையே தோற்றுவிக்கப்பட்டிருந்த போலித் தோற்றங்கள், ஒபாமாவை வெள்ளை மாளிகையில் இருந்தக் காரணமாக இருந்தவை, நீண்ட காலத்திற்கு முன்னரே முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டன. தற்போதைய நிர்வாகத்தின் முக்கிய செயற்பாடுகள் இந்த நான்கு ஆண்டுகளும் புஷ் நிர்வாகத்தில் இருந்து ஒரு முறிவைக் காட்டவில்லை, அதன் தொடர்ச்சிதான் என்பதை மிகவும் தெளிவாக்கியுள்ளன.

வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பின் அதிகரிப்பு மற்றும் விரிவாக்கம், பொருளாதார நெருக்கடியின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக அரசாங்கம் வேலை தோற்றுவித்தல் அல்லது தீவிர உதவியளித்தல் என்பதற்கு எதிர்ப்பும் இணைந்த நிலை; கார்த்தொழிலில் தலையீட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் இன்னும் பிற நலன்களைக் குறைத்ததின் மூலம் மீண்டும் இலாபத்தை அதிகரித்த நிலை, ஜனநாயக உரிமைகள்மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டது, அதில் கண்காணிப்பு மற்றும் ஒற்றுவேலை பெருகியது, ஜனாதிபதி படுகொலைகளுக்கு உத்திரவிடும் உரிமையை வலியறுத்தியது, அதில் அமெரிக்கக் குடிமக்களும் இருக்கலாம் என்றது, அரசாங்கத்தின் சித்திரவதை செய்தவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்தது, குவண்டநாமோ குலாக்கை இன்னும் நடத்தியது, நடத்திக் கொண்டிருப்பது, ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் போர்களை விரிவாக்கியது, மற்றும் இப்பொழுது லிபியா, யேமன், சோமாலியா ஆகியவற்றில் அமெரிக்க ஆதரவுடைய போர்கள், தலையீடுகள் கொள்ளப்பட்டது, மற்றும் சிரியா, ஈரானுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்கள் கொடுத்துள்ளது ஆகியவை  இவற்றுள் அடங்கியிருந்தன.

ஒபாமா நிர்வாகத்தின் அடிப்படை வர்க்கத் தன்மை அதன் கொள்கைகள் எப்படி அமெரிக்காவில் வருமான பகிர்வைப் பாதித்தன என்பதின் மூலம் விளக்கப்பட முடியும். பேர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் Emmanuel Saez நடத்திய ஆய்வு, 2010ம் ஆண்டில், ஒபாமாவின் வெள்ளை மாளிகைக் கணக்குப்படி பொருளாதார மீட்சியின் முதல் முழு ஆண்டில், அமெரிக்கர்களில் மிக அதிக உயர்மட்டம் எனப்பட்ட 1%த்தினர் தேசிய வருமானத்தின் மொத்த அதிகரிப்பில் 93% ஐத் தட்டிச் சென்றனர். இந்த ஒரு சதவிகித உயர்மட்டத்தினரின் வருமாங்கள் அந்த ஆண்டு மட்டும் 11.6% உயர்ந்தது; கீழே உள்ள 90%த்தினரிம் வருமானங்கள் உண்மையிலப் சரிந்தன.

இந்தப் பிற்போக்குத்தனச் சான்றை மறைக்கும் முயற்சியில், ஒபாமா தன்னுடைய மறுதேர்தல் பிரச்சாரத்தில் இடைப்பட்ட கால ஆட்சி என அழைக்கப்படுவதில் தன் கவனத்தைச் செலுத்துகிறார்; இதன்படி பலமில்லியன் உடையவர்கள் தொழிலாளர்களைவிடக் குறைந்த வருமான வரி விகிதத்தைக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. செல்வந்தர்களுக்கு எதிரான ஜனரஞ்சகக் கோரிக்கை என்னும் வகையில் இத்திட்டத்தை ஜனாதிபதி காட்ட முற்பட்டாலும், உண்மையில் இது ஜனநாயகக் கட்சியினர் கூடுதல் வருமானத்திற்குக் கூடதல் வரி என்னும் கொள்கையை நிராகரிக்கின்றனர் என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறதுஅதாவது செல்வந்தர்கள் வறியவர்கள், உழைக்கும் மக்களை0விட அதிக வருமான வரிவிகிதத்தைச் செலுத்த வேண்டும் என்பதை நிராகரிக்கும் வகையில்.

ஒபாமாவின் தேர்தலைப் பாராட்டிய அதே அரசியல் சக்திகள் இப்பொழுது மீண்டும் தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் ஜனநாயகக் கட்சிக்குப் பின்னே ஈர்க்க முயல்கின்றன. நியூ யோர்க் டைம்ஸில் இருந்து நேஷன் இதழ்வரை அமெரிக்கத் தாராளவாதத்திற்குக் குரல் கொடுப்பவை, சர்வதேச அளவில் பெரும் மக்கள் படுகொலை செய்துள்ள குற்றத்தைக் கொண்ட, உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளைக் குப்பையில் போட்டுவிட்ட இந்த அரசாங்கத்தை குடியரசு வலதின் பிற்போக்குத்தனக் கொள்கைகளுக்கு முன்னேற்றமான மாற்றீடு என்று காட்டுகின்றன.

ஒபாமாவிற்கு ஆதரவு கொடுக்கும் இவற்றுடன், போலி இடது குழுக்களான சர்வதேச சோசலிச அமைப்பு போன்றவையும் இணைந்துள்ளன; இவை ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் தொழிற்சங்க அதிகாரிகளைப் புகழ்கின்றன; அவர்களோ நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் திரட்டுகின்றனர்;  ஜனநாயகக் கட்சியின் கறுப்பு இன அரசியல்வாதிகளான ஜேசி ஜாக்சன், அல் ஷார்ப்டன் போன்றவர்களைப் பெரிதும் போற்றுகின்றனர். மத்தியதர வர்க்கத்தின் சலுகை பெற்றுள்ள உயரடுக்குகளைப் பிரதிபலிக்கும் இந்த அமைப்புக்கள் ஒபாமாவையும் ஜனநாயகவாதிகளையும் ஆதரிக்கின்றனர்; ஏனெனில் அவர்கள் இவர்களுடைய தொழிலாள வர்க்க விரோத, இராணுவவாதக் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.

ஒரு ரோம்னி நிர்வாகத்தின் பேரழிவை தடுப்பதற்காக ஒபாமாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று வாதிடும் தாராளவாத மற்றும் போலி இடது குழுக்கள், இகழ்வாகத்தான் பார்க்கப்பட வேண்டும். ஒபாமா அல்லது ரோம்னி என எவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றாலும், அடுத்த நிர்வாகம் அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக வலது சாரிக் கொள்கைகளைச் செயல்படுத்துவதில்தான் வழிகாட்டும் என்பதுதான் உண்மை.

தேர்தல் முடிந்தபின், இரு கட்சிகளும் மாற்றமுடியாத வேறுபாடுகள் என்னும் தன்மையைக் கைவிட்டு, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் நடத்தும் சக்திகளுடன் சேரும். சமூகநலக் குறைப்புக்கள், சமுகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி மற்றும் பல முக்கிய திட்டங்கள், உணவு வழங்குதலில் இருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை கடுமையான குறைப்புக்கள் குறித்து ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் உடன்படுவர். அவர்கள் வெளிநாடுகளில் நடத்தப்படும் போர்கள் பற்றியும் உடன்பாடு கொண்டவர்கள்தான்; இப்பொழுது புதிய போர்கள் சிரியா, ஈரான் மற்றும் எண்ணெய் வளம் உடைய மத்திய கிழக்கின் பிற பகுதிகளிலும் அச்சுறுத்தப்படுகின்றன. அவர்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே இக்கொள்கைகளுக்கான பெரும் எதிர்ப்பை அடக்குவது தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் உடன்பட்டுள்ளனர்.

தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளும் மிகப் பெரிய ஆபத்து உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இரு கட்சிகள் மீதும் முதலாளித்துவத்தினர் ஏகபோக உரிமைக் கட்டுப்பாட்டை கொண்டுள்ளனர் என்பதுதான். 2012 தேர்தலில் முக்கியமான பிரச்சினை, சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதுதான், இலாபமுறைக்கு எதிரான அதிகாரத்திற்கான போராட்டத் தயாரிப்பில் முழுமையாக ஈடுபட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி தன் சொந்த வேட்பாளர்களை, ஜெரி வைட்டை ஜனாதிபதி பதவிக்கும், பிலிஸ் ஷேரரை துணை ஜனாதிபதி பதிவிக்கும் நிறுத்தி வைக்கும் வகையில், தலையிடுகிறது; இது நம்முடைய புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்கு மிக அதிக ஆர்வலர்களைக் கொண்டுவரும் திட்டமாகும். SEP  உடைய வேலைத்திட்டத்தை ஆராயுமாறு அனைத்துத் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாம் வலியுறுத்துகிறோம், ஜெரி வைட்மற்றும் பிலிஸ் ஷேரர் பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுக்கவும், சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதைக் கட்டமைக்கும் முடிவை இப்பொழுதே எடுக்குமாறும் கோருகிறோம்.