World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

WSWS announces on-the-spot coverage of French presidential election

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் களத்தில் இருந்து செய்திகளை வழங்கவிருப்பதை உலக சோசலிச வலைத் தளம் அறிவிக்கிறது

By Alex Lantier in Paris
9 April 2012

Back to screen version

இரண்டு வாரங்களில் நடைபெறவிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று தேர்தல் முன்னோட்ட செய்திகளை உலக சோசலிச வலைத் தளம் பிரான்சில் இருந்து வழங்க இருக்கிறது

போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியின் நான்காவது ஆண்டில், இந்த தேர்தல் பிரான்ஸ் மற்றும் ஒட்டுமொத்த கண்டத்திலும் ஒரு திருப்புமுனையைக் குறித்து நிற்கிறது. அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் அதிகமான வேலைவாய்ப்பின்மை இவற்றால் சோர்ந்து போயுள்ள தொழிலாள வர்க்க வாக்காளர்கள், வேட்பாளர்களின் எழுத்து அறிக்கைகளுக்கும் மக்களின் பெருந்திரளானோர் முகங்கொடுக்கும் சமூக யதார்த்தத்துக்கும் இடையே ஒரு பரந்த இடைவெளி இருப்பதை உணர்கின்றனர்.

இந்த மிக அரசியல்வயப்பட்ட நாட்டில், நடப்பு ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசி சோசலிஸ்ட் கட்சியின் (PS) வேட்பாளரான பிரான்சுவா ஹாலன்ட் ஆகிய இரண்டு முன்னணிப் போட்டியாளர்களுக்குமே ஆதரவு உற்சாகம் குன்றிய நிலையில் தான் இருக்கிறதென்பது நன்கு புலப்படக் கூடியதாய் இருக்கிறது. மத்திய கிழக்கின் போர்கள் மற்றும் சமூக வெட்டுகள் மூலமாக சார்க்கோசி ஒரு ஆழமான அவப்பெயர் சரித்திரத்தைக் கொண்டிருக்கிறார். அவர் பிரான்சிலேயே வெட்டுகளை செயல்படுத்தியிருக்கிறார் என்பதோடு ஐரோப்பிய ஒன்றியத்தில் தனது முன்னணியான பாத்திரத்தின் மூலமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளால் சிதைக்கப்பட்டிருக்கும் கிரீஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் நடத்தியிருக்கிறார்

எந்த தனித்தன்மையும் இல்லாத ஹோலன்ட் தனது பங்காக சோசலிஸ்ட் கட்சியின்(PS)இன் மோசடியான தன்மையை வடிவமாய்க் கொண்டிருக்கிறார். இக்கட்சியின் 2002 ஜனாதிபதி வேட்பாளரான லியோனல் ஜோஸ்பன் தனது வேலைத்திட்டம் சோசலிசத் தன்மையுடையதல்ல என்று அறிவித்து பிரபலம் பெற்றவர்.

பிரெஞ்சு நிதி மூலதனத்திற்கு நடமாடும் விற்பனைப் பிரதிநிதி என்று ஹோலன்டைக் கூறுவது அவருக்குப் புகழ் சேர்ப்பதாய் இருக்கும். செல்வந்தர்கள் உங்களைப் பார்த்து பயப்பட வேண்டியிருக்குமா என்று சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் இவரிடம் கேட்டபோது இவர் கூறிய பதில்: இன்று பிரான்சில் கம்யூனிஸ்டுகள் என்று யாரும் கிடையாது. இடதுகள் பொருளாதாரத்தை தாராளமயமாக்கி சந்தைகளை நிதிக்கும் தனியார்மயத்திற்கும் திறந்து விட்டனர். பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

சார்க்கோசியும்-PSம் இருமுனை ஆதிக்கம் செலுத்துவதில் எழுகின்ற வெகுஜன கோபத்தைச் சுரண்டிக் கொள்ளும் நோக்கத்தோடு நவ-பாசிச வேட்பாளரான மரின் லு பென், புலம்பெயர்ந்தோர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத இனவாதத்திற்கு அழைப்பு விடுகிறார். பிரதான முதலாளித்துவக் கட்சிகள் வெளிநாட்டில் போர்களையும் உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு கொள்கைகளையும் நியாயப்படுத்துவதற்கு முனைகையில் ஊக்கப்படுத்தி வந்திருக்கக் கூடிய உணர்ச்சிகள் இவை.

இடது முன்னணியின் ஜோன்-லூக் மெலோன்சோன்(Jean-Luc Mélenchon)சமூக வார்த்தைஜாலக் குறிப்பினை பிரச்சாரத்தில் கொண்டுவந்துள்ளார். ஊடகங்களில் பரவலாய் தோற்றமளித்திருக்கும் இவர் பல்வேறு பேரணிகளை ஒழுங்கமைத்தார். இதில் பாஸ்டியைக் கைப்பற்று வதற்கான மார்ச் 18 பேரணியும் அடங்கும். முன்னாளில் தீவிரவயப்பட்ட மாணவராய் இருந்து பின் PS அமைச்சரான மெலோன்சோன் தன்னை கொடிக்குள் சுற்றிக் கொண்டு வங்கிகளைக் கண்டனம் செய்வதோடு ஊதிய அதிகரிப்பிற்காகவும் மேம்பட்ட சமூக நிலைமைகளுக்காகவும் போராடுவதற்கு வாக்குறுதியளிக்கிறார்

சூழ்ச்சித்தந்திரத்திற்கு பெயர் பெற்ற பிரான்ஸ் ஜனாதிபதியான ஃபிரான்சுவா மித்திரோனுக்கு தனது புகழுரையை அறிவிக்கும் மெலோன்சோன் போன்ற எவர் ஒருவரிடம் இருந்தும் வருகின்ற இத்தகைய வாக்குறுதிகள் சிறிதும் மதிப்பற்றவை ஆகும். அந்த ஜனாதிபதி தனது அரசியல் வாழ்க்கையை பாசிச விசி ஆட்சியில் தொடங்கினார், பின் 1950களில் அல்ஜீரியா சுதந்திரத்திற்கான போரில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட அல்ஜீரியர்களுக்கு மரண வாரண்டுகளில் அவர் கையெழுத்திட்ட சமயத்தில் ஒரு சமூக ஜனநாயகக் கட்சிக்காரராய் தனக்கு மீண்டுமொரு போர்வை போர்த்திக் கொண்டார். குட்டி முதலாளித்துவ இடதுசக்திகளைச் சேர்ந்த ஒரு சிறு கும்பலின் உதவியுடன், 1970களில் பதவிக்கு வருவதற்கான தேர்தல் வாகனமாய் PS பயன்படுத்திக் கொண்ட அவர் பதவிக்கு வந்த பின் 1980களில் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களை நடத்தினார்

உலகைச் சூழ்ந்திருக்கும் அரசியல் புயல்களுக்குள் பிரான்ஸ் வீசப்படுகின்றது என்றாலும் கூட இன்னும் அது அதன் வெகுஜனக் கலாச்சாரத்தில் பொதிந்திருக்கும் புரட்சியின் உணர்வுகள் மற்றும் வார்த்தைகளால் தான் குறிக்கப்பட்டு வருகிறது. எகானாமிஸ்ட் இதழ் சமீபத்தில் எரிச்சலுடன் குறிப்பிட்டதைப் போல, பிரான்ஸ் சுதந்திர-சந்தை முதலாளித்துவத்திற்கு மிக விரோதம் காட்டும் நாடுகளில் ஒன்றாய் உள்ளது. 31 சதவீத பிரெஞ்சு நாட்டினர் மட்டுமே அதை சிறந்த சமூக அமைப்புமுறையாய் கருதுகின்றனர்.

காரல் மார்க்ஸ் உடன் இணைந்து உழைத்த பிரெடரிக் ஏங்கல்ஸ் குறிப்பிட்டதைப் போல, வேறெங்கையும் காட்டிலும் பிரான்ஸ் மண்ணில் தான் வரலாற்று வர்க்கப் போராட்டங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு முடிவு காணும் வரைக்கும் போரிடப்பட்டன, அதன்விளைவாக, அங்கு, அவை எதற்குள் இயங்குகின்றவோ மற்றும் அவற்றின் முடிவுகள் எதில் சுருக்கப்படுத்தப்படுகின்றனவோ அந்த மாறும் அரசியல் வடிவங்கள் கூர்மையான வெளிவரையால் முத்திரை குத்தப்பட்டிருக்கின்றன. மார்க்ஸ் பிரான்சின் கடந்த கால வரலாற்றை தனித்துவமான கவனம் செலுத்தி ஆராய்ந்தார் என்பது மட்டுமல்ல, அதன் நடப்பு வரலாற்றையும் ஒவ்வொரு அம்சத்திலுமாய் பின் தொடர்ந்து வந்திருக்கிறார், வருங்காலப் பயன்பாட்டிற்கென விடயங்களையும் சேமித்துத் தந்திருக்கிறார், அதனால், விடயங்கள் அவருக்கு ஒருபோதும் அதிர்ச்சியூட்டவில்லை.

பிரான்சின் நவீன வரலாறு 1789-1815 இன் பிரெஞ்சுப் புரட்சியின் மகத்தான அனுபவத்தில் இருந்து எழுகிறது. செவ்வியல் முதலாளித்துவப் புரட்சியான இது  முடியாட்சியைத் தூக்கி வீசியது, பிரபுத்துவத்தின் சலுகைகளைத் தடை செய்தது, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்துக்கு அழைப்பு விடுத்தது. புரட்சி பிரகடனம் செய்த இலட்சியங்களுக்கும் அது இறுதியாய் உருவாக்கிய சுரண்டல்மிக்க முதலாளித்துவ சமுதாயத்திற்கும் இடையிலான முரண்பாட்டினால் அதன் அரசியல் உருப்பெற்றது. 1848 புரட்சி மற்றும் 1871 பாரிஸ் கம்யூன் ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில், ஆளும் வர்க்கமானது புரட்சிகரத் தொழிலாளர்களை பெருந்திரளாய்ப் படுகொலை செய்வதன் மூலம் வெகுஜன எழுச்சிகளுக்கு பதிலிறுப்பு செய்தது.

ஜோன் ஜோரெஸ் (Jean Jaurès) போன்ற மகத்தான பிரசங்க அறிஞர்களாலும் மற்றும் கூர்பே(Courbet )போன்ற எதார்த்தவாத ஓவியர்களாலும் சுரங்கத் தொழிலாளரது வேலைநிறுத்தத்தை நினைவுகூரும் ஜேர்மினல் என்கிற மகத்தான படைப்பை உருவாக்கிய ஸோலா(Zola)போன்ற புதினப் படைப்பாளிகளின் மூலமும் ஊட்டப்பட்ட கலைரீதியான நனவுடன் ஒரு செழிப்பான புரட்சிகரப் பாரம்பரியத்திற்கும் கலாச்சாரத்திற்கும் இடையில் பிரெஞ்சுத் தொழிலாளர் இயக்கம் வளர்ந்தது. ஆயினும் தொழிலாள வர்க்கத்தின் தீவிரவாதம் பிரான்சின் நடுத்தர வர்க்கங்கள், விவசாயி வர்க்கம் மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பழமைவாதக் கூறுகளுடன் மோதலுற்றது. கம்யூன்களை உடைப்பதற்கு கிராம அமைப்புகளை (Rurals) அணிதிரட்டியிருந்த முதலாளித்துவ வர்க்கம் இந்த சமூக அடுக்குகளை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராய் தொடர்ந்து நிறுத்தி, தொழிலாள வர்க்கத்திற்குள்ளாகவே புரட்சியா அல்லது சீர்திருத்தமா என்பது தொடர்பான பிரச்சினையில் அரசியல் பிளவுகளை உருவாக்கியது.  

முதலாம் உலகப் போர் உலைக் களத்தில், இந்த போக்குகளிடையேயான பிளவு முன்னேறி விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான கம்யூனிச அகிலத்தின் பக்கம் நின்ற ஒரு கம்யூனிஸ்ட் கட்சி (PCF)எழுவதற்கு கொண்டு சென்றது. பிரான்சின் சக்திவாய்ந்த இந்த கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத உணர்வுகளால் செல்வாக்கு செலுத்தப்பட்டு, ட்ரொட்ஸ்கிக்கு எதிராய் ஸ்ராலினின் தனியொரு நாட்டில் சோசலிசம் என்னும் தத்துவத்தின் பக்கம் சென்றமை பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்திற்கு துயரகரமானதாய் அமைந்தது. கிரெம்ளின் அதிகாரத்துவம் ஏகாதிபத்தியத்துடனான தனது அதிகாரப் பேரங்களுக்கான ஒரு கருவியாக PCF ஐப் பயன்படுத்தியமையால், PCF புரட்சிக்கான போராட்டத்தைக் கைவிட்டு - அது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தோளில் விழுந்தது சீர்திருத்தங்களுக்காக குடியரசை நிர்ப்பந்திக்கும் ஒரு மூலோபாயத்தின் உகந்த அம்சம் குறித்த பிரமைகளை ஊக்குவித்தது.

1936 பொது வேலைநிறுத்தத்தை PCF ரொம்ப காலம் மந்தப்படுத்தியது. அந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் முன்னணி அரசாங்கம் வழங்கிய சலுகைகளைக் கணக்கிட்டால் இத்தகைய போராட்டங்களின் மூலம் வெல்லப்படக் கூடியதன் சக்திக்கு உதாரணமாய்க் கொள்ள முடியும். உண்மையில், இந்தச் சலுகைகளில் முதலாளித்துவ வர்க்கம் கொண்டிருந்த அதிருப்தி அதை பாசிசத்தை நோக்கித் திரும்பச் செய்தது. 1940களில் இது நாஜிக்களிடம் சரணாகதியடைந்து அவர்களுடன் சேர்ந்து ஒத்துழைத்தது. 1939 ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தில் முடிவான ஹிட்லருடனான கிரெம்ளினின் உடன்படிக்கைக்கு இணங்கிய வகையில் கம்யூனிஸ்ட் கட்சி இந்த கொள்கையை ஆரம்பத்தில் எதிர்க்கவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நாஜி ஆக்கிரமிப்பிலிருந்தான விடுதலையின் சமயத்தில் அமெரிக்கப் பொருளாதார உதவி மற்றும் தொழிலாளர் போராட்டங்களின் மீதான ஸ்ராலினிஸ்டுகளின் ஒடுக்குமுறை ஆகியவற்றின் அடிப்படையில் பிரெஞ்சு முதலாளித்துவம் மீண்டும் கட்டப் பெற்றது. பிரான்சின் அத்தனை பேருமே நாஜிக்களை எதிர்த்தனர் என்றும் போருக்கு முந்தைய காலகட்டத்தின் பொருளாதார மற்றும் நிதி எதேச்சாதிகாரங்கள் மீண்டும் எழுவதை குடியரசு தடுக்க முடியும் என்றும் முதலாளித்துவ வர்க்கம் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் என இருதரப்பாலும் முன்னெடுக்கப்பட்ட பொய் தான் இதன் இற்றுப் போன அரசியல் அடித்தளமாய் இருந்தது. உண்மையில், இந்தோசீனா மற்றும் அல்ஜீரியாவின் சுதந்திர இயக்கங்களை நசுக்குவதற்கான முயற்சி தோல்வியடைந்ததில் பிரான்ஸ் வெகுசீக்கிரத்திலேயே மக்களிடம் அவப்பெயர் சம்பாதித்த ஏகாதிபத்தியப் போர்களில் இறங்கியது.  

போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சியின் கீழமைந்திருந்த ஆழமான வர்க்கப் பதட்டங்கள் 1968 மே-ஜுன் பொது வேலைநிறுத்தத்தில் வெடிப்பைக் கண்டன. மாணவர் ஆர்ப்பாட்டங்களுடன் தொடங்கிய ஒரு இயக்கம் தொழிலாள வர்க்கத்தின் வெடிப்புமிகுந்த தலையீட்டினால் உருமாற்றம் பெற்றது. 10 மில்லியன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்; பிரான்ஸ் எங்கிலுமான தொழிற்சாலைகளில் செங்கொடிகள் உயரப் பறந்தன. இந்த நிலைமைகளின் கீழ் முதலாளித்துவ வர்க்கம் உருவாக்கிய புதிய கட்சி தான் சோசலிஸ்ட் கட்சி (PS). இது மித்திரோனுக்கான தேர்தல் வாகனமாய் சேவை செய்தது. புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம்(Revolutionary Communist League), சர்வதேசக் கம்யூனிஸ்ட் அமைப்பு (Internationalist Communist Organization)மற்றும் தொழிலாளர் போராட்டம்(Workers Struggle)ஆகிய தங்களை ட்ரொட்ஸ்கிசவாதிகளாய் கூறிக் கொண்ட குட்டி-முதலாளித்துவ இடது கட்சிகள் இதற்கு ஆதரவளித்தன.

இடது-சீர்திருத்தவாத களத்தை அடிப்படையாகக் கொண்டு 1981 இல் அதிகாரத்திற்கு வந்த மித்திரோன் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த எதிர்ப்பாளர்களை விரக்தி பெறச் செய்வதில் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றினார். சிடுமூஞ்சித்தனத்துடன் தனது வேலைத்திட்டத்தை திணித்த அவர் 1983 தொடங்கி சிக்கன நடவடிக்கைகளின் ஒரு அலையை நடத்தினார். எப்படியிருந்த போதிலும், 1990கள் மற்றும் 2000கள் முழுவதிலும், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து தொடர்ந்த எதிர்ப்புகளுக்கும், வேலைநிறுத்தங்கள் மற்றும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களுக்கும் பிரெஞ்சு முதலாளித்துவம் முகங்கொடுத்தது. தனது சர்வதேசப் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் தனது போட்டித்திறனை நிறுவுவதற்கு போதுமான ஆழமான சமூகத் தாக்குதல்களை நடத்துவதற்கு அதனால் இயலவில்லை என்பது நிரூபணமானது.

இந்தச் சூழ்நிலை வெடிப்பு மிகுந்த புரட்சிகரப் போராட்டங்களுக்கான அடிப்படையை அமைத்துத் தந்திருக்கிறது. மற்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரங்களைப் போன்று பிரெஞ்சுப் பொருளாதாரமும் உருமாறியிருக்கிறது, வேலை மற்றும் சமூக நிலைமைகள் சரிவுறச் செய்யப்பட்டுள்ளன. சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவு ஆளும் வர்க்கத்தில் சமூகச் சீர்திருத்தம் பேசிய தரப்பை இல்லாது செய்திருக்கிற அதே சமயத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீது பழைய கட்சிகள் கொண்டிருந்த பிடியையும் அது உடைத்தெறிந்திருக்கிறது என்பதையே மறுபடியும் மறுபடியுமான சமூக வெட்டுகள் தெளிவுபடுத்தியிருக்கின்றன. வெடிப்பு மிகுந்த உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தொழிலாளர்களின் அரசியல் விசுவாசங்கள் தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன.

இந்த வரலாற்றின் அடிப்படையில், பல்வேறு வேட்பாளர்களின் அரசியலை, பிரான்சின் சமூக நிலைமைகளை, மற்றும் மக்களின் பல்வேறு அடுக்குகளின் கண்ணோட்டங்கள் மற்றும் பிரச்சினைகளை உலக சோசலிச வலைத் தளம் ஆராயும். மக்கள் முன்னணி குறித்த தனது எழுத்துகளில் லியோன் ட்ரொட்ஸ்கி முன்வைத்த அதே கேள்வியைத் தான் நாங்கள் பேசவிருக்கிறோம்: பிரான்ஸ் எங்கு பயணிக்கிறது?