WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
ஆளும்
கட்சிக்கு
வாக்களிக்காவிட்டால்
நகர
சபையை
கலைத்துவிடுவதாக
அச்சுறுத்தல்
Wilani
Peris
24 September 2011
use
this version to print | Send
feedback
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் கொழும்பு மாநகர
சபையின் அதிகாரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு கிடைக்காவிட்டால்,
அதை கலைத்துவிட நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தல் விடுக்கும் முறையில் சமிக்ஞை
காட்டியுள்ளார்.
செப்டெம்பர் 10 அன்று, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வசிப்பிடமான அலரி மாளிகையில்
நடந்த கூட்டமொன்றில் உரையாற்றிய இராஜபக்ஷ,
“அரசாங்கம்
ஒன்று இருக்கும் போது அந்த அரசாங்கத்தோடு (மாநகர சபையும்) செயற்பட வேண்டும். அது
வழமையான முறையாகும்.”
என தெரிவித்தார். “இரு
பக்கமும் இழுபட்டால்”
அரசாங்கம் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் படி செயற்படும் என குறிப்பிட்ட
அவர், மாகாண சபையின் மூலம் மாநகர சபையை கலைத்து, விசேட ஆணையாளர் ஒருவரை அதற்குப்
பதிலாக நியமிக்க முடியும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
கொழும்பு நகர சபைக்குப் போட்டியிடும் ஆளும் கட்சி வேட்பாளர்கள், இந்த
கூட்டத்துக்காக முஸ்லிம் மக்களை அழைத்து வந்திருந்ததாக செய்திகள் தெரிவித்தன.
இராஜபக்ஷ கொழும்பு நகரில் வாழும் மக்கள் பகுதியினரை அலரி மாளிகைக்கு அழைத்து வந்து
நடத்துகின்ற கூட்டத் தொடர்களில் இதுவும் ஒன்றாகும். தேர்தல் காலத்தில் இவ்வாறு
பல்வேறு மக்கள் பகுதியினரை அழைத்து வந்து விருந்தளித்து, ஏமாற்று வார்த்தைகளை
பேசுவது இராஜபக்ஷவின் அரசியல் தலையீடுகளில் ஒன்றாகும்.
இராஜபக்ஷ அரசாங்கத்தின், மேல் மாகாண சபையின் முதலமைச்சரான பிரசன்ன ரணதுங்க, 2010
ஜூன் மாதத்தில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு (யூ.என்.பீ.) ஆதரவானவர்கள் ஆட்சியில்
இருந்த கொழும்பு மாநகர சபையையின் ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு எட்டு மாதங்களுக்கு
முன்னதாகவே, அதை கலைத்துவிட்டார். வெகுஜன வாக்களிப்பில் ஆட்சிக்கு வந்த குழுவினரை
அகற்றிய ஜனாதிபதி, கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை ஜனநாயக விரோதமான முறையில்
விசேட ஆணையாளர் ஒருவரிடம் ஒப்படைத்தார்.
மறு
பக்கம், இங்கு பேசிய இராஜபக்ஷ, கொழும்பு நகரில் வாழும் மக்களை அவர்களது பிறந்த
இடத்தில் இருந்து வேறு எங்கும் கொண்டு செல்லப் போவதில்லை எனவும்,
“எந்தவொரு
காலத்திலும் நாம் கொழும்பு நகரில் இருந்து மக்களை அகற்றவில்லை”
எனவும் ஒரு கட்டுக் கதையை கூறினார். கொழும்பை அழகுபடுத்துவதாகவும்,
குடியிருப்பாளர்களை “அவர்கள்
இருக்கும் இடங்களை விட சிறந்த வீடுகளில் குடியேற்றுவதாகவும்”
அவர் வாக்குறுதியளித்தார்.
அரசாங்கம், கொழும்பு மாநகரை தெற்காசியாவின் வர்த்தக மையமாக மாற்றுவதற்காக, அங்கு
வாழ்கின்ற 75,000 குடும்பங்களை அகற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதாக கடந்த ஆண்டு மே
மாதத்தில் இருந்தே அறிவித்து வந்துள்ளது. அவர்களை கொழும்புக்கு வெளியில்
அவிஸ்சாவலை, ஹோமாகம மற்றும் மேலும் பல இடங்களில் கட்டப்படும் வீடுகளில்
குடியேற்றுவதாகவும் அரசாங்கம் அறிவித்து வந்தது.
இப்போது, மாநகர சபை தேர்தல் நடக்க இருக்கின்ற நிலைமையில், இந்த திட்டத்துக்கு
எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதனாலேயே, போலி அறிக்கைகள் மற்றம் வெற்று
வாக்குறுதிகள் மூலம் குடிசைவாசி ஏழைகளை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
ஆளும் கட்சி, கொழும்பு நகர மேயருக்கான வேட்பாளராக மிலிந்த மொரகொடவை நிறுத்தி,
உழைக்கும் மக்களின் எதிர்ப்பை தணியச் செய்வதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றது.
இராணுவத்தையும் பொலிசையும் ஆயுதங்களுடன் நிறுத்தியே, கொம்பனித் தெருவிலும்
தெமட்டகொடையிலும் வீடுகள் புல்டோசர்கள் மூலம் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த மக்களில்
அநேகமானவர்கள் இன்னமும் தொடலங்கவில் பலகை வீடுகளிலேயே வாழ்கின்றனர். எவ்வாறெனினும்
அரசாங்கம் வழங்கிய இந்த “மிகவும்
அழகான”
வீடுகள், தொடலங்க சேற்று நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளதோடு 18 வீடுகளுக்கு நான்கு
மலசல கூடங்களே உள்ளன. அவையும் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளன. கொம்பனி வீதியில்
உறுதிப்பத்திரங்கள் இருந்த 16 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதோடு அவர்களுக்கு ஒரு
வருடத்துக்கான வீட்டு வாடகையாக 100,000 ரூபா கொடுக்கப்பட்டது. 2010 மே மாதத்தில்
இருந்து இன்றுவரை அவர்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்கவில்லை.
“கொழும்பு
நகரின் அபிவிருத்திக்காக”
எனக் கூறிக்கொண்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காகவே அடிப்படை வசதிகள்
அபிவிருத்தி செய்யப்படுகின்றன. கொழும்பு காலிமுகத் திடலுக்கருகில் இராணுவ கட்டிம்
அமைந்திருந்த 10 ஏக்கர் நிலம், ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட ஷங்கிலா நிறுவனத்துக்கு
125 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5 ஏக்கர் காணி, 99
வருடங்களுக்கு சீன விமான தொழில்நுட்ப ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்துக்கு
(சி.ஏ.டீ.ஐ.சி.) குத்தகைக்கு கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அண்மையில்
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில்
தெரிவித்தார்.
ஷங்கிலா
நிறுவனம் 500 அறைகளைக் கொண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலையும் வியாபார நிறுவனங்களையும்
இந்த நிலத்தில் கட்டியெழுப்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இப்போது
அகற்றப்பட்டுள்ள வீடுகளுக்கும் மேலாக கொம்பனித் தெரு, தெமட்டகொட, நாரஹேன்பிட,
பொரல்லை, அப்பல் வத்த, ரெட்பானா மற்றும் புளூமென்டல் பிரதேசங்களிலும் ஆயிரக்கணக்கான
குடும்பங்களை வெளியேறுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை கட்டளையிட்டுள்ளது.
ஆகஸ்ட்
30 அன்று, புளூமென்டலில் ரயில் பாதைக்கு அருகில் 30 வீடுகள்
“சட்டவிரோதமாக
அமைக்கப்பட்டுள்ளதால்”
எந்தவொரு நேரத்திலும் அவற்றை அகற்ற முடியும் என்று நீதிமன்றம் கட்டளை இட்டுள்ளது.
அந்த பிரதேசத்தில் இரு பிள்ளைகளின் இளம் தந்தை உலக சோசலிச வலைத் தளத்துக்கு
கருத்து தெரிவித்த போது பின்வருமாறு கூறினார்.
“நீதிமன்ற
ஆணை பிறப்பிக்கபட்ட உடனேயே நாங்கள் இந்த தோட்டத்தில் ஒரு மறியல் போராட்டத்தை
ஏற்பாடு செய்தோம். அப்போது அங்கு வந்த எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் ஒரு அதிகாரியான
நிஸ்ஸங்க விஜேவர்தன, நிவாரணங்கள் எதுவும் கொடுக்காமல் வீடுகள் உடைக்கப்பட மாட்டாது
என கூறினார். எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அற்பத் தொகை கிடைத்து என்ன பயன்? எங்களது
பிரச்சாரத்தை நிறுத்துவதற்காகவே அவர் அப்படி சொன்னார் என்றுதான் நான்
நினைக்கின்றேன்.”
எண்ணெய்
கூட்டுத்தாபனத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி தொலைபேசியில் உலக
சோசலிச வலைத் தளத்துடன் பேசுய போது,
“சிறிய
தொகையை கொடுத்து வீடுகளை அகற்றுவது பற்றி எரிபொருள் நிறுவனத்துக்குள்
ஆலோசிக்கப்படுகிறது. எப்படியும் இந்த வீடுகள் அகற்றப்படும். இன்னமும் திகதி
தீர்மானிக்கப்படவில்லை,”
என்றார்.
புளூமென்டலில் மேலும் 300 வீடுகள் உடைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் சிறிய இந்த வரிசை வீடுகள் தகரம் போன்றவற்றால் தற்காலிகமாக
அமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் பரம்பரை பரம்பரையாக இங்கு வாழ்ந்து
வந்துள்ளதோடு, அநேகமானவர்கள் கூலி வேலை செய்தே பிழைக்கின்றனர். இடை இடையே வேறு
தொழிலாளர்களும் வாழ்கின்றனர். சில குடும்பப் பெண்கள் பெரிய வீடுகளில் வீட்டு
வேலைக்குச் செல்வதோடு சிலர் சிற்றுண்டிகளை செய்து விற்பனை செய்து வாழ்க்கையை
ஓட்டுகின்றனர்.
எமது
வலைத் தளத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட 3 பிள்ளைகளின் தாய் தெரிவித்ததாவது:
“வீடுகளை
கொடுக்காமல் அகற்றுவதில்லை என ஜனாதிபதி நேற்று கூறியிருந்தார். தேர்தலுக்கு
கொடுக்கப்படும் வாக்குறுதிகள் தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போய்விடும். வீடுகள்
எங்கே கட்டுவது? வீடுகளை உடைக்கும் போது இராணுவம் ஆயுதங்களையும் கண்ணீர் புகை
குண்டுகளையும் எடுத்துவரும்.”
எதிர்க்
கட்சியான யூ.என்.பீ. பாராளுமன்ற உறுப்பினர் சுதீர வீரசிங்க, நீதிமன்ற தீர்ப்புக்கு
எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்வதாக தெரிவித்தாலும், தான் அதை
விரும்பவில்லை என அவர் கூறினார். நாங்கள் இந்த வீடுகளில் குடியேறி 40, 50 வருடங்கள்
ஆகின்றன. இந்த பிரதேச மக்களுக்கு தண்ணீர், மின்சார கட்டனங்கள் செலுத்தும்
பட்டியல்கள் உள்ளன. எனவும் அவர் கூறினார்.
“எங்களை
தொடலங்க போன்ற நரகத்துக்கு கொண்டு சென்றால், நாங்கள் போக மாட்டோம். அரசாங்கம்
எங்களுக்கு பொருத்தமான வீடுகளை கொடுத்தால் மட்டுமே நாங்கள் போவோம்”
என அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த
அரசாங்கம் மட்டுமல்ல, யூ.என்.பீ. அரசாங்கமும் எங்களை ஏமாற்றியுள்ளது. இங்குள்ள சில
வீடுகளுக்கு உரித்துக்குப் பதிலாக பிரேமதாச ஒரு அட்டையை கொடுத்தார். அதற்கு எந்த
அங்கீகாரமும் கிடையாது”
என அவர் மேலும் கூறினார்.
சோசலிச
சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வேலைத் திட்டத்தைப் பற்றி கருத்துத் தெரிவித்த அவர்,
“இந்தக்
கட்சி மட்டுமே உண்மையை கூறியது. அரசாங்கத்தின் மூலம் அல்லது யூ.என்.பீ. மூலம்
வீட்டுரிமையை காக்க முடியாது. வீடுகளை பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தின் ஒத்துழைப்பு
அவசியம்”
என்றார்.
ரெட்பானா தோட்டத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உப செயலாளரான ஏ. பத்மராஜ் எமது
நிருபர்களுடன் பேசுகையில், “நாங்கள்
நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சென்றோம். வீடுகள் உடைக்கப்படுவது நிச்சயம் என
அங்குள்ள அதிகாரிகள் கூறினாலும், புதிதாக எதையும் கொடுப்பதாக
வாக்குறுதியளிக்கவில்லை”
என கூறினார். வீடுகளை உடைப்பதற்கு எதிரான சங்கத்தின் வேலைகளைப் பற்றி கேட்ட போது,
அது அரசாங்கத்தின் கொள்கையாக இருப்பதால் பிரச்சாரத்தை தவிர வேறு எதையும் செய்ய
முடியாது என அவர் கூறினார்.
ரெட்பானா தோட்டத்தின் தாய் ஒருவர் பேசும் போது,
“இந்த
தோட்டத்தில் சுமார் 300 வீடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபையினர் அளவெடுத்துச்
சென்றனர். அவிசாவலைக்குச் செல்ல விருப்பமா என கேட்டனர். கொழும்புக்குள்ளேயே வீடுகள்
கொடுப்பதென்றால் அவிசாவலை பற்றி கேட்பது ஏன்? நாங்கள் முடியாது என்று
சொல்லிவிட்டோம். எனது மகன் மீன் சந்தையில் வேலை செய்தார். மீன் சந்தை பேலியகொடைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது. இப்போது அவர் 3 மணிக்கே எழுந்து செல்ல வேண்டும்.
போக்குவரத்துக்கும் செலவு செய்ய வேண்டும். இவை பெரும் அநியாயமாகும். எனக்கு கணவர்
இல்லை. நான் கொழும்பில் ஒரு பங்களாவில் வேலை செய்தே வாழ்கின்றேன். கொழும்பிற்கு
வெளியில் சென்றால் நான் எப்படி தொழில் செய்வது?”
என கேட்டார்.
புளூமென்டல் 27வது தோட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் தாய் தனது அனுபவத்தை பின்வருமாறு
விளக்கினார்: “வீடு
கொடுப்பதாக கூறினாலும் வீடுகள் எங்கே கட்டப்பட்டுள்ளன? நான் வீடமைப்பு அதிகார
சபைக்குச் சென்றேன். அரசு கொழும்பு நகரை அபிவிருத்தி செய்கின்றது, வீடுகள்
தகர்க்கப்படுவது நிச்சயம் என அங்குள்ள ஒரு அதிகாரி கூறினார். நான் 20 இலட்சம் செலவு
செய்து வீடு கட்டினேன், எனது பணத்துக்கு என்ன நடக்கும் என நான் கேட்டேன். அவர்
அதற்குப் பதில் சொல்லாமல், 25 இலட்சம் இருந்தால் ஒரு வீட்டை விலைக்கு வாங்கலாம் என
கூறினார். இதுதான் அரசாங்கத்தின் கொள்கை. ஏழைகளுக்கு வீட்டுரிமை கிடையாது.
“கல்வியைப்
பற்றி பேசி பிரயோசனம் இல்லை. புனித அந்தோனியார் மகளிர் கல்லூரியில் எனது மகள்
படிக்கின்றாள். பாடசாலையில் ஆசிரியர்கள் இல்லை. கல்வி திணைக்களமும் ஆசிரியர்களை
கொடுக்க முடியாது என கூறிவிட்டது. அம்மா உங்களுக்கு தெரிந்த ஒரு பாராளுமன்ற
உறுப்பினர் இருந்தால் பாடசாலைக்கு ஆசிரியர்களை கேட்டுத் தாருங்கள் என ஒரு ஆசிரியர்
என்னிடம் கூறினார். நாங்கள் ஒரு பிள்ளைக்கு 150 ரூபா படி சேகரித்து தொண்டர்
ஆசிரியர்கள் மூலமாக படிப்பிக்கின்றோம். அப்படி இல்லையெனில் தாய்மார் நாங்களே
கற்பிக்கின்றோம். இதுதான் நாட்டு நிலைமை.
“இராணுவம்
பொலிஸ் கண்ணீர் புகையுடன் அரசாங்கம் வீடுகளை உடைப்பதை முன்னெடுக்கும் என்பது
மக்களுக்குத் தெரிந்ததே. தொழிலாள வர்க்கம் வீட்டுரிமையை பாதுகாப்பதற்கான
போராட்டத்திற்கு முன் வர வேண்டும். சோசலிச வேலைத் திட்டம் பற்றி ஆழமான
புரிந்துணர்வு இல்லை. ஆனால் படிப்பதற்கு விரும்புகிறேன்”
என அவர் மேலும் கூறினார்.
மஹிந்த
இராஜபக்ஷ அரசாங்கம், திறந்த பொருளாதார வேலைத் திட்டத்தின் கீழ் பெரும்
வர்த்தகர்களின் இலாபமீட்டும் குறிக்கோளுக்காக கொழும்பு நகரை ஒதுக்கிக் கொடுக்கத்
தயாராகின்றது. யூ.என்.பீ.யும் ஜே.வி.பீ.யும் திறந்த பொருளாதாரத்தை ஆதரிக்கின்றன.
ரெட்பானா தோட்டத்தின் கிராம அபிவிருத்தி சங்கம் கூறுவது போல், வெறும்
பிரச்சாரத்தின் மூலம் அரசாங்கத்தின் கொள்கைக்கு சவால் விடுக்க முடியாது.
2010ல்
இருந்தே அரசாங்கத்தின் வீடுகளை உடைக்கும் தாக்குதலுக்கு எதிராக சோ.ச.க. மட்டுமே
இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்த போராட்டம் வீட்டுரிமையை
பாதுகாப்பதற்கான சரியான வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதோடு வெறுமனே
தேர்தல் காலத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை.
கொழும்பு நகருக்குள் வீடுகளை அபகரிக்கும் நடவடிக்கை, அரசாங்கம் தொழிலாளர்கள்,
இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள தாக்குதல்களின்
பாகமாகும். வாழ்க்கைச் செலவு வானளாவ உயர்கின்ற நிலையிலேயே தொழிலாளர்களின் சம்பள
அதிகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இலவச கல்வி உரிமை அபகரிக்கப்பட்டு வருகின்ற அதே
வேளை, மாணவர்கள் கடுமையான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். விவசாயிகள் தமது உற்பத்தியை
விற்பனை செய்துகொள்ள முடியமல் இருப்பதோடு தண்ணீர் பற்றாக்குறையாலும் வாடுகின்றனர்.
தொழிலாள
வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்பாமல் வீட்டுரிமையை அல்லது
மக்கள் எதிர்கொள்ளும் ஏனைய சவால்களை வெற்றிகொள்ள முடியாது. இந்த அடிப்படையில்,
தொழிலாள வர்க்கம் அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் தொழிலாளர்களதும்
விவசாயிகளதும் அரசாங்கமொன்றை கட்டியெழுப்ப போராட வேண்டும். வீட்டுரிமையை காக்கும்
குழுவை கொழும்பு நகரத்துக்குள் கட்டியெழுப்புவதற்கு சோ.ச.க. தலைமை வகிக்கும்.
சோ.ச.க.யுடன் இந்த போராட்டத்தை முன்னெடுக்க ஒன்றுபடுமாறு தங்களுக்கு அழைப்பு
விடுக்கின்றோம். |