World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை சுகாதார கணிஷ்ட நிர்வாக சேவை ஊழியர்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்
W.A. Sunil Back to screen versionமார்ச் 21ம் திகதி சுகயீன லீவு அறிவித்துவிட்டு தீவெங்கிலுமுள்ள ஆஸ்பத்திரி மற்றும் சுகாதார நிறுவன கனிஷ்ட சேவை ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகரித்த எரிபொருள் விலைக்கு ஏற்ப 5,000 ரூபா கொடுப்பனவு 10,000 உத்தியோக உடை கொடுப்பனவு, ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குதல், வாரத்தில் ஐந்து நாள் வேலை, சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்தல் போன்ற 9 கோரிக்கைகள் தொழிற்சங்கத்தால் வைத்திய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டன. வடக்கு கிழக்கு தமிழ் பேசும் தொழிலாளர்கள் உட்பட சிற்றூழியர், துப்புரவு தொழிலாளர்கள், ஆய்வுகூட, தொலைபேசி மற்றும் காவல் சார்ந்த சகல பிரிவிலும் உள்ள சுமார் 30,000 தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர். தீவெங்கிலும் உள்ள பிரதிநிதிகளின் வருகையுடன் அன்று கொழும்பில் நடந்த பிரச்சாரத்திற்கு 2,000க்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்தனர். விகாரமாகாதேவி பூங்காவில் இருந்து சுகாதார அமைச்சு வரை ஊர்வலமாக சென்ற பிரச்சாரகர்கள், ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக சுகாதார அமைச்சின் முன் நின்று மறியல் போராட்டம் செய்தனர். தொழிலாளர்களை அச்சுறுத்தும் மற்றும் போராட்டத்தை குழப்பியடிக்கும் நடவடிக்கையின் ஒரு அம்சமாக அரசாங்கம் பிரதான ஆஸ்பத்திரிகளில் இராணுவத்தை அனுப்பி வைத்தது. இதற்கு இரு தினங்களுக்கு முன்னர்தான் துணை மருத்துவ ஊழியர்கள் போராட்டத்துக்கு எதிராக நீதிமன்ற ஆனை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. அரசாங்க அடக்குமுறையை அலட்சியம் செய்தபடி, தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்று கனிஷ்ட சேவை ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். ஐக்கிய பொது சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டுக்குழு, எதிர்ப்பு பிரச்சாரத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது. அகில இலங்கை சுகாதார சேவை சங்கம், ஐக்கிய சிற்றூழியர் தொலைபேசி சேவை சங்கம், ஆய்வுகூட தொழில்நுட்ப சேவை சங்கம் உட்பட 11 சுகாதார சேவை பிரிவின் கனிஷ்ட ஊழியர் தொழிற்சங்கங்கள் இந்த கூட்டுக் குழுவில் பங்குகொண்டுள்ளன. இந்தக் கூட்டுக் குழு மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்த மக்கள் போராட்டக் குழு எனப்படுவதினால் நிர்வகிக்கப்படுகின்றது. அகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கம், தேசிய சுகாதார சேவை ஊழியர் சங்கம் மற்றும் மக்கள் விடுதலை முன்னிணியின் அகில இலங்கை சுகாதார சேவை சங்கமும் இதில் பங்குபற்றியிருந்ததோடு அரசாங்கத்துக்கு சார்பான தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தங்களுக்கு ஆதரவளிக்காவிடினும் அவற்றின் உறுப்பினர்களில் அநேகமானவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர். சுகாதார கனிஷ்ட ஊழியர்களது சம்பளம் மற்றும் சேவை நிலைமைகள் தொடர்பான பிரச்சினைகள் பத்தாண்டுகளுக்கும் அதிகமான காலம் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. 2006ம் ஆண்டு வரை அவர்களது அடிப்படை சம்பளம் 6,600 ரூபாவாகும். அவ்வாண்டு அரச பிரிவு தொழிலாளர்களது தொடர்ந்த வேலை நிறுத்த போராட்ட அலைகளின் விளைவாக, அரசாங்க தொழிலாளர்களது சம்பளம் 11,730 வரை அதிகரித்த போது, கனிஷ்ட சுகாதார ஊழியர்களின் சம்பளமும் அம்மட்டத்துக்கு உயர்ந்தது. அது புதிய சம்பள அதிகரிப்பாக இருக்கவில்லை. உண்மையில், முன்னர் சம்பள அதிகரிப்பு என்ற பெயரில் இடை இடையே சம்பளத்துடன் சேர்க்கப்பட்டிருந்த பல கொடுப்பனவுகள் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்பட்டிருந்தன. எனினும் இதுவரை தரம் பிரித்தில் மேற்கொள்ளப்படாமையினால் அநேகர்களுக்கு இந்த அதிகரிப்பு கிடைக்கவில்லை. 2009க்கு முன்னர் கணிக்கப்பட்டதற்கேற்ப 5,550 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு கிடைத்தாலும், ஆறு மாதத்துக்கு ஒரு முறை 375 ரூபா வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு கொடுப்பனவில் சேர்க்கப்படும் என்று 2009ல் இராஜபக்ஷ அரசாங்கம் வழங்கிய உறுதி மொழி நிறைவேற்றப்படாமையினால், வாழ்க்கைச் செலவு வேகமாக அதிகரிப்பினும் கூட, தொழிலாளர்களது வருமானம் ஒரிடத்திலேயே தேங்கிக் கிடக்கின்றது. சீருடைக்காக ஆண்டுதோரும் 7 மீட்டர் துணியும் தையல் கூலி 550 ரூபாவும் மட்டுமே கிடைக்கின்றன. ஆபத்து கொடுப்பனவுக்கான மாதாந்த கொடுப்பனவு தரத்துக்கு ஏற்ப ரூபா 100 முதல் 150 ரூபா வரையே ஆகும். அரசாங்க பிரிவின் தொழிலாளர்களது வேலை தினம் வாரத்திற்கு 5 நாட்களாக இருப்பினும், சுகாதார சேவையின் கனிஷ்ட நிர்வாக சேவை ஊழியர்கள் வாரம் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும். அரசாங்க விடுமுறை நாட்களில் வேலை செய்வதற்கு மேலதிக கொடுப்பனவுகள் எதுவுமே கிடையாது. மேலதிக வேலை நேரக் காலம் மாதத்துக்கு 60-80 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 22ம் திகதி கொழும்பில் நடந்த பிரச்சாரத்தில் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய பல தொழிலாளர்கள், தாம் எதிர்கொண்டுள்ள கடினமான நிலைமைகளை விபரித்தனர். ஒரு சுகாதார ஊழியர் கூறியதாவது: “நான் 14 வருடகாலம் வேலை பார்க்கின்றேன். எனினும் எனது அடிப்படை சம்பளம் 13,000 ரூபாதான். மேலதிக நேர வேலை கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுடன் மாதாந்த வருமானம் 20 ரூபா வரையாக உள்ளது. மேலதிக வேலை நேரத்தை 60 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுடத்தியுள்ளனர். ஓய்வூதியத்துக்கும் ஏனையவற்றுக்கும் வெட்டிக்கொண்ட பின் 6,000 ரூபா கைக்கு வரும். மனைவிக்கு வேலை கிடையாது. நாம் வாடகை வீட்டில் வசிக்கின்றோம். மாதாந்த வீட்டுக் கூலி 4,500 ரூபா. குழந்தையின் பால்மா ஏனைய செலவுகளுக்கு 3,000 ரூபா வரை தேவைப்படுகின்றது. எரிபொருள் விலையேற்றத்துக்குப் பின் நாளாந்ந போக்குவரத்து செலவு 70 ரூபா வரை உயர்ந்துள்ளது. பண்டங்களின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து செல்கின்றது. சம்பளம் மட்டும் ஒரே அளவில் இருக்கின்றது. அமைச்சர்கள் நாம் சிறந்த சம்பளம் பெறுவதாக கூறுகின்றனர். நாம் உண்ணுவது பற்றி அடுப்புக்குத்தான் தெரியும் என்று கூறுவது போல நாம் ஒவ்வொரு நாளும் கடனுடனேயே சீவிக்கின்றோம். 33 மூன்று வருடகாலம் காவல்காரராக சேவையாற்றிய ஒருவர், கடன் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களின் பின், ரூபா 15,000 வரையிலேயே கைக்கு வரும் எனக் கூறினார். “குறிப்பிட்ட நேரத்துக்கு மேலாகவும் வேலை செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் மேலதிகமாக வேலை செய்தாலும் 60 மணித்தியாலங்களுக்கே கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. அரசாங்க விடுமுறை நாட்களில் வேலை செய்தாலும் அதற்காக மேலதிகமாக கொடுப்பனவு இல்லை. மணித்தியாலத்துக்கு வழங்கும் பணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. காவல் வேலைக்கு மேலதிகமாக துப்புரவாக்கல், ஆபத்து உதவி வாகனங்களில் செல்லல் போன்ற வேறு வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது. வருடம் 365 நாட்களும் வேலை செய்ய வேண்டும். புத்தாண்டு தினத்திலும் வேலைதான். விடுமுறை தேவைப்பட்டால் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.” என்றார். காலியில் இருந்து வந்திருந்த பொது கனிஷ்ட சேவையாளர் ஒருவர் கைக்கு கிடைக்கும் பணம் ரூபா 6,000 வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்று கூறினார். “அமைச்சு மூலம் இடர் உதவி கடன் கூட இலகுவாக பெற முடியாததால் அநேகர் அதிக வட்டிக்கு வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கியுள்ளனர். அவற்றுக்கு வெட்டிக்கொண்ட பின்னர் கைக்கு கிடைக்கும் பணம் சீவிப்பதற்கு போதாது. பிள்ளைகளது பள்ளிச் செலவு, மின்சார கட்டணம் நீர் கட்டணம், போக்குவரத்து செலவு என்பவற்றுக்காக குறைந்தபட்சம் 10,000 ரூபா தொடக்கம் 12,000 ரூபாய்களாவது தேவைப்படுகின்றது” என அவர் கூறினார். கனிஷ்ட ஊழியர்கள் அநேகருக்கு வீடு வசதி இல்லை. அவர்கள் 30-50 கிலோமீட்டர் தூரங்களில் இருந்து போக்குவரத்து கட்டணம் செலவிட்டு வேலைக்கு வர வேண்டும். அல்லது விடுதிகளில் தங்க வேண்டும். சாப்பாட்டுடன் தங்குமிட வசதிக்காக கொழும்பில் குறைந்தபட்சம் 6,000 ரூபா வாடகைப் பணமாக செலவிட வேண்டும். அவை அத்தியாவசிய வசதி குறைந்த பொதுவான இருப்பிடங்களே. சாப்பாடு இன்றி படுக்கை மட்டும் 3,000 ரூபா, பெண் தொழிலாளருக்கு செலவுக்கு மேலாக பாதுகாப்பின்மை பற்றிய பிரச்சினையையும் எதிர்கொண்டுள்ளனர். தொழிற்சங்கங்களின் தர ரீதியிலான பிளவுபடுத்தல்களையும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளையும் பொருட்படுத்தாது பெரும்பாலான கணிஷ்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதற்கு, அவர்கள் முகங்கொடுத்துள்ள இந்த சகிக்க முடியாத பொருளாதார மற்றும் வேலை நிலைமைகளே காரணமாகும். தொழிற்சங்கங்கள் இதுவரை செய்ததும் செய்வதும் வெற்றுப் பொய் பிரச்சாரங்களுக்கு கட்டுப்படுத்தி வைத்து காலம் பூராவும் கனிஷ்ட ஊழியர்களின் கோரிக்கைகளை கீழ்ப்படுத்தி வைத்திருப்பதே ஆகும். இந்த கோரிக்கைகளின் பேரில் 2004ல் கணிஷ்ட ஊழியர்கள் 14 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க தலைமை 2100 ரூபா அற்ப சம்பளத்தை ஏற்று, தமது கோரிக்கைகளை கைவிட்டு, போராட்டத்தை காட்டிக்கொடுத்தது. இதற்கான முக்கிய கைங்கரியத்தை இட்டு நிரப்பியது இராஜபக்ஷவை ஆட்சியில் ஏற்றவும், அரசாங்கத்தின் இனவாத யுத்தத்துக்கும் முழு ஆதரவு கொடுத்த ஜே.வி.பீ. சார்ந்த அகில இலங்கை சுகாதார சேவை சங்கமே ஆகும். தற்போது போலித்தனமாக போராளி முகமூடியிட்டுள்ள ஜே.வி.பீ.யில் இருந்து பிரிந்த மக்கள் போராட்டக் குழுவின் அகில இலங்கை சுகாதார சேவை சங்க தலைமைகளும் இந்த காட்டிக்கொடுப்பின் பங்காளர்களே ஆவர். இந்த தொழிற்சங்க தலைமைகள் புதிய முன்னணியை கட்டியெழுப்பியுள்ளது, ஊழியர்களது கோரிக்கையை வென்றெடுப்பதற்கு அல்ல. முதலாளித்துவ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக அவர்களது அதிருப்தி, சகிப்பின்மை வளர்ச்சியடையும் நிலைமையின் கீழ், தொழிலாளர்களது போராட்டத்துக்கு புது முறையில் குழிபறிப்பதற்கே ஆகும். புதிய முன்னணியினது வேலைத் திட்டம் பழைய முன்னணியின் வேலைத் திட்டத்துடன் வேறுபட்ட ஒன்றல்ல. தமது உரிமைகளுக்கான போராட்டத்தின் போது, தரப்பிரிவுவாத பிளவுகளுக்கு மாறாக, பொது எதிரியான முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான ஒரு ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கான தேவை தொழிலாளர்களுக்கு உண்மையில் உண்டு. எனினும் தொழிலாளர்களது இந்த எதிர்பார்ப்பு, தொழிற்சங்கத் தலைமைகள் ஏற்படுத்தியுள்ள முன்னணிகளின் நோக்கங்களுக்கு முற்றுமுழுதாக முரண்பட்ட ஒன்றாகும். தொழிற்சங்க தலைமைகளின் இத்தகைய முன்னணிகளின் சுலோகமாக இருப்பது “அரசியல் வேண்டாம்” என்பதே ஆகும். இது முதலாளித்துவ வர்க்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தின் போது, தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள, தவிர்க்க முடியாத அரசியல் பிரச்சினைகளில் இருந்து அவர்களது கவனத்தை திசை திருப்பிவிடும் பிற்போக்கு நடவடிக்கை ஆகும். தொழிலாள வர்க்கத்தின் தொழில், சம்பளம், வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்கள், உலக முதலாளித்துவ நெருக்கடியில் இருந்து ஊற்றெடுத்துள்ள ஒன்றாகும். இந்த நெருக்கடிகளின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்திவிடுவதற்காக, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் சிக்கன வேலைத் திட்டத்தை செயற்படுத்துகின்றது. அதற்கு அப்பாற் சென்று, பின்வாங்கி, தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை வழங்கும் தேவை முதலாளித்துவ வர்க்கத்துக்கு கிடையாது. அதற்கு பதிலாக, கனிஷ்ட ஊழியர்கள் மற்றும் துணை வைத்திய சேவையாளர் போன்று, உழைக்கும் மக்கள் மீது அரச அடக்குமுறையை கட்டவிழ்ப்பதே அர்சாங்கத்தின் வேலைதிட்டத்திட்டமாக உள்ளது. அரசாங்கத்தின் இந்த பொருளாதார அரசியல் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்துக்காக, சுயாதீன அரசியல் வேலைத் திட்டத்தை அடிப்படையாக் கொண்ட உழைக்கும் மக்களது ஒருங்கினைந்த இயக்கமொன்று தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமாகும். முதலாளித்துவ அரசியல் கட்சிகள், சந்தர்ப்பவாத போக்கு கொண்ட இடதுசாரி அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்த விலகிச் செல்லாது, அத்தகைய இயக்கமொன்றை உருவாக்க இயலாது. அத்தகைய இயக்கத்துக்கான அடித்தளத்தை கட்டியெழுப்பும் முகமாக, இத்தகைய அமைப்புகளிடம் இருந்து விலகி, சகல வேலைத் தளங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப தொழிலாளர்கள் முன்வர வேண்டும். முதலாளித்துவ வர்க்க ஆட்சியை தூக்கிவீசி சோசலிச வேலைத்திட்டத்தை செயற்படுத்தும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதே தொழிலாள வர்க்கத்தின் முன்நோக்காக இருக்க வேண்டும் |
|