World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

“Friends of Libya” meet in Paris for imperialist carve-up

லிபியாவின் நண்பர்கள் ஏகாதிபத்தியத் துண்டாடலுக்காகப் பாரிசில் கூடுகின்றனர்

By Bill Van Auken
2 September 2011

Back to screen version

வியாழயன்றுலிபியாவின் நண்பர்கள் பாரிசில் நடத்திய மாநாடு, எண்ணெய் வள ஆபிரிக்க நாட்டில் ஏகாதிபத்திய துண்டாடல் நடத்துவதற்கான ஆரம்பத்திற்கு அடையாளம் காட்டின.

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமெரோனும் இணைந்து தலைமை தாங்கிய இம்மாநாட்டில் நேட்டோக் குடையின் கீழ் தாக்குதல் சக்தி அளித்த நாடுகளும் பங்கு பெற்றன; இவைகள் ஐ.நா. தீர்மானத்தை ஒரு மறைப்பாக பயன்படுத்தி கேர்னல் முயம்மர் கடாபியின் ஆட்சியை, ஆறு மாதக் காலஆட்சி மாற்றத்திற்கான போரை நடத்தி வீழ்த்த முயல்கின்றன.

இவற்றில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, மற்றும் கட்டார் ஆகியவை அடங்கியிருந்தன. அவை அனைத்தும் லிபியாவின் உள்கட்டுமானத்தின் பெரும் பகுதியை அழித்து ஆயிரக்கணக்கான உயிர்களையும் பறித்த வகையில் தங்கள் குண்டுகள், ஏவுகணைகள் ஆகியவற்றை முதலீடு செய்ததற்கான மிக அதிக ஆதாயத்தை அடைவதற்காகப் போட்டியிடுகின்றன.

இக்கூட்டத்தில் ஜேர்மனி, ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவையும் கலந்து கொள்ளும்; இவைகள் காலனித்துவ போருக்கு சட்டப்பூர்வ மறைப்பாகப் பயன்படுத்தப்பட்ட ஐ.நா.பாதுகாப்பு சபைத் தீர்மானத்தில் வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டன. இந்நாடுகள் அனைத்தும் லிபியாவில் அவற்றின் கணிசமான முதலீடுகள் மேற்கத்தைய சக்திகளின் தலையீட்டால் இழக்கப்பட்டுவிடும் என்று அஞ்சுகின்றன.

மொத்தத்தில், இம்மாநாட்டில் 31 அரச தலைவர்கள், 11 வெளியுறவு மந்திரிகள் மற்றும் ஐ.நா., நேட்டோ, அரபு லீக் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் NTC யின் முக்கிய நபர்களான முஸ்தபா அப்துல் ஜலில் (பெப்ருவரி வரை கடாபியின் நீதித்துறை மந்திரியாக இருந்தவர்) மற்றும் மஹ்மூத் ஜீப்ரில் (ஒரு தடையற்றச் சந்தைச் சார்பு பொருளாதார வல்லுனர், கடாபி ஆட்சியில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு முக்கியமாக இருந்தவர்) ஆகியோர்கள் அடங்குவர்.

மாநாட்டிற்கு முன்னதாக, ஜனாதிபதி சார்க்கோசி இக்கூட்டம் பற்றி உயர் சொற்றொடர்களை பயன்படுத்தி, பாரிசில் கூடியிருந்த பிரெஞ்சு தூதர்களிடம்இது சர்வாதிகாரப் பக்கத்தை திருப்பி, புதிய ஜனநாயக லிபியாவுடனான ஒத்துழைப்பு சகாப்தத்தைத் திறக்கும் என்று கூறினார்.

ஆனால் சார்க்கோசி பேசுகையில், போர் இன்னும் லிபியாவில் தொடர்ந்துவருகிறது; நேட்டோப் போர் விமானங்கள் கடாபி விசுவாசிகளின் வலுவான கோட்டையான கடலோர நகரான சிர்ட்டே மற்றும் மேற்கிலுள்ள பாலைவன நகரான பனி வலிட்டிலும் (அதுவும் அகற்றப்பட்ட ஆட்சியின் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது) குண்டுத் தாக்குதல்களை நடத்துகின்றன. நேட்டோ தலைமையிலான எழுச்சியாளர்கள் இரு நகரங்களின் மீதான முற்றுகையை தொடர்கையில் NTC செப்டம்பர் 10ம் திகதி வரை சிர்ட்டே மக்களுக்கு சரண்டையமாறும் இல்லாவிடில் முழு இராணுவத் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்ற இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது. நேட்டோவின் மூலோபாயம் நகரத்தைப் பட்டினி போட்டு சரணடைய வைக்க வேண்டும் என்று இருக்கலாம்.

இதற்கிடையில் புதியஜனநாயக லிபியாவின் பாதுகாவலர்கள் நடத்தும் படுகொலைகள், கொடூரங்கள் பற்றிய தகவல்கள் பெருகி வருகின்றன; அவற்றுள் பல ஏராளமான துணை சகாரா ஆபிரிக்க குடியேறிய தொழிலாளர்களுக்கு எதிராக இயக்கப்படுகின்றன; அவர்கள் முற்றிலும் அவர்களுடைய தோல் நிறத்தின் அடிப்படையில் கொலை செய்யப்படுகின்றனர், தவறாக நடத்தப்படுகின்றனர் மற்றும் காவலில் வைக்கப்படுகின்றனர்.

நண்பர்கள் லிபியாவிற்கு உதவி கொடுப்பது பற்றி விவாதிக்க பாரிசுக்கு வரவில்லை; மாறாக கடாபி ஆட்சியின் போது சுமத்தப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கும் வெளிநாட்டு வங்கிகளிலுள்ள லிபியச் சொத்துக்களின் முடக்கத்தை அகற்றவும் கூடியுள்ளன. இந்த நடவடிக்கைகள் வட ஆபிரிக்க நாட்டில் இருந்து பணம் மற்றும் வள இருப்புக்கள் ஆகியவை வெளியே பாய்வதற்கான வடிவமைப்பைக் கொண்டவை.

உச்சிமாநாட்டன்று, பிரெஞ்சு நாளேடான லிபரேஷன் அரபு மொழியில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் நகலை வெளியிட்டது; இது பெங்காசியை தளமாகக் கொண்ட தேசிய மாற்றுக்கால குழுவின் பிரதிநிதியிடமிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது; பிரான்ஸிற்கு 35 சதவிகிதம் எண்ணெயை அதன் ஆதரவிற்கு ஈடாகத் தருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. சார்க்கோசி அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் ஐ.நா.தீர்மானம் இயற்றப்படுவதற்கு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது; மற்ற நேட்டோ நாடுகளுக்கு முன்னதாக அதாவது மேற்கத்தைய கூட்டு நாடுகள் குண்டுத் தாக்குதல் நடத்தும் முன்னரே பிரெஞ்சு வான் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஏப்ரல் 3 திகதியிடப்பட்ட இக்கடிதம் கூறுகிறது: “லண்டன் மாநாட்டில் பிரான்ஸுடன் செய்து கொண்ட எண்ணெய் உடன்பாடு இக்குழுவின் நன்றிக்கான அடையாளம் என்ற முறையில், லிபிய மக்களின் நெறியான பிரதிநிதிகள் என்னும் முறையில்,  நாங்கள் சகோதரர் மஹ்முத்தை [ஷம்மம், NTC யின் செய்தி ஊடக மந்திரி எங்கள் குழுவிற்கு முழு, நிரந்தர ஆதரவை அளித்ததற்கு ஈடாக பிரான்ஸிற்கு எங்கள் மொத்தக் கச்சா எண்ணெயில் 35 சதவிகிதத்தை ஒதுக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட அனுமதிக்கிறோம்.

இக்கடிதம், ஆயுதம் வழங்குதலை விரைவாகச் செய்யும்படியும் பிரான்ஸைக் கேட்டுக் கொள்வதுடன், கட்டார் இளவரசரின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது; அந்த பேர்சிய வளைகுடா நாடான கட்டாரானது NTC க்கும் மேற்கத்தைய சக்திகளுக்கும் இடையே இடைத்தொடர்பை ஏற்படுத்திய நாடாக விளங்குகிறது; இதன் நகல் ஒன்று அரபு லீக் தலைமைச் செயலாளர் அமர் மௌசாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. “குடிமக்களைக் காத்தல் என்பதற்காகத்தான் என்றுள்ளதும் அனைவராலும் ஏற்கப்பட்ட மனச்சாட்சியின் அடிப்படையில்தான் பிரான்ஸ் நடந்து கொள்கிறது என்னும் சார்க்கோசியின் முந்தைய அறிக்கையை மேற்கோளிட்டு, லிபரேஷன் கூறுகிறது: “எப்படி இருந்தாலும், பிரான்ஸின் எண்ணெய் நிறுவனங்கள் இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பெரிதும் பயனடையக்கூடும் என்று கூறியுள்ளது.

பிரெஞ்சு அரசாங்கமும் பிரெஞ்சு எண்ணெய்ப் பெருநிறுவனமான Total உம் இக்கடிதம் பற்றித் தங்களுக்கு ஏதும் தெரியாதெனக் கூறுகின்றன. NTC யின் பெங்காசியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இது ஒரு போலிக் கடிதம் என்று கூறியுள்ளார். AFP செய்தி நிறுவனம் இக்கடிதம் முன்னதாக லிபியாவில் பிரெஞ்சு தலையீட்டை எதிர்த்தவர்கள் இணைய தளத்தில் சுற்றறிக்கையாக விட்டுள்ள ஓர் ஆவணம் எனத் தோன்றுகிறது என்று தெரிவிக்கிறது.

கடிதத்தின் உண்மைத்தன்மை எப்படி இருந்தாலும், பிரெஞ்சு வெளியுறவு மந்திரி அலன் யூப்பே இதை எதிர்கொண்டதானது விளக்கம் தருவது போல் உள்ளது. கடிதம் பற்றித் தனக்கும் ஏதும் தெரியாது என்று கூறிய அவர், இதன் பொருளுரையில் விவாதங்களுக்கு இடம் ஏதும் இல்லை என்றார்.

இக்கடிதம் பற்றி எனக்குத் தெரியாது என்றார் அவர். “ஆனால் உத்தியோகபூர்வமாக NTC லிபியக் கட்டமைப்பு பற்றிக் கூறும்போது, அதற்கு உதவியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்று தெரிவித்திருந்தது. அது நியாயமானது, தர்க்கரீதியானது என எனக்குத் தோன்றுகிறது.”

“NTC யின் அறிக்கை ஒன்று உள்ளது; ஆனால் முறையான உடன்பாடு பற்றி எனக்குத் தெரியாது. நாங்கள் மட்டும் இல்லை. இத்தாலியும் (மற்றும்) அமெரிக்காவும் உள்ளன என்று யூப்பே சேர்த்துக் கொண்டார்.

இப்போரில் பங்கு பெற்றதற்கு லிபிய எண்ணெய் வளம் வெகுமதியாக தன் முதலீட்டிற்கு கிடைக்கும் என்பதை விளக்கிய வெளியுறவு மந்திரி கூறினார்: “லிபியாவில் இச்செயற்பாட்டிற்கு பெரும் செலவாகியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். வருங்காலத்திற்கு இதுவும் ஒரு முதலீடு போல்தான்; ஏனெனில் லிபியா ஒரு ஜனநாயக நாடு என்னும் முறையில் வளர்வது அப்பிராந்தியத்தில் உறுதிப்பாடு, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும்.”

லிபியாவின் எண்ணெய் இருப்புக்கள் ஆபிரிக்காவிலேயே அதிகமானவை; 44 பில்லியன் பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. போருக்கு முன் லிபியா நாள் ஒன்றிற்கு 1.6 மில்லியன் பீப்பாய்களை உற்பத்தி செய்துவந்தது. அதன் இரண்டாவது பெரிய சந்தையாக பிரான்ஸ் இருந்தது; இத்தாலிக்கு அடுத்தாற்போல். அதன் இறக்குமதிகளில் 15 சதவிகிதத்திற்கும் மேலாக லிபிய எண்ணெய் வயல்களில் இருந்து வந்தன.

லிபியப் போரின் கொள்கையை பிரான்ஸ் ஆக்கிரோஷமாகத் தொடர்வது ஐரோப்பிய நேட்டோ அதிகாரிகளிடையே வெளிப்படையான அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி மற்றும் பிரிட்டனின் செய்தி ஊடக விமர்சனங்கள் இத்தாலிய, பிரிட்டிஷ் எண்ணெய், வணிக நலன்களை விட ஒரு படி அதிகமாக பிரான்ஸ் பெற முற்படுகிறது, ஏனெனில் அதுதான் போரை நடத்த உந்துதலை முதலில் காட்டியது, NTC ஐ முதலில் அங்கீகரித்தது, திரிப்போலியில் அதன் தூதரகத்தை மறுபடியும் திறந்தது என்பவற்றை சுட்டிக்காட்டியுள்ளன.

பிரிட்டனின் டெலிகிராப்லிபியாவின் நண்பர்கள்மாநாட்டைப் பற்றி கூறியிருப்பது: “லிபியாவின் அரசியல், பொருளாதார வருங்காலம் ஆகியவற்றைப் பற்றிய விவாதங்களைத் தவிர, கடாபியின் முன்னாள் நண்பர்கள் மற்றும் நேட்டோ ஆதரவு பெற்ற எழுச்சியாளர்கள் ஆகியோர் ஆபிரிக்காவின் உயர்ந்த எண்ணெய் உற்பத்தி செய்யும் நாட்டின் நலன்களைப் பெறப் போட்டியிடுகின்றனர்.”

பிரெஞ்சு நிறுவனங்கள் லிபியாவிற்கு செப்டம்பர் பிற்பகுதியில் உத்தியோகபூர்வ வணிகக் குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளன. பிரிட்டன் போர் முற்றிலும் முடியும் வரை அத்தகைய குழு பற்றிய திட்டங்களை கொண்டிருக்காது; ஆனால் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் பிரிட்டன் பின்தங்கிவிடாது என்று உறுதியளித்துள்ளார்”.

இத்தாலிய நாளேடு La Stampa  இந்த வாரம் பிரான்ஸ் லிபியாவின் மீது குண்டுத் தாக்குதலில் இருந்து ஒரு பனிப்போருக்குத் தயாராகிறது, “அது இத்தாலிய நிறுவனங்கள் லிபிய எண்ணெய்த்துறையில்  மீண்டும் தங்கள் முன்னுரிமை நிலைகளைப் பெறுவதைத் தடுக்கும். போர் நடக்கும்வரை இத்தாலியின் அரச ஆதரவுடைய ENI லிபியாவில் எண்ணெய் உற்பத்தியில் 60 சதவிகிதம் வரை பொறுப்பைக் கொண்டிருந்தது என எழுதியுள்ளது.

போரில் பங்கு பெற மறுத்த ஜேர்மனி முன்னதாக மத்தியதரைக்கடல் ஒன்றியம் தொடக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்த சார்க்கோசியின் கருத்தைத் தீவிரமாக எதிர்த்திருந்தது; அத்தகைய ஒன்றியம் தெற்கு ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவை பிரெஞ்சுத் தலைமையின் கீழ் கொண்டுவரும் வடிவமைப்பை கொண்டிருந்தது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனியின் முக்கிய பங்கைச் சவால் விடும் நோக்கத்தையும் கொண்டு இருந்தது. இப்பொழுது ஜேர்மனிய ஆளும் அரசியல் அமைப்புமுறைக்குள் நேட்டோ தலையீட்டில் இருந்து ஒதுங்கியிருந்த முடிவு பற்றித் தீவிரக் குறைகூறல்கள் எழுந்துள்ளன.

மிகவும் அதிகம் இழக்கும் வாய்ப்பை ரஷ்யா, சீன நாடுகள் கொண்டுள்ளன; இவை ஐ.நா. பாதுகாப்புக் குழுத் தீர்மான வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை; ஆட்சி மாற்றத்திற்கு ஒரு போலிக்காரணம்தான் ஐ.நா. தீர்மானம் என்றும் நேட்டோவை அதைப் பயன்படுத்தியதற்குக் குறைகளும் கூறின.

NTC ஐ மாஸ்கோ அவசரம் அவசரமாக மாநாட்டிற்கு முன் அங்கீகரித்தது; இது அதன் பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்ளும் முயற்சி என்பது வெளிப்படை. ரஷ்ய வெளியுறவு அமைச்சரகம் ஒரு அறிக்கையில் தான்அனைத்து முந்தைய உடன்பாடுகள், பரஸ்பர கடமைப்பாடுகள் ஆகியவை நேர்மையாகச் செயல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளது.

 

ரஷ்யாவின் நாளேடான Kommersant  மாஸ்கோ NTC ஐ அங்கீகரிக்க முடிவெடுத்து, பாரிஸ் மாநாட்டிலும் கலந்துகொள்ளும் என்று தெரிவித்துள்ளது. “இது ரஷ்யாவின் பொருளாதார, பிற நலன்களைக் காப்பதற்காகும்….. ஏனெனில் ரஷ்யாதான் முயம்மர் கடாபியுடன் 2.1 பில்லியன் டொலர்கள் மதிப்புடைய ஆயுத ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இன்னும் அந்த அளவு மதிப்புடைய பல உடன்பாடுகளும் பின்னர் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்பொழுது அவைகள் சந்தேகத்தில் உள்ளன; புதிய அதிகாரிகளின் கீழ் லிபியாவில் ரஷ்ய எரிசக்தி நிறுவனங்களின் செயற்பாடுகளும் சந்தேகத்தில் உள்ளன.”

அங்கீகாரத்தை பெய்ஜிங் இன்னும் கொடுக்கவில்லை; ஆனால் குழுவின்கணிசமான நிலைப்பாடு மற்றும் பங்கை ஏற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு துணை வெளியுறவு மந்திரியை பாரிஸ் மாநாட்டிற்கு அனுப்பியுள்ளது. உத்தியோகப்பூர்வ People’s Daily வியாழன் அன்றுமேற்கத்தையச் சக்திகள் கடாபிக்குப் பிந்தைய லிபியாவில் மறுகட்டமைப்பு மற்றும் வணிக வாய்ப்புக்களில் நேர்மைக்குப் புறம்பான ஆதாயத்தை நாடக்கூடாது என்றும் பாரிஸ் மாநாட்டைமற்றொரு வெர்சாயி மாநாடாக [முதல் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட காலனித்துவ ஏகாதிபத்திய துண்டாடல்] மாறக்கூடாது, மேற்கத்தைய சக்திகள் தங்கள் நலன்களை போரினால் சிதைவுற்றிருக்கும் நாட்டில் பெருக்கப் போட்டியிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

இக்கட்டுரை சீனாவை லிபியாவில்நீண்டகாலமாக ஆக்கபூர்வ பங்கு கொண்டுள்ள நாடு என்று விவரித்து, 13.8 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய கிட்டத்தட்ட 50 திட்டங்களைச் செயல்படுத்தி வந்தது என்றும் 35,000 சீனத் தொழிலாளர்கள் போர் தொடங்குவதற்கு முன் அங்கிருந்தனர் என்றும் கூறியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் மேற்கத்தைய ஐரோப்பிய நட்பு நாடுகளின் மூலோபாய நோக்கங்களில் ஒன்று லிபியாவிலும் பொதுவாக ஆபிரிக்காவிலும் பெருகிவரும் சீனச் செல்வாக்கை எதிர்ப்பது என்றுதான் துல்லியமாக உள்ளது. மேலும் ரஷ்யாவின் விழைவுகளையும் ஒடுக்கப்பார்க்கின்றன; ரஷ்யா கடாபி அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுக்களில் தன் கடற்படைக்கு பெங்காசியில் ஒரு மத்தியதரைக்கடல் துறைமுகத்தை அடைவது பற்றியும் அடங்கியிருந்தது.

லிபிய நண்பர்கள் மாநாடு செப்டம்பர் 1, 1969ல் கடாபியின் சுதந்திர அதிகாரிகள் இயக்கம் மன்னர் இட்ரிசின் ஆட்சிக் கவிழ்ப்பை இராணுவத்தின் மூலம் நடத்திய 42 வது ஆண்டு நிறைவு விழாவில் நடத்தப்பட்டது.  இந்த ஆண்டு விழா பற்றிய குறிப்பு அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் மற்றும் பலரால் தங்கள் கருத்துக்களுக்கு இடையே கூறப்பட்டது. வாஷிங்டனும் மற்ற ஏகாதிபத்தி சக்திகளும் இந்த ஆண்டு விழா தினத்தை ஒரு தற்செயல் நிகழ்வு எனக் காணலாம்; ஆனால் அவர்கள் லிபியாவை மீண்டும் அரைக் காலனித்துவ நாடாக மாற்றும் முயற்சியில்தான் இப்பொழுது ஈடுபட்டுள்ளனர்; அதுவும் அமெரிக்க நேட்டோவின் நேரடி இராணுவக் கட்டுப்பாட்டில், எரிசக்திப் பெருநிறுவனங்களின் முழு ஆதிக்கத்தின் கீழ்.