World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The capitalist crisis and the conditions facing the youth

முதலாளித்துவ நெருக்கடியும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் நிலைமைகளும்

Andre Damon
31 August 2011

Back to screen version

ஒரு சமூக அமைப்பு இளைய தலைமுறைக்கு என்ன எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது என்பது தான் அதன் வரலாற்றுச் செல்தகைமை மீதான ஒரு அளவீடு ஆகும். இந்தக் கோணத்தில், புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் இளைஞர்களை எதிர்கொள்ளும் நிலைமைகள் முதலாளித்துவ அமைப்புமுறையின் மீதான குற்றப்பதிவுகளாக இருக்கின்றன.

பொருளாதாரமீட்சி என்பது வந்துவிட்டது எனக் கூறப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், வெகுஜன வேலையின்மை சிறிதும் குறைவின்றித் தொடர்கிறது, குறிப்பாக இளைஞர்களிடேயே. சர்வதேச அளவில், சரியும் வளர்ச்சி விகிதங்கள் மற்றும் உயரும் வேலையின்மை விகிதம் உண்மையான மீட்சி ஏதும் வரவில்லை என்பதைத் தெளிவாக்குகின்றன. கடும் சிக்கன நடவடிக்கைகள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானில் சுமத்தப்படுபவை, சமூகப் பேரழிவின் தன்மையை அதிகமாக்கியுள்ளன. பட்டப்படிப்பு முடிந்தபின் கௌரவமான வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்பும் நிலையில் மாணவர்கள் இல்லை.

அமெரிக்காவில், இந்த கோடையில் வேலையில் உள்ள இளைஞர்களின் சதவிகிதம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்குக் குறைந்ததாகும். இன்னும் பெருகிய முறையில் கிடைக்கக்கூடிய வேலைகளும் குறைவூதிய வகையைச் சேர்ந்தவை, உயரும் உயர்கல்விச் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலையில் இருப்பவை.

அமெரிக்காவில் மாணவர் கல்விக் கட்டணங்கள், ஏற்கனவே உலகில் அதிகமாக இருப்பவை, கடந்த 20 ஆண்டுகளில் 130 சதவிகிதம் அதிகமாகிவிட்டன. இது மிக உயர்ந்த அளவில் இளைஞர்களை கடனாளிகளாக்கி விட்டுள்ளது. கல்லூரிகளில் இருந்து மில்லியன் கணக்கானவர்கள் வெளியேறுகையில் தாங்கள் வாழ்வு முழுவதும் தாங்கள் இனிக் கடனில்தான் மூழ்கி இருப்போம் என்ற உணர்வின் சுமையுடன்தான் நீங்குகின்றனர்.

அமெரிக்காவில் 36 மாநிலங்கள் பொதுக் கல்லூரிகள், பல்கலைக்ழகங்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் நிதிகளில் 5 பில்லியன் டாலருக்கும் மேலான மொத்தத் தொகையை இந்த ஆண்டு வெட்டுக்களாக அறிவித்துள்ளன. அரிசோனா உயர் கல்வி உதவிக்கான உதவியை 22% குறைத்துள்ளது, கொலோரோடோ 20.9%, வாஷிங்டன் 23 சதவிகிதம் குறைத்துள்ளன. கலிபோர்னியாவில் பொதுப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு கல்விக் கட்டணத்தில் 1,000 டாலர் அதிகரிப்பை காண்பர்.

பொதுப் பள்ளிகள் நூற்றுக்கணக்கில் மூடப்படுகின்றன; அத்துடன் முன்னோடியில்லாத வகையில் அலையென ஆசிரியர்கள் பணிநீக்கம் நடைபெறுகிறது. 2010ல் அமெரிக்காவில் 151,000 கல்வித்துறை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். வருவிருக்கும் பள்ளி ஆண்டில், இன்னும் 227,000 ஆசிரியர்களை நீக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அமெரிக்கப் பள்ளி நிர்வாகிகள் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

இளைஞர்கள் முகங்கொடுக்கும் கொடூரமான நிலைமைகள் அமெரிக்காவிற்கு மட்டும் பிரத்தியேமாகமானதல்ல. பிரிட்டனில் பல்கலைக்கழகப் பயிற்சிக் கட்டணம் அடுத்த ஆண்டு மும்மடங்காக  3,000 பவுண்டுகளில் இருந்து 9.000 பவுண்டுகளாக உள்ளது. இது இந்த ஆண்டு விண்ணப்பதாரரின் எண்ணிக்கையை 30% உயர வகை செய்துள்ளது; ஏனெனில் மில்லியன் கணக்கான மாணவர்கள் நியாயமான, இயலக்கூடிய கல்வியைப் பெறும் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகின்றனர். வெள்ளமென பெருகும் விண்ணப்பதாரர்கள் என்பதின் பொருள், பல ஆயிரக்கணக்கானவர்கள் இடம் இல்லை என்று திரும்ப அனுப்பப்பட உள்ளதுதான்.

இளைஞர் வேலையின்மை ஐரோப்பா முழுவதும் உயர்ந்து கொண்டிருக்கிறது. பிரிட்டனில் இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 14% என்பதில் இருந்து 20% என ஆகியுள்ளது. கடந்த ஆண்டு மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகள் வெகுஜன எதிர்ப்புக்களை தூண்டிவிட்ட கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும், இளைஞர் வேலையின்மை தற்பொழுது 40, 46% என முறையே உள்ளன. முழுக் கண்டத்திற்கும் இது 20%க்கும் மேல் என்று உள்ளது.

உலகம் முழுவதும் இளைஞர்கள் இதே அவல நிலையைத்தான் எதிர்கொள்கின்றனர்: வேலைகள் இல்லை, பள்ளிகளின் இருப்புக்கள் வரண்டுபோயுள்ளன, கௌரவமான வேலை, கல்வி ஆகியவை பெருகிய முறையில் சலுகை பெற்ற சிறுபான்மைக்குத்தான் உள்ளது. இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் போர்கள், வங்கிப் பிணைஎடுப்புக்கள் இன்னும் நிதிய உயரடுக்கின் ஆடம்பரச் செல்வம் வளர என்பதற்காக சூனியப்படுத்துப்படுவதை உணர்கின்றனர்.

தொழிலாள வர்க்க இயக்கத்தின் மீழெழுச்சியின் ஒரு பகமாக இளைய தலைமுறை இதை எதிர்த்துப் போரிடும். 1938ல் முதலாளித்துவ நெருக்கடி, சமூக எழுச்சிகள் இருந்த காலத்தில் ட்ரொட்ஸ்கி எழுதினார்: “இளைஞர்களின் புதிய ஆர்வம், ஆக்கிரோஷ உணர்வு ஒன்றுதான் போராட்டத்தின் தொடக்க வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும்; இந்த வெற்றிகள்தான் பழைய தலைமுறையின் சிறந்த கூறுபாடுகளை புரட்சிப் பாதையில் மீண்டும் கொண்டு வரும்.”

இளைஞர்கள் எதிர்த்துப்போராடத் தொடங்குகையில், முன்னோக்கு மற்றும் வரலாற்றுப் பிரச்சினைகள் குறிப்பிடத்தக்க கவனத்தை எழுப்புகின்றன. முன்னேறக்கூடிய பாதை எது? எத்தகைய போராட்டம் தேவை? எவ்வித அரசியல் வேலைத்திட்டம் தேவைப்படுகிறது?

ஏற்கனவே இந்த ஆண்டின் நிகழ்வுகள் அரசியல் முன்னோக்கு தொடர்பான பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளன. எகிப்து மற்றும் துனிசியாவில் இளைஞர்கள் தொழிலாள வர்க்கப் புரட்சிகர எழுச்சியின் முக்கிய கூறுபாடாக இருந்து பல தசாப்தங்களாக அதிகாரத்தைச் செலுத்திய அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த சர்வாதிகாரிகளை அகற்றினர். ஆனால் அரையாண்டிற்குப் பின், அதே இராணுவக் கருவிகள்தான் அரசை கட்டுப்படுத்துகின்றன. புரட்சிகரத் தலைமை இல்லாத நிலையில் அமெரிக்காவும் மற்ற ஏகாதிபத்திய சக்திகளும் பிராந்தியத்தில் உள்ள சமூக கொத்தளிப்பை பயன்படுத்தி தம் கொள்ளை முறை நலன்களைத்தான் தொடர்கின்றன, அதுவும் மிக அப்பட்டமாக, குற்றம் சார்ந்த முறையில் லிபியாவில் நடத்தப்பட்ட நவகாலனித்துவ போரைப் போல்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் விஸ்கோன்சினில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் மாணவர்களும் கல்வி, சுகாதாப் பாதுகாப்பு, ஓய்வூதியப் பிரிவுகளில் வெட்டுக்களுக்கு எதிராக மேலும் ஒரு பரந்த இயக்கத்திற்கு வித்திட்டனர். ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்கள் மத்தியதர வர்க்க முன்னாள் இடது அமைப்புக்களான சர்வதேச சோசலிச அமைப்பு (ISO), போன்றவற்றால் முன்னேறவிடாமல் தடுக்கப்பட்டுவிட்டதோடு அவற்றின் வெகுஜன எதிர்ப்பு போக்கை தணித்து ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பின் அதைத் திசைதிருப்பிவிட்டன. தொழிற்சங்கங்கள் குடியரசு கவர்னர் கோரிய வெட்டுக்களை ஏற்றதோடு, ஜனநாயகக் கட்சியினர் வெளிப்படையாக அவற்றிற்கு ஒப்புதல் கொடுத்த பின்னரும் இவ்வாறு நடந்துள்ளது.

அமெரிக்காவில் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒபாமா தேர்தலில் இருந்த உண்மையை எதிர்கொள்ளுகின்றனர்அவர் குறிப்பாக இளைஞர்களுக்கு முறையிட்டிருந்தார்அதாவது அது எதையும் மாற்றிவிடவில்லை என்பதை. “மாற்றத்திற்கு வேட்பாளரான ஒபாமா, இப்பொழுது பொதுக் கல்விமுறைத் தகர்ப்பிற்கு மேற்பார்வையாளராக உள்ளார்; 1930 களில் புதிய உடன்பாட்டுக் காலத்திற்கு பின்தங்கிச் செல்லும் வகையில் அடிப்படை நலத் திட்டங்கள் உட்பட சமூகநலத் திட்டங்களில் பல டிரில்லியன் டாலர்கள் வெட்டிற்கு வழி செய்கிறார்.

பிரிட்டனில் சமீபத்திய கலகங்கள் மில்லியன் கணக்கான இளைஞர்களுடைய அதிருப்தி, பெருந்திகைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தியது; அவர்களுடைய வேலையின்மை, வறுமை, பொலிஸ் மிருகத்தனம் பற்றிய இகழ்வுணர்வு இருக்கும் அரசியல் முறையில் வேறுவித வெளிப்பாட்டைக் காண இயலாது; அவர்கள் முற்றிலும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழல் நிறைந்த, வசதி மிக்க மத்தியதரவகுப்பு இடதின் பிரதிநிதிகளாலும் முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டனர்.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் இயக்கம் இன்னும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதனுடன் இணைந்துள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளுடைய பிரிவு உலகெங்கிலும் உள்ள மாணவர்கள், இளம் தொழிலாளிகளை போர், சமத்துவமின்மை, வேலையின்மை, வறுமை ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியப்படுத்தப் போராடுகிறது.

ISSE மாணவர்கள் முகங்கொடுக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் முழுத் தொழிலாளர் வர்க்கத்தின் நிலைமைகளில் இருந்து பிரிக்க முடியாதவை என்று வலியுறுத்துகிறது. இந்நிலைமைகள் பள்ளிகள், கல்லூரி வளாகங்கள் ஆகியவற்றிற்குள் மட்டும் எதிர்க்கப்பட முடியாதவை ஆகும். மாறாக மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்பி, சர்வதேச ஐக்கியம், சுயாதின அரசியல் அணிதிரள்வு ஆகியவற்றை முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள் ஆகியோருக்கு எதிராகக் கொண்டு போராட வேண்டும்.

அமெரிக்காவில் இதன் பொருள் அமெரிக்கப் பெருவணிகத்தின் இரு முக்கிய கட்சிகளுள் ஒன்றான ஜனநாயகக் கட்சியுடன் ஒரு உடைவையும் தளர்வடையாத எதிர்ப்பை கொள்ளுதலும் ஆகும். ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் இதன் பொருள் சமூக ஜனநாயக மற்றும்தொழிற் கட்சிகளுக்கு எதிர்ப்பு என ஆகும்; அவை ஒழுங்குமுறையாக வலதுசாரித்தன, பெருவணிக அரசியலுக்கு ஆதரவு தருகின்றன. அமெரிக்காவிலும் சர்வதேச அளவில் ISO வும் அதன் இணைப்பு அமைப்புக்களும் கூறுவது போல் இது ஒன்றும் அரசியல் நடைமுறைக்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சினை அல்ல, மாறாக ஒரு தொழிலாளர் அரசாங்கம், சோசலிசம் ஆகியவற்றை நிறுவுவதற்குப் போராடும் ஒரு புதிய கட்சியை கட்டமைப்பது ஆகும்.

இத்தகைய ஒரு இயக்கம் சர்வதேசத்தன்மையை கொண்டிருக்க வேண்டும். சமூக சமத்துவத்திற்கான மாணவர் அமைப்பு (ISSE), தொழிலாளர்களும் இளைஞர்களும் தேசிய, இன, மத பிற இனக்குழு கூறுபாடுகளாக பிரிக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் நிராகரிக்கிறது. குறிப்பாக, ஆளும் வர்க்கம் குடியேறுவோருக்கு எதிரான உணர்வைத் தூண்டும் முயற்சியை எதிர்த்து, தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்கள் விரும்பும் இடங்களில் முழுக் குடி உரிமை, ஜனநாயக உரிமை ஆகியவற்றுடன் வாழும் உரிமையை கொண்டுள்ளனர் என்று வலியுறுத்துகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த இயக்கம், அடிப்படைப் பிரச்சினை முதலாளித்துவ அமைப்புமுறையே என புரிந்து கொண்ட தளத்தில் அமைக்கப்பட வேண்டும். முதலாளித்துவம், அதன் இடையறாப் போர்கள், பொருளாதார நெருக்கடிகள், வெகுஜனவேலையின்மை என்ற கொடூரம் இவற்றிற்கு ஒரே மாற்றீடு சோசலிசம்தான்.

சோசலிச வேலைத்திட்டம் செல்வம் மகத்தான முறையில் மறுபகிர்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோருகிறது. ஆலைகளும் வணிகங்களும் பில்லியனர்களின் கட்டுப்பாட்டில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு பொது உடைமைகள் ஆக்கப்பட வேண்டும், மக்கள் அனைவரின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது. இந்த அரசியல் கோரிக்கைகள் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக உரிமைகளை பாதுகாக்க அவசியமானதாகும்; அவற்றுள் நல்ல ஊதியமுடனான வேலை, தரமான கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, வீடு, இவற்றைப் பெறும் வாய்ப்புக்களுடன் போர், அடக்குமுறை இவற்றில் இருந்து விடுபட்ட உலகமும் இருக்கும்.

வரவிருக்கும் மாதங்களில் பள்ளிகளிலும் வளாகங்களிலும் தொழிலாள வர்க்கப் பகுதிகளிலும் ஆலைகளிலும், பணியிடங்களிலும் ISSE உறுதியான முறையில் போராடுவதற்கு முற்படும்; ஒரு முன்னோக்கிய வழியை காண விழையும் இளைஞர்களிடையே சர்வதேச சோசலிச முன்னோக்குக்கு பெருகிய ஆதரவு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் இதில் ஈடுபடும்.

 

ISSE யில் இணைவதின் மூலமும் சோசலிச சமத்துவக் கட்சியை ஒரு புதிய புரட்சிகரத் தொழிலாள வர்க்க தலைமையாக கட்டமைப்பதற்கும் சோசலிசத்திற்கான போராட்டதை எடுத்துக் கொள்ளுமாறு அனைத்து மாணவர்களையும் நாம் கேட்டுக்கொள்கிறோம். ISSE ஐப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ளவும், அதில் சேரவும் இங்கே கிளிக் செய்யவும்.