World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Financial markets demand deep cuts following French presidential election

நிதியியல் சந்தைகள் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலை அடுத்து ஆழ்ந்த வெட்டுக்களைக் கோருகின்றன

By Johannes Stern
16 April 2012
Back to screen version

ஏப்ரல் 22இல் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களின் முதல் சுற்று பரபரப்பிற்கு இடையில், சர்வதேச நிதியியல் சந்தைகள் புதிய அரசாங்கம் பதவியேற்ற உடனேயே சமூக வெட்டுக்களுக்கான அழுத்தத்தை அதிகரிக்க தயாரிப்பு செய்து வருகின்றன.

ஜேர்மன் பங்குச்சந்தையின் ஒரு துணை அமைப்பான யூரெக்ஸ் (Eurex) ஏப்ரல் 16இல் பிரெஞ்சு அரச பத்திரங்கள் மீது ஒரு புதிய முன்பேர ஒப்பந்தங்களை ஏற்படுத்த உள்ளதாக சனியன்று பல்வேறு ஊடகங்களும் அறிவித்தன. அந்த பத்திரங்கள் பிரான்சின் திரும்ப அளிக்கமுடியாத நொடிந்த கடன்கள் மீது ஊக வியாபாரம் செய்ய அனுமதிக்கும்.

La Tribune இன் கட்டுரையாளரும் ஒரு கோடீஸ்வர வங்கியாளருமான மார்கோ பியோரென்டினோ, புதிய நிதியியல் கருவிகளை "பிரான்சிற்கு எதிரான சரியான ஆயுதமென்று" விவரித்தார். அவர் எழுதுகிறார், இப்போது ஏறத்தாழ ஒவ்வொருவரும் "குறைந்தளவிலான பிரெஞ்சு அரசு பத்திரங்களை வாங்கவோ அல்லது விற்கவோ சாத்தியமாகும் அது 20 என்ற தாங்கிபிடிக்கும் காரணியோடு (leverage factor) இருக்கும். அதாவது 50,000 யூரோ மதிப்பிலான பத்திரங்களை வைத்துக் கொண்டு குறைந்தளவில் ஒரு மில்லியன் யூரோ மதிப்பிலான பிரெஞ்சு பத்திரங்களை விற்க முடியும் என்று கூறலாம்.”

பாரீஸை மையமாக கொண்ட ஒரு சிந்தனை-குளாமான The Thomas More Institute எழுதுகிறது: “முதன்முறையாக, ஒரு ஜனாதிபதி தேர்தல் சந்தைகளின் கண்காணிப்பின்கீழ் நடத்தப்படுகிறது. அடுத்த ஜனாதிபதி உபாயங்களைக் கையாள்வதற்கு வழியே இல்லை.”

தற்போதைய பழமைவாத ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மற்றும் சோசலிஸ்ட் கட்சி (PS) வேட்பாளர் பிரான்சுவா ஹாலன்ட் ஆகிய இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுமே வங்கிகளால் கோரப்பட்ட சிக்கன முறைமைகளை அவர்கள் நடைமுறைப்படுத்த இருப்பதாக தெளிவுபடுத்தி உள்ளனர்

நம்முடைய பற்றாக்குறை மற்றும் கடனைக் குறைக்கும் போக்கை நாம் தொடரவில்லையென்றால், கடன் விகிதங்கள் விரைவிலேயே அதிகரிக்கும்,” என்று சார்க்கோசி பிரான்ஸ் இன்போ வானொலிக்கு தெரிவித்தார்.

La Tribuneக்கு அளித்த ஒரு நேர்காணலில் ஹாலன்ட் கூறுகையில், அவர் "சமநிலையை மீண்டும் கொண்டு வர கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செய்யவிருப்பதாக" அறிவித்தார். அவர் மேலும் கூறியது: “அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதல் நாட்களும், மாதங்களும் மிகவும் முக்கியமானவை. ஆரம்பத்திலிருந்தே நாம் பொருளாதார காரணிகளை வெளிப்படையாகவும், திருத்தமாகவும் வெளிக்காட்ட வேண்டும்.”

இரண்டு வேட்பாளர்களுமே தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் பிரான்சின் பற்றாக்குறையை பூஜ்ஜியமாக குறைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இதில் ஒரே வேறுபாடு என்னவென்றால் அதை 2017இல் முடிப்பதாக தெரிவித்திருந்த ஹாலன்டின் நோக்கத்திற்கு எதிராக சார்க்கோசி 2016 வாக்கில் செய்து முடிக்க நோக்கம் கொண்டிருப்பதாக அறிவித்திருந்தார்.

ஐரோப்பிய கண்டம் முழுவதிலும் பொது செலவினங்கள் மற்றும் கூலிகளை வெட்டுவதற்கான ஐரோப்பிய முதலாளித்துவ திட்டமான ஐரோப்பிய நிதியியல் உடன்படிக்கைக்குப் பின்னால் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெலோடு சார்க்கோசியும் உந்துசக்தியாக இருந்தார். அவருடைய La Tribune நேர்காணலில் ஹாலன்ட் தாம் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஊக்குவிக்கப்படும் முறைமைகளை முழுமையாக ஆதரிப்பதாக தெளிவுபடுத்தி உள்ளார். நிதியியல் உடன்படிக்கையின் "ஒழுங்குமுறை அங்கம்" (“Discipline component”)அவசியமாகும்" என்று குறிப்பிட்ட அவர் அவருடைய "ஐரோப்பிய பங்காளிகளுக்கு" அவர் "வரவு-செலவு கணக்கை சரிகட்டுவதாக" உறுதியளித்திருந்தார். நிதியியல் உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்வதற்கான அவருடைய முன்மொழிவானது அதற்குள் ஒரு "வளர்ச்சி அங்கத்தை" சேர்ப்பதாக மட்டுமே இருக்கும்.   

ஜேர்மனியை அடுத்து ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான பிரான்ஸ் அதிகளவில் சர்வதேச நிதியியல் சந்தைகளின் மையநலன்களில் உள்ளது. பிரான்ஸின் ஆண்டுக் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 90 சதவீதத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. பிரான்ஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஒரு பெரும்பகுதி பொது செலவினங்களுக்கு போவதாக வங்கியாளர்கள் வலியுறுத்துகின்றனர். கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, இதர பிறவற்றிற்கு செலவிடப்படும் பணம் நேரடியாக தங்களின் பைகளுக்குள் போக வேண்டுமென நிதியியல் மேற்தட்டு விரும்புகிறது

பிரான்ஸின் ஆண்டு வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை தற்போது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதமாக உள்ளது. அதேவேளையில் ஜேர்மனியின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை 1 சதவீதத்தில் உள்ளது. முதலாளித்துவ அரசியல்வாதிகளும், இதழாளர்களும் நிதியியல் மேற்தட்டிற்கு சார்பாக அடுத்த பிரெஞ்சு அரசாங்கத்தின் "பணிகளை" எடுத்துக்காட்ட "ஜேர்மன் மாதிரி" என்றழைக்கப்படுவதை வழக்கமாக குறிப்பிட்டு வருகின்றனர். ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை கூலிகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளின் அடிப்படையில் ஒரு போட்டியில் ஒருவருக்கொருவரை எதிராக நிறுத்துவதே நிதியியல் சந்தைகளின் மற்றும் வங்கிகளின் மூலோபாயமாக உள்ளது

ஏப்ரல் 11 கட்டுரையில், பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டதாவது: “பிரான்ஸின் ஒட்டுமொத்த பிம்பம் ஜேர்மனிக்கு அதன் தளத்தை வேகமாக இழந்து வருவதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.” “முன்னாள் சமூக ஜனநாயக ஜேர்மன் சான்சலர் ஹெஹார்ட் சுரோடர் அவரது இரண்டாவது பதவி காலத்தில் தொழிற்சந்தை சீர்திருத்த கருவி மூலமாக நாட்டின் தற்போதைய பலத்தை கீழ்படுத்த அழுத்தம் அளித்ததை" ஒரு "முன்மாதிரியைப்" போல அந்த இதழ் மேற்கோளிட்டது.

சுரோடர் அரசாங்கத்துடன் ஒப்பீடு செய்வதென்பது பிரெஞ்சு தொழிலாளர்களுக்கு ஒரு உறுதியான எச்சரிக்கையாகும். ஹெஹார்ட் சுரோடரின் சமூக ஜனநாயக (SPD)-பசுமை அரசாங்கம் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய ஜேர்மனியில் மிகவும் தீவிரமான தொழிலாள வர்க்க எதிர்ப்பு அரசாங்கமாக இருந்தது. தொழிற்சங்கங்களோடு சேர்ந்து மிக நெருக்கமாக வேலை செய்து, அது சமூக செலவினங்கள் மற்றும் கூலிகளைக் குறைத்தது; தொழிற்சந்தைகளை தாராளமயமாக்கியதோடு பெருநிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் வரிகளை வெட்டியது.

பிரான்ஸ்ஜேர்மனியிடம் தளத்தை இழந்து வருகிறதென்பது" பிரெஞ்சு முதலாளித்துவம் போட்டித்தன்மையை எட்ட அந்நாட்டின் ஆளும் மேற்தட்டு பரந்த சிக்கன முறைமைகளைச் செய்ய வேண்டுமென்பதற்கான ஓர் அறிகுறியை அளிக்கிறது.

சுரோடரின் கீழ் செய்யப்பட்ட ஜேர்மன் தொழிலாளர்துறை சீர்திருத்தங்களின் விளைவாக, தற்போது பிரான்ஸை விட ஜேர்மனியில் ஒரு மணி நேரத்திற்கான தொழிலாளர் செலவுகள் 10 சதவீதம் குறைவாக உள்ளது. பொதுத்துறை செலவினங்கள் ஜேர்மனியில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 48 சதவீதமாக உள்ளது. அதேவேளையில் பிரான்ஸில் அது 56 சதவீதமாக உள்ளது. அதாவது 160 பில்லியன் யூரோ வித்தியாசம். 1999 முதல் 2008 வரையில், ஏனைய யூரோ-மண்டல நாடுகளோடு ஒப்பிடுகையில் ஜேர்மன் யூனிட் தொழிலாளர்கள் செலவு 20இல் இருந்து 30 சதவீதம் வரையில் வெட்டப்பட்டுள்ளன

பிரான்ஸ் "தொழிற்துறை போட்டாபோட்டியில் ஒரு வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக" பைனான்சியல் டைம்ஸ் எழுதுகிறது. பிரெஞ்சு ஏற்றுமதி மந்தமாகி வருகிறது. 2011இல் வர்த்தக பற்றாக்குறை 70 பில்லியன் யூரோவாக இரட்டிப்பானது. ரைன் (Rhine) ஆற்றின் மறுபுறம், ஏற்றுமதி தொழிற்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது; கடந்த ஆண்டு ஜேர்மன் வர்த்தகம் ஒரு சாதனையளவாக 158 பில்லியன் யூரோ உபரியை அனுபவித்தது.

பிரெஞ்சு ஆளும் மேற்தட்டு தொழிலாளர்களுக்கு எதிரான வர்க்க யுத்தத்திற்கு தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், பிரான்ஸில் சமூக நிலைமைகள் ஏற்கனவே மிகவும் பதட்டத்தை எட்டியுள்ளன. வேலைவாய்ப்பின்மை 12 ஆண்டுகளில் இல்லாதளவிற்கு ஏறத்தாழ 10 சதவீதத்தில் நிற்கிறது. இளம் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில், சூழ்நிலை இன்னும் சிக்கலாக உள்ளது. 15-22 வயதுடையவர்களில் 22 சதவீதத்தினருக்கு ஒரு வேலை கிடையாது. நாட்டின் ஏழைகளில் பாதிப் பேர் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களாவர். இந்த வயது வரம்பிற்குள் இருப்பவர்களில் 20 சதவீதத்தினர் வறுமை கோட்டிற்கும் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

ஜனவரியில் நிதியியல் சந்தைகள் ஒரு எச்சரிக்கை சமிக்ஞையை அனுப்பின; வரிசைப்படுத்தும் நிறுவனமான Standard & Poor’s (S&P) பிரான்ஸையும், அதனோடு சேர்த்து ஏனைய ஒன்பது ஐரோப்பிய நாடுகளையும் வரிசை பட்டியலில் AAAஇல் இருந்து AA+க்கு கீழறக்கியது. அப்போதிருந்து பிரான்ஸின் அண்டைநாடான ஸ்பெயின் மற்றும் இத்தாலி உட்பட தொடர்ச்சியாக பல நாடுகளின் மீது வரிசைப்படுத்தும் அமைப்புகள் கிரேக்க பாணியிலான "கட்டமைப்பு சீர்திருத்த முறைமைகளை" நடைமுறைப்படுத்த அழுத்தத்தை அதிகரித்துள்ளன.

கிரீஸ் விஷயத்தில் வரிசைப்படுத்தும் அமைப்புகள் அந்நாட்டை பலமுறை ஒன்றுமற்ற அந்தஸ்திற்கு கீழிறக்கின. சமூக ஜனநாயக பிரதம மந்திரி ஜோர்ஜ் பப்பாண்டிரோ (PASOK கட்சி) மற்றும் அவரை அடுத்து பதவிக்கு வந்த லூகாஸ் பாபாடிமோஸூம் மிகவும் கடுமையான வெட்டுக்கள் செய்வதை நியாயப்படுத்த இதை பயன்படுத்தினர்.

ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய மூன்றும் சேர்ந்த டிராய்காவின் கட்டளைக்கு இணங்க, கிரேக்க ஆளும் மேற்தட்டு கூலிகளில் 30-50 சதவீதத்தைக் குறைத்தது; வேலைவாய்ப்பற்றோர் நல உதவிகளில் 22 சதவீதத்தை வெட்டியது; நூறு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையிலிருந்து பணிநீக்கம் செய்தது. தற்போது பின்னடைவின் ஐந்தாம் ஆண்டில் இருக்கும் கிரேக்க பொருளாதாரம் எடுத்த சிக்கன முறைமைகளின் காரணமாக கிரேக்க இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்; உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதம் 21 சதவீதத்தில் நிற்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தற்கொலை விகிதம் இரட்டிப்பாகி உள்ளது. இது தான் பிரான்ஸின் எதிர்காலமுமாக இருக்குமா?