World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Jaffna University student leader attacked by mobs

இலங்கை: யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் குண்டர்களால் தாக்கப்பட்டார்

S. Jayanth
22 October 2011

 Back to screen version

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ். தவபாலசிங்கம் கடந்த ஞாயிறு இனந்தெரியாத குண்டர்களால் இரும்புக் கம்பிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். 24 வயதான தவபாலசிங்கம் தலை, கைகள், கால்கள் மற்றும் முதுகிலும் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தலையில் ஏற்பட்ட காயத்துக்கு பல தையல்கள் போடப்பட்டுள்ளன. இரண்டு நாட்களின் பின்னர் அவர் செவ்வாய் கிழமை ஆஸ்பத்திரியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

யாழ்ப்பாண நகரில் பழம் வீதிக்கு அருகில், முகங்களை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 12 பேர், அவர்கள் கடதாசியில் சுற்றிக் கொண்டுவந்திருந்த இரும்புப் பொல்லுகளால் அவரை தாக்கத் தொடங்கினர். அவர்கள் என்னைக் கொல்லும் எண்ணத்துடனேயே வந்தனர். அவர்கள் என்னைத் தாக்கும் போது அவனைக் கொல்! அவனைக் கொல்! என்று கூச்சலிட்டனர் என தவபாலசிங்கம் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் (WSWS) தெரிவித்தார்.

நான் ஓடுவதற்கு முயற்சித்த போது அவர்கள் இரும்புக் கம்பிகளால் பின்னால் தாக்கினர். எனது தலையில் காயமேற்பட்டது. அவர்கள் எனது கால்களில் அடித்தனர். என்னை அடிக்க வேண்டாம் என நான் அவர்களிடம் கெஞ்சினேன். அவர்கள் அதை காதில் வாங்காமல் எனது தலையை குறிவைத்தே தாக்கினர், என அவர் தெரிவித்தார்.  மாணவர் ஒன்றியத் தலைவரின் கூக்குரல் கேட்டு மக்கள் ஓடிவந்ததை அடுத்து தாக்குதல்காரர்கள் ஓடிவிட்டனர்.

முன்னாள் யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாடு பத்தாயிரக்கணக்கான பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண நகரத்தில் இராணுவத்தின் இருப்பு அதிகமாகும். அங்கு நூற்றுக்கணக்கான சிப்பாய்கள் காவலில் இருக்கின்றனர். மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பீ.டி.பீ.) போன்ற, இராணுவத்துடன் ஒத்துழைக்கும் மற்றும் மக்களுக்கு எதிரான வன்முறைகளில் இழிபுகழ்பெற்ற தமிழ் துணைப்படை குழுக்களும் இயங்குகின்றன. ஈ.பீ.டி.பீ. ஆளும் கூட்டணியின் பங்காளியாக இருப்பதோடு அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவை அமைச்சருமாவார்.

இந்தத் தாக்குதல் இந்தியத் துணைத் தூதரகத்துக்கு பின்னால் நடந்துள்ளது. அங்கிருந்து 300 மீட்டர் தூரத்தில் ஒரு இராணுவ காவலரண் இருப்பதோடு அவர்கள் அப்பகுதியில் நடமாடுவர். புதன் கிழமை நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய தவபாலசிங்கம், முகங்களை மூடிக்கொண்டிருந்த சில நபர்கள் இராணுவக் காவலரணுக்கு அருகில் சிப்பாய்களுடன் பேசிக்கொண்டிருப்பதை மக்கள் கண்டுள்ளனர். இது தாக்குதல்காரர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்துகிறது. இராணுவத்தின் ஒத்துழைப்பு இன்றி எந்தவொரு குழுவும் பகிரங்கமாக செயற்பட முடியாது, என்றார்.

இது அரசியல் நோக்கம் கொண்ட தாக்குதலாகும். மற்றும் இது வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கத்துக்கும் இராணுவ ஆக்கிரமிப்புக்கும் விரோதமான எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதற்கு கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஒடுக்குமுறையின் பாகமாகும். தவபாலசிங்கம், ஒரு தமிழ் முதலாளித்துவ தேசியவாத அமைப்பான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (த.தே.ம.மு.) தலைவர்களை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் வீட்டில் சந்தித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போதே தாக்கப்பட்டுள்ளார். தான் ஏனைய தமிழ் அரசியல் அமைப்புக்களை சந்திப்பது போலவே த.தே.ம.மு. தலைவர்களையும் சந்தித்ததாக அவர் தெரிவித்தார்.

ஆயினும், தாக்குதல்காரர்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக நீ செயற்படுவாயா?, உனக்குத் தனி நாடு வேண்டுமா?, உன்னைக் கொன்றால் எல்லாம் சரியாகிவிடும், என திட்டினர்.    

தவபாலசிங்கம் மாணவர் ஒன்றியத் தலைவராக தெரிவு செய்யப்பட்டதில் இருந்தே அவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் ஏப்பிரலில் நடந்த மாணவர் ஒன்றிய தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார். பல்கலைக்கழக நிர்வாகம் எதேச்சதிகாரமாக தேர்தல்களை நிறுத்தி வைத்து, ஒன்றியத்தை செயலிழக்கச் செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக மாணவர்கள் போராடியே தேர்தலை நடத்த வைத்தனர்.

தேர்தலின் பின்னர், பல்கலைக்கழகத்துக்கு அருகில் காவலரணுக்குப் பக்கத்தில் சிவில் உடையில் நின்றிருந்த ஒரு நபர், மாணவர் ஒன்றிய விவகாரங்களில் தலையிட வேண்டாம் என தவபாலசிங்கத்தை அச்சுறுத்தியிருந்தார்.

தனியார்மயமாக்கம் மற்றும் வசதிகள் பற்றாக்குறைக்கு எதிரான மாணவர்களின் பிரச்சாரத்தை அடக்கிவைப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறையின் பாகமாக, இலங்கையின் பல பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள் மாணவர் ஒன்றியங்களை தடை செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில், தனியார்மயமாக்கத்துக்கு மாணவர்களின் எதிர்ப்புக்கும் அப்பால், இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக மாணவர்களிடம் வளர்ச்சிகாணும் எதிர்ப்பையிட்டு இராணுவமும் அரசாங்கமும் விழிப்புடன் இருக்கின்றன.  

மாணவர் தலைவர் மீதான தாக்குதலானது யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகளில் புதியதாகும். செப்டெம்பர் முற்பகுதியில், மகளிர் விடுதியினுள் மர்ம நபர்கள் புகுந்ததாக கேள்விப்பட்டு, மாணவிகளை பாதுகாக்க விரைந்த போது, ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவச் சிப்பாய்களால் தாக்கப்பட்டனர். இராணுவத்தினர்தான் என பரந்தளவில் நம்பப்பட்ட இந்த மர்ம மனிதர்கள், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் தேயிலைத் தோட்ட மாவட்டங்களிலும் இரவில் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ளவர்களைத் தாக்கி அச்சுறுத்துவதில் ஈடுபட்டு வந்தனர்.

ஆகஸ்ட் 22 அன்று, யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை கிராமத்தில் இத்தகயை மர்ம மனிதர்களை கிராமத்தவர்கள் விரட்டிச் சென்ற போது, அவர்கள் இராணுவ முகாமுக்குள் புகுந்ததை கண்டனர். கிராமத்தவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பின்னர், நடு இரவில் கிராமத்தை சுற்றிவளைத்த இராணுவமும் பொலிசும், நூற்றுக்கணக்கானவர்களை கொடூரமாகத் தாக்கின. அநேகமானவர்கள் கால்கள் மற்றும் கைகள் உடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஜூலை 29 அன்று, யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன், இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கொலை முயற்சியில் இருந்து தற்செயலாக உயிர்தப்பினார். ஆனால் தாக்குதலின் காரணமாக அவர் கடும் காயமடைந்திருந்தார்.

இந்த தாக்குதல் பற்றி கருத்துத் தெரிவித்த தவபாலசிங்கம் இவ்வாறு கேள்வியெழுப்பினார்: இந்த நாட்டில் பேச்சு சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் எல்லாம் இருக்கின்றது என்கின்றனர். அப்படியெனில் ஏன் இவ்வாறு நடக்கின்றது? எங்களுக்கு பேசுவதற்கும் எழுதுவதற்கும் உரிமை இல்லையா? நாங்கள் ஆயுதம் தூக்கினோமா? இல்லை. அப்படியெனில் அவர்கள் ஏன் என்னை அடித்தார்கள்? இந்த நாட்டில் ஜனநாயகம் கிடையாது. செப்டெம்பரில் பல்கலைக்கழக மாணவர்களை இராணுவம் அடித்ததை கண்டித்து வளாகத்துக்குள் கூட்டம் நடத்தினோம். வன்முறையை எதிர்ப்பது பிழையா?

எனது சொந்த இடம் வவுனியா. எனது கல்வியைத் தொடர்வதற்கு எனக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. எனது பெற்றோர்கள் பீதியடைந்து என்னை படிப்பை நிறுத்திவிடச் சொல்கின்றனர். என்னால் எனது கல்வியை எதிர்காலத்தில் தொடர முடியுமா, மற்றும் எங்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக தனியார்மயமாக்கம் பற்றி பேசிய போது, மாணவர்கள் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்ப்பதாக அவர் கூறினார். அந்தப் பல்கலைக்ழகங்களில் வறிய மக்களால் படிக்க முடியாது. பணக்காரர்களின் பிள்ளைகள் மட்டுமே நன்மை பெறுவர். தனியார் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதை விட அரச பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.

திங்கட் கிழமை காலை (தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள) அனைத்து இன மற்றும் அனைத்துப் பீட மாணவர்களும் வகுப்புக்களைப் பகிஷ்கரித்து பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் கூட்டமொன்றையும் நடத்தினர். மூன்று மொழிகளிலும் அவர்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர்: பொலிஸ் பாதுகாப்பு பொது மக்களுக்காக அல்லது வன்முறையாளர்களுக்கா? தமிழ் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகளை உடன் நிறுத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் இல்லாவிட்டால், உங்களது ஜனநாயகம் எங்கே? போன்ற சுலோகங்கள் அவற்றில் எழுதப்பட்டிருந்தன.

தாக்குதலை கண்டித்து அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இந்த கோழைத்தனமான தாக்குதல், உங்களை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தாக்குவோம், அதைக் கேற்பதற்கு யாரும் இல்லை, என்ற செய்தியை சகல தமிழ் மக்களுக்கும் அனுப்பியுள்ளது. நாம் இதைத் தொடர்வதற்கு அனுமதிப்பதா?

தமிழ் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், மாணவர்களின் சுதந்திரமான செயற்பாட்டை அனுமதிக்க வேண்டும் மற்றும் பல்கலைக்கழகத்தையும் பாடசாலைகளையும் அண்டியுள்ள இராணுவ காவல் அரண்களை அகற்ற வேண்டும் என அந்த அறிக்கை கோரிக்கைவிடுத்துள்ளது. இந்த கோரிக்கைகள் இட்டு நிரப்பப்படும் வரை வகுப்புக்களைப் பகிஷ்கரிப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அநேகமான மாணவர்கள் செவ்வாயன்று பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியிருந்தனர். தாக்குதலைக் கண்டித்து ஒரு மாணவன் தெரிவித்ததாவது: இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்த தாக்குதல் அனைத்து மாணவர்களையும் மிரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாம் அமைதியாக இருந்தால் அவர்கள் அச்சுறுத்தல்களைத் தொடர்வார்கள். அரசாங்கமே இதற்குப் பொறுப்பு. குற்றவாளிகள் கைதுசெய்யப்படும் வரை நாம் இந்த எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடர்வோம். இது ஒரு காட்டுமிராண்டித் தாக்குதல். இத்தகைய தாக்குதல்களின் மூலமாக அவர்கள் ஜனநாயக உரிமையை நசுக்க முயற்சிக்கின்றனர். நாம் இந்தத் தாக்குதலை கண்டனம் செய்கின்றோம்.

இராணுவ ஆக்கிரமிப்புடன் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதன் பாகமாக மாணவர் ஒன்றியத் தலைவர் மீதான இந்தத் கொடூரத் தாக்குதலை சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் கண்டனம் செய்கின்றன.

த.தே.ம.மு. அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் தமிழ் அரசியல் என்ற மாயைக்கு அடிபணிய வேண்டாம் என நாம் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம். தமிழ் கூட்டமைப்பு இப்போது அமெரிக்காவினதும் இந்தியாவினதும் உதவியுடன் கொழும்பு அரசாங்கத்துடன் ஒருங்கிணைவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றது. த.தே.ம.மு. தமிழ் தொழிலாளர்களையும் உ.ழைப்பாளிகளையும் சுரண்டுவதற்காக தனியான முதலாளித்துவ அரசை அமைப்பதன் பேரில், தேசிய சுயநிர்ணய உரிமை என்ற தமது கோரிக்கைக்கு இதே சர்வதேச சக்திகளின் உதவியை எதிர்பார்த்திருக்கின்றது.

தோல்விகண்ட புலிகளின் முன்நோக்கில் இருந்து சிறந்த படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தமது மூலோபாய நலன்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக யுத்தத்துக்கு முழுமையாக ஆதரவு வழங்கிய மேற்கத்தைய பெரும் வல்லரசுகளின் தயவையே, புலிகள் தமது தனியான முதலாளித்துவ அரசுக்கான பிரச்சாரத்தில் நம்பியிருந்தனர்.

சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களின் சோசலிச ஐக்கியத்தின் அடிப்படையில், சர்வதேச தொழிலாள வர்க்த்தின் ஆதரவுடன் மட்டுமே, சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்ட முடியும்.