World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Labor Day 2011: The failure of capitalism and the Obama administration

தொழிலாளர் தினம் 2011: முதலாளித்துவத்தின் தோல்வியும், ஒபாமா நிர்வாகமும்

Socialist Equality Party
5 September 2011

Back to screen version

2011ஆம் ஆண்டு தொழிலாளர் தினத்தில், அமெரிக்க தொழிலாளர் வர்க்கம் ஒரு சமூக பேரழிவை முகங்கொடுக்கிறது.

சுமார் 25 மில்லியன் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் அல்லது குறைவூதிய வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் கூர்மையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. தொழில் வழங்குனர்கள், மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்ற நலன்களை வெட்டி வருகின்றனர் அல்லது தவிர்த்து வருகின்றனர். பத்து மில்லியன் கணக்கானவர்கள் எதைச் சார்ந்திருக்கிறார்களோ அந்த கல்வி, Medicare, Medicaid போன்ற மருத்துவ உதவி, சமூக பாதுகாப்பு போன்ற பொதுச்சமூக சேவைகள் ஆகியவை பாரிய வரவு-செலவு வெட்டுக்களுக்கு இலக்காக்கப்பட்டுள்ளன.

பொருளாதார மீட்சி என்ற பேச்சு, ஒரு பொய் என்பது மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களால் உணரப்பட்டு வருகிறது. பெருநிறுவன நிர்வாகிகளின் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஊகவணிகர்களின் செல்வங்களைப் பாதுகாக்க, வங்கிகளிடம் ட்ரில்லியன் கணக்கான தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மிகப் பெரும்பான்மை மக்கள் முகங்கொடுத்து வரும் பொருளாதார நிலைமை மட்டும் மேலும்மேலும் மோசமடைந்து வருகிறது. தற்போதைய உலக நெருக்கடி, பெருமந்த காலத்திற்குப் பின்னால் ஏற்பட்டிருக்கும் மிக ஆழமான நெருக்கடியாக உள்ளது

இப்போதைய நிலைமைக்கும், 1930களுக்கும் இடையில் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. 1930களில் எழுந்த சமூக எழுச்சி நிலைமைகளின்கீழ், அமெரிக்காவிலிருந்த ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு, சமூக சீர்திருத்த வேலைதிட்டத்தை முன்னெடுக்க நிர்பந்திக்கப்பட்டது. வேலைகளை உருவாக்குவதையும், அவற்றோடு சேர்ந்து சமூக பாதுகாப்பையும் அறிமுகப்படுத்துத் முக்கியமான திட்டங்களை மேற்பார்வை  செய்வதையும்  மத்திய அரசு ஒழுங்கமைத்தது.    

ஆனால் இந்தவிதமான எதையும் இன்று முன்வைக்க முடியாதுள்ளது. அதற்கு மாறாக, இந்த பொருளாதார நெருக்கடியானது, ஒபாமா நிர்வாக தலைமையின்கீழ், அத்தகைய முன்னைய வெற்றிகளை  திருப்பியெடுக்க ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ உதவி, சுகாதாரம், உணவுமுத்திரைகள், சமூக பாதுகாப்பு என மத்திய அரசின் செலவுகளிலிருந்து எவ்வாறு பல ட்ரில்லியன் டாலர்களைக் குறைப்பதென்பதில் ஜனநாயக கட்சியினரும், குடியரசு கட்சியினரும் அவர்களின் விவாதத்தை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய வேலைவாய்ப்பின்மையால் ஏற்பட்டிருக்கும் சமூக தேவையைப் பூர்த்தி செய்ய, பணமில்லை என்பதே அனைத்து பெருவியாபார அரசியல்வாதிகளின் கொள்கைவிளக்கமாக உள்ளது.   

பணமில்லை" என்ற வாதங்களே ஒரு பொய் தான் என்பதையும் ஓர் உண்மை எடுத்துக்காட்டுகிறது. அதாவது பெரும் பெருநிறுவனங்களும், வங்கிகளும் பணக்குவியலை வைத்திருக்கின்றன. தற்போது இது $2 ட்ரில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில, உள்ளாட்சி அரசுகளின் ஒட்டுமொத்த பற்றாக்குறையையும் ஒரேயிரவில் தீர்ப்பதற்கு இந்த தொகையே போதுமானதாகும். அதுமட்டுமின்றி அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு வேலைவாய்ப்பற்ற தொழிலாளியையும் ஒரு நாகரீகமான சம்பளம் மற்றும் நலன்களோடு வேலைக்கு அமர்த்தவும் இந்த பணம் போதுமானதாகும்.

நிதியியல் சந்தைகளில் ஊகவணிகத்தில் ஈடுபடுவது மிகவும் இலாபகரமானதென்பதால், புதிய உற்பத்தியில் முதலீடு செய்வது அல்லது புதிய தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதை மறுத்து, முதலாளிகள் தற்போது ஒரு முதலீட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களை நீண்டகாலம் வேலைவாய்ப்பற்ற அழுத்தத்தின்கீழ் வைத்திருப்பதென்பது, முதலாளிகளுக்கு கூலிகளை, நலன்களை மற்றும் வேலையிட நிலைமைகளைக் குறைக்க உதவுகின்றது

ஒபாமாவும் குடியரசு கட்சியினரும் தனியார்துறை மட்டுமே வேலைகளை உருவாக்க முடியும் என்று ஒப்புக் கொள்கின்றனர். அதனால் வரிவெட்டுகள், நெறிமுறை தளர்த்துதல் மற்றும் பெருநிறுவனங்களுக்கேற்ற ஏனைய நலன்களைக் கொண்ட ஒரே கொள்கையை அவர்கள் வேறுபட்ட வடிவத்தில் அளிக்கின்றனர்.

சமூக எதிர்புரட்சி வேலைத்திட்டத்தின்மீது ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் உலகளாவிய உடன்படிக்கையானது, 1) அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால வீழ்ச்சியின் மற்றும் 2) அரசியலமைப்புமுறையைக் கட்டுப்படுத்தும் ஒரு நிதியியல் பிரபுத்துவத்தின் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்தமாக சமூகத்தின்மீது அது ஒட்டுண்ணித்தனமான உறவைக் கொண்டிருப்பதன் விளைபொருளாகும்.

இப்போது நாம் எதிர்கொண்டிருக்கும் இந்த பொருளாதார பேரழிவை எதிர்த்து போராட, தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரு வேலைத்திட்டம் அவசியாகும். சோசலிச சமத்துவ கட்சி வலியுறுத்துவது இதுதான்: அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வு கிடையாது. இது முதலாளித்துவ அமைப்புமுறையையும், பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் இலாப நலன்களையும் தாக்குவதில்லை.

சோசலிச சமத்துவ கட்சி பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றது:

பல ட்ரில்லியன் டாலர் உள்ளடங்கிய பொது வேலைகளை உருவாக்கும் திட்டம்! ஒரு நாகரீகமான சம்பளத்துடனான வேலையென்பது சமூக உரிமையாகும்!

உயர் சம்பளத்துடன், ஆக்கப்பூர்வமான வேலைகளில் 20 மில்லியன் மக்களை நியமிக்கக்கூடிய வேலைகளுக்கான ஓர் உடனடி அரசு வேலைத்திட்டத்திற்கு நாம் அழைப்புவிடுக்கிறோம். இது பொதுவசதிகள், நெடுஞ்சாலைகள், மக்கள் போக்குவரத்து, நீர் மற்றும் கழிவுநீர் வசதிமுறைகள், மருத்துவமனைகள் மற்றும் வைத்தியசாலைகள் என சீரழிந்திருக்கும் உட்கட்டமைப்பை சீரமைத்தல், புயல், பூகம்பம் மற்றும் ஏனைய இயற்கை சீரழிவுகளினால் ஏற்பட்ட சேதங்களைச் சீர்செய்தல், மற்றும் கல்வி, சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற தேவையான சமூக சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும்.

பணிநீக்கங்கள் மற்றும் ஆலைமூடல்களை நிறுத்துக!

தொழிலாளர் வர்க்க வீட்டு உரிமையாளர்களுக்கு அடமான கடன்தவணைகளின்மீது ஓர் ஆண்டிற்கு தவணைகளை இரத்து செய்ய சோசலிச சமத்துவ கட்சி அழைப்புவிடுக்கிறது. அனைத்து வீட்டைவிட்டு வெளியேற்றுதல் மற்றும் ஏலத்திற்குவிடுதல் நிறுத்தப்பட வேண்டும். வீட்டு உரிமையாளர்கள் தங்களின் அடமானதொகைக்கு அவர்களுக்கு கிடைக்காத ஆனால் வங்கிகளுக்கு கிடைப்பதைப் போன்ற குறைந்த வட்டி விகிதத்தில் மீண்டும் நிதியை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். அடமானக்கடன்களின் கடன் ஆரம்பத்தொகையை வீட்டு விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கேற்ப கூடுதலாக குறைக்கப்பட வேண்டும்.       

வரவு-செலவு திட்டத்திலுள்ள அனைத்து வெட்டுக்களையும் இரத்து செய்க! அரசுத்துறை சேவைகளை விரிவாக்குக!

கடந்த நான்கு ஆண்டுகளில் நீக்கப்பட்ட அனைத்து மாநில மற்றும் உள்ளாட்சி அரசு தொழிலாளர்களும் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும்; அத்தியாவசிய திட்டங்கள் மற்றும் சேவைகளின் வெட்டுக்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும். வகுப்பின் அளவைக் குறைக்க நூறு ஆயிரக்கணக்கான புதிய அரசு பாடசாலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, வருமானம் மற்றும் வர்க்க சார்பின்றி அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு நாகரீகமான கல்வி அளிக்க உத்தரவாதமளிக்கப்பட வேண்டும். ஒரு சமூக உரிமையாக, தரமான சுகாதார நலனுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

இந்த நெருக்கடிக்கு முதலாளிகள் விலை கொடுக்கட்டும்!

இதுபோன்றவொரு உடனடி வேலைதிட்டத்தை நடைமுறைப்படுத்த போதியளவிற்கு ஆதாரவளங்கள் உள்ளன, ஆனால் அவை பெரும்-பணக்காரர்களிடத்தில் ஏகபோகமாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலுள்ள தனிப்பட்ட 400 மிகப்பெரிய பணக்காரர்கள், அவர்களின் செல்வவளம் 2009இல் $3.6 ட்ரில்லியனுக்கும் அதிகமாக பெருகுவதைக் கண்டார்கள். அதேவேளை பெரும்பான்மை அமெரிக்க மக்கள், அவர்களின் நிதி ஆதாரங்கள் விரயமாவதைக் கண்டார்கள். அமெரிக்க-மக்கள்தொகையில் மேல்மட்டத்திலுள்ள ஒரு சதவீதத்தினரின் வருவாய், 1970இல் தேசிய வருமானத்தில் 9 சதவீதமாக இருந்ததிலிருந்து, 2007இல் 24 சதவீதமாக ஆனது.       

மொத்த வருவாய் $500,000க்கு மேலிருப்பவர்களுக்கு 90 சதவீத வரிவிதிப்போடு, மில்லினியர்கள் மற்றும் பில்லினியர்களுக்கு செல்வசெழிப்பு வரி ஆகியவை உட்பட, சமூக சமத்துவத்தை எட்ட உடனடி முறைமைகள் எடுத்தாளப்பட்டாக வேண்டும்.

ஒரு சோசலிச வேலைதிட்டம்

பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த அரசியலமைப்புமுறையின்மீது ஓர் இரும்புப்பிடியைக் கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்க சக்தியின் மீதொரு நேரடி தாக்குதல் இல்லாமல், மிகமிக குறைந்தபட்ச கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதும் கூட சாத்தியமில்லை

வங்கிகளும், மாபெரும் பெருநிறுவனங்களும் தனியார் கட்டுப்பாட்டில் நீடிக்கும் வரையில், ஒரேயொரு சமூக உரிமையையும் கூட பெற முடியாது. இத்தகைய அமைப்புகளை அரசுடைமையாக்கி தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் தேசியமயமாக்குவதே, தனியார் இலாபத்தை அல்லாமல் சமூக தேவையை நிறைவு செய்வதற்கான பொருளாதார திட்டமிடல் மற்றும் செல்வசெழிப்பை பகிர்ந்தளிக்கும் ஒரு வேலைதிட்டத்தின் அடிப்படை முன்நிபந்தனையாக உள்ளது. இது தான், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், பொருளாதாரத்தின் சோசலிச மாற்றத்திற்கு அவசியமான அடித்தளமாகும்.    

இந்த வேலைத்திட்டத்திற்காக போராட, தொழிற்சங்கங்களின் மற்றும் ஜனநாயக கட்சியின் அரசியல் கட்டுப்பாட்டைத் தக்கவைக்க கோரும் அனைத்து அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்தும், தொழிலாளர் வர்க்கம் உடைத்துக் கொள்ள வேண்டும்.  

UAW தலைவர் பாப் கிங் மற்றும் AFL-CIO தலைவர் ரிச்சர்டு ட்ரும்கா இருவரும் ஜனாதிபதி ஒபாமாவோடு தொழிலாளர் தின மேடையில் இணைந்துகொண்ட இடமான டெட்ராய்டில், இந்த பிற்போக்குத்தனமான வேலைத்திட்டத்தை எடுத்துக்காட்டுகிறது. புஷ் நிர்வாகத்தின் அந்நியநாடுகள் மீதான ஏகாதிபத்திய யுத்த திட்டங்களையும் மற்றும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் தொடர்ந்திருக்கும் ஒபாமா, அவற்றை தீவிரப்படுத்தியும் கூட உள்ளார். வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பை விரிவாக்கிய அவர், வாகனத்துறை தொழிலாளர்களின் கூலிகளில் 50 சதவீத வெட்டைத் திணித்தார். இருந்தபோதினும், இந்த வலதுசாரி பெருநிறுவன ஆதரவு ஜனாதிபதியை மீண்டும் தேர்ந்தெடுப்பதில் ஆதரவளிக்க தொழிற்சங்கங்கள் அவற்றின் முழு ஆதாரங்களையும் ஒன்றுதிரட்ட தயாராகி வருகின்றன.

ஒரு புதிய அரசியல் தலைமை மற்றும் முன்னோக்கைக் கட்டியெழுப்புவதே அவசர பணியாக உள்ளது. இந்த இருகட்சி முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை அரசியல்ரீதியாக ஒன்றுதிரட்டுவதற்கும், மற்றும் தொழில்துறை-சாராத சுயாதீனமான போராட்டத்தையும் சோசலிச சமத்துவ கட்சி முன்னெடுத்து வருகிறது.