தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Tamil separatists lobby imperialist powers against Sri Lankan government at UNதமிழ் பிரிவினைவாதிகள் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவை நாடுகின்றனர்By Athiyan
Silva use this version to print | Send feedback பிப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19வது அமர்வின் போது, தமிழ் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சியுள்ள பல்வேறு குழுக்கள் ஐ.நா. அலுவலகங்களை சூழ்ந்துகொண்டிருந்தன. 2009 ஆம் ஆண்டு, இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து ஒரு சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு இவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் மேற்கத்திய சக்திகளிடம் வேண்டுகோள்கள் விடுத்துக்கொண்டிருந்தனர். இத்தகைய முறையீடுகள், தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைப்பாட்டில் இருந்து நோக்கும் போது, முற்றிலும் பயன்றவை ஆகும். புதிய ஏகாதிபத்திய போர்கள், லிபியா, சிரியா மற்றும் பரந்த மத்திய கிழக்கிலும் இடம்பெறும் ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில், வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு இந்த குழுக்களின் விசுவாசத்தை தெரிவிக்க மட்டுமே இந்த வேண்டுகோள்கள் சேவை செய்யும். “சர்வதேச சமூகத்துடன்” “இராஜதந்திர உடன்பாடுகளை” ஏற்படுத்துவதற்காக தமிழ் தேசியவாதக் குழுக்கள் பல்வேறு ஒன்று கூடல்களை ஒழுங்கமைத்ததோடு ஜெனிவாவுக்கும் ஒஸ்லோவுக்கும் தமது பிரதிநிதிகளையும் அனுப்பின. உண்மையில் இதே சக்திகள் தான் கொழும்பின் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு முற்றுமுழுதாக உதவிசெய்து விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் ஒரு மத்திய பாத்திரத்தை வகித்தன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் (TGTE) மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் (TCC) முறையே பிப்ரவரி 27 அன்றும் மார்ச் 5 அன்றும் ஐ.நா. அலுவலகத்தின் முன்னால் இருக்கும் Place des Nations இல் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தன. தமிழர் ஒருங்கிணைப்பு குழு, மேலும் இலண்டன் மற்றும் பாரிஸில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இதில் ஒரு சில நூறு பேர்களே பங்கேற்றனர். மார்ச் 16 அன்று, உலகத் தமிழர் பேரவை (GTF) பிரதிநிதிகள், நோர்வேயின் சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெயிம், மற்றும் கன்சர்வேடிவ் எதிர்க்கட்சி தலைவர் எர்னா சொல்பேர்க்கையும் ஒஸ்லோவில் சந்தித்தனர். சொல்ஹெயிம் தான் 2002 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும், 2006 இல் இராஜபக்ஸவிடம் அதிகாரத்தை கையளித்த இலங்கையின் முந்தைய ஐக்கிய தேசிய முன்னணி (UNF) அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தவர்களில் முக்கியமானவராவார். இந்தக் குழுக்கள் அனைத்தும் புலம் பெயர்ந்த தமிழ் முதலாளித்துவத்தின் வெவ்வேறு கன்னைகளுடன் தொடர்புபட்டவை. இவற்றில் பல 2009ல் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் ஒன்றுதிரண்டவையாகும். உலகத் தமிழர் பேரவையானது அமெரிக்க மற்றும் பிரித்தானியா அரசியல் ஸ்தாபனங்களின் ஆசீர்வாதத்துடன் பிரித்தானிய பாராளுமன்றத்தில் உருவானது. நாடுகடந்த தமிழீழ அரசானது அமெரிக்க நகரான பிலடெல்பியாவில் அமைக்கப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்பு குழு 1983ல் இருந்து பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் இயங்கி வருகின்றது. ஜெனீவா சென்ற உலகத் தமிழர் பேரவை தலைவர்கள், "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்" (LLRC) அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் முழுமனத்துடன் வரவேற்றனர். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ நியமித்த நல்லிணக்க ஆணைக்குழு, 2009ல் யுத்தத்தின் கடைசி மாதங்களில் அரசாங்க படைகள் நடத்திய அட்டூழியங்கள் பற்றிய சர்வதேச விமர்சனங்களை திசை திருப்புவதற்காக அமைக்கப்பட்டதாகும். பத்தாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் இராஜபக்ஷ அரசாங்கத்தாலும் அதன் இராணுவ தளபதிகளாலும் வெளிப்படையாக ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டதையும் மூடி மறைப்பதே இதன் நோக்கமாகும். நாடுகடந்த தமிழீழ அரசு மற்றும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், அமெரிக்க அனுசரணையிலான தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக, பல்வேறு ஆபிரிக்க நாடுகளின் சிரேஷ்ட வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஐ.நா. தூதுவர்களை ஜெனீவா மற்றும் பேர்ன் நகரில் சந்தித்தனர். இறுதியாக, மார்ச் 22 அன்று தீர்மானம் 24 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா வரைந்த இந்த தீர்மானம் இராஜபக்ஷ அரசாங்கத்தை அதன் சொந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு அழைப்பு விடுக்கின்றது; இது இனவாத யுத்தத்தின் கடைசி நாட்களில் இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களுக்கு நியாயம் வழங்க எதையும் செய்யப் போவதில்லை. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் உலகத் தமிழர் பேரவையும் ஏமாற்றமடையும் வகையில், அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் மரியா ஒடேரோ, அரசாங்கம் அதன் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அமல்படுத்த அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கும் என பிப்ரவரி 13 அன்று கொழும்பில் பத்திரிகையாளர்களிடம் கூறினார். பின்னர் அவர், கடந்த ஆண்டுகளில் விடுதலை புலிகளை எதிர்த்துப் போரிடவும் ஒரு தனியான தமிழ் அரசு ஸ்தாபிக்கப்படுவதை தடுக்கவும் அமெரிக்கா கொழும்புக்கு 2 பில்லியன் டொலர்களை கொடுத்துள்ளதுடன், அவற்றில் அதிகமானவை இராணுவ உதவிகளாகும் என பெருமைபட்டுக்கொண்டார்: "அமெரிக்கா இலங்கையின் நீண்ட கால நண்பன்; நாம் 1997ல், புலிகளை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகக் கண்ட முதல் நாடுகளில் ஒன்றாகும்" என அவர் கூறினார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் போர் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்கான ஒரே நோக்கம்; "சீன செல்வாக்கை" நிராகரித்து வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளின் சுற்றுப்பாதையில் மேலும் சுழலுமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமே, என்பதை ஒடேரோவின் கருத்துக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நாடுகடந்த தமிழீழ அரசின் தலைவர் வி. உருத்திரகுமாரன், மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் கருவியாக செயற்பட தனது தயார் நிலையை காட்டினார். அவர் எகோனமிக்ஸ் டைம்ஸ் நிருபருக்கு தெரிவித்ததாவது: "எவ்வாறெனினும், தெற்காசியாவில் பூகோள அரசியல் இயக்கத்திலான மாற்றங்களை பொறுத்து, இந்தியா மற்றும் அமெரிக்க மற்றும் தமிழர் நலன்கள் ஒரு புள்ளியில் குவியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு''. இது, பெரும் வல்லரசுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்களின் மத்தியில், தமிழ் மக்கள் வாஷிங்டன் மற்றும் புது டில்லியின் பக்கம் சாய்வதன் மூலம், அவர்கள் தமது நலன்களை மேம்படுத்த முடியும் என்ற அபத்தமான, ஆபத்தான பிரமைகளை ஊக்குவிப்பதற்கு சமனான செயலாகும். எவ்வாறெனினும், சீனா, மற்றும் பாக்கிஸ்தான் போன்ற அதன் பிராந்திய கூட்டாளிகளுக்கு எதிரான அத்தகைய ஒரு கூட்டு, உண்மையில், இந்திய துணைக்கண்டத்தையும் உலகத்தையும் பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான ஒரு பேரழிவு போருக்கு நெருக்கமாகக் கொண்டு வரும். புலம் பெயர்ந்த தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் பரவலாக ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னான கூட்டங்களைப் புறக்கணித்தனர். ஐரோப்பா, கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசு மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்திற்கு முன்னதாக ஒரு மாத காலமாக பிரச்சாரம் செய்த போதிலும், பாரிஸில் இருந்து ஒரு அதிவேக TGV ரயில் உட்பட, பல ஐரோப்பிய நகரங்களில் இருந்து ஜெனீவாவுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் கூட, அவர்களது ஆதரவாளர்களில் சுமார் 3,000 பேர் மட்டுமே இக்கூட்டங்களில் பங்குபற்றியிருந்தனர். “நீதிக்கான நடை பயணம்” என்ற பதாகையின் கீழ் நாடுகடந்த தமிழீழ அரசு மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் சில ஆதரவாளர்கள், பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேசிய கொடிகளையும் ஏந்தியவாறு, லண்டன் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இருந்து ஜெனீவாவுக்கு நடை பயணம் சென்றனர். அவர்கள் ஜெனீவா ஒன்று கூடலிலும் இந்த ஏகாதிபத்திய கொடிகளை பெருமையுடன் வைத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஒப்பீட்டளவில், 2009ல் போரின் இறுதிக் கட்டத்தில், பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் போரை எதிர்ப்பதற்காகவும் மற்றும் இலங்கை போர் வலயப் பகுதிகளில் சிக்கிக்கொண்டிருந்த அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றவும் போராட தன்னிச்சையாக தெருக்களில் குதித்தனர். அதே சமயம், புலம்பெயர்ந்த நாடுகளின் புலி உறுப்பினர்கள், ஏகாதிபத்திய சக்திகளிடம் மன்றாடுவதன் மூலம் அவர்களால் போரை நிறுத்த முடியும் என்ற மாயையை பரப்பினர். உண்மையில் இந்த சக்திகள்தான், இராஜபக்ஷ தடங்களின்றி படுகொலைகளை செய்ய அனுமதித்தன. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளின் பரந்த வெளியுறவுக் கொள்கையின் பிற்போக்குத்தனமான தன்மை குறித்தான உணர்வு பெருகி வருவதையும் இந்தக் குறைந்த வருகை பிரதிபலிக்கிறது. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவுக்கு எதிரான புதிய காலனித்துவ யுத்தங்களில் பாரிய சேதாரங்களையும், சமூகக் கட்டமைப்பின் அழிவையும், மனித உரிமை மீறல்களையும், போர்க் குற்றங்களையும் இவை இழைத்துள்ளன. இப்போது அவை சிரியா மற்றும் ஈரானுக்கு எதிராக போருக்குத் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன. தமிழ் முதலாளித்துவ தேசியவாதம் மீதான பிரமைகள் அதிகரித்தளவில் அகன்று கொண்டிருக்கிறது. தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு சோசலிச சர்வதேசிய முன்னோக்கிற்காகப் போராடுவதற்கு ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தமது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படும் ஒரு வேலைத்திட்டத்தின் அடித்தளத்திலேயே முன்னோக்கிச் செல்ல முடியும். இந்த அடிப்படையில் மட்டுமே அடிப்படை ஜனநாயக உரிமைகள் வெல்லப்படவும், பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். |
|
|