World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US, Israel issue ultimatums to Iran

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு இறுதி எச்சரிக்கைகளை விடுக்கின்றன

Peter Symonds
10 April 2012
Back to screen version

சர்வதேசப் பேச்சுக்களுக்கு முன்னதாக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு  ஆத்திரமுட்டும் இறுதி எச்சரிக்கைகளை அதன் அணுசக்தித் திட்டத்தின் முக்கிய கூறுபாடுகளை அகற்ற வேண்டும் இல்லாவிடின் பேரழிவு தரும் பொருளாதாரத் தடைகள், போர் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும் என்று விடுத்துள்ளன.

ஞாயிறன்று CNN க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக் ஈரான், யுரேனிய அடர்த்தித் திட்டத்தை 20% மட்டத்துடன் நிறுத்தி, ஏற்கனவே இந்த அளவிற்கு அடர்த்தி செய்யப்பட்டுள்ள யுரேனியத்தை நம்பகமான அண்டை நாட்டிற்குமாற்றுவதுதான் வெற்றிகரமான பேச்சுக்களைத் தொடக்க நுழைவாயில் ஆகும் என்றார்.

போர்டோவில் ஈரானின் அடர்த்தி ஆலையை மூடல், ஈரானில் இருந்து குறைந்த அடர்த்தி உள்ள யுரேனியம் அனைத்தையும் மாற்றுதல், இன்னும் பரந்த முறையில் IAEA எனப்படும் சர்வதேச அணுச்சக்தி அமைப்பின் கண்காணிப்பு ஆகியவை தேவை என்றும் எகுட் பாரக் கோரியுள்ளார். நேரம் கடந்து கொண்டிருக்கிறதுஎன்று அப்பட்டமாக எச்சரித்த பாரக், அடுத்த வாரம் முடிவெடுக்க வேண்டியதில்லை, ஆனால் நாங்கள் பல ஆண்டுகள் காத்திருக்க முடியாது என்றார்.

P5+1 எனப்படும் நாடுகளுடன் (அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனி) இஸ்தான்புல்லில் ஈரான் பேச்சுக்களை நடத்தவுள்ளது. ஆனால் நுழைவாயிலுக்கானநிபந்தனைகளை முன்வைப்பது உண்மையில் பேச்சுக்கு இடமில்லாத இறுதி எச்சரிக்கையாகும், இது உடன்பாடு ஏற்படும் என்பதை அரிதாக்குகிறது. ஏற்கனவே ஈரானிய அதிகாரிகள் தெஹ்ரான் பேச்சுக்களுக்கு முன் வைக்கப்படும் நிபந்தனைகளை நிராகரிக்க இருப்பதாகத் தெரிவித்துவிட்டனர்.

பாரக்கும் இஸ்ரேலியப் பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தென்யாகுவும் பலமுறை இஸ்ரேல் ஈரானின் அணுச்சக்தி நிலையங்களை அழிப்பதற்கான  இராணுவ நடவடிக்கைக்குத் தயாரித்துவருவதாகவும், இஸ்ரேலியத் தாக்குதல்கள் சில மாதங்களுக்குள் தொடங்கும் என்றும் குறிப்புக் காட்சியுள்ளனர். அமெரிக்க மற்றும் சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை உதறித் தள்ளும் வகையில்தான் பாரக் பேசி, அதன் அணுச் சக்தி இராணுவத் திட்டத்தை நிறுத்துவதற்கு தெஹ்ரானுக்கு இவை போதுமான அழுத்தம் கொடுக்கும் என தாங்கள் நினைக்கவில்லை என்று அறிவித்தார்.

ஈரானிய ஆட்சி, அணுச்சக்தி ஆயுதங்களைத் தயாரிக்கும் திட்டம் தனக்கு இல்லை என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறது; அதன் யுரேனிய அடர்த்தி சமாதான நோக்கங்களுக்குத்தான் என்றும் கூறி வருகிறது. 20 சதவிகிதம் அடர்த்தி செய்யப்பட்டுள்ள யுரேனியம், மருத்துவ ஐசோடெப்புக்கள் தயாரிக்க தெஹ்ரானில் உள்ள ஆய்வு உலைக்கு எரிபொருளாகத் தேவைப்படுகிறது. ஈரான் NPT எனப்படும் அணுவாயுதப் பரவா உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள நாடாகும்; அதன் நிலையங்கள் ஏற்கனவே IAEA  உடைய ஆய்வுகள், இருப்புச் சரிபார்த்தல் ஆகியவற்றிற்கு உட்பட்டவை ஆகும்.

இதே இறுதி எச்சரிக்கையை ஒபமா நிர்வாகம் ஏற்கனவே தெஹ்ரானுக்குக் கொடுத்துள்ளது. அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் கிளின்டன், கடந்த வாரம், ஈரான் அணுவாயுதங்களை நிராகரித்தல் என்பதை ஒரு அருவமான நம்பிக்கை இல்லைஎன்பதை நிரூபிக்க வேண்டும் என்று கோரியதுடன், 20 சதவிகித அடர்த்தியுள்ள யுரேனியத்தை நாட்டில் இருந்து வெளியேற்றி, தொடர்ந்த ஆய்வுகள், சரிபார்த்தல் ஆகியவற்றை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸில் வந்துள்ள கட்டுரை ஒன்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பேரப்பேச்சாளர்கள் ஒரு கூட்டுக் கடின அணுகுமுறையைகொண்டுள்ளனர், அவற்றுள் போர்டோ அடர்த்தி ஆலை மூடப்படுதலும் அடங்கியுள்ளது என்ற தகவலைக் கொடுத்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்திப்பிரிவுச் செயலர் ஜே கார்னே நேற்று இந்த வாரப் பேச்சுக்கள் கிட்டத்தட்டக் கடைசி வாய்ப்பு போன்றவை, சன்னல் மூடப்பட்டுவருகிறது என்பதை ஈரான் உணர்தல் முக்கியமாகும் என்று அறிவித்தார்.

போர்டோ ஆலையை ஈரான் மூடவேண்டும் என்னும் கோரிக்கை குறிப்பிடத்தக்க வகையில் ஆத்திரமுட்டும் தன்மை உடையது; ஏனெனில் இந்த நிலத்தடி அணு நிலையம் அமெரிக்க, இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பெரும் சவால் ஆகும். உண்மையில், வாஷிங்டன் தெஹ்ரான் தானாக முன்வந்து வான் தாக்குதல்களுக்கு எளிதான முறையில் அதன் அணுத் திட்டங்களை வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. பிராந்திய அமைதிக்கு தெஹ்ரான் ஒரு அச்சுறுத்தல் எனக் கண்டிக்கும் ஒபாமா நிர்வாகம் ஒரு சட்டவிரோத, தூண்டுதலற்ற தாக்குதலை ஈரான் மீது தயாரிக்கிறது; இது மத்திய கிழக்கு முழுவதுமே ஒரு போரைத் தூண்டக்கூடும்.

வாஷிங்டனின் வனப்புரையில் உள்ள முற்றிலும் இழிந்த தன்மை இதன் சக சதிநாடு இஸ்ரேல் ஏற்கனவே கணிசமான அணுவாயுதக் குவிப்புக் கிடங்கைக் கொண்டுள்ளது, அணுவாயுதத் தாக்குதல்களை நடத்த முடியும், NPT யில் கையெழுத்திட்டதில்லை, IAEA ஆய்வுகளையும் அனுமதிப்பதில்லை என்ற உண்மையில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. அமெரிக்கா மத்திய கிழக்கில் அதன் இராணுவ மேலாதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிக்காமல் உறுதி செய்ய விரும்புகிறது. ஒபாமா நிர்வாகத்தின் நோக்கம், அமெரிக்கப் பொருளாதார, மூலோபாய நலன்களுக்கு இணைந்து நடக்கும் வகையில் தெஹ்ரானில் ஒரு வளைந்து கொடுக்கும் ஆட்சியை நிறுவவேண்டும் என்பதுதான்.

ஈரான் மீது ராஜதந்திர அழுத்தங்களை வாஷிங்டன் அதிகரித்துள்ளது மட்டும் இல்லாமல், தன் அச்சுறுத்தும் இராணுவச் செயற்பாடுகளையும் முடுக்கிவிட்டுள்ளது. நேற்று அமெரிக்கக் கடற்படை இரண்டு விமானத்தளம் கொண்ட கப்பல்கள், USS Abraham Lincoln, USS Enterprise, விரைவில் பேர்சிய வளைகுடாப் பகுதியில் நிலைநிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த நிலைநிறுத்தலை வாடிக்கையானது என்று அமெரிக்கா கூறினாலும், இரு போர்க்கப்பல்களும் அவற்றுடன் இணைந்த போர்க்குழுக்களும் அமெரிக்காவிற்கு ஈரான் மீது மகத்தான வான் போரைக் குறுகிய அவகாசத்தில் மேற்கொள்ள இடமளிக்கின்றன.

அமெரிக்க இராணுவத்தின் ஈரான் மீதான குற்றத்தன்மை நிறைந்த கொள்கை கடந்த வாரம் நியூ யோர்க் டைம்ஸில்  மூத்த விசாரணைச் செய்தியாளர் சேமூர் ஹெர்ஷ் எழுதியுள்ள நீண்ட கட்டுரை ஒன்றில் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது. பெயரிடப்படாத அமெரிக்க இராணுவ, உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோளிட்டு, இக்கட்டுரை அமெரிக்கக் கூட்டுச் சிறப்புச் செயற்பாடுகளின் கட்டுப்பாடு (JSOC) ஒரு ஈரானிய எதிர்ப்பு இயக்கமான Mujahideen-e-Khalq (MEK)  உடைய உறுப்பினர்கள் பலருக்கு ஈரானுக்குள் உளவுத் தகவல் சேகரிக்க பயிற்சி கொடுத்துள்ளதாக எழுதியுள்ளது.

அமெரிக்க வெளிவிவகாரத் துறையால் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ள MEK செயலர்கள் இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மோசாட்டுடன் ஒத்துழைப்பு கொடுப்பதற்கு பொறுப்பானவர்கள் என்று பரந்த முறையில் கருதப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈரானுக்குள் நடத்தப்படும் சேதங்கள், படுகொலை முயற்சிகளுக்கு இது உதவியுள்ளது. ஆனால் ஹெர்ஷ் இன் கட்டுரைதான் அமெரிக்கா நேரிடையாக MEK முகவர்களுக்கு பயிற்சி தருதவதை சுட்டிக்காட்டியுள்ளது. ஹெர்ஷ் கருத்துப்படி அந்த உறுப்பினர்கள் நெவடாவில் ஒரு சிறப்பு JSOC  தளத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டனர்.

ஞாயிறன்று வெளியிடப்பட்ட வாஷிங்டன் போஸ்ட்  கட்டுரை ஒன்று ஈரானுக்கு எதிரான அமெரிக்க உளவுத்துறை நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள விரிவாக்கம்குறித்து விவரமாகத் தகவல்களைக் கொடுத்துள்ளது. இச்செய்தித்தாள், ஈரானியச் செயற்பாட்டுப் பிரிவு, “நூற்றுக்கணக்கான அதிகாரிகள்[CIA]”  என அதிகரித்துவிட்டது, இதற்கு நிறைய செலவு செய்ய நிதி உள்ளதுஎன்று கூறுகிறது. இதன் செயற்பாடுகளில் மின்னணு மற்றும் செயற்கைக்கோள் மூலமான ஒற்றுக்கள், பரந்த முறையில் ஆளில்லாத டிரோன்கள் விடப்படுதல் மற்றும் ஈரானுக்குள் விரிவாக்கப்பட்ட ஒற்றர் இணையம் ஆகியவை உள்ளன.

இஸ்தான்புல் பேச்சுக்கள் சரிந்தால், ஒபாமா முன்கூட்டியே ஈரான் மீது சுமத்தியுள்ள முடக்க வைக்கும் பொருளாதாரத் தடைகள் ஜூலையில் இருந்து நடைமுறைக்கும் வரும்; இவை தெஹ்ரானின் எண்ணெய் ஏற்றுமதிகளைப் பாதிக்கும்; அதன் பொருளாதாரம் முற்றிலும் அதைத்தான் நம்பியுள்ளது. தற்போதைய பொருளாதாரத் தடைகள் ஏற்கனவே பொருளாதார நடவடிக்கைகளை தீவிரமாகப் பாதித்து, ஈரானில் பணவீக்கத்தை மிகவும் அதிகமாக்கச் செய்துள்ளன. இந்தத் தண்டனை நடவடிக்கைகள் ஈரான்மீது ஒரு பொருளாதாரப் போருக்கு ஒப்பானது ஆகும்; இது தவிர்க்க முடியாமல் இராணுவ மோதல் ஒன்றிற்கு வழிவகுக்கும்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒபாமா நிர்வாகம், அதன் நட்பு நாடுகளின் யுத்த முன்னெடுப்புக்களை  எதிர்க்க வேண்டும்; அது மத்திய கிழக்கை எரியூட்டும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது; இன்னும் பரந்த மோதல்களையும் ஏற்படுத்தக் கூடும். போரை நிறுத்துவதற்கு ஒரே அடிப்படை, போரின் வேர்க்காரணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முறையில் நெருக்கடி நிறைந்த இலாபமுறையை அகற்றுவதற்கு ஒரு சோசலிச, சர்வதேசிய மூலோபாய அடிப்படையில் சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுதான்.