World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Stalinist CPM holds party congress amid mounting internal crisis

இந்தியா: ஸ்ராலினிச இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகரிக்கும் உட்கட்சிநெருக்கடிக்கு மத்தியில் கட்சி மாநாட்டை நடத்துகிறது

By Deepal Jayaskera
4 April 2012
Back to screen version

இந்திய நாடாளுமன்றத்தின் பிரதான ஸ்ராலினிசக் கட்சியான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) அதிகரிக்கும் மற்றும் ஆழமாய் வேர் விட்ட உட்கட்சி அரசியல் நெருக்கடிக்கு இடையே கேரளாவின் கோழிக்கோட்டில் இந்த வாரம் தனது 20வது பேரவை மாநாட்டை நடத்துகிறது

பல தசாப்தங்களாய் இந்திய முதலாளித்துவத்தின் ஒரு முக்கிய  முட்டுத்தூணாய் செயல்பட்டு வந்திருக்கும் CPM தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதும் தன்னை இந்திய முதலாளித்துவக் கட்சிகள் என்று அக்கட்சியே வருணிக்கும் கட்சிகளின் பிற்போக்குத்தனமான தந்திரங்களுடன் தொழிலாள வர்க்கத்தை பிணைத்து வைத்திருக்க செயல்பட்டு வந்திருக்கிறது.

இந்தியாவை உலக முதலாளித்துவத்திற்கான மலிவு-உழைப்பு உற்பத்தி நாடாய் மாற்றியிருக்கும் முதலாளித்துவத்தின் புதிய பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்துவதில் அக்கொள்கை கையிலெடுக்கப்பட்ட 1991ம் ஆண்டிலிருந்தே CPM ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது. CPM மற்றும் CPM தலைமையிலான இடது முன்னணி தேசியமட்டத்தில் வலதுசாரி சந்தை-ஆதரவு சீர்திருத்தங்களைஅமுல்படுத்திய தொடர்ச்சியான கூட்டணி அரசாங்கங்களை உருவாக்கவும் மற்றும் முட்டுக்கொடுக்கவும் உதவி வந்திருக்கிறது. இதில் காங்கிரஸ் தலைமையிலான தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமும் அடங்கும்.

2004 மே தேர்தலை தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உத்தியோகபூர்வமாய் பங்கேற்க இக்கட்சி மறுத்த போதிலும், ஏனைய கட்சிகளை காங்கிரசுடன் கூட்டணிக்காக அணிதிரட்டுவதில்  CPM  ஒரு முக்கிய பாத்திரத்தை ஆற்றியது. ஒரு மனிதாபிமான முகத்துடனான சீர்திருத்தங்கள்சாத்தியம் என்பதான பொய்யை பெருமை பொங்கக் கூறிய, குறைந்தபட்ச பொது வேலைத்திட்டம் என்கிற வெளித்தோற்றத்துடனான, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கியமான அறிவிப்புகள் மற்றும் பத்திகள் எல்லாம் உண்மையில் CPM ஆல் ஆலோசனையளிக்கப்பட்டவையே. அடுத்த நான்கு வருடங்களுக்கு, முன்பிருந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான  அரசாங்கத்துக்கு ஏறக்குறைய எந்த வித்தியாசமும் இல்லாத வகையில் பிற்போக்குத்தனமான பொருளாதார மற்றும் அயலுறவுக் கொள்கைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்னெடுத்தது என்பதை ஒப்புக் கொண்டுள்ளபோதும், அதற்குத் தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மையை CPM தொடர்ந்து வழங்கிக் கொண்டிருந்தது

மேலும் CPM, அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கும் மாநிலங்களிலும், அது முதலீட்டாளர் ஆதரவுக் கொள்கைகளையே தானாக உறுதிபூண்டு முன்னெடுத்து வந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த தொழிற்துறைகளில் வேலைநிறுத்தங்களை தடை செய்தமை மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் பிற பெரு வணிக முயற்சிகளுக்காக விவசாய நிலங்களைப் பறிமுதல் செய்வதற்கு விவசாயிகளிடம் இருந்து எழுந்த எதிர்ப்பை அடக்க போலிசாரையும் குண்டர்களையும் பயன்படுத்தியது ஆகியவை இதில் அடங்கும்.  

இதன் விளைவாக CPM கட்சிக்கு தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் கிராமப்புற உழைக்கும் மக்களிடம் இருந்த ஆதரவு கணிசமாய் சரிவு கண்டிருக்கிறது. இது தொடர்ச்சியான அதிர்ச்சியூட்டும் தேர்தல் தோல்விகளில் வெளிப்பட்டிருக்கிறது. CPM மற்றும் CPM தலைமையிலான இடது முன்னணியின் தேர்தல்/நாடாளுமன்றக் கூட்டணி தான் 2009 நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய இழப்பைச் சந்தித்த கூட்டணி என்று கூற முடியும். மக்களவையிலான (இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை) CPM இன் பங்கு 43 இல் இருந்து 17க்கு சரிந்தது, இடது முன்னணியின் பலம் 61 இல் இருந்து வெறும் 24 ஆக சரிந்தது.

2011 வசந்த காலத்தில் நடந்த மாநிலத் தேர்தல்களில், இந்தியாவின் மக்கள்தொகை மிகுந்த நான்காவது மாநிலமான மேற்கு வங்கத்தில் CPM தலைமையிலான இடது முன்னணி தனது வாக்கு வங்கியில் 9 சதவீதத்தை இழந்ததோடு தொடர்ந்து 34 வருடம் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்த நிலையைப் பறிகொடுத்தது. தென்மேற்கு மாநிலமான கேரளாவிலும் அது ஆட்சியைப் பறிகொடுத்தது. முன்னர் இராஜதானியாக இருந்ததும் பிரதான மொழியாய் பெங்காளி மொழி பேசும் மக்களைக் கொண்டதுமான திரிபுரா என்னும் ஒரு சிறிய (மக்கள்தொகை 3.7 மில்லியன்) மாநில அரசாங்கம் மட்டுமே இப்போது CPM தலைமையில் இருக்கிறது.

ஏறக்குறைய 200 மில்லியன் மக்கள்தொகையுடன் இந்தியாவின் மிகுந்த மக்கள்தொகை மிகுந்த மாநிலமாக இருக்கும் உத்தரப் பிரதேசம், இந்தியாவில் ஸ்ராலினிச இயக்கத்தின் வரலாற்று கோட்டையாக திகழ்ந்த பஞ்சாப், மற்றும் இன்னும் மூன்று பிற மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் CPM அல்லது அதன் ஸ்ராலினிச இடது முன்னணிக் கூட்டாளியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஒரே ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை.

எந்த வலதுசாரி நோக்குநிலையைப் பின்பற்ற வேண்டும் என்பதில்  CPM தலைமை பிளவுபட்டுக் கிடக்கிறது என்பது ஒரு பகிரங்க இரகசியமாகும்.

2008 இல், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி அதன் மூலம் அமெரிக்காவுடனான உலகளாவிய மூலோபாயக் கூட்டைபூர்த்தி செய்வதற்கு காங்கிரஸ் முடிவு செய்ததன் பின், அந்த ஆண்டின் ஜூலை மாதத்தில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான UPA அரசாங்கத்திற்கு நாடாளுமன்ற ஆதரவை விலக்கிக் கொள்வது என்று கட்சியின் தேசியத் தலைமை எடுத்த முடிவினை மேற்கு வங்கப் பிரிவின் தலைமை எதிர்த்தது. அதையடுத்து, 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்து மேலாதிக்கவாதக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் முந்தைய அரசாங்கக் கூட்டணிக் கட்சிகளான அ.இ.அ.தி.மு.க மற்றும் தெலுங்கு தேசக் கட்சி போன்ற கட்சிகளை ஒன்று சேர்த்து மூன்றாவது அணியை உருவாக்கும் கட்சியின் முயற்சிக்கு ஆட்சேபித்த இந்தப் பிரிவு, அதற்குப் பதிலாக CPM காங்கிரசுடனான உறவை சரிப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தியது. 2011 மேற்கு வங்க மாநிலத் தேர்தலில் வலதுசாரி ஜனரஞ்சகவாதக் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேர விடாமல் செய்யும் நம்பிக்கையில் CPM இன் மேற்கு வங்கப் பிரிவு காங்கிரசுக்கு முன்னெப்போதையும் விட பரிதாபகரமான கோரிக்கையை விட்டது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை விடவும் தான் மிகவும் நம்பத்தகுந்த மற்றும் பொறுப்பான கூட்டணிக் கட்சி என்று அது வாதிட்டது. இயற்கை வளங்களை அகழ்ந்தெடுக்கும் பெருவணிகத் திட்டங்களால் வாழ்வாதாரம் பறிக்கப்படும் அச்சுறுத்தலை சந்தித்த பழங்குடி மக்கள் மாவோயிசத் தலைமையின் கீழ் முன்னெடுத்த கிளர்ச்சிக்கு எதிராய் இந்திய அரசாங்கம் நடத்தும் கிளர்ச்சி ஒடுக்கும் போரான பசுமை வேட்டை என்னும் நடவடிக்கைக்கு (Operation Green Hunt) CPM தலைமையிலான மேற்கு வங்க அரசாங்கம் முழு ஆதரவை வழங்கியமை என்பன இந்த கோரிக்கைகளில் முக்கியமான அம்சமாக இருந்தது.

தனது அதிருப்தியை பகிரங்கமாய் வெளிப்படுத்தும் முகமாக, மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீண்டகால CPM அரசியல்குழுவின் உறுப்பினருமான புத்ததேவ் பட்டாச்சாரியா 2008 முதலாகவே கட்சியின் மத்திய தலைமைக் கூட்டங்களில் பங்கேற்பதை தொடர்ந்து தவிர்த்து வந்திருக்கிறார். இந்த வாரம் நடக்கவிருக்கும் கட்சியின் மாநாட்டிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, CPM இன் கேரளப் பிரிவு நீண்டகாலமாகவே முன்னாள் முதலமைச்சரான வி.எஸ்.அச்சுதானந்தனுக்கும் CPM இன் மாநிலச் செயலரான பின்னராவி விஜயனுக்கும் இடையிலான குழுவாத மோதலில் சிக்குண்டிருக்கிறது.

இந்த வாரம் நடக்கவிருக்கும் கட்சி மாநாட்டிற்கான தயாரிப்பில் இந்த கருத்துவேறுபாடுகள் மறைக்கப்பட்டுள்ளன. கட்சியின் உள்முக விவகாரங்களை சமாளித்துக்கொள்ள அரசுக்கு அது கொடுக்கும் ஆதரவை பயன்படுத்திக் கொள்ளும் திறனை CPM இன் தேர்தல் பின்னடைவுகள் பலவீனமடையச் செய்திருக்கும் நிலைமைகளின் கீழ், இந்தக் கருத்து வேறுபாடுகள் பகிரங்கமாய் வெளிவரக் கூடும் என்று தலைமை அஞ்சுகிறது என்பது தெளிவு. இதன் பாரிய உறுப்பினர் எண்ணிக்கைஎவ்வாறு அரசாங்க அதிகாரத்துடன் நெருங்கிப் பிணைந்ததாய் இருக்கிறது என்பதை சமீபத்தில் வெளியாகியிருக்கும் CPM  உறுப்பினர் எண்ணிக்கைப் புள்ளிவிவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இதன் 1,044,883 மொத்த உறுப்பினர்களில் 764,000 பேர் முழுமையாய் அது இதுவரை அரசாங்கங்களை அமைப்பதில் வெற்றி கண்டிருக்கும் மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து மட்டுமே வருகின்றனர். மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பெரும் தொழிற்துறை மையங்களாய்த் திகழும் மூன்று பெரிய மாநிலங்களில் இந்த உறுப்பினர் எண்ணிக்கை முறையே 12,586; 3,575; 6,056 என இருக்கிறது.

காங்கிரஸ் தலைமையிலான UPAவுக்கு ஆதரவை விலக்கிக் கொண்டது முதலாக CPM, இந்தியாவை 1996க்கும் 1998க்கும் இடையே ஆண்ட சீர்திருத்தஆதரவு அரசாங்கத்தை ஒத்த பல்வேறு சாதிய மற்றும் பிராந்தியவாதக் கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணி அரசாங்கம் ஒன்றை மறுபடியும் உருவாக்குவது என்னும் யோசனையை ஊக்குவித்து வருகிறது. இவ்வாறான நோக்கத்துடன், அது அஇஅதிமுக கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டு 2011 தமிழகத் தேர்தலில் அக்கட்சி ஆட்சிக்குத் திரும்ப உதவியது - தமிழ் பிராந்தியவாதக் கட்சியும் இந்து மேலாதிக்கவாதக் கட்சியுமான அஇஅதிமுக கடந்த முறை அதிகாரத்தில் இருந்தபோது மாநில அரசாங்க ஊழியர்களின் ஒரு வேலைநிறுத்தத்தை உடைக்க போலிஸ் வன்முறை, கைது நடவடிக்கைகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளைப் பயன்படுத்திய கட்சியாகும்.

பாரதிய ஜனதா கட்சியுடனும் CPM ஒரு தொடர் அநேகமாக  மறைமுகமான கூட்டணிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் 2011 இறுதியில் கட்சியின் பொதுச் செயலரான பிரகாஷ் காரத் நாட்டின் சில்லறை வணிகத் துறையை வால்மார்ட் மற்றும் பிற  பாரிய பல்துறை சில்லறை வணிகங்களுக்குத் திறந்து விடும் காங்கிரசின் திட்டங்களை எதிர்ப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்ப்பதை வெளிப்படையாய் ஆதரித்தார். ஏழைகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காமல் தடுப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியுடன் ஒத்துழைத்து வேலை செய்வதில் என்ன தவறு?என்று இன்னொரு மூத்த CPM தலைவர்  வினவினார்.

நச்சுத்தனமான மதவாதக் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சிக்கு திரும்பாமல் தடுப்பதற்கான ஒரே வழி இதுதான் என்று கூறித் தான் முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துக்கான ஆதரவு உள்ளிட்டு வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளுடனான அதன் அரசியல் கூட்டணிகளுக்கு CPM தொடர்ந்து நியாயப்படுத்தி வந்திருக்கிறது. இப்போதோ தான் அதிகாரத்துக்குக் கொண்டு வர உதவிய ஒரு அரசாங்கத்தை எதிர்ப்பதான பேரில், இது மதிப்பிழந்து விட்ட தீவிர வலதுசாரிக் கட்சியான பாஜகட்சியின் தோற்றத்திற்கு மிருகேற்ற உதவிக் கொண்டிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் தான் அமல்படுத்திய முதலீட்டாளர்-ஆதரவுகொள்கைகளையும் CPM பாதுகாத்துக் கொண்டிருக்கிறது, அதே சமயத்தில் தனது தேர்தல் தோல்விக்கான பிரதான காரணம் நவ-தாராளவாதகொள்கைகளுக்கான தனது எதிர்ப்பின் காரணமாக பெரு வணிகங்கள் தன்னைக் குறிவைத்ததே என்று அது கூறிக் கொள்கிறது. 2006 மாநிலத் தேர்தலில் CPM தலைமையிலான இடது கூட்டணி பெரு வணிகங்களின், அல்லது குறைந்தபட்சம் அதன் சக்திவாய்ந்த பகுதிகளின், ஆதரவை வெளிப்படையாய் எதிர்நோக்கி நின்றது, பெற்றது. இடது முன்னணியின் வலதுசாரிக் கொள்கைகள் தான் கம்யூனிச எதிர்ப்பு வாய்வீச்சாளரும் முன்னாளில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தவருமான மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தின் ஒடுக்கப்பட்ட விவசாய மக்களின் நண்பனாகக் காட்டிக் கொள்வதை சாத்தியமாக்கியது.

வெகுஜன ஆதரவு மற்றும் உயரடுக்கின் செல்வாக்கு இரண்டையும் இழந்து விட்டதற்கான பதிலிறுப்பாக, CPM, தொழிலாளர் மற்றும் விவசாயிகளது போராட்டங்களுக்கு புத்துணர்ச்சியுடனான முக்கியத்துவமளிக்க அழைப்பு விடுத்திருக்கிறது. அதேசமயத்தில், பெருமந்த நிலைக்குப் பின்னரான உலக முதலாளித்துவத்தின் பாரிய நெருக்கடி வெடித்திருக்கும் நிலையிலும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் விரிவெல்லை நவ-தாராளவாதகொள்கைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கவும் மற்றும் ஒரு பன்-முனை உலகத்திற்கான போராட்டத்துடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அது வற்புறுத்துகிறது

பல்வேறு எதிர்ப்புபோராட்டங்களின் தலைமையில் தன்னை அமர்த்திக் கொள்வதன் மூலமாக, CPM, தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாகக் கட்டுப்படுத்துவதிலும் அதனை முதலாளித்துவத்தின் தேசிய நலன்களுக்குஉகந்த வகையில் கட்டுப்படுத்திவைப்பதிலும் இன்னும் ஒரு இன்றியமையாத பாத்திரத்தை தான் ஆற்றுவதை இந்திய முதலாளித்துவ வர்க்கத்துக்கு நிரூபிக்க நோக்கம் கொண்டிருக்கிறது

கடந்த இரண்டு ஆண்டுகளில் கொத்தடிமை ஊதியங்கள், ஒப்பந்த ஊழியர் முறை, மற்றும் சர்வாதிகார வேலை நிலைமைகளுக்கு எதிராக தொழிலாளர் கிளர்ச்சியின் ஒரு அலை எழுந்து வந்திருக்கிறது. இதன் பெரும்பகுதி கடந்த இரண்டு தசாப்தங்களில் வளர்ச்சி கண்டு வந்திருக்கக் கூடிய உலகளாவிய ஒருங்கிணைப்பு மிக்க வாகனத் துறை, மின்னணுப் பொருட்களின் தயாரிப்புத் துறை மற்றும் பிற தொழிற் துறைகளில் மையம் கொண்டிருந்தது. ஹூண்டாய், BYD எலெக்ட்ரானிக்ஸ், மற்றும் தமிழ்நாட்டின் பிற தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் CPM உடன் இணைப்பு கொண்ட சிஐடியுவிடம் (இந்திய தொழிற்சங்கங்களின் நடுவம்ஆதரவு எதிர்நோக்கி திரும்பியபோது, ஸ்ராலினிஸ்டுகள் செய்ததெல்லாம், அரசாங்கத்துடனும் நீதிமன்றங்களுடனும் பரவலான மோதலுக்குள் வந்திருந்த தொழிலாளர்களது போர்க்குணமிக்க போராட்டங்களை தனிமைப்படுத்தியதும், தங்களின் சார்பாக தலையீடு செய்யுமாறு வலதுசாரி பெருவணிக அரசாங்கம் மற்றும் கட்சிகளிடம் விண்ணப்பம் செய்ய அவர்களை வலியுறுத்தியதும் மட்டும் தான். இன்னும் சொன்னால், CPM இன் தேர்தல் கூட்டாளியான அஇஅதிமுக அதிகாரத்துக்கு வந்தால் விடயங்கள் மேம்படும் என்று கூறி போராட்டங்களை முடித்துக் கொள்ளுமாறு தமிழ்நாட்டில் சிஐடியு தலைவர்கள் தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

இதேபோல் பரவலான ஆதரவுப் போராட்டங்களைத் தூண்டியதோடு இந்திய முதலாளித்துவத்தின் மலிவு-உழைப்பு மூலோபாயத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பிற்கு ஒரு ஊக்கியாக மாறவும் அச்சுறுத்திய மாருதி சுசுகியின் மானேசர் கார் பொருத்தல் தொழிற்சாலையில் நடந்த வெடிப்பு மிகுந்த போராட்டங்களை  கட்டுப்படுத்துவதிலும் CPM மற்றும் CITU மற்றும் CPI மற்றும் AITUC (அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ்) ஆகியவை ஒரு முக்கிய பாத்திரத்தை ஆற்றின. ஸ்ராலினிச அரசியல்வாதிகளும் மற்றும் அவர்களது தொழிற்சங்க எந்திரங்களும் நிறுவனங்களின் உத்தரவுகளுக்கு அடிபணிய மாருதி சுசுகி தொழிலாளர்களை இடைவிடாமல் நெருக்கி, இறுதியாக நிறுவனம் தாக்குப்பிடித்து வெற்றி பெறுவதற்கும் அனுதாப வேலைநிறுத்த இயக்கம் தணிந்து போவதற்கும் வழிவகை செய்தனர்

தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக கோபமும் போர்க்குணமும் பெருகி வருவதற்கான பதிலிறுப்பாக காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜகவுடன் இணைந்த போட்டி தொழிற்சங்க அமைப்புகளுடன்  நெருக்கமான பிணைப்புகளை ஸ்ராலினிஸ்டுகள் உருவாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வாறாக, பிப்ரவரி 28 அன்று நடந்த ஒருநாள் தேசிய அளவிலான எதிர்ப்பு வேலைநிறுத்தத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக உடன் இணைந்த தொழிற்சங்கங்கள் பங்கேற்றதை வரலாற்று நிகழ்வுஎன்று ஸ்ராலினிஸ்டுகள் போற்றினர்

அமைப்பு-சாரா துறை என்று அழைக்கப்படக் கூடிய, வழமையான தொழிலாளர் நிர்ணயங்கள் பொருந்தாத துறையில் இருந்தான பல தொழிலாளர்கள் உள்ளிட, பத்து மில்லியன்கணக்கில் தொழிலாளர்கள் இந்த எதிர்ப்பு வேலைநிறுத்தத்தில் இணைந்தமையானது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கும் இந்திய முதலாளித்துவத்தின் சீர்திருத்த வேலைத்திட்டத்திற்குமான எதிர்ப்பின் ஆழத்திற்கு இன்னுமொரு சான்றை வழங்குகிறது. ஆனால் ஸ்ராலினிஸ்டுகளுக்கோ, இத்தகைய போராட்டங்கள் எல்லாம், அரசாங்கத்துடனும் பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளுடனும் இவர்களது கொடுக்கல் வாங்கலுக்கான அரசியல் மறைப்பாக சேவை செய்யும் வகையிலான ஒரு சம்பிரதாயமாக, வருடாந்திர நிகழ்வாக மாறி விட்டிருக்கிறது. கடந்த காலத்தைப் போலவே, காங்கிரஸ் தலைமையிலான UPA மக்களுக்கு-ஆதரவான கொள்கைகளைபின்பற்றச் செய்வதற்கு நெருக்குதலளிப்பது என்று நோக்கம் கூறப்பட்டு இந்த போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டது, அதாவது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசாங்கத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் தாக்குதல் அபிவிருத்தியடைவதை எதிர்ப்பது என்பது தான் இந்நோக்கம்

CPI, ஜவஹர்லால் நேருவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கான அடிமைத்தனமான ஆதரவால் தீவிரமாய் மதிப்பிழந்து போயிருந்த நிலையிலும் சீனாவுடனான 1962 ஆம் ஆண்டு எல்லைச் சண்டையில் இந்தியாவுக்கு அது முழுமையான ஆதரவை வழங்கிய நிலையிலும், அதிலிருந்தான பிளவில் 1964 இல் CPM ஸ்தாபிக்கப்பட்டது. தோன்றிய நாள் முதலாகவே, CPM, ஸ்ராலினிசத்தின் முழுமையான எதிர்ப்புரட்சி பாரம்பரியத்தை உறுதியுடன் பின்பற்றி வந்திருக்கிறது. சோவியத் ஒன்றியத்திலும் சீன மக்கள் குடியரசிலும் ஆட்சி செலுத்திய அதிகாரத்துவ போலிஸ் ஆட்சிகளைப் புகழ்ந்ததுடன், அச்சுறுத்தும் வார்த்தை ஜாலங்களுடன் ட்ரொட்ஸ்கிசத்தைக் கண்டனம் செய்து CPI இன் பிற்போக்குத்தனமான பாரம்பரியத்தைப் பாதுகாத்தது. 1947 சுதந்திரம்மற்றும் துணைக் கண்டப் பிரிவினையின் ஊடாக ஜனநாயகப் புரட்சியை அடக்குவதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் காலனித்துவ முதலாளித்துவத்திற்கும் இடையில் உருவான உடன்பாட்டை CPI ஆதரித்ததும் இதில் அடங்கும்

மக்கள் ஜனநாயகப் புரட்சிஎன்கிற முழக்கத்தின் கீழ் ஸ்ராலினிச இரண்டு கட்டத் தத்துவத்தை CPM காப்பாற்றி வந்திருக்கிறது, காப்பாற்றி வருகிறது. இதன்படி சோசலிசத்திற்கான போராட்டம் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் இல்லை, அதற்குப் பதிலாக தொழிலாள வர்க்கம் ஜனநாயக நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்தை அதாவது தேசிய முதலாளித்துவத்தின் போராட்டத்தை பூர்த்தி செய்வதற்கு தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கான, ஏகாதிபத்திய-எதிர்ப்புபிரிவுகளுடன் கைகோர்க்க வேண்டும். ஐந்து தசாப்தங்கள் கடப்பதற்குள் CPM மிக அதிக வலதுக்கு நகர்ந்து விட்டிருக்கிறது, வெகு காலத்துக்கு முன்பே தன்னை அரசியல் ஆளும்பிரிவுடன் ஒருங்கிணைத்துக் கொண்டு விட்டிருக்கிறது. அத்துடன் பல தசாப்தங்களாக முதலாளித்துவ ஆட்சியை நிர்வகித்து வந்திருப்பதோடு மேற்கு வங்காளம் போன்ற முக்கியமான மாநிலங்களில் முதலீட்டாளர்-ஆதரவுகொள்கைகளை அமுல்படுத்தி வந்திருக்கிறது.

இந்த வார CPM மாநாட்டின் மத்திய அம்சமாக அரசியல் தீர்மானம்மற்றும் சில தத்துவார்த்த தீர்மானங்கள் மீதான தீர்மானம்என்கிற இரண்டு நீளமான தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன. இந்தத் தீர்மானங்கள் எல்லாம், உள்ளபடியே, தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அடக்கி பெருவணிக ஆதரவுக் கொள்கைகளை அமல்படுத்துவதில் CPM ஆற்றியுள்ள பாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்கின்றனவாகவும், அதே சமயத்தில் CPM ஒரு மார்க்சிஸ்ட் கட்சி என்றும் அது 1917 ஒக்டோபர் புரட்சியின் வாரிசு என்ற ஏமாற்றை ஊக்குவிப்பதாகவும் இருக்கின்ற வகையில், மோசடியானவை ஆகும்.

ஆயினும் இந்த ஆவணங்கள் CPM இன் நனவான எதிர்ப்புரட்சி முன்னோக்கையும் அதன் முன்னினும் வலதுநோக்கிய பரிணாம வளர்ச்சியையும் விளங்கச் செய்யும் காரணத்தால் அந்த ஆவணங்களின் உள்ளடக்கத்தை விமர்சனம் செய்வதற்கும் கொஞ்சம் மதிப்பு இருக்கிறது. வரவிருக்கும் நாட்களில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியாகவிருக்கும் இன்னுமிரு கட்டுரைகளில் இந்த விமர்சனம் இடம்பெறும்.