World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை SEP campaign to release political prisoners:plantation detainees and relatives express supportசோ.ச.க. யின் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் பிரச்சாரம்:பெருந்தோட்டக் கைதிகளும் உறவினர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர்
M. Vasanthan Back to screen versionசோசலிச சமத்துவக் கட்சியின் [சோ.ச.க] அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் பிரச்சாரத்தின் ஒரு பாகமாக, தமிழ் பேசும் தொழிலாளர்கள் செறிந்து வாழும் மத்திய பெருந்தோட்டப் பகுதியில் ஒரு அரசியல் கைதியையும் மற்றும் கைதிகளின் பெற்றோர்களையும் உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் சந்தித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் அடிக்கடி பாதுகாப்பு படையினரின் துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள். தோட்டத்துறையை சார்ந்த 6 இளைஞர்கள் பதுளை சிறைச்சாலையில் இருக்கின்றார்கள்; சிலர் 2009 மே மாதம் புலிகள் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தலவாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த தாளமுத்து சுதாகர் 2009 அக்டோபர் 21ம் திகதியும், தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தைச் சேர்ந்த பி. சந்திரசேகரன் 2009 அக்டோபர் 12ம் திகதியும் கைது செய்யப்பட்டனர்; கந்தபளை கோட்லோஜ் தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி காளிமுத்து, பழனி பத்மராஜ், முத்துசாமி ஜெயகுமார் ஆகியோர் 2008ல் கைது செய்யப்பட்டனர். கொட்டகலை டெரி கிளயர் தோட்டத்தைச் சேர்ந்த ஆதி ஜேம்ஸ் சுரேஸ், 2009 மார்ச் 11ம் திகதி கைது செய்யப்பட்டார். ஏற்கனவே யுத்தத்துடன் தொடர்புபட்ட பல்வேறு போலி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பல இளைஞர்கள் இன்னமும் சிறையில் வாடுகின்றனர். கைதுசெய்யப்பட்டவர்கள் “புலி சந்தேக நபர்கள்” என கூறி கொடூரமான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் சிலர் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் ஆயுதங்கள் வைத்திருந்ததற்கான சான்றுகள் முன்வைக்கப்படவில்லை. அவர்கள் மீது இன்றுவரை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுமில்லை. பெருந்தோட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு புறம்பாக, 6,000 தமிழ் அரசியல் கைதிகள் வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பு படையினரால் நிர்வகிக்கப்படும் இரகசிய முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யுத்தத்தின் பின்னர் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட 11,000 இளைஞர்களில் ஒரு பகுதியினராவர். 5000 பேர் விடுதலை செய்யபட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும், அவர்களை பொலிசாரும் இராணுவத்தினரும் நெருக்கமாகக் கண்காணிக்கின்றனர். அவர்கள் எந்தவித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் சித்திரைவதை நிலமைகளின் கீழ் எதேச்சதிகாரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அரசியல் கைதிகள் காலவரையறை இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தினதும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதன் பாகமாகும். உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசிய அரசியல் கைதிகளும் அவர்களது பெற்றோர்களும், தோட்டத் தொழிலாளர்களதும் தமிழ் மக்களதும் பிரதிநிதிகளாக சித்தரித்துக் கொண்டு, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய எதுவும் செய்யாத உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் குற்றஞ்சாட்டினர். உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சந்தித்த ஒரு அரசியல் கைதி, “அரசியல் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் எங்களைப் பற்றி முழுமையாக மெளனம் சாதிக்கின்றன. அவர்கள் எங்களைப் பாதுகாப்பதற்காக ஒரு அறிக்கை தன்னும் வெளியிடவில்லை, அல்லது பாராளுமன்றத்தில் இதைப் பற்றி பேசவில்லை. (வடக்கைத் தளமாகக் கொண்ட) தமிழ் தேசியக் கூட்டமைப்பு சில நடவடிக்கைகளை செய்கின்ற போதிலும் அவையும் மட்டுப்படுத்தப்பட நடவடிக்கைகளாகவே உள்ளன. இந்தக் கட்சிகளதும் தொழிற்சங்கங்களதும் காட்டிக் கொடுப்பினால்தான் நாம் இந்த நிலமைக்கு ஆளாகியுள்ளோம். புலிகளின் சில முன்னால் தலைவர்கள் அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்து கொண்டு சகல சலுகைகளையும் அனுபவிக்கின்றார்கள். நாங்கள் சிறையில் துன்பப்படுகின்றோம். உங்களுடைய கட்சி மட்டுமே எங்களுடைய விடுதலைக்காக பிரச்சாரம் செய்கின்றது” எனத் தெரிவித்தார். அரசியல் கட்சிகளாகவும் செயற்படும் தோட்டத்துறையின் பிரதான தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு), தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தே.ச) ஆகியன இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் பங்காளியாக உள்ளன. அவர்கள் யுத்தத்திற்கும், அவசரகாலச் சட்டத்திற்கும், பயங்கரவாத தடை சட்டத்திற்கும் ஆதரவளித்ததோடு, தோட்டத் தனியார்மயமாக்கம் உட்பட்ட சந்தை சார்பு பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் முண்டுகொடுத்தனர். அவர்கள் சம்பள உயர்வுக்கான தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்கி, வறிய மட்ட சம்பளத்தை பேணுவதற்காக அரசாங்கத்திற்கும் கம்பனிகளுக்கும் உதவினர். 1990களில் தமது அரசியல் எதிரிகளான தோட்டத் தொழிலாளர்களினதும் இளைஞர்களினதும் பட்டியலை பொலிசாருக்கு வழங்கும் மோசடியில் இ.தோ.கா. பேர் போனது. யுத்த காலத்தில் புலிகளின் ஊதுகுழலாக தொழிற்பட்ட தமிழ் கூட்டமைப்பு, இப்போது தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களுக்காக கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடனான தமது பேரம் பேசல்களுக்கு ஆதரவு திரட்ட மேற்கத்தைய சக்திகளுக்குப் பின்னாலும் இந்தியாவுக்குப் பின்னாலும் ஓடுகின்றது. ஜனநாயக மக்கள் முன்னணியின் (ஜ.ம.மு) தொழிற்சங்கமான ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் (ஜ..தொ.கா) தலைவர் மனோகணேசன், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் நிற்பவராக பாசாங்கு செய்பவர். அவரை எமது நிருபர்கள் தொடர்பு கொண்ட போது, “அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் எங்களுடைய தொழிற்சங்கம் உட்பட எந்தவொரு தொழிற் சங்கமும் எதுவும் செய்யவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்” என அவர் சிடுமூஞ்சித்தனமாக கூறினார். தனது பொறுப்பை தட்டிக் கழித்து, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியும் என்ற மாயையை காட்ட முயற்சித்த கணேசன், “அரசாங்கத்துடன் பேசி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஒழுங்குகள் செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தொழிற்சங்கங்களுக்கே அதிகம் உண்டு” எனக் கூறினார். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், போலி தீவிரவாத நவ சமசமாஜ கட்சியின் உதவியுடன், தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக நிலவும் எதிர்ப்பை சுரண்டிக் கொள்ள முயற்சித்த கணேசன், தனது பிரச்சாரத்தில் அரசியல் கைதிகளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மறைந்த ம.ம.மு.யின் தலைவர் பெ. சந்திரசேகரன், குமாரதுங்க அரசாங்கத்தில் பங்காளியாக இருந்த அதே சமயம், புலிகளுடன் சந்தர்பவாத தொடர்பை பேணிவந்தார். அவர் இராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சராகவும் இருந்துகொண்டு யுத்தத்திற்கும் ஆதரவு கொடுத்தார். ம.ம.மு. அங்கத்தவர்கள் புலி உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போது, அவரோ அல்லது அவரைத் தொடர்ந்து வந்த தலைவர்களோ சின்னி விரலைத் தன்னும் உயர்த்தவில்லை. ம.ம.மு.யின் வாலிபர் அமைப்பு தலைவர் தாளமுத்து சுதாகர் கைது செய்யப்பட்டபோது, அவரை விடுதலையை செய்ய என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என ம.ம.மு. பொதுச் செயலாளர் எ. லோறன்ஸ்சிடம் உலக சோசலிச வலைத் தளம் வினவியபோது, “அவர் எமது அங்கத்தவர் அல்ல, அத்துடன் அவர் எமது கொள்கையை நிராகரிக்கின்றார்” என அவர் நேரடியாகச் சொன்னார். சங்க அங்கத்தவர்களைக் கூட நசுக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதே அவர்களது நிலைப்பாடாகும். ம.ம.மு.யின் பிற்போக்கு வகிபாகத்தை கண்டித்த சுதாகரின் தந்தை, “எனது மகன் கைது செய்யப்பட்ட போது அவர் ம.ம.மு.க்காக ஊக்கமுடன் வேலை செய்துகொண்டிருந்தார். இப்பொழுது ஒரு வருடமாக அவர் சிறையில் இருக்கின்றார். ம.ம.மு.யில் யாரும் அவரைப்பற்றி அக்கறை எடுப்பதாக இல்லை,” என்றார். “அவர் தீவிர தொழிற்சங்கவாதி. அவர் 3000 தோட்ட இளைஞர்களுக்கு ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொடுப்பதற்காக பிரச்சாரம் செய்தார். 2009ல் அரசாங்கத்தின் பயமுறுத்தலையும் ம.ம.மு. உட்பட தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பையும் நிராகரித்தவாறு தொழிலாளர்கள் சம்பள போராட்டத்தை தொடர்ந்த போது, எனது மகன் நியாமான சம்பளத்திற்காக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். மேல் கொத்மலை மின்சார உற்பத்தி திட்டத்தில் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்த குடும்பங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர் போராடினார்,” என தாளமுத்து மேலும் தெரிவித்தார். அவரது போராட்ட நடவடிக்கைகளும் அவரது கைதுக்கு காரணமாக இருந்திருக்கலாம். “எனது மகனைப் போல் நூற்றுக்கணக்காண இளைஞர்கள் அரசியல் கைதிகளாக வெவ்வேறு சிறைக் கூடங்களில் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஏன் இந்த பாரபட்சம்?” என அவர் கேட்டார். தான் ம.ம.மு.யின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியின் (ம.தொ.மு) உதவிச் செயலாளராக இருந்ததாகவும் தனது மகன் கைது செய்யப்பட்டபோது அதிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் தாளமுத்து குறிப்பிட்டார். “இந்த அமைப்புக்கள் பற்றி நிறைய அறிந்து கொண்டேன். எல்லோரும் எங்களை ஏமாற்றுகின்றார்கள். கடந்த தேர்தலில் நான் யாருக்கும் வாக்களிக்கவில்லை. நான் சோ.ச.க.யின் பிரச்சாரத்தைப் பாராட்டுகின்றேன். அதற்கு ஆதரவு கொடுக்கின்றேன்,” என்றார். முன்னர் தனது தகப்பன் தமது பிரதேசத்தில் லங்கா சமசமாஜக் கட்சியின் (ல.ச.ச.க) ஒரு செயலூக்கம் கொண்ட தலைவராக இருந்ததாக கூறிய அவர், லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பு தொழிலாள வர்க்கத்தை பாரிய முறையில் பாதித்ததையும் நினைவூட்டினார். லங்கா சமசமாஜக் கட்சி, 1964ம் ஆண்டில் சிறீமா பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ கூட்டரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து, தொழிலாள வர்க்க சுயாதீனத்தை காட்டிக்கொடுத்து முதலாளித்துவ ஆட்சிக்கு சேவை செய்தது. மற்றுமொரு அரசியல் கைதியின் தாயார், தனது மகன் கைது செய்யப்பட்ட பின்னர் தனது குடும்பம் முகம் கொடுத்த சிரமங்களைப் பற்றி விபரித்தார். “எனது கணவரும் நானும் தோட்டத் தொழிலாளர்கள். இப்பொழுது நாம் ஓய்வு பெற்றுள்ளோம். எங்களுக்கு இரு மகன்மார் உள்ளனர். மூத்தவர் திருமணம் செய்து குடும்பத்துடன் தனியாக வாழ்கின்றார். கைது செய்யப்பட்ட மகனே எங்களை பராமரித்து வந்தார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் நாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றோம்.” “பொய் குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்ட பத்திரத்தில் கையெழுத்து வைக்குமாறு எனது மகனை பொலிஸ் அதிகாரிகள் நிர்ப்பந்தித்தார்கள். ஆனால் அவர் அதனை நிராகரித்தார். பொலிஸ் அதிகாரிகள் தன்னை நிர்ப்பந்தித்தால் தான் தற்கொலை செய்துகொள்வதாக அவர்களுக்கு கூறியிருந்தார். இந்த நீதிமன்ற வழக்குகளுக்கு செலவு செய்யவும் எங்களிடம் பணம் இல்லை,” என அவர் மேலும் கூறினார். சோ.ச.க. அதன் அறிக்கையில் குறிப்பிட்டவாறு, அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் பிரச்சாரம், “ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் தாக்குதல்களில் இருந்து தொழிலாளர்களதும் கிராமப்புற மக்களதும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பரந்த போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது.” சோ.ச.க.யின் பிரச்சாரத்துடன் இணைந்துகொள்ளுமாறு சகல வர்க்க நனவுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் போராட்டமானது, தொழிற் சங்கங்களுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ அரசுக்கும் ஆதரவு வழங்கும் அரசியல் ஸ்தாபனத்தின் கட்சிகளுக்கும் எதிரான போராட்டத்துடன் பிணைந்துள்ளது. |
|