World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: பொது மக்களுக்கு எதிராக பயங்கரவாத சட்டத்தைப் பயன்படுத்தப் போவதாக இராணுவம் எச்சரிக்கின்றது

By K. Ratnayake
8 September 2011

Back to screen version

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆரச்சி, பயங்கரவாத தடைச் சட்டத்தை பொது மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்போவதாக அண்மையில் தெரிவித்தமை, தொழிலாள வர்க்கத்துக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கையாகும். 

பாதுகாப்பு படை மற்றும் பொலிஸ் பிரிவு அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்ட நபர்களால் மேற்கொள்ளப்பட்டதாக ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்தும் கிறீஸ் பூதங்கள் பற்றிய ஆத்திரமூட்டல் சம்பவங்களைப் பயன்படுத்திக்கொண்டு, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒரு புதிய சுற்று ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையிலேயே இராணுவத்திடம் இருந்து இந்த கருத்து வெளிப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 5 அன்று, பி.பீ.சி. சந்தேஷய (செய்தி) நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த பிரிகேடியர் ஹப்புஆராச்சி, யாழ்ப்பாணத்தில் கூட்டுப் படை மற்றும் பொலிஸ் முகாம் மீது தாக்குதல் தொடுக்க வந்த 120க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். பொது மக்கள் இராணுவ முகாமுக்கு அல்லது பொலிஸ் மீது தாக்குதல் தொடுப்பது பிழையான நடவடிக்கை. அவ்வாறு செய்பவர்கள் பயங்கரவாதிகள். அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நாம் நடவடிக்கை எடுப்போம், என பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மைக்கு மாறாகப் பேசிய பிரிகேடியர் ஹப்புஆராச்சி, யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை கிராமத்துக்குள் நுழைந்த இரு மர்ம மனிதர்களுக்கு இராணுவ பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாக சந்தேகப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கிராமவாசிகள் மீது இராணுவமும் பொலிசும் தாக்குதல் தொடுத்த சம்பவத்தை மூடி மறைத்தார். மர்ம மனிதர்கள் கிறீஸ் பூதங்களே என சந்தேகப்பட்டு விரட்டிச் செல்லும்போது அவர்கள் இராணுவ முகாமுக்குள் நுழைந்ததாக கிராமவாசிகள் தெரிவித்தனர். முகாமை அண்டிய வீதியை மறித்து நின்ற மக்களின் சந்தேகத்தைப் பற்றி விசாரித்துப் பார்ப்பதற்கு பதிலாக, அவர்களை அடித்து விரட்டிய இராணுவம், யுத்த காலத்தில் செய்தது போல், நடு இரவில் கிராமத்தை சுற்றிவளைத்து ஆண்களை இழுத்துச் சென்று, அவர்களது கை கால்களை உடைத்து, 22 பேருக்கு காயங்களை ஏற்படுத்தி 120 பேர் வரை கைது செய்தது. 

யாழ்ப்பானம் கோண்டாவில், ஆலங்கடை, கரவெட்டி மற்றும் பொலிகண்டி போன்ற பிரதேசங்களிலும் கிறீஸ் பூதங்கள் சம்பந்தமான சம்பவங்கள் நடந்துள்ளதோடு, இராணுவம் மக்களை அச்சுறுத்துவது மற்றும் கைது செய்வதன் மூலமே இதற்குப் பிரதிபலித்தது. யாழ்ப்பாணம் பூராவும் பதட்ட நிலைமை பரவியிருந்தாலும், வியாழக் கிழமை (செப்டெம்பர் 1) நான் யாழ்ப்பாணத்துக்குச் சென்றேன், அங்கு எந்தப் பீதியும் இல்லை என ஹப்புஆராச்சி கூறினார்.

சில இடங்களில் காணப்பட்ட பீதியை இராணுவத்தினரும் பொலிசாரும் அகற்றியுள்ளனர் என அவர் தெரிவித்தார். பீதியடைந்துள்ள மாணவிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக அவர்களது தங்குமிடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் சிலர் மீது கடந்த சனிக்கிழமை படையினர் தாக்குதல் நடத்தியமை, இராணுவமும் பொலிசும் யாழ்ப்பாணவாசிகளின் பீதியை எவ்வாறு குறைக்கின்றனர் என்பதற்கு ஒரு புதிய உதாரணமாகும்.

நாடு பூராவும் ஆகஸ்ட் ஆரம்பத்தில் இருந்தே பரவிச் சென்ற கிறீஸ் பூதங்கள் பற்றிய அச்சம், அவற்றி பாதுகாப்பு படைகளின் பகுதியினர் அல்லது அவர்களோது செயற்படும் நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்கள் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தென் பிரதேசத்தில் முதலில் தோன்றியிருந்தாலும், பின்னர் ஆத்திரமூட்டம் வகையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் மற்றும் புத்தளம் மாவட்டத்திலுமே விரிவாக நடந்தன.

தம்மைப் பிடிக்க முடியாதவாறு கிறீஸ் பூசிக்கொண்டுள்ள குண்டர்கள், முகத்தை மூடி அல்லது மூடாமல் இந்தப் பிரதேசங்களில் புகுந்ததோடு அவர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மர்மான மற்றும் உருமறைந்த கெடுதியான பூதங்கள் பற்றி கடந்த காலத்தில் இருந்து நிலவுகின்ற மூட நம்பிக்கை மற்றும் கதைகளின் படியே அவர்களுக்கு கிறீஸ் பூதங்கள் என்ற பெயர் வந்தது. மக்கள் அறிந்த ஒரே வேறுபாடு, இந்த கிறீஸ் பூதங்கள் மனிதர்களே அன்றி பூதங்கள் அல்ல என்பதே.

ஆகாஸ்ட் 14 அன்று, கிழக்கில் கின்னியா பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் இத்தகைய குண்டர்கள் இருவரை விரட்டிச் சென்றதோடு கடற்படை முகாமில் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினர். ஆயிரக்கணக்கான மக்கள் கடற்படை முகாமைச் சுற்றி ஆர்ப்பாட்டம் செய்த போது, கடற்படையினர் அவர்களை விரட்டுவதற்காக துப்பாக்கிப் பிரயோகம் செய்து இருவரை காயப்படுத்தியதோடு 24 பேரை கைது செய்தனர். அடுத்த நாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்த பின்னரே அங்கிருந்து விலகிச் சென்றனர்.

ஆகஸ்ட் 12 அன்று, கிழக்கில் பொத்துவில் பிரதேசத்தில் கிறீஸ் பூதங்களை பாதுகாப்பதாக கூறி பொலிஸ் நிலையத்தைச் சுற்றிவளைத்து முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த வேளை, பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எம். பௌஜுட் என்ற ஒருவர் கொல்லப்பட்டதோடு பிரதேசத்தில் 12 மணித்தியாலம் ஊரடங்கு சட்டம் பிரப்பிக்கப்பட்டிருந்தது.

புத்தளத்தில் இதே போன்ற சம்பவத்தால் ஆகஸ்ட் 21 அன்று பொலிசுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் நடந்த மோதலில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார். பொலிசும் இராணுவமும் இப்போது சந்தேக நபர்களை கைது செய்து ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளன.

மக்களுக்கு சீற்றமூட்ட தூண்டிவிடப்பட்ட ஆத்திரமூட்டலை, இராணுவத்தையும் பொலிசையும் பயன்படுத்துவதை உக்கிரமாக்குவதற்கே அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் பயன்படுத்திக்கொண்டுள்ளன. இப்போது வடக்கிலும் கிழக்கிலும் ஆத்திரமூட்டல்கள் நடந்த இடங்களிலும் ஏனைய இடங்களிலும் இராணுவ மற்றும் அதிரடிப்படை காவல் நிரலையங்களும் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய பீதியை பரப்பியதன் பின்னர், தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய மலையகப் பிரேசத்திலும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஆயுதங்களுடன் நிலைகொண்டுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சரவை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் ஆகஸ்ட் 9 அன்று ஹட்டனில் நடந்த கூட்டத்தில் விசேட அதிரடிப் படையினரை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

வடக்கு மற்றும் கிழக்கில் 30 ஆண்டுகால யுத்தத்தை, பெரும் வல்லரசுகளின் ஆசீர்வாதத்துடன் கொடூரமான மட்டத்துக்கு உயர்த்தி, புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்த அரசாங்கம், இராணுவ ஆக்கிரமிப்பை மேலும் உக்கிரமாக்கி சிவில் ஆட்சியை அற்பமானதாக்கியுள்ளது. இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராக எழும் எதிர்ப்பு வெடித்துச் சிதறும் என அரசாங்கமும் இராணுவமும் பீதியடைந்துள்ளன. நீண்ட காலமாக வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்கள் எழுச்சி பெற்று வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பிரதேசங்களில் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் ஓன்று ஏற்படுமோ என்ற அவர்களது பீதி உக்கிரமடைந்துள்ளது.

எவ்வாறெனினும், கிறீஸ் பூதங்கள் என்ற பெயரில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆத்திரமூட்டல், இராணுவம் மற்றும் பொலிஸ் பற்றி மக்கள் மத்தியில் காணப்படும் நம்பிக்கையீனமும் எதிர்ப்பும் மேலும் உக்கிரமடைவதற்கே வழிவகுத்தது. கொழும்பு ஊடக மற்றும் அரசியல் ஸ்தாபனத்தின் யூ.என்.பீ. மற்றும் ஜே.வி.பி. உட்பட கட்சிகளும் அது பற்றிய கடும் கவலையை வெளிப்படுத்தின.

ஐலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு, பொத்துவில் மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் பற்றி குறிப்பிட்டு, ஆத்திரமூட்டல் இடம்பெறவில்லையெனில், மக்களுக்கு எதிர்ப்பில் இறங்கி பொலிஸ் மீது தாக்குதல் தொடுக்குமளவுக்கு தைரியம் வராது, என தெரிவித்துள்ளது. மறுபக்கம், எந்த காரணத்துக்காவும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் சட்டத்தை கையில் எடுப்பதற்கு எவறுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று ஐலன்ட் பத்திகை எடுத்த எடுப்பிலேயே தெரிவித்துள்ளது.

பொலிஸ் அரசை பலப்படுத்தி வருகின்ற அரசாங்கம், எந்த வகையிலும் இராணுவத்தின் மற்றும் பொலிஸின் அதிகாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதற்கு இடமளிக்கத் தயாரில்லை. இராணுவ பேச்சாளரான பிரிகேடியர், கிழக்கு மற்றும் வடக்கிலும் மக்கள் எதிர்ப்பு எழுந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்புச் செலயாளர் கோடாபய இராஜபக்ஷ விடுத்த அச்சுறுத்தலையே  விடுத்துள்ளார்.

முஸ்லிம் மத தலைவர்களுடன் நடந்த கூட்டமொன்றில் பேசிய பாதுகாப்புச் செயலாளர், இராணுவ முகாமை சுற்றி வளைப்பது மற்றும் இராணுவத்தின் மீது தாக்குதல் தொடுப்பது பயங்கரவாத நடவடிக்கையாகும். 30 ஆண்டுகால கொடூர யுத்தத்துக்கு முகங்கொடுத்த எமது படைகளுக்கு எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுக்க முடியும். அதனால் (பாதுகாப்ப) படைகளுடன் கின்டல் செய்யத் தயாராக வேண்டாம் என அச்சுறுத்தும் வகையில் குறிப்பிட்டார்.

அராசங்கத்தினதும் இராணுவத்தினதும் எச்சரிக்கையை தொழிலாள வர்க்கம் கடுமையானதாக நோக்க வேண்டும். உலக நெருக்கடியால் உக்கிரமடைந்துள்ள தமது நெருக்கடியை மக்கள் மீது சுமத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை நடைமுறைப்படுத்தியவாறே, அரசாங்கம் எந்தவொரு தொழிலாளர் பகுதியினரதும் அல்லது ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களினதும் போராட்டத்தையும் பயங்கரவாத நடவடிக்கையாக முத்திரை குத்தி நசுக்குவதற்கு தயாராகின்றது. தொழிலாள வர்க்கம் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமைத்துவம் கொடுத்து, தமது சுயாதீன சோசலிச அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்புவதற்கும், தொழிலாளர்களதும் விவசாயிகளதும் ஆரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கும் போராடும் ஒரு முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே ஜனநாயக உரிமைகளையும் வாழ்க்கை நிலைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.