World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

The political economy of quantitative easing

அதிக நாணயத்தை புழக்கத்தில் விடுவது என்பதன் அரசியல் பொருளாதாரம்

By Nick Beams
15 October 2011

Back to screen version

அதிக நாணயத்தை புழக்கத்தில் விடுவதுவதனூடாக(Quantitative easing- QE) 75 பில்லியன் பவுண்டுகள் பண வினியோகத்தை அதிகரிக்க இந்த மாத ஆரம்பத்தில் இங்கிலாந்து வங்கி முடிவு எடுத்திருந்தது. இந்த நடவடிக்கை வளர்ச்சியைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது என்பதான கூற்றுகளும் உடன் வந்தன.  

உலக பொருளாதார விரிவாக்கத்தின் வேகம் குறைவடைந்துவிட்டதாகவும், எனவே வாங்கும் திறனை தூண்டுகின்ற பணப்புழக்க நிலை தேவையை அதிகரித்து, இருப்பதை விட அதிகமான வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் என்றும்  எனவே இந்த நடவடிக்கை அவசியம் என்றும் இங்கிலாந்து வங்கியின் அறிக்கை கூறுகிறது.

இங்கிலாந்து வங்கியின் ஆளுனரான மேர்வின் கிங் தொலைக்காட்சி நேர்காணலில் அளித்த கருத்துக்களிலும் இந்த நடவடிக்கைகள் குறித்து வெளிவந்த பல்வேறு கட்டுரைகளிலும் இது தான் பிரச்சாரப் பொருளாக இருக்கிறது. உதாரணமாக இண்டிபெண்டட் பத்திரிகையில் வந்த ஒரு செய்தி கூறுகையில், சிறு வர்த்தகங்களுக்கு கடன் வழங்குவதில் இந்த நடவடிக்கைகள் எந்த அளவு சிறப்பாகச் செயல்படப் போகின்றன என்பது தெரியவில்லை என்கின்ற போதிலும் சுமார் முக்கால் சதவீத வளர்ச்சி அதிகரிக்ககூடும் என்பதாகக் கூறியது.

கார்டியன் பத்திரிகையில் வந்த கட்டுரை ஒன்று, அதிக நாணயத்தை புழக்கத்தில் விடுவது(QE) பொருளாதாரரீதியாய் தேவையை ஊக்கப்படுத்துவதற்கும் பணபற்றாக்குறை மற்றும் மந்த நிலையில் இருந்து தப்பிப்பதற்கும் அதிரடியான கடைசிக் கட்ட திட்டம் என்பதாக வருணித்தது. வட்டி வீதங்கள் சாதனையளவில் குறைவான அளவாக இருக்கின்ற சமயத்தில், மத்திய வங்கிகள் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்க மரபுசாரா நடவடிக்கைகள் என்று அழைக்கப்படுவனவற்றை எடுக்கத் திரும்பியாக வேண்டியிருக்கிறது என்று அது குறிப்பிட்டது

ஏற்கனவே இரண்டு சுற்று அதிக பணத்தை சந்தைக்குள் செலுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்தியிருக்கும் அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு பணக் கொள்கைக் குழுவின் சமீபத்திய விவாதத்தில் இருந்து, அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் பலவீனமுற்றால் மூன்றாவது கட்ட அதிக நாணயத்தை புழக்கத்தில் விடுவதை அமல்படுத்துவது குறித்து மத்திய வங்கி சிந்தித்து வருவதும் தெரிய வந்துள்ளது.

வலிமையான பொருளாதார மீட்சிக்கு ஆதரவான கொள்கை நடவடிக்கை கூடுதலாக அவசியப்படுகின்ற சமயத்தில் பெருமளவில் சொத்துக்களை வாங்குவதென்பதை மிகவும் வலிமையான ஒரு நடவடிக்கையாகத் தொடர்ந்து பராமரிப்பதை ஒரு தெரிவாகக் கொள்வது என்று கலந்து கொண்டவர்களில் ஏராளமானோர் கருதினர் என்று செப்டம்பர் கூட்டத்தின் குறிப்புகள் கூறுகின்றன.

இந்த விவரங்களை உள்ளபடியே எடுத்துப் பார்த்தால், தேவை பலவீனமுற்று வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகின்ற ஒரு சமயத்தில் பொருளாதார மீட்சியை ஊக்குவிப்பதைத் தான் இந்த அதிக பணத்தை சந்தைக்குள் செலுத்துவது நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை இந்த அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

ஆனால் அது உண்மையென்றால் வெளிப்படையாய் இன்னொரு கேள்வி எழுகிறது: அரசாங்கங்கள் எல்லாம் நிதிய ஸ்திரப்படுத்தலை செயல்படுத்தி சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து ஆழமடையும் மந்தநிலைக்குள் இட்டுச் செல்கின்ற போது மத்திய வங்கிகள் ஏன் தங்கள் அரசாங்கங்களிடம் இருந்து ஒரு நேரெதிர் மாறுபாடான கொள்கையைச் செயல்படுத்துகின்றன?

உண்மை என்னவென்றால், அதிக பணத்தை சந்தைக்குள் செலுத்துவது என்பதற்கும் சிக்கன நடவடிக்கைக்கும் முரண்பாடு எதுவும் இல்லை. இரண்டு கொள்கைகளுமே வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நலன்களுக்குச் சேவை செய்கின்றன

2008-2009ல் உலகெங்கிலுமான அரசாங்கங்கள் வங்கிகளைப் பிணையெடுப்பதற்கும், அவற்றின் கணக்குகளில் உள்ள விற்கமுடியா  சொத்துக்களை (இவை வீட்டு அடமானக் கடன் துறையிலும் மற்றும் பிற நிதிச் சந்தைகளிலும் நடந்த குற்றவியல் மற்றும் பாதிக் குற்றவியல் ஊக நடவடிக்கைகளின் விளைபொருட்களாய் இருந்தன) கணக்குகளில் இருந்து அகற்றுவதற்கும் டிரில்லியன்கணக்கான டாலர்களைத் திரட்டின. அடிப்படையில் வங்கிகளின் கடன்கள் அரசுக்கு மாற்றப்பட்டன. ஆனால் அந்தக் கடன்கள் மறைத்துவிடவில்லை. அதாவது பிணையெடுப்பு நடவடிக்கையின் அர்த்தம் என்னவென்றால், வங்கிகளைப் பிணையெடுத்த நிலையில் முதலாளித்துவ அரசானது நிதி அமைப்புமுறைக்குள் புதிய மதிப்பினை பாய்ச்சும் கடமையை எடுத்துக் கொண்டது.

என்ன அற்புதமான வடிவங்களை அது எடுக்கின்ற போதிலும் கூட(எல்லாவற்றிற்கும் மேல் வெறும் பணமே பணத்தைப் பெருக்கும் திறன் படைத்ததாய் தோன்றுவதில்)முதலாளித்துவத்தின் கீழான அத்தனை செல்வங்களுமே இறுதியில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிழியப்படுகிற உபரி மதிப்பில் இருந்து வருவது தான். ஆக நிதி அமைப்புமுறையின் மதிப்பினை மீட்சி செய்வதென்பதன் அர்த்தம் ஊதியங்களைக் குறைப்பதன் மூலமும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலமும் உபரி மதிப்பைக் கூட்டுவது தான். ஆனால் இது போதுமானதாய் இருப்பதில்லை. நிதி மூலதனத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தொழிலாள வர்க்கம் நம்பியிருக்கும் சமூக சேவைகள், சுகாதாரம், கல்வி மற்றும் அனைத்து பிற வசதிகளின் வடிவத்தில் உள்ள செல்வங்கள் வெட்டப்பட்டாக வேண்டும்.  

இதுதான் உலகெங்கும் அமல்படுத்தப்பட்டு வரும் சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டங்களின் சாரம் ஆகும். நிதி மூலதனம் தனது கட்டளைகளை கடன் மதிப்பீட்டு தர இறக்கங்களின் மூலமும் நிதிச் சந்தைகளிலான நடவடிக்கைகள் மூலமும் (இதில் தொகைகளின் துரிதமான நகர்வு ஒரு நாட்டின் தேசியக் கடன் நிலையை ஒரே இரவில் பலவீனப்படுத்தி விட முடிகிறது) நிறைவேற்றிக் கொள்கிறது. ஏதேனும் ஒரு அரசாங்கம் போதுமான அளவு நகரவில்லை என்றோ அல்லது போதுமான தூரம் நகரவில்லை என்றோ கண்டால் உடனே அந்நாட்டை நிதிச் சந்தைகள் குறிவைத்து விடுகின்றன.

எப்படியிருந்த போதிலும், ஊதியங்களையும் சமூகச் செலவினத்தையும் குறைப்பதன் மூலம் சிக்கன நடவடிக்கைச் செயல்திட்டத்தை அமுல்படுத்துகையில் ஒட்டுமொத்தத் தேவையில் ஒரு வீழ்ச்சி, மந்தநிலையின் அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ஆகியவை வந்து சேர்கின்றன. இத்தகைய நிலைமைகளின் கீழ் வணிகங்களுக்குக் கடனளிப்பதன் மூலம் நிதி மூலதனம் தன் இலாபத்தைக் குவிக்க வழியின்றி போய் விடுகிறது, ஏனென்றால் கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்துவதற்கான அவர்களது தகமை  இல்லாதொழிக்கப்பட்டுவிடுகிறது.

எனவே விளைபொருட்களின் ஊக வணிகத்திலும், பங்குச் சந்தையிலும், நாணயச் செலாவணிச் சந்தையிலும் மற்றும் அரசாங்கக் கடன் பத்திரங்களை வாங்குவது மற்றும் விற்பதிலும் மேலும் மேலும் ஊகங்களை விரிவாக்கிக் கொண்டே செல்வதன் மூலம் மட்டுமே நிதி இலாபங்கள் பெறப்பட முடியும். இங்கு தான் அதிக நாணயத்தை புழக்கத்தில் விடுவது (QE) தனது பாத்திரத்தை ஆற்றுகிறது. பெரும் வங்கிகளுக்கு, வளர்ச்சி அல்லது மறுமலர்ச்சிக்கான நிதியாதாரத்திற்காய் அல்லாமல் மாறாக ஊக வணிகத்திற்கு, ஏறக்குறைய பூச்சிய வட்டி விகிதங்களில், பெரும் தொகைகளை கிடைக்கச் செய்வதற்கு மத்திய வங்கிகள் செய்யும் பொறிமுறை தான் இது.

இங்கிலாந்து வங்கி இதுவரை 275 பில்லியன் பவுண்டுகளை இவ்வகையில் கிடைக்கச் செய்துள்ளது, அமெரிக்க மத்திய வங்கி 1.4 டிரில்லியன் டாலர்களை ஏற்பாடு செய்துள்ளது. சொத்துகளின் விலைகளை அதிகரிக்கச் செய்வதன் மூலம் செல்வ விளைவை (wealth effect)உருவாக்குவது தான் இந்த நடவடிக்கைகளின் நோக்கமாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த சொத்துகளில் பல சமயங்களில் உணவுப்பொருட்கள், எண்ணெய் மற்றும் பிற அடிப்படை நுகர்வுப் பொருட்களின் வருங்கால ஒப்பந்தங்களும் இடம்பெறுகின்றன, எனவே அதிக நாணயத்தை புழக்கத்தில் விடுவது (QE) பணவீக்கத்தை மேலேற்றி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை கீழிறக்குகிறது, குறிப்பாக உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான செலவு வருவாயின் ஒரு பெரும்பகுதியை சாப்பிட்டு விடக் கூடியதாக இருக்கின்ற ஏழை நாடுகள் சிலவற்றில்.

இந்த அதிக நாணயத்தை புழக்கத்தில் விடுவது(QE)என்பது பொருளாதார மீட்சி யை ஊக்குவிப்பது என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு, முதலில் எது நிதி நெருக்கடியைத் தூண்டியதோ அந்த ஒட்டுண்ணித்தனமான முற்றுமுதலான குற்றவியல் ஊகவணிகத்துக்கு கூடுதலான நிதிகளையே உண்மையில் வழங்குகிறது.

BCA  ஆய்வு என்னும் கனடா நாட்டு ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த தவால் ஜோஷி செய்த ஆய்வு  இந்த அதிக நாணயத்தை புழக்கத்தில் விடுவதன்(QE) மூலம் பணம் எக்கச்சக்கமான இலாபங்களைக் குவிப்பதாய் முடிகிறது, இதன்மூலம் ஏற்கனவே அதிகமாக இருக்கும் வருவாய் ஏற்றத்தாழ்வும் அதன் மூலம் எழுகின்ற சமூகப் பதட்டங்களும் மேலும் அதிகரிக்கிறது என்று கண்டறிந்து கூறியுள்ளது.

பிரிட்டனைப் பொறுத்தவரை, இரண்டு ஆண்டுகள் வெளித்தோற்றத்தில் மீட்சி இருப்பதாகக் காட்டப்பட்ட காலத்தில் தொழிலாளர்கள் மந்தநிலையின் ஆழமான சமயத்தில் ஈட்டிக் கொண்டிருந்ததை விடவும் குறைவாக சம்பாதித்துக் கொண்டிருந்தனர் என்பதை ஆய்வுகள் கண்டறிந்திருக்கின்றன. உண்மையான ஊதியங்கள் 4 பில்லியன் பவுண்டுகள் வரை சரிந்திருக்க விலைகளோ 11 பில்லியன் பவுண்டுகள் வரை உயர்ந்திருக்கின்றன. உயர்நிலை ஆடம்பரச் சந்தை தொடர்ந்து செழித்துக் கொண்டிருக்கும் நிலையில் உழைக்கும் மக்கள் வாழ்க்கைத் தரம் குறைய நேர்ந்ததற்குக் காரணம் இதுதான் என்கிறார் ஜோஷி.

இந்த ஒட்டுமொத்த நிகழ்வுப்போக்குமே, நிதி மூலதனத்தை ஒட்டுமொத்த உலகத்தையும் தனக்கான பலியாகக் கேட்கும் உரிமையுண்டு என்று கோரும் மோலாக் கடவுள் என்று மார்க்ஸ் வருணித்ததையே நினைவுக்குக் கொண்டுவருகிறது.

அதிக நாணயத்தை புழக்கத்தில் விடுவதன்(QE)உண்மையான இயக்கம் குறித்த பகுப்பாய்வில் இருந்து முக்கியமான அரசியல் முடிவுகள் பிறக்கின்றன. எந்த சீர்திருத்தங்களும், கட்டுப்பாடுகளும் அல்லது அதிகரித்த வரிகளும் வங்கிகளைக் கட்டுப்படுத்துவதென்பதோ மற்றும் அவை கட்டவிழ்த்து விடும் பொருளாதார நாசத்தை எப்படியோ குறைப்பதென்பதோ முடியாது. ஒட்டுமொத்த வங்கி மற்றும் நிதி அமைப்புமுறையும் பொதுச் சொத்துடமைத்துவத்தின் கீழ் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் ஆட்படுகைக்குட்பட்டதாகக் கொண்டுவரப்பட வேண்டும். அப்போது தான் உழைக்கும் வர்க்கத்தின் உடலுழைப்பு மற்றும் மூளை உழைப்பினால் உருவாக்கப்படும் பரந்த செல்வம் ஒட்டுமொத்தமான சமூக நலன்களை முன்னெடுப்பதற்குப் பயன்படுத்தப்பட முடியும்.