World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India’s Communist Party (Marxist): Defender of Stalin and capitalist restoration

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்): ஸ்ராலின் மற்றும் முதலாளித்துவ மீட்சியின் பாதுகாவலன்

By Deepal Jayaskera
6 April 2012
Back to screen version

இந்தியாவின் பிரதான ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சியும் நாடாளுமன்ற தேர்தல் இடது கூட்டணியினரில் மேலாதிக்கம் செலுத்துகின்ற கூட்டாளியுமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமை, 1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக தனது தேசிய மாநாட்டில் ஒருதத்துவார்த்த தீர்மானத்தை வழங்குகிறது.

கடைசியாய் அத்தகையதொரு தீர்மானம், கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் நிலைகுலைந்ததை ஒட்டியும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை ஒட்டியும், அதாவது இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது CPM "உண்மையான, நிலவுகின்றதான சோசலிசம்என்று போற்றி வந்திருந்த அதிகாரத்துவ போலிஸ்-அரசு ஆட்சிகளின் வீழ்ச்சியை ஒட்டி, அரங்கேறியது.

இதேபோன்ற வகையில் தான் இந்த வாரத்தில் CPM இன் 20வது மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கும்சில தத்துவார்த்தப் பிரச்சினைகள் குறித்த வரைவுத் தீர்மானம் என்கின்ற தலைப்பிலானதத்துவார்த்த தீர்மானமும் ஒரு பெரும் நெருக்கடிக்கான பதிலிறுப்பாக கொண்டு வரப்பட்டிருக்கிறது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னர் CPM இன் சகோதரக் கட்சிகளில் பலவும் உருக்குலைந்தன அல்லது தேய்ந்து போயின; ஆனால் CPM அதற்கு நேர்மாறாய் 1990களிலும் மற்றும் இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலும் இந்திய முதலாளித்துவத்தின் அரசியலில் புதிய முக்கியத்துவத்தை ஈட்டியது. இந்தியாவை அந்நிய முதலீட்டின் சரணாலயமாக ஆக்குவதையும் உலக முதலாளித்துவத்திற்கான மலிவு-உழைப்பு உற்பத்தியாளராக ஆக்குவதையும் நோக்கமாய்க் கொண்ட முதலாளித்துவ வர்க்கத்தின்புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்திய தேசிய கூட்டணி அரசாங்கங்களை உருவாக்குவதிலும் அவற்றை அதிகாரத்தில் பராமரிப்பதிலும் இக்கட்சி ஒரு அச்சாணியான பாத்திரத்தை ஆற்றியது. 2004 ஆம் ஆண்டு மே முதல் 2008 ஜூலை வரையிலும் CPM தலைமையிலான இடது முன்னணி காங்கிரஸ் கட்சி தலைமையிலான நடப்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அதன் நாடாளுமன்றப் பெரும்பான்மையை வழங்கியது. இதனிடையே, CPM மேற்கு வங்கத்தில் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தது; கேரள மாநிலத்தில் இது மேலாதிக்க கூட்டாளியாக இருந்த கூட்டணியின் அரசாங்கமும் காங்கிரஸ் கட்சி அரசாங்கமும் மாறி மாறி அதிகாரத்தில் அமர்ந்தனஆரம்ப காலகட்டங்களில் இது வரம்புபட்ட நிலச் சீர்திருத்தங்களையும் சமூக-நல நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தியது என்றாலும், கடந்த இரண்டு தசாப்தங்களாய் எங்கெல்லாம் எப்போதெல்லாம் அது அரசு அதிகாரத்தில் இருந்ததோ அங்கெல்லாம் அது வலதுசாரி சந்தை ஆதரவுசீர்திருத்தங்களையே அமல்படுத்தி வந்திருக்கிறது.

இதன் விளைவாய், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களிடையேயான தனது ஆதரவில் பெரும் இழப்பை CPM கண்டிருக்கிறது என்பதோடு தொடர்ச்சியான பெரும் தேர்தல் பின்னடைவுகளையும் சந்தித்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில், இது தனது நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினை இழந்தது அத்துடன் 2011 இல் மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் இது ஆட்சியை இழந்தது. [காணவும்: இந்தியா: ஸ்ராலினிச CPM பெருகும் உட்கட்சி நெருக்கடிக்கு இடையே கட்சி மாநாட்டை நடத்துகிறது]

CPM இன் புதியதத்துவார்த்த தீர்மானத்தின் நோக்கம், 1992 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டப்பட்ட தீர்மானத்தினதைப் போன்றே, இந்திய முதலாளித்துவ ஆட்சியின் அரண் போன்ற காவலனாக விளங்கும் CPM இன் பாத்திரத்திற்கு ஒருதத்துவார்த்த திரையையும் மறைப்பையும் வழங்குவதும், CPM 1917 அக்டோபர் புரட்சியின் படிப்பினைகள் மற்றும் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மார்க்சிச கட்சி என்பதான முன்னெப்போதையும் விட மோசடியான கூற்றினைத் தொடர்ந்து காப்பாற்றுவதுமாகும்

"முதலாளித்துவத்தின் நடப்பு உலகளாவிய நெருக்கடி அதன் வெளிப்பாடுகளில் 1930களின் பெருமந்தநிலையைக் காட்டிலும் மிகத் தீவிரமானதாய் இருக்கிறது. அத்துடன் உலக மக்களின் மிகப் பெரும்பான்மையினர் மீது பெரும் துன்பங்களைத் திணிக்கிறதுஎன்கிற பிரகடனத்துடன் இந்தத் தீர்மானம் ஆரம்பிக்கிறது. ஆனால் உலக முதலாளித்துவத்தை தொழிலாள வர்க்கம் தூக்கியெறிவதற்கான, அவசியத்தைக் கூட விடுங்கள், சாத்தியத்தை இந்த நெருக்கடி எழுப்புகிறது என்பதான சிந்தனை எதையும் இது அவசர அவசரமாய் நிராகரிக்கிறதுஅதன் அடுத்த பத்திசோவியத் ஒன்றியத்தின் கலைப்பினை அடுத்து, சர்வதேசரீதியாக வர்க்க சக்திகள் இடையிலான இடையுறவிலான சமநிலை ஏகாதிபத்தியத்திற்கு சாதகமான திசையில் நகர்ந்திருந்ததுஎன்று 1992 ஆம் ஆண்டின் தத்துவார்த்த தீர்மானத்தில் CPM கூறியிருந்த விடயம் தொடர்ந்து செல்லுபடியாகிறது என்று உறுதி செய்கிறது

CPM, அது உருவான 1964 ஆம் ஆண்டு முதலாக உறுதியாகப் பின்பற்றி வந்திருக்கக் கூடிய பிற்போக்குத்தனமான ஸ்ராலினிச இரண்டு-கட்டத் தத்துவத்திற்கு இணங்கிய வகையில், தொழிலாள வர்க்கமானதுதேசப்பற்று கொண்ட” “ஏகாதிபத்திய எதிர்ப்பு” ”நிலவுடமை விரோதமுதலாளித்துவ வர்க்கத்துடன் கூட்டணி சேர்ந்துதேசிய ஜனநாயகப் புரட்சி அதாவது முதலாளித்துவப் புரட்சியை நிறைவு செய்ததற்குப் பின் தான் இந்தியாவில் சோசலிசத்துக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட முடியும் என்ற காரணம் கூறி தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு இக்கட்சி அரசியல்ரீதியாக கீழ்ப்படியச் செய்து வந்திருப்பதை எப்போதும் நியாயப்படுத்தி வந்திருக்கிறது

ஆயினும் சோவியத் ஒன்றியம் நிலைகுலைந்ததை அடுத்து, உலகளாவிய அளவில் CPM சோசலிசப் புரட்சியை திட்டநிரலில் இருந்தே தள்ளிவைத்துப் பிரகடனம் செய்து விட்டது. இதற்கு சிகரம் வைத்தாற் போல முன்னாள் மேற்கு வங்க முதலமைச்சரும் பொலிட்பீரோ உறுப்பினருமான ஜோதிபாசுசோசலிசம் என்பதெல்லாம் தொலைகாலக் கனவு தான்என்று பிரகடனம் செய்தார். இந்த அடிப்படையில் இது மேலும் வலது நோக்கிய நகர்விற்கு நியாயம் கற்பித்து மத்தியில் அமைந்த வலது சாரி அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுத்ததோடு அது அரசாங்கம் அமைத்த மாநிலங்களில்முதலீட்டாளர்-ஆதரவு கொள்கைகள் என்று  அது வருணித்த கொள்கைகளை அமல்படுத்தியது.

ஸ்ராலினிச CPM ஐப் பொறுத்தவரை, நடப்பு உலக முதலாளித்துவ நெருக்கடியானது வெறுமனே முதலாளித்துவம் என்பது மனிதாபிமானமற்ற சுரண்டலைமைப்பு, இதுமனித குலத்துக்கு அதன் முழுமையான விடுதலையையும், சுதந்திரத்தையும், முன்னேற்றத்தையும் தொடர்ந்து மறுத்து வருகிறதுஎன்பதை விளங்கப்படுத்துகிறது அவ்வளவே. இந்திய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் பணி முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்திய உலக ஒழுங்கையும் புரட்சிகரமாய்த் தூக்கியெறிவதல்ல, மாறாகநவ-தாராளவாதத்தைதோற்கடிப்பதும் ஒருபன்துருவ உலகத்துக்காகப் போராடுவதும் தான்.

இது தொடர்ச்சியான, உரத்த குரலிலான எதிர்ப்புரட்சிகர முன்னோக்கு என்பது சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் குற்றங்களை CPM பாதுகாத்து நின்றமை மற்றும் அது பரப்புரை செய்த மார்க்சிசத்தின் தேசியவாதப் பிறழ்வான ஸ்ராலினிசம் ஆகியவற்றின் தர்க்கரீதியான விளைபொருளாகும்.

சோவியத் ஒன்றியத்தின் நிலைக்குலைவின் காரணத்தால்சர்வதேசரீதியாக வர்க்க சக்திகளுக்கு இடையிலான இடையுறவில் ஒரு பண்புரீதியான நகர்வு ஏகாதிபத்தியத்திற்கு சாதகமாய் நிகழ்ந்திருக்கிறது என்கிற CPM இன் கூற்று ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஆட்சி சோசலிசத்தைக் கொண்டிருந்தது என்பதான பொய்யை அடிப்படையாகக் கொண்டதாகும். அத்துடன் கோர்பசேவ் 1985ல் கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் தலைமைக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியத்தில் என்ன நடந்தது என்பதன் முக்கியத்துவத்தை முற்றுமுதலாய் திரிப்பதாகும்.

சலுகைபடைத்த ஒரு அதிகாரத்துவ தட்டு தொழிலாள வர்க்கத்தை இரக்கமில்லாமல் ஒடுக்கி பல தசாப்த காலம் நடத்திய முறையற்ற ஆட்சியின் முடிவு தான் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. 1920களில் முதலாவது தொழிலாளர்அரசின் தனிமைப்பட்ட மற்றும் பின் தங்கிய நிலையின் காரணத்தால் அரசு மற்றும் கட்சி எந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜோசப் ஸ்ராலின் தலைமையில் எழுந்திருந்த ஒரு சலுகை படைத்த அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அரசியல் அதிகாரத்தைத் தட்டிப் பறித்ததின் மூலம் தொடங்கியிருந்த ஒரு எதிர்ப்புரட்சியின் இறுதிக் கட்டம் தான் அது

ரஷ்யப் புரட்சியின் தலைவிதி உலக சோசலிசப் புரட்சியின் தலைவிதியுடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளது என்று சிந்தித்த லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் சர்வதேசிய முன்னோக்கினை இந்த அதிகாரத்துவம் மறுதலித்தது. ”தனியொரு நாட்டில் சோசலிசம்என்ற பதாகையின் கீழ் ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு இணக்க ஏற்பாட்டிற்கு வர முனைந்த ஸ்ராலின், பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கிரெம்ளினது எதிர்ப்புரட்சி வெளியுறவுக் கொள்கையின் சாதனங்களாய் உருமாற்றினார். 1930களில் ஒரு சலுகைபடைத்த தேசிய சாதியாக தனது நலன்களைப் பின் தொடர்ந்த கிரெம்ளின் அதிகாரத்துவம் தொடர்ச்சியாக தொழிலாள வர்க்கத்தின் பெருந்துயரகரமான தோல்விகளுக்கு ஏற்பாடு செய்து அது இரண்டாம் உலகப் போருக்குப் பாதை திறந்தது. ஜேர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வராமல் தடுப்பதற்கு தொழிலாள வர்க்க அமைப்புகளின் ஒரு ஐக்கிய முன்னணியை ஒழுங்கமைப்பதற்கான எந்த முயற்சிகளையும் மற்றும் எல்லா முயற்சிகளையும், சீர்திருத்தவாத வெகுஜனத் தொழிலாளர் அமைப்புகள் எல்லாம்சமூக பாசிஸ்டுகள்என்ற காரணம் கூறி எதிர்ப்பதற்கு இது கம்யூனிஸ்ட் கட்சிக்கு (KPD) உத்தரவிட்டது. ஸ்பெயினில் முற்போக்கான முதலாளித்துவத்துடன் கைகோர்த்து பாசிச விரோதமக்கள் முன்னணி என்கின்ற பேரில், இது, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோவியத் இரகசியப் போலிசான NKVD இன் பிரிவுகளைப் பயன்படுத்தி தொழிலாளர் புரட்சியை கழுத்தை நெரித்து முதலாளித்துவ அரசின் எதிர்த்தாக்குதலுக்கு ஈட்டிமுனையாய் பயன்பட்டது. இதனிடையே, பிரிட்டன், பிரான்ஸ், மற்றும் பிற ஏகாதிபத்தியஜனநாயகங்களை அச்சு நாடுகளுக்கு எதிராய் சோவியத் ஒன்றியத்தின் கூட்டணியில் கூட்டுச் சேர்க்கும் நம்பிக்கையுடன், இவற்றின் காலனித்துவ சாம்ராஜ்யங்களுக்கு புரட்சிகர சவால் எதுவும் தோன்றுவதை எதிர்த்து காலனித்துவ நாடுகளின் மக்களை இது வஞ்சித்தது. அத்துடன் சோவியத் ஒன்றியத்துக்குள்ளாக, லெனின் தலைமையின் கீழிருந்த போல்ஷிவிக் கட்சித் தலைமையையும் அத்துடன் சேர்த்து நூறாயிரக்கணக்கில் சோசலிசத் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளையும் உருரீதியாக அழித்தொழிப்பதை நியாயப்படுத்த ஸ்ராலின் ஆட்சி 1938 ஆம் ஆண்டின் இட்டுக்கட்டப்பட்ட மாஸ்கோ விசாரணைகளை கொண்டு நிறுத்தியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், கிரெம்ளின் உலக ஏகாதிபத்தியத்திற்கு வழங்கிய அதிமுக்கியமான அரசியல் ஆதரவு அமெரிக்கா உலக முதலாளித்துவத்தை மறுஒழுங்கு செய்வதற்கும் அதற்கு மறு உயிர் அளிப்பதற்கும் தனது முதலாளித்துவ போட்டி நாடுகளின் மீது தனது பொருளாதார பலத்தையும் முன்கண்டிராத மேலாதிக்கத்தையும் பிரயோகிப்பதற்கு அனுமதித்தது. யால்டா மற்றும் போட்ஸ்டாம் மாநாடுகளில் ஒப்புக் கொண்டவாறு, கிழக்கு ஐரோப்பாவில் ஒரு சோவியத் இடைத்தடை மண்டலத்தை(buffer zone)அமெரிக்காவும் பிரிட்டனும் ஏற்றுக் கொள்வதற்கு பிரதிபலனாக பிரான்ஸ், இத்தாலி மற்றும் மேற்கு ஐரோப்பாவெங்கிலுமான கம்யூனிஸ்டுக் கட்சிகள் முதலாளித்துவ ஜனநாயகத்தை உயிரூட்டுவதில் முதலாளித்துவத்திற்கு உதவ வேண்டும் என்று ஸ்ராலின் உத்தரவிட்டார்.

அதிகாரத்துவத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒரு அரசியல் புரட்சி நடக்காது போனால், ஸ்ராலினிச அதிகாரத்துவம் இறுதியாக தொழிலாளர்அரசினை விழுங்கி விடும், அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்துறவுகளைத் தலைகீழாக்கி விடும், முதலாளித்துவ தனியார் உடைமைகளில் அதன் சலுகைகளை நங்கூரம் பாய்ச்சிக் கொண்டு விடும் என்பதை ட்ரொட்ஸ்கியும் நான்காம் அகிலமும் 1933 முதலாகவே எச்சரித்திருந்தனர். துயரகரமான வகையில் இந்த முன்னோக்கு 1989-91 நிகழ்வுகளின் மூலம் துன்பமுறையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

CPMம் அதன் தோற்றுவாயான CPIம் கிரெம்ளின் அதிகாரத்துவத்தின், குறிப்பாக அது ஸ்ராலின் தலைமையில் கீழ் இருந்தபோது, எதிர்ப்புரட்சி அரசியலை ஒரு முன்மாதிரியாக எப்போதும் பற்றி வந்திருக்கின்றன என்பதோடு ட்ரொட்ஸ்கிசத்தின் எதிர்ப்பை அவர் குருதியோட ஒடுக்கியதை ஆதரித்து வந்திருக்கின்றன

CPM அதன் 1992 தத்துவார்த்த தீர்மானத்தில் ஸ்ராலினுக்கான தனது ஆதரவை வெளிப்படையாக மறு உறுதி செய்தது: “ட்ரொட்ஸ்கிசம் மற்றும் பிற தத்துவார்த்த பிறழல்களுக்கு எதிராக லெனினிசத்தைப் பாதுகாத்து ஜோசப் ஸ்ராலின் அளித்த ஒப்பற்ற பங்களிப்பும், சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் கட்டப்பட்டதும்....சோசலிசத்தின் வரலாற்றில் அழிக்கப்பட முடியாததாகும்.”

இருபது ஆண்டுகள் ஆகி விட்டன, ஸ்ராலினுக்கான இந்த புகழ்மாலை CPM இல் மாறவில்லை. சோவியத் ஒன்றியத்தின் சிறுபான்மை மக்களை நசுக்கியவரும், தேசியப் பிரச்சினையில் ஒரு நிபுணரைப் போல 1947 “சுதந்திர ஏற்பாட்டையும் துணைக்கண்டத்தின் துண்டாடலையும் ஆதரிப்பதற்கு CPIக்கு உத்தரவிட்டவருமான ஸ்ராலினை இதன் தற்போதைய தத்துவார்த்த தீர்மானம் மேலும் தொழுகிறது.

1992 ஆம் ஆண்டில், மாவோவிடம் இருந்து இரவல் பெற்ற வாதங்களைக் கொண்டு, சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவுக்கு குருசேவ் மற்றும் ஸ்ராலினின் மற்ற வாரிசுகள் மீது பழிசுமத்திய CPM, முதலாளித்துவம் மீட்சி பெற்றதன் வேர்களையும் காரணங்களையும் முழுமையாய் ஆய்வு செய்யவிருப்பதாக வாக்குறுதியளித்தது. எதிர்பார்த்தவாறே, இது ஒரு வெற்று வாக்குறுதியாகத் தான் தொடர்ந்து வந்திருக்கிறது, ஏனென்றால் அப்படி ஒரு ஆய்வு நடக்குமாயின் அது சோவியத் ஒன்றியம்சோசலிசஅரசாய் இருந்தது என்பதான CPM இன் கூற்றுக்கு அடித்தளமாய் இருந்த பொய்கள் மற்றும் புரட்டுகளை நோக்கியும், அதிகாரத்துவத்தையும் அது ஏகாதிபத்தியத்துடன் எதிர்ப்புரட்சிகர வகையில் பேரம் பேசியதையும் ஊக்குவிப்பதில் இதன் சொந்த பாத்திரத்தின் மீதேயும்  உடனடியாய் கவனத்தைக் கொண்டுவரும்.  

தற்போதைய தத்துவார்த்த தீர்மானத்தில் சோவியத் ஒன்றியத்தின் நிலைக்குலைவு குறித்து ஆராய்கின்ற சிறிய பகுதியில் வரலாற்றின் காலத்துல்லியமோ மார்க்சிச வர்க்க பகுப்பாய்வோ இல்லை. வர்க்க சக்திகளிடையேயான இடையுறவு முதலாளித்துவ வர்க்கத்திற்கு சாதகமாய் இருப்பதாகக் கூறும் ஆவணத்தின் மையக் கருப்பொருளுக்கு உறுதி சேர்க்கும் விதமாக, இது, சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவுக்கு உலக முதலாளித்துவத்தின் மீட்சித்தன்மை குறித்த குறைமதிப்பீடைக் காரணமாய்க் காட்டுகிறது. “சோசலிச நாடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் வர்க்க எதிரியைக் குறைமதிப்பீடு செய்தமையும் சோசலிசத்தை மிகைமதிப்பீடு செய்தமையும், சோசலிச நாடுகள் முகம் கொடுத்த பிரச்சினைகளை [அந்நாடுகளின் ஆளும் கட்சிகள்] அலட்சியம் செய்ததும் உலக முதலாளித்துவம் முன்னேறிச் சென்று ஸ்திரப்பட்டதுமான ஒரு நிலைமையை உருவாக்கின.”

உண்மையில், இருபதாம் நூற்றாண்டின் பாதையில் முதலாளித்துவத்திற்கு எதிராய் எழுந்த எண்ணற்ற புரட்சிகர சவால்களில் ஏகாதிபத்தியம் தப்பிப் பிழைக்க முடிந்ததென்றால் அதற்குக் காரணம் சோவியத் அதிகாரத்துவம் ஏகாதிபத்தியத்துடன் சமாதான சகவாழ்வைப்  பின்பற்றியும் ஒரு வெற்றிகரமான தொழிலாளர் புரட்சி சோவியத் தொழிலாள வர்க்கத்தின் மீது ஏற்படுத்தக் கூடிய புரட்சிகரத் தாக்கத்தைக் கண்டு அஞ்சியும் இந்த சவால்களை ஒடுக்கியதால் தான். “சோசலிச நாடுகள் எதிர்கொண்ட பிரச்சினைகளைஅலட்சியப்படுத்தியஇந்த CPSU மற்றும் அதன் சகோதரக் கட்சிகளைப் பொறுத்தவரை, அவை தான் இந்தப் பிரச்சினைகளின் வேர்களாய் இருந்தன - சலுகைகளின் வடிவில் பரந்த வளங்களை ஒதுக்கிக் கொண்டன, தொழிலாள வர்க்கத்துக்கு அரசியல் சுய-வெளிப்பாட்டுக்கான எந்த வடிவத்தையும் மறுத்தன, எதேச்சாதிகார தேசியப் பொருளாதார அபிவிருத்திக்கான பிற்போக்குத்தனமான வேலைத்திட்டத்தைப் பின்பற்றின.

பெருகிய ஏகாதிபத்திய அழுத்தத்திற்கும் கிழக்கு ஐரோப்பாவில் தொடர்ந்து எழுந்த எழுச்சிகளில் வெளிப்பட்டதான தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்துவரும் எதிர்ப்பு உணர்ச்சிக்குமான பதிலிறுப்பாக ஸ்ராலினிச அதிகாரத்துவம் தான் முதலாளித்துவ மீட்சியை நடத்தியது என்பதையே CPM தீர்மானத்தில் இருக்கும் ஜீவனற்ற பத்திகள் மறைக்க முனைகின்றன. முதலாளித்துவ தனி உடைமையில் அது பெற்ற முறையற்ற சலுகைகளை வேரூன்றச் செய்யும் நோக்கத்துடன் அவ்வாறு அது செய்தது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு உடனடி முன்னரும் பின்னருமாய் அதிகாரத்துவம் பெரும் சூறையாடலில் இறங்கியது. அரசுச் சொத்துகளை தனது சொந்த சொத்தினைப் போல் அது அபகரித்துக் கொண்டதோடு எந்த அரசுப் பொருளாதாரத் திட்டமிடலையும் திட்டமிட்டு நொருக்கியது.     

சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் இந்தக் கடைசிக் காட்டிக் கொடுப்பினால் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை ஏகாதிபத்தியம் நிச்சயமாக சுரண்டிக் கொண்டது. சோசலிசம் உகந்ததில்லை என்பதை வரலாறு நிரூபணம் செய்திருப்பதாய்க் கூறி ஒரு உலகளாவிய தத்துவார்த்தத் தாக்குதலைத் தொடுத்த அது, மலிவு உழைப்பின் புதிய கையிருப்புகளைப் பெறுவதற்கு முன்னாள் சோவியத் குடியரசுகளை நோக்கியும் கிழக்கு ஐரோப்பாவை நோக்கியும் திரும்பியது. சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் தொழிலாள வர்க்கத்துக்கான பின்விளைவுகள் படுபயங்கரமாய் இருந்தன, தொழிற்சாலைகளின் மொத்தப் பிரிவுகளும் மூடலை சந்தித்தன; இலவச சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட பல சமூக நல உதவிகளும் அழிக்கப்பட்டன

ஆனால் இது உலக முதலாளித்துவத்தின் மறுஎழுச்சியைக் குறிக்கவில்லை, வர்க்கங்களுக்கு இடையிலான உலக சமநிலை உலக முதலாளித்துவ வர்க்கத்திற்கு சாதகமாய் நகர்ந்ததையும் நிச்சயமாகக் குறிக்கவில்லை. மாறாக, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விளக்கியதைப் போல, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலக முதலாளித்துவ சமநிலை உருப்பிரிந்ததன் விளைபொருளாக அது இருந்தது என்பதோடு போர்கள் மற்றும் புரட்சிகளின் ஒரு புதிய காலகட்டத்தை அது கட்டியம் கூறியது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் தடையின்றி முன்னேறுவதைப் போன்று CPM தீர்மானம் சித்தரிக்கிறது. உண்மையில், கடந்த ஆறு தசாப்தங்களாக உலகத்தின் வங்கியாகவும் போலிசாகவும் சேவை செய்து வந்திருக்கக் கூடிய முதலாளித்துவ சக்தியின் ஒரு வரலாற்று நெருக்கடியில் தான் கடந்த இரு தசாப்தங்களாக அமெரிக்க இராணுவவாதம் கண்டிருக்கக் கூடிய வெடிப்பு வேர் கொண்டுள்ளது. உலகின் மிகப் பெரும் கடனாளி நாடாகவும், இலாபங்களையும் வளர்ச்சியையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமாயின் நிதி ஒட்டுண்ணித்தனத்தின் வடிவங்கள் மீது கனமாய்ச் சார்ந்திருக்க வேண்டிய நிலையிலும், அத்துடன் புதிய போட்டியாளர்களிடம் சந்தைகளை இழக்கும் நிலையிலும் இருக்கும் அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை மறு உறுதி செய்யும் முயற்சியில் வலிந்து தாக்கும் போர்களை நோக்கித் திரும்பத் தள்ளப்பட்டிருக்கிறது.

உடனடி வருங்காலத்திற்கான வரலாற்று நிகழ்ச்சி நிரலில் இருந்து சோசலிசப் புரட்சி அகற்றப்பட்டிருப்பதாய் வாதிடுவதற்கு சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை CPM கையிலெடுக்கும் அதே சமயத்தில் அதன் தத்துவார்த்தத் தீர்மானம் சீனாவைசோசலிச அரசாகப் புகழ்வதோடு 1949 புரட்சியின் சமூக வெற்றிகளை சீன ஸ்ராலினிச ஆட்சி கலைத்ததையும் அயல்நாட்டு முதலாளிகளுக்கும் மற்றும் வளர்ந்து வரும் உள்நாட்டு முதலாளிகளின் ஒரு வர்க்கத்துக்கும் சொந்தமான தொழிற்சாலைகளில் மலிவு-உழைப்பின் உற்பத்தியை இரக்கமற்று செயல்படுத்துகின்ற ஒன்றாக அது எழுந்ததையும் பாதுகாக்கிறது. CPM அறிவிக்கிறது, ”வர்க்க சக்திகளுக்கு இடையிலான சர்வதேச இடையுறவு ஏகாதிபத்தியத்திற்கு சாதகமாய் நகர்வு கண்டிருக்கிற இந்நாள் யதார்த்தத்தில்” ”சர்வதேச நிதி மூலதனத்தால் தலைமை கொடுக்கப்பட்டும் செலுத்தப்பட்டும் நிகழ்கிற உலகமயமாக்கத்தினால் முன்நிறுத்தப்படும் சவால்களை சந்திப்பதற்கு, இருக்கின்ற சோசலிச நாடுகள் பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பாதையில் களமிறங்கியிருக்கின்றன.”

இந்தசீர்திருத்தங்கள் சீனாவில் உருவாக்கியிருக்கக் கூடியசாதகமான முடிவுகளை புகழ்கின்ற இந்தத் தீர்மானம், சீன அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் மிருகத்தனமான அடக்குமுறையையும் CPM ஆதரவு பெற்ற 1989 தியானன்மென் சதுக்கப் படுகொலையைத் தொடர்ந்து நடந்த முதலாளித்துவத்தின் முழு மீட்சியையும் நியாயப்படுத்துவதற்கு முன்வைக்கின்ற பல்வேறு ஏமாற்றுத்தனமான, தேசியவாத காரணநியாயங்களை ஒப்புக் கொள்கிற வகையில் மேற்கோளிடுகிறது. ”சீனா சோசலிசத்தின் ஆரம்பநிலைக் கட்டத்தில் இருக்கிறது, இக்கட்டம் நூறாண்டுகள் வரையும் கூட நீடிக்கக் கூடியது”, ஒருசோசலிச சந்தைப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான அவசியம், மற்றும்சீனக் குணாம்சங்களுடனான சோசலிசத்தை கட்டுவது ஆகிய கூற்றுகள் எல்லாம் இதில் அடங்கும்.

பின் இந்தத் தீர்மானம் சிலபாதகமான காரணிகளையும்துல்லியமாய் அளவிட இயலாத பல்வேறு விடயங்களையும் ஒப்புக் கொள்கிறது. சமத்துவமின்மை மற்றும் ஊழல், “ஏராளமான தொழிலதிபர்களும் வர்த்தகர்களும்” CCP இல் இணைவது, மற்றும்ஏகாதிபத்தியம் என்னும் கருத்தாக்கத்தை கைவிடுவதுஆகியவை இவற்றில் இடம்பிடிக்கின்றன.

CPM முதலாளித்துவ மீட்சியின் இத்தகைய ஒரு பகிரங்கமான கட்சியாக இருந்து கொண்டுசோசலிஸ்ட்ஆக தொடர்ந்து கொண்டாட முடிகிறது, இன்னும் சொன்னால் அதனை மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அதன் சொந்தமுதலீட்டாளர் ஆதரவுக் கொள்கைகளுக்கான ஒரு முன்மாதிரியாகக் கையிலெடுக்க முடிகிறது என்றால், தன்னை இந்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இணக்கமாக்கிக் கொள்வதற்கு ஸ்ராலினிச CPM எந்தக் கோட்டையும் தாண்டுவதற்குத் தயங்காது என்பதையே அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.