World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The execution of Troy Davis

ட்ராய் டேவிஸுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

Kate Randall
22 September 2011

Back to screen version

புதனன்று இரவு ஜோர்ஜியா மாநிலத்தின் ஜாக்சன் பகுதிக்கு அருகிலுள்ள அரச சிறைச்சாலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ட்ராய் டேவிஸ்க்கு விஷ ஊசி போடப்பட்டு அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட காட்சியைக் கண்டு உலகம் அதிர்ச்சியில் உறைந்தது.

அரசின் ஒப்புதலுடனான இந்தக் கொலை இரண்டு தசாப்தங்களுக்கும் கூடுதலாய் நீண்ட ஒரு நீதித்துறைக் கேலிக்கூத்தின் துயரகரமான இறுதி அத்தியாயம் ஆகும். இது ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையின் மீதான ஒரு அப்பட்டமான குற்றப்பதிவாகவும் அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு அவமானகரமான அத்தியாயமாகவும் நிற்கிறது.

இரவு சுமார் 10:20 மணிவாக்கில் அமெரிக்க உச்ச நீதி மன்றம் இடைக்காலத் தடை விதிப்பதற்கான மேல்முறையீட்டினை இறுதி நிமிடத்தில் நிராகரித்ததையடுத்து டேவிஸ் மரணம் உறுதியானது. 10:53 மணிக்கு அவருக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டதை அடுத்து அவர் நினைவிழந்தார். இரண்டாவதாய் செலுத்தப்பட்ட ஒரு ஊசி அவரது அத்தனை தசைகளையும் முடக்கி மூச்சுத்திணறச் செய்தது. இறுதியாய் செலுத்தப்பட்ட ஊசி ஒரு பெரும் மாரடைப்பை உருவாக்கி இரவு 11:08 மணிவாக்கில் அவர் மரணமடைந்தார்.

இந்தக் காட்டுமிராண்டித்தன செயல்முறை புதனன்று இரவு தனது உச்சத்தை எட்டியது. இந்த விஷத் தண்டனை நிறைவேற்றத்துக்கு, முதலில் திட்டமிடப்பட்டிருந்ததான மாலை 7:00 மணிக்கு சில மணி நேரங்கள் முன்னதாக வரையில், உச்ச நீதி மன்றம் சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில், டேவிஸ் அந்த நகர்படுக்கையில் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தார். குடும்ப உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் சிறைச் சுவர்களுக்கு வெளியே கண்ணீர் மல்க செய்திக்காகக் காத்து நின்றனர். எந்த விளக்கமோ விசனமோ இல்லாமல் ஒற்றை வரியில் மறுத்த வடிவத்தில் தீர்ப்பு வந்து சேர்ந்தது

ஐந்து நீதிபதிகளின் வாக்குகள் இருந்தால் இந்தக் கொலை நிறைவேறாமல் தடுத்திருக்க முடியும். முடிவில், இந்தத் தற்காலிக நடவடிக்கையும் கூட கறுப்பு அங்கி அணிந்த அந்த நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டது.

சிறைக்கு வெளியே ஒரு சமயத்தில் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் குவிந்திருந்தனர். அவர்களைச் சுற்றி நூற்றுக்கணக்கான போலிசார் வளைத்திருந்தனர். அவர்களில் பலரும் கலகத் தடுப்பு ஆயத்த நிலையில் இருந்தனர். ஹெலிகாப்டர்கள் மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தன. முன்னதாக மாலையில் சிறையை ஒட்டி இருக்கும் சாலையைக் கடந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரும் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.

டேவிஸ் தனது தண்டனை நிறைவேற்றத்துக்கு முன்னதாக விடுத்த எழுத்துமூலமான ஒரு அறிக்கை கூறுகிறது: “நீதிக்கான போராட்டம் என்னோடு முடிந்து போவதில்லை. இந்தப் போராட்டம் எனக்கு முன்வந்த மற்றும் எனக்குப் பின்னால் வரவிருக்கும் எல்லா ட்ராய் டேவிஸ்களுக்கும் தான்.”

இவரது வழக்கு நாடு முழுவதும் மற்றும் உலகமெங்கும் மில்லியன்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இவருக்கு மன்னிப்பு வழங்க வலியுறுத்தும் ஒரு மனுவில் 600,000க்கும் அதிகமான மக்கள் கையெழுத்திட்டிருந்தனர். அர்த்தமற்ற மற்றும் அவசியமில்லாத அவரது கொலை மக்களின் மனதில் ஆழமாகச் சென்று இறங்கியிருந்தது என்பதிலும் இது எளிதில் மறக்கப்பட முடியாத ஒன்றாக இருக்கும் என்பதோடு ஒரு காட்டுமிராண்டித்தனமான, இரக்கமற்ற மற்றும் தவறுக்கு வருந்தாத அமைப்புமுறை மீது மேலும் அவநம்பிக்கையைக் கொணரவும் அதனைக் கீழறுக்கவும் சேவை செய்யும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

அமெரிக்க அரசியல் ஸ்தாபனமானது அநேக காலம் எந்த உணர்ச்சியுமற்று இதற்கு எதிர்வினையாற்றியது. அதில் குறிப்பாகக் கூறத்தகுந்தது இந்த வழக்கில் தலையிட மறுத்த ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கோழைத்தனமான மவுனம் ஆகும் ஜனாதிபதிகுற்றவியல் நீதி அமைப்பில் துல்லியமும் நேர்மையும் நிலவுவதை உறுதி செய்வதற்கு உழைத்ததாகவும் ஆனால் டேவிஸின் வழக்கில் அவர் தலையிட முடியாது, ஏனென்றால் அதுஅரச வழக்கு எனவும் ஊடகங்களுக்கான செயலரான ஜே கார்னி புதனன்று உணர்ச்சிகளற்ற முகபாவத்துடன் கூறினார்.

தொழிற்துறை நாடுகளில் பெரும்பான்மையானவற்றில் தடைசெய்யப்பட்டு விட்ட ஒரு நடைமுறையான இந்த மரண தண்டனைக்கு ஒபாமா பட்டவர்த்தனமாக ஆதரவளித்து நிற்கிறார்.

ஆட்களை குறி வைத்துப் படுகொலை செய்வது, சித்திரவதை, இரகசியச் சிறைச்சாலைகள் மற்றும் இறையாண்மை கொண்ட நாடுகளை வான் தாக்குதல்கள், ஊடுருவல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளைக் கொண்டு அடிமைப்படுத்துவதற்கான உரிமை ஆகியவற்றை ஓசையில்லாமல் அங்கீகரிக்கும் அமெரிக்காவின் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் - ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி - கொள்கைகளுடனான சமரசமே இது.

ட்ரொய் டேவிஸ் விஷம் செலுத்தப்பட்டு கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக ஒபாமா ஐக்கிய நாடுகள் அமைப்பில், லிபியாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போரை ஜனநாயகத்திற்கான ஒரு மாபெரும் வெற்றியாக புகழ்ந்து போற்றினார்.

மரணத்தைச் சந்திக்க டேவிஸ்க்கு நான்காவது மற்றும் இறுதி தடவையாகக் குறிக்கப்பட்ட நாளாய் புதன்கிழமை அமைந்து விட்டது. இவர், தான் குற்றமற்றவன் என முறையீடு செய்து போராடி, 22 ஆண்டுகளை இந்த தண்டனைக் காலத்தில் கழித்துள்ளார் முந்தைய மூன்று தடவைகளில் திட்டமிடப்பட்ட தண்டனை நிறைவேற்றங்கள் தள்ளிப் போயின, அதில் இரண்டு முறைகள் ஊசி செலுத்தப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்கள் முன்னதாக நிறுத்தப்பட்டது.

1989ல் மார்க் மெக்பெயில் என்கிற போலிஸ் அதிகாரியை அவர் உத்தியோகத்தில் இல்லாத சமயத்தில் கொலை செய்ததாகக் கூறி டேவிஸ் கைது செய்யப்பட்டது முதலே அரசாங்கத்தின் ஒவ்வொரு நிலையிலுமான அதிகாரிகள் அவரது அடிப்படை உரிமைகளின் மீது தாக்குதல் தொடுத்து வந்திருக்கின்றனர். வழக்கு தொடுத்தவர்களின் மோசமான நடத்தை, உரிய வழிமுறைகளை மறுத்தமை மற்றும் பாகுபாடான அணுகுமுறை ஆகியவற்றால் இந்த நீதி வழக்கு தொடர்ந்து இடையூறு செய்யப்பட்டு வந்தது.

ட்ராய் டேவிஸ் குற்றமற்றவராய் இருக்கக் கூடும் எனக் காட்டும் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அவரது வழக்கு விசாரிக்கப்பட்டபோது சாட்சியம் கூறிய ஒன்பது பேரில் ஏழு பேர், போலிஸ் மிரட்டலின் பேரில் தான் தாங்கள் சாட்சியம் கூறியதாகக் கூறி பல்டி அடித்து விட்டனர், அத்துடன் ஜூரிகள் தத்தமது கருத்துகளை பொதுவில் மறுதலித்தனர் என்கிற உண்மைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அரசு பரோல் வாரியம் செவ்வாயன்று அவருக்கு பொது மன்னிப்பை மறுத்தது.

அரசாங்க மேல்முறையீட்டு நிகழ்முறையின் போது டேவிசுக்கு சட்டரீதியான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. முக்கியமான சாட்சிகள் பல்டி அடித்தமை டேவிஸ் மீதான குற்றச்சாட்டில் சந்தேகத்தைக் கிளப்பிய நிலையிலும் அவருக்கு ஒரு புதிய மறுவிசாரணை வழங்கப்படவில்லை என்பதை ஒரு பெடரல் டிஸ்டிரிக்ட் நீதிபதியே ஒப்புக் கொண்டார். தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க தன்னை உண்மையறியும் சோதனைக்கு உட்படுத்துமாறு இந்த அனாதரவான மனிதர் தனது மரண நாளன்று விடுத்த கோரிக்கையையும் சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

ட்ராய் டேவிஸ் சட்டரீதியாக அநீதியாய் கொல்லப்பட்டதானது 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க சமூகம் கொண்டுள்ள மனவருத்தமற்ற குரூரத்தை கவனமையத்துக்குக் கொண்டுவருகிறது. அமெரிக்கா முழுவதும் இவரைப் போல சுமார் 3,251 சிறைக் கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது, 2011 ஆம் ஆண்டில் தண்டனைக்கு ஆளாகும் 35வது நபராவார் இவர்.

எண்ணிக்கையிலும் சரி மக்கள்தொகையின் சதவீதத்திலும் சரி உலகில் அமெரிக்கா தான் அதிகமான சிறைவாசிகளைக் கொண்டிருக்கிறது. சுமார் 2.3 மில்லியன் மக்கள் சிறைக் கம்பிகளுக்குள் இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன, சுமார் 100,000 அமெரிக்க மக்களுக்கு 750 பேர் என்ற விகிதத்தில் இது உள்ளது. அதேபோல் நாட்டின் சிறைகளில் விகிதாச்சார அடிப்படையில் நிற மற்றும் இன அடிப்படையிலான சிறுபான்மையினரின் எண்ணிக்கை மிக அதிகமானதாய் உள்ளது

ஆப்பிரிக்க அமெரிக்கரான ட்ராய் டேவிஸ் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகையில் அவருக்கு வயது 22. அவருடையதையொத்த வழக்குகள் அமெரிக்காவெங்கிலும் காவல் நிலையங்களிலும் நீதித்துறை வளாகங்களிலும் அன்றாடம் அரங்கேற்றம் காண்கின்றன. 2009 ஆம் ஆண்டு நிலவரப்படி கறுப்பரினத்தில் 25-29 வயதுக்குள்ளானவர்களில் பத்தில் ஒருவர் சிறைச்சாலையில் இருந்தார்.

கடைசியில், தலையிடுவதில்லை என்று உச்சநீதிமன்றம் எடுத்த முடிவில், டேவிசுக்கான தண்டனையில் நீதி குறித்து கேள்வி எழுப்பினால் அது அமெரிக்காவில் ஒட்டுமொத்த அரசு ஒடுக்குமுறை அமைப்புமுறையின் மீதும் சந்தேகத்தை பாய்ச்சி விடும் என்கிற கவலையும் ஒரு காரணியாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை

வறுமையால் சூழப்பட்ட ஒரு சமூகமும், அத்துடன் பெரும்பான்மை மக்களுக்கும் அசிங்கமாய் சொத்துத் திரட்சி படைத்த ஒரு உயரடுக்கிற்கும் இடையில் விரிந்து செல்லும் பிளவும் இந்த எந்திரத்திற்கான பின்புலத்தில் இருக்கிறது. 26 மில்லியன் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர், இவர்களில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீண்ட காலமாய் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளனர். பெருநிறுவன வருவாய்களும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் ஊதியங்களும் மேலேறிக் கொண்டே செல்கின்ற அதேசமயத்தில், வேலைவாய்ப்பு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கோ அல்லது அதனுடன் சேர்ந்து வருகிற பத்து மில்லியன்கணக்கான மக்களின் வறுமை, பசி, வீடின்மை, கண்ணியமான கல்வியின்மை அல்லது மருத்துவப் பராமரிப்பின்மை ஆகிய துன்பங்களை நிவர்த்தி செய்வதற்கோ எந்த அரசாங்க வேலைத்திட்டங்களும் இல்லை.  

அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எந்த இடமும் இல்லை என்கிற உண்மையையே ட்ராய் டேவிஸின் சட்டரீதியான கொலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மரண தண்டனை என்கிற கொடூரமான வக்கிரமான நடைமுறைக்கு முடிவு கட்டுவதும் அத்துடன் பொதுவாக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல், சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதைச் சார்ந்துள்ளது