தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Unions complicit in GM attack on European auto workersஐரோப்பிய கார்த் தயாரிப்புத் தொழிலாளர்களின் மீதான ஜெனரல் மோட்டார்ஸின் தாக்குதலுக்கு தொழிற்சங்கங்கள் உடந்தை
Ulrich Rippert use this version to print | Send feedback ஐரோப்பாவில் அதன் ஆலைகள் இரண்டு மூடப்படுவது உள்ளடங்கலாக தன்னுடைய ஐரோப்பிய ஆலைகளில் தான் இன்னும் ஊதியங்கள், பணிநிலைகளைக் குறைக்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது என்னும் ஜெனரல் மோட்டார்ஸின் -GM- அடுத்து வந்துள்ள அறிவிப்பு, ஐரோப்பிய கார்த் தொழிலாளர்கள் மீதும் மற்றும் தொழிலாள வர்க்கம் முழுவதின் மீதும் தாக்குதலில் ஒரு புதிய கட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. டெட்ரோயிட்டில் உள்ள GM நிர்வாகம், ஐரோப்பியத் தொழிலாளர்கள் மீது அதன் அமெரிக்க ஆலைகளில் அது ஏற்கனவே உருவாக்கிவிட்ட மிருகத்தனச் சுரண்டல் வடிவங்களை சுமத்தும் உறுதியைக் கொண்டுவிட்டது. ஒபாமா நிர்வாகத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன், GM பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி அமெரிக்காவில் 31,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. புதிய தொழிலாளர்கள் பழைய தொழிலாளர்கள் பெறும் ஊதியங்களில் பாதிக்குத்தான் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பணி நிலைமைகள் மோசமாகியுள்ளன. அந்த அடிப்படையில் GM கடந்த ஆண்டு மிக அதிக இலாபங்களை அறிவித்தது. இப்பொழுது GM ஐரோப்பாவில் அதன் கவனத்தை திருப்பியுள்ளது. ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கத்துடன் -United Auto Workers union- நெருக்கமாகச் செயல்பட்டு அதன் அமெரிக்க தொழிலாளர் பிரிவின் மீதான பணிநீக்கங்களையையும் ஊதியக் குறைப்புக்களை விரைவுபடுத்தியது போல், ஐரோப்பாவிலும் GM தொழிற்சங்கங்கள் மற்றும் ஆலைகளிலுள்ள அதன் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது. இதில் முக்கிய பங்கு ஐக்கிய கார்த்தயாரிப்பு தொழிற்சங்கத் தலைவர் பாப் கிங்கினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் அவர் GM இன் ஜேர்மனியத் துணை நிறுவனமான Opel Ag இன் இயக்குனர் குழுவில் சேர்ந்தார். UAW வை ஒரு வணிக நிறுவனமாக மாற்றி, கார்த் தொழிலாளர்கள் நலனுடன் பொதுவில் எதையும் கொண்டிராத அமைப்பாக மாற்றியதின் மொத்த உருவகம்தான் கிங். இன்று தொழிற்சங்கங்கள், பெருநிறுவனக் குழுமங்களாகச் செயற்படும் பங்கிற்கு அவர் உதாரணமாக உள்ளார். இவை பெருநிறுவனங்களில் இலாபங்களை மிகவும் அதிகரிக்கவும், தொழிலாளர்களின் எதிர்ப்புக்களை நசுக்கவும்தான் செயற்படுகின்றன. போர்ட்டின் ஒரு பணியாளர் தேர்வு நிர்வாகியின் மகனான கிங், தன்னுடைய பெருநிறுவனக் கருத்துக்களை விளக்குவதற்கான வாய்ப்பு எதையும் நழுவ விடுவதில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்கக் கார்த்தயாரிப்பு தொழிலாளர்களுக்கு பேரழிவு விளைவுகளைக் கொடுத்த நான்காண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின் அவர் அமெரிக்கத் தொலைக்காட்சியில் கூறினார்: “எங்கள் கருத்து மாறிவிட்டது. இந்நிறுவனங்களின் நீண்ட கால வெற்றிக்கு அதிகமாக பணயம் வைப்பவர்கள் எங்கள் உறுப்பினர்கள் தான் என்பதை நாம் விளங்கிக்கொண்டுள்ளோம்.” “முதலாளிகள், தொழிலாளர்கள் மற்றும் அரசாங்கம் அனைத்தும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்பதற்குக் கார்த் தொழில் ஒரு சிறந்த உதாரணம்” என்று கிங் தொடர்ந்தார். “வெவ்வேறு முனைகளில் இருந்து எதிர் நிலைப்பாடுகளைக் கொள்ளுவதைக் காட்டிலும், நாங்கள் மேசையில் ஒன்றாகப் பேசுவதற்குக் கூடினோம்.” ஜேர்மன் IG Metall தொழிற்சங்கத்துடனும் கிங் நெருக்கமாக உழைத்து வருகிறார். அவருக்கு இயைந்த முறையில் அங்குள்ள ஓப்பெல் உடைய கூட்டு தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் புதிய தலைவர் டாக்டர் வொல்ப்காங் ஷேபெர்-குளுக் உள்ளார். ஒரு உயர்கல்விக் கூடத்தைச் சேர்ந்த ஷேபெர் குளுக் 12 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் கூட்டு தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் தலைவர் கிளவுஸ் பிரான்ஸினால் தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அவர் GM இன் ஐரோப்பிய தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர் என்னும் பதவி உயர்வைப்பெற்றார். அவருடைய பணி ஐரோப்பா, வட அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் தொழிற்சங்க வலைப்பின்னலை வளர்த்தல் ஆகும். இந்த முக்கியமான பங்கை அவர் ஓர் ஆலையை மற்றொன்றிற்கு எதிராகத் திருப்புதல், GM தொழிலாளர்கள் கூட்டுப் போராட்டம் இல்லாமல் தடுத்தல் ஆகியவற்றைக் கையாண்டு செயல்படுத்துகிறார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் Rüsselsheim நகர தொழிற்சாலையின் தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கு தலைவராகவும், ஓப்பெல் மேற்பார்வையாளர் குழுவின் துணைத் தலைவராகவும் ஆனார். அதே நேரத்தில் அவர் ஐரோப்பிய தொழிலாளர் குழுவின் தலைவராகவும் நிறுவனத்தின் கூட்டு தொழிலாளர் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஓப்பெல் நிர்வாகக்கூட்டத்தில் கடந்த புதன் அன்று வந்திருந்த எல்லா தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் நிர்வாகத்துடன் தாங்கள் ஒத்துழைக்கத் தயார் என்று கூறினர். ஷேபெர் குளுக் தன்னுடைய மறுகட்டமைப்புத் திட்டத்தை, கூட்டு தொழிலாளர் குழுவினால் தயாரிக்கப்பட்டதை கூட்டத்தில் முன்வைத்தார். GM ஜேர்மனியில் Bochum நகரில் உள்ள ஓப்பெல் ஆலையை (3100 ஊழியர்களைக் கொண்டது), மற்றும் Ellesmere துறைமுகத்தில் உள்ள பிரிட்டிஷ் வாக்ஸ்ஹால் ஆலையையும் (2100 தொழிலாளர்கள்) மூடுவதாக அச்சுறுத்தியபோது, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆலை மூடல்களைத் தடுப்பதற்குத் தாங்கள் இன்னும் நீண்டகால விளைவுகளைக் கொண்ட விட்டுக்கொடுப்புகளை ஏற்பதாகக் கூறினர். இதே சூத்திரம்தான் UAW வினால் வெட்டுக்கள் மற்றும் ஆலைகளை மூடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. ஆலைகளில் உள்ள அனைத்து வேலைகளையும் பாதுகாப்பது மற்றும் ஊதியங்கள், நலன்களைப் பாதுகாப்பது என்பது தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் ஆலைகளில் உள்ள அவற்றின் பிரதிநிதிகளின் பிடியை முறிப்பதின் மூலம்தான் முடியும். இதற்கு தொழிற்சங்கங்களின் தேசியவாத வேலைத்திட்டத்திற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. கார்த்தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு நாட்டின் தொழிலாளர்களை மற்றொரு நாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக திருப்பும் திறன், அமெரிக்காவில் கொடுக்கப்பட்ட விட்டுக்கொடுப்புகளை பயன்படுத்துவது என்பது ஐரோப்பாவிலுள்ள தொழிலாளர்களின் மீது தாக்குதலை நடத்துவதற்கு ஒரு புதிய அடித்தளத்தைக் கொடுத்துள்ளது. இது உற்பத்தி பூகோளமயமாக்கப்பட்ட சகாப்தத்தில் தொழிற்சங்கங்களின் தேசியவாத முன்னோக்கின் திவால் தன்மையை, நன்கு புலப்படுத்துகிறது. தேசியவாதம் வர்க்க ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்து செயல்படுகிறது. தேசியவாதம் மற்றும் வர்க்க ஒத்துழைப்பு என்னும் பிற்போக்குத்தன அடித்தளத்தில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றும், திட்டமிட்டும் சர்வதேச நிறுவனங்களுக்கு எதிரான கார்த்தயாரிப்புத் தொழிலாளர்களின் பொதுப் போராட்டத்தை தடுக்கின்றன. முழு உணர்வுடன் அவை தங்கள் சொந்த உறுப்பினர்களின் ஊதியங்களையும் நலன்களையும் குறைக்கின்றன; இதையொட்டி நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் உற்பத்தியை தொடர வழிவகை செய்து, அதனால் தங்கள் வருமான பாய்வை உறுப்பினர் சந்தாக்கள் மூலம் பாதுகாத்து, நிறுவனங்களின் இளைய பங்காளிகள் என்ற முறையில் கிடைக்கும் சலுகைகளையும் தக்க வைத்துக் கொள்கின்றன. GM-Opel நிர்வாகிகள் மற்றும் அவர்களுடைய எடுபிடிகள் IG Metall, UAW ஆகியவற்றில் தற்போதுள்ள நிலைமையில் வேலைகளையும் ஊதியங்களையும் காப்பாற்ற முடியாது என்று கூறுகையில், முதலாளித்துவ இலாப முறை உழைக்கும் மக்களின் நலன்கள், தேவைகளுடன் சமரசத்திற்கு இடமில்லாத மோதலில் உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளுகின்றனர். வேலைகள், மற்றும் முன்னைய சமூகநலன்களின் பாதுகாப்பு என்பது பெருவணிகத்தின் இலாப நலன்களுக்கு எதிராக மக்கள் தேவைகளைக் கருத்திற்கொள்ளும் ஒரு முன்னோக்கை கொண்ட, அதாவது ஒரு சோசலிச முன்னோக்கை அடித்தளமாக கொள்ளவேண்டும். இந்த முன்னோக்கின் இதயத்தானத்தில் ஐரோப்பிய தொழிலாளர்களும் அவர்களுடைய அமெரிக்கா, உலகெங்கிலும் உள்ள சகோதர, சகோதரித் தொழிலாளர்களுடைய மிக நெருக்கமான ஐக்கியம் தேவையாகும். ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் நல்ல ஊதியம் கொடுக்கும் வேலை, சமூக நலன்கள் ஆகியவற்றிற்கான உரிமை உண்டு. வேலை மற்றும் முறையான ஊதியம் என்பது ஓர் அடிப்படை உரிமையாகும். இது முதலாளித்துவ இலாபமுறை மற்றும் தொழிலாளர்களை வறுமையிலும், துன்பத்திலும் தள்ளி வரும் பெரும் செல்வக்கொழிப்புடைய உயரடுக்கிற்கு எதிரான போராட்டத்தின் மூலமாகத்தான் செயல்படுத்தப்பட முடியும். தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டையும், தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களின் கட்டுப்பாட்டையும் முறிக்கவும், கூட்டு சர்வதேச நடவடிக்கைகள், வேலைநிறுத்தங்கள், மூடப்படும் அச்சுறுத்தல் கொண்ட ஆலைகள் ஆக்கிரமிக்கப்படுதல் ஆகியவற்றிற்கு சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பது தேவையாகும். இப்போராட்டத்தின் அடித்தளத்தில் ஜேர்மனியில் சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியுடைய தேர்தல் பிரச்சாரத்திற்கும் அதன் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளர்களான ஜெரி வைட், பிலிஸ் ஷெரர் ஆகியோருக்கு முழு ஆதரவையும் அளிக்கிறது. அவர்கள்தான் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கு போராடும் முயற்சிகளைப் பிரச்சாரத்தில் மையமாக வைத்துள்ளனர். |
|
|