World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Friends of Syria”—the antechamber of a wider Mideast war

சிரியாவின் நண்பர்கள்" - மத்திய கிழக்கில் ஒரு பரந்த போருக்கான முன்னேற்பாடு

Bill Van Auken
4 April 2012
Back to screen version

சிரியாவின் நண்பர்கள் என்று அழைக்கப்படும் அமைப்பின் மாநாடு ஞாயிறன்று இஸ்தான்புலில் கூட்டப்பட்டதானது உள்நாட்டுப் போரை ஊக்குவிப்பதற்கும், நேரடியான ஏகாதிபத்திய தலையீட்டிற்கு ஒரு தயாரிப்பாகவும் ஆயிற்று. என்ன வேண்டும் என்று கருதப்படுகிறதோ, எதற்கு தீவிர தயாரிப்புக்கள் நடைபெறுகின்றனவோ, இது இதுவரை சிரிய உள்மோதலில் ஏற்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கைகளை மங்கச் செய்துவிடும் என்பதுடன் இப்போர் பல மில்லியன்களை அச்சுறுத்தும் ஓர் உலக மோதலைத் தூண்டும் திறனையும் கொண்டுள்ளது.

வாஷிங்டன் மற்றும் அதன் முக்கிய நேட்டோ நட்பு நாடுகளான, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவற்றினால் வழிநடத்தப்படும், மற்ற பிற்போக்குத்தன வளைகுடா எண்ணெய் முடியரசுகள் மற்றும் துருக்கி துணை நிற்கையில், மாநாடு இரண்டு முக்கிய அபிவிருத்திப் போக்குகளைக் காட்டியது.

சௌதி அரேபியா, கட்டார் ஆட்சியுடன் சேர்ந்து 100 மில்லியன் டாலர்கள் நிதியை சிரியாவின் எழுச்சியாளர்களை தங்கள் ஊதியத்தில் இருத்தும் அறிவிப்பு முதலாவது ஆகும். இது சுதந்திர சிரிய இராணுவம் (FSA) என்னும் ஆயுதமேந்திய குழுக்களின் அந்தஸ்த்தை முறைப்படுத்துகிறதுஅதாவது வலதுசாரி வளைகுடா ஷேக் ஆட்சிகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நட்பானவற்றின் கூலிப்படை என்பதை.

இரண்டாவது, சிரியாவிற்கு உதவும் வகையில் மனிதாபிமான நிதி அளிப்பதற்கு ஓர் அமைப்பை அறிவித்தல் என்பதாகும்; இதைத்தவிர எழுச்சியாளர்கள் எனக் கூறப்படுபவர்களுக்கு பேராபத்து தராத உதவிகளும் வழங்கப்படும். இதில் மிக இலகுரக செயற்கைக்கோள் தொடர்புசாதனக் கருவிகளும் இரவில் பார்க்கும் திறனுடைய தொலைநோக்கிகளும் அடங்கும்.

இத்தகைய கருவிகள் எதிர்தரப்பு ஆயுதக் குழுக்களுக்கு சிரியப் பாதுகாப்புப் படைகளின் தாக்குதல்களை தவிர்க்க உதவும் என்று வெளிவிவகாரச் செயலர் கில்லாரி கிளிண்டன் வலியுறுத்துகையில், கருவிகள் இன்னும் திறமையாகப் பயங்கரவாதத் தாக்குதல்களை அரசாங்க இலக்குகள் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவு தருபவர்கள் என்று உணரப்படும் குடிமக்கள் மீதும் இலக்கு கொண்டு தாக்குவதற்கும் உதவும். மேலும் நடைமுறைப்படுத்தக்கூடிய செயற்பாடுகள் குறித்து அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறையில் இருந்து தகவல்களைப் பெறவும் உதவும்; இதைத்தவிர சிரியப் பகுதி மீது நிலைகொள்ளும் ட்ரோன்களிடம் இருந்தும் தகவல் கிடைக்கும்.

இத்தகைய நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து சிரியாவிற்கு அனுப்பப்பட்டுள்ள தூதரும் முன்னாள் தலைமைச் செயலருமான கோபி அன்னன், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் சிரிய ஆட்சி போர்நிறுத்தம், மக்கள் மையங்களில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறுதல், நாட்டின் ஓராண்டு மோதலை அரசியல் உடன்பாடு காணப் பேச்சுக்கள் நடத்துதல் ஆகியவை அடங்கிய ஆறு-அம்சத் திட்டத்திற்கு உடன்பட்டவுடன் வந்துள்ளன.

சிரியர்கள் அரசாங்க சக்திகளுக்கு எதிரான ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்துவதற்கு வெளிச் சக்திகளால் கூலிக்கு அமர்த்தப்படுதல், இலஞ்சம் கொடுத்தல் ஆகியவை, மற்றும் இத்தாக்குதல்களைப் பெரிதும் ஆபத்து நிறைந்த வகையில் வடிவமைக்க அமெரிக்கா அளித்துள்ள கருவிகள் ஆகியவை சிரியாவில் மிருதுவாக இறங்குதல் என அழைக்கப்பட்ட ஐ.நா. முயற்சி சாதிக்கப்படுவதைத் தகர்க்கும் நோக்கத்தைத்தான் தெளிவாகக் கொண்டுள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றைப் பற்றித்தான் அக்கறை கொண்டுள்ளன:ஆட்சி மாற்றம். “ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவை குறித்த அனைத்து வனப்புரைகளும் இழிந்த முறையில் இந்த மூலோபாயச் செயற்பாட்டிற்கு வண்ணப்பூச்சைத்தான் கொடுக்கின்றன.

சௌதி மற்றும் பஹ்ரைன் முடியாட்சிகள், கட்டாரி எமிர் ஆகியோருடன் சிரிய மக்களை விடுதலை செய்பவர்கள், ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று வாஷிங்டன் காட்டிக் கொள்ளும் முயற்சி அயோக்கியத்தனமானது. இந்த ஆட்சிகள், அமெரிக்காவுடைய ஆதரவுடன், தங்கள் மக்களுக்கே அடிப்படை அரசியல் சுதந்திரங்களை மறுக்கின்றன; பஹ்ரைனைப் பொறுத்தவரை, அது அமெரிக்க கடற்படையின் ஐந்தாம் பிரிவின் தலைமையகமாக உள்ளது, ஜனநாயகம், சம உரிமைகள் ஆகியவற்றைக் கோரிய வெகுஜன இயக்கத்தை குருதி ஓட வைத்து அடக்கியது.

ஆட்சி மாற்றத்திற்கு சிரியா இலக்கு வைக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் அது ஈரானுடன் நட்பாக இருப்பதுதான்; மேலும் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவிற்குத் தளம் அளிக்காமல் ஒதுங்கி நிற்கிறது; பென்டகனின் நட்பு இணையங்களுடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ளவில்லை; இதில் நேட்டோவின் மத்தியதரைக் கடல் பகுதிக் கூட்டு (அல்ஜீரியா, எகிப்து, இஸ்ரேல், ஜோர்டான், மொரிட்டானியா, மொரோக்கோ, துனிசியா ஆகியவை அடங்கும்) அடங்கும்; இதைத்தவிர இஸ்தான்புல் கூட்டுறவு முன்முயற்சி என்று பேர்சிய வளைகுடா முடியசுகளைக் கொண்ட வளைகுடா கூட்டுறவுச் சபையிலும் இணைந்திருக்கவில்லை.

இந்த மூலோபாய நோக்கங்கள் இஸ்தான்புல் மாநாட்டிற்கான அமெரிக்கத் தயாரிப்புக்களில் தெளிவாக உள்ளன. இஸ்தான்புல்லிற்கு வருவதற்கு முன், வெளிவிவகாரச் செயலர் கிளின்டன் சௌதி அரேபியாவிற்குப் பறந்து சென்று, ஈரானிய ஏற்றுமதிகளை நெரிக்கும் அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளின் உலகளாவிய பொருளாதாரப் பாதிப்பை அகற்றும் வகையில் கூடுதலான எண்ணெய் உற்பத்தி உறுதி செய்யப்படும் என்னும் சௌதியின் உத்தரவாதத்தைப் பெற்றார்; அதேபோல் ஈரானுக்கு எதிரான போர்த் தயாரிப்பில் அமெரிக்கா அளிக்கும் ஏவுகணைப் பாதுகாப்புக்களையும் எண்ணெய்ச் செழிப்புடைய ஷேக் நாடுகளுக்கு அளிக்கும் பென்டகனின் திட்ட அறிமுகமும் நடக்கும்.

சிரியா பற்றி அமெரிக்கக் கொள்கைக்கு உந்துதல் கொடுப்பது அமெரிக்கப் பொருளாதாரச் சரிவை ஈடுகட்டும் வகையில் மத்தியதரைக்கடல் பகுதியிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரையிலுள்ள பரந்த நிலப்பகுதி மீது அமெரிக்க மேலாதிக்கத்தைக் கொள்ளுதல் என்னும் முயற்சியும், பேர்சிய வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவில் முக்கிய எரிசக்தி உற்பத்திப் பகுதிகள் முழுவதையும் தன் செல்வாக்கின் கீழ் கொண்டுவரும் முயற்சியும்தான். கடந்த தசாப்தத்தில் வாஷிங்டன் இந்த இலக்கைக் கருத்திற்கொண்டு இரு போர்களை, ஆப்கானிஸ்தான், ஈராக் மீது நடத்தியுள்ளது; இப்பொழுது மூன்றாவது, இன்னும் பேராபத்தான தாக்குதலை இவற்றிற்கு இடையே இருக்கும் 74 மில்லியன் மக்களைக் கொண்ட ஈரான் மீது நடத்துவதற்குத் தயாரிப்புக்களைக் கொண்டுள்ளது. இத்தகைய போர் ஈரானிய மக்களுக்குப் பேரழிவு விளைவுகளைத் தரும் என்பதோடு மட்டும் இல்லாமல், முழு உலகத்தையும் பாதிக்கும்; ஒரு புறம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பேராபத்து தரும் ஆயுதங்கள், மறுபுறம் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆயுதங்கள் என.

சிரிய எழுச்சியாளர்களுக்கு பணமும், உபகரணங்களும் கொடுத்தல் என்னும் கணிசமான செயற்பாடுகளைத் தவிர, இஸ்தான்புல் மாநாடு சிரிய தேசியக் குழுவை சிரிய மக்களின் நெறியான பிரதிநிதித்துவ அமைப்பு என்றும் அங்கீகரித்தது. வாஷிங்டனின் முகவர் என்று அது பட்டம் சூட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கு உண்மையில் நெறியும் கிடையாது, மக்கள் பிரதிநிதித்துவமும் கிடையாது.

இத்தகைய பல பிளவுகள் கொண்ட அரசியல் இஸ்லாமியவாதிகள், மேற்கத்தைய உளவுத்துறை அமைப்புக்களிடமிருந்து பணம்பெறும் வயது முதிர்ந்த நாட்டை விட்டு வெளியேறிய புலம்பெயர்ந்தவர்கள், முன்னாள் ஆட்சிப் பணியாளர்கள் என்பது சிரிய உழைக்கும் மக்களின் பெரும்பாலானவர்களின் விழைவுகள் எதையும் பிரதிபலிக்கவில்லை. மில்லியன் கணக்கான சிரியத் தொழிலாளர்கள் சமூக சமத்துவமின்மை, அடக்குமுறை, ஊழல் என மலிந்துள்ள அசாத் ஆட்சியை எதிர்க்கின்றனர்; ஆனால் அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்புக் காட்டுவதுடன், முஸ்லிம் பிரதர்ஹுட், அதன் சௌதி ஆதரவாளர்களின் குறுங்குழுவாத கொள்கைகளையும் எதிர்க்கின்றனர்.

இத்தகைய சக்திகள் தீவிர அடக்குமுறை, குறுங்குழுவாதம் நிறைந்த மோதல்கள், சிரியாவை ஒரு அரைக் காலனித்துவ அந்தஸ்த்திற்கு தள்ளுதல் என்ற உறுதிமொழிகளைத்தான் கொடுக்கின்றன.

உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கம் ஏகாதிபத்தியத் தலையீட்டை எதிர்ப்பதுடன், சிரியா மீது கைவைக்காதே என்னும் கோரிக்கையையும் எழுப்ப வேண்டும். அசாத் ஆட்சியை அகற்றுதல் என்பது சிரியத் தொழிலாளர்களின் பணி ஆகும் நாட்டை ஒரு குறுங்குழுவாத இரத்தக் களரிக்கு உட்படுத்தி மேலும் பிராந்தியத்தின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்கும் முயற்சிக்குத் தயாராக இருக்கும் கொள்ளைமுறை ஏகாதிபத்திய சக்திகளுடைய பணி அல்ல.